துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.1.12

எஸ்.ராவுக்கு இயல்விருது


தமிழிலக்கியப் பரப்பைத் தங்கள் ஆழமான படைப்புக்களால் அர்த்தமுள்ளதாக்கி வரும் சமகால எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஆத்மார்த்தமான பங்கு குறிப்பிட்டுச் சுட்டத்தக்க முக்கியத்துவம் கொண்டது. இலக்கிய இதழ்களில் எழுதினாலும்,வெகுஜன இதழ்கள் என்றாலும் நிறத்தை மாற்றிக் கொள்ளாமல் தரக் கட்டுப்பாட்டோடு எழுதக் கூடிய மிகச் சிலரில் எஸ்.ராவும் ஒருவர்.

உள்ளபடி சொல்லப்போனால் வெகுஜன இதழ்களில் அவர் எழுதும் கட்டுரைகளும் பிற ஆக்கங்களுமே அவரது மிகத்தீவிரமான எழுத்துக்களை வந்தடையும் தேட்டம் கொண்ட மிகப் பெரிய வாசகப் பரப்பை,இலக்கிய ஆர்வம்கொண்ட இளைஞர் கூட்டத்தை உருவாக்கி விட்டிருக்கின்றன என்று கூடச் சொல்லிவிடலாம்.

உபபாண்டவம் தொடங்கித் துயில்,யாமம்,உறுபசி என நீண்டு செல்லும் நாவல்கள்,எண்ணற்ற சிறுகதைகள்,நாடகங்கள்,உலக இலக்கிய நூல் அறிமுகங்கள், உலக/இந்தியத் திரைப்படங்கள் பற்றிய நூல்கள்,நாடகங்கள்,திரைப்பட உரையாடல் பணி எனப் பல முனைச் செயல்பாடுகளுடன் இலக்கியத்தின் தீராக் காதலராய் இயங்கி வரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2011ஆம் ஆண்டுக்கான கனடா இயல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
//2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.//என்கிறார் கனடாவிலிருக்கும் தமிழ் எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம்.

இலக்கியம் என்ற ஊடகத்தின் மீது அழியா நேசம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கி வருபவரும்,அந்த விருது பெற எல்லா வகையிலும் மிகப் பொருத்தமானவருமான திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்களும்,பாராட்டுதல்களும்...

1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

எஸ்.ராமகிருஷ்ணனின் விகடன் தொடர்களிலிருந்துதான் எஸ்.ரா'வின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கத்தொடங்கினேன். சென்ற ஆண்டு அவரது ஐந்து நாவல்களையும் வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல்விருது வழங்கப்பட்டிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது. பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....