11.10.09
கவிஞர் பாலா-சில நினைவுகள்....
வானம்பாடிக் கவிஞர் குழுவில் ஒருவரான திரு பாலா என்ற பேராசிரியர் (முனைவர் )பாலச்சந்திரன் அவர்கள் , இன்று நம்மிடை இல்லை என்பதை எண்ணுகையில் இதயம் கனக்கிறது.
திரு பாலாவின் மரணத்தை நான் மிகவும் தாமதமாகவே அறிய நேர்ந்தது.
அண்மையில் இல்லாவிட்டாலும்,அடிக்கடி சந்தித்துப் பழகாத போதும் சில இழப்புக்கள் நம்மைப் பாதிப்பதுண்டு.திரு பாலாவின் மறைவிலும் நான் அது போலவே உணர்ந்தேன்.
சில கவியரங்குகள்,திறனாய்வுக் கருத்தரங்குகள் இவற்றில் மட்டுமே சந்தித்திருந்தாலும் கூட -சிறிது நேரச் சந்திப்பிலேயே ஈர்த்துவிடக் கூடியவை பாலாவின் எளிமையும்,கனிவான..இனிமையான அவரது இயல்புகளும்.
ஆயினும் நேரடியான பழக்கத்தை விடவும் பாலாவை அவரது எழுத்துக்கள் வழியாக நான் அறிந்து கொண்டதே மிகுதி.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழக ஆங்கிலத் துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற திரு பாலா , தமிழ்ப் புதுக் கவிதைக்கு வளம் சேர்த்தது,தமிழின் நற்பேறுகளில் ஒன்று.ஆங்கில இலக்கியப் பின்புலத்தோடு தமிழ் மரபுகளையும் அறிந்தவர்களாய்ப் படைப்பாக்கங்களில்-குறிப்பாகக் கவிதை-ஈடுபடும் பலர்,தமிலக்கியத்திற்கு மேலும் அழுத்தமும் செறிவும் கனமும் ஊட்டியிருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திரு பாலா.
கவிதைப்படைப்பாளி என்பதோடு ,கவிதை விமரிசகர்,திறனாய்வாளர்,மொழிபெயர்ப்பாளர்,சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினர் எனப் பல முகங்கள் கொண்டவராய் இருந்தவர் பாலா.
‘புதுக் கவிதை ஒரு புதுப் பார்வை’ என்ற அவரதுநூல் புதுக் கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவே அமைந்திருக்கிறது.
மேலை இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழில் முன் வைக்கும் பலரும் தமிழ்த் தன்மையோடு அதை இணைத்து உட்செரித்துக்கொடுப்பதில்லை.அதனாலேயே அந்த நூல்களுக்கு ஒரு செயற்கைத் தன்மை ஏற்பட்டு விடுகிறது.அப்படிப்பட்ட குறை தவிர்த்த அருமையானதொரு நூல் திரு பாலாவின் ‘சர்ரியலிசம்’.அக் கோட்பாட்டின் ஆதிமூலம் தொட்டு எளிமையும்,தெளிவுமாக விளக்கிக் கொண்டு போகும் பாலா அதை ஒப்புநோக்கிப் பார்ப்பதற்குப் பிறமொழிச் சான்றுகளை மட்டும் கொடுத்துவிட்டுப் போகாமல் தமிழ்க் கவிதைகளில் தென்படும் சர்ரியலிசக்கூறுகளையும் ஒருங்கிணைத்துக் காட்டியிருப்பதே அந்நூலின் தனிச்சிறப்பு.
நவீனத்துவம்,பின் நவீனத்துவம் குறித்து இது வரை தமிழில் பல நூல்கள் வந்துள்ளபோதும்,பாலாவின் சர்ரியலிசத்தைப்போன்ற தெளிவும் நேரடித் தன்மையும் அவற்றில் இல்லை.பாலா அவர்களை ஒரு முறை நேரில்சந்தித்தபோது இது குறித்துக் கூறிக் குறைப்பட்ட நான் , இலக்கிய மாணவர்களின் பொருட்டாகவேனும் சர்ரியலிசத்தைப் போலவே பிற மேலைக்கோட்பாடுகளையும் அவர் நூலாக எழுதியளிக்கவேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.தனக்கும் அப்படி ஒரு திட்டம் இருப்பதாக கூறிய அவர் விரைவில்அந்தப் பணியை மேற்கொண்டு முடிக்கப்போவதாகக் கூறியிருந்தார்.அதற்குள் இவ்வாறான முடிவு அவருக்கு நேர்ந்து விட்டதைத் தமிழின் தவக்குறைவு என்றே கூற வேண்டியிருக்கிறது.
சிவகங்கைத் தமிழ்ப்பேராசிரியரும்,அன்னம் பதிப்பகத்தின் மூலம் புதுக்கவிதை முயற்சிகள் பலவற்றையும் ஊக்குவித்து இளம் படைப்பாளிகளை வளரச் செய்தவரும்,’கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ என்ற கவிதை நூலின் வழி இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்தவருமான கவிஞர் திரு மீரா வின் நெருங்கிய நண்பராக விளங்கிய பாலா , மீராவைப்பற்றி ஒரு ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் திரு பாலாவின் அறுபதாம் ஆண்டு விழாவை ஒட்டிய மணிவிழா மலருக்கு அவரைப்பற்றி எழுதுமாறு எனக்கு வந்த கடிதம், மிகத் தாமதமாகக் காலம் தாழ்த்தி வந்து சேர்ந்ததால் அப்போது அதை எழுத முடியாமல் போய்விட்டது.இப்பொழுது இந்த மரண அஞ்சலியை எழுதுவது மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது.அதுவே காலம் எனக்கு விதித்த கட்டளை போலிருக்கிறது.
பாலாவின் பிற நூல்கள்;
‘இன்னொரு மனிதர்கள்’ -கவிதை,
‘திண்ணைகளும் வரவேற்பறைகளும்’-கவிதை,
பாரதியும்,கீட்சும்,
கவிதைப்பக்கம்
கவிஞர் பாலாவின் நினைவாக அவர் கவிதைகளில் ஒன்று;
‘ஒரு தலைவன் பிறக்காத
நாளும் ஒரு நாளா
365தலைவர் இல்லாத
நாடும் ஒரு நாடா’
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
1 கருத்து :
கவி பாலாவுக்குப் பொருத்தமான அஞ்சலி.
கருத்துரையிடுக