தமிழ் செம்மொழியாக்கப்பட வேண்டும் எனக்கோரிக்கை விடுத்த அரசியல்வாதிகளின் முகங்கள் முன்னிலைப்படுத்தப்படும் அளவுக்கு ,தமிழைச்செம்மொழியென்று நிறுவுவதற்காகவே நேரடியாகக்களத்தில் இறங்கி உழைத்த பெருமக்கள் பரவலான மக்களின் கவனத்திற்குப்பொதுவாகக் கொண்டு வரப்படுவதில்லை. குடியரசு நாளை ஒட்டி மைய அரசு அறிவித்துள்ள ''பத்மஸ்ரீ''விருது,அவ்வாறான ஒரு பெருமகனை-பண்டிதர்கள்,படிப்பாளிகள் மட்டத்திலேயே பெரும்பாலும் அறிமுகமாகியிருந்த தமிழ்த்தாயின் தலைமகன் ஒருவரை இந்தியத்திருக்கண்டம் முழுவதுமே ஏறெடுத்துப்பார்க்குமாறு செய்திருக்கிறது. கல்வெட்டுத்துறையில் கரை காணாப்புலமை கொண்டவரும்,'தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும்,இந்திய ஆட்சிப்பணியாளராக உயர் பதவி வகித்து ஓய்வு
பெற்றிருப்பவருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்களே அந்த மாமனிதர்.
தனது வாழ் நாளின் பெரும்பகுதியைக்கல்வெட்டியல் துறைக்கே அர்ப்பணித்துத் தொல்லியல் ஆய்வுகளில்புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.மிகத்தொன்மையான பிராமி எழுத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து,அரியதொரு ஆய்வு நூலை உருவாக்கியவர்.
வரலாற்று மொழியியல் கண்ணோட்டங்களையும்,புள்ளியியல் கூறுகளையும்அடிப்படைகளாகக்கொண்டு வேத கால சமஸ்கிருத மொழியில் திராவிடமொழிக்கூறுகள் பொதிந்திருப்பதை இனம் காட்டி,அவற்றின் துணையோடு சிந்துசமவெளி கால எழுத்துக்களை-அகழ்வாய்வில் கிடைத்த எழுத்துருக்களை- விளக்க வழி உண்டா எனத்தேடிஅந்த ஆய்வில் முழு மூச்சுடன்,முனைப்பாக இயங்கியவர்.சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் , தொன்மையான தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைக்கூறுகளை விளக்க முயன்ற அவரது ஆய்வுகளே தமிழின் பழமையைத்தமிழர்கள் மட்டுமன்றி,அயல் நாட்டவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தன.'பிற நாட்டார் நல்வணக்கம்' செய்யும் வகையில் 'திறமான புலமை பெற்றிருந்தபோதும், எந்த ஒரு கருத்தையுமே முடிந்த முடிவாகக்கூறக்கூடாதென்ற நிலைப்பாட்டைக்கொண்டிருந்தவர்ஐராவதம் மகாதேவன் அவர்கள்.உண்மையான ஆய்வாளனின் இலக்கணம் அதுவே.
ஏதேனும் ஒரு களத்தையோ, ஒருசில நூல்களை மட்டுமோ எடுத்துக்கொண்டு அதற்கு ஆய்வென்று பெயர் சூட்டி,முனைவர் பட்டத்தை வெகு சுலபமாகத்தட்டிக்கொண்டுபோகும் இன்றைய நீர்த்துப்போன தமிழ் ஆய்வுகளைப்போன்றவை அல்ல மகாதேவனுடையவை.புற அங்கீகாரங்களின் தூண்டுதலுக்காகவோ, பிற நெருக்குதல்களுக்காகவோ ஆய்வை மேற்கொள்ளாமல் ஆய்வை ஆய்வுக்காக மட்டுமே செய்து வந்தவர் அவர் என்பதை இன்றைய வளரும் தமிழ் ஆய்வு மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தனக்குக்கிடைத்த விருதைக் கல்வெட்டியல் துறைக்குக்கிட்டிய வெற்றியாகக்குறிப்பிடும் அளவுக்கு அந்தத்துறையோடு தோய்ந்து உட்கலந்து போய்விட்ட ஐராவதம் மகாதேவனைப்பாராட்டி வணங்கி வாழ்த்தும் இத்தருணத்தில்,உதட்டளவில் தமிழ் வாழ்த்தைப்பாடுவதோடு நின்றுவிடாமல் ,உன்னத உச்சங்களை நோக்கி நம் மொழியை நகர்த்தியாக வேண்டிய கடப்பாட்டையும் கருத்தில் கொண்டால் மட்டுமே தமிழின் செம்மொழித்தகுதி என்றும் நின்று நிலைக்கும்.
கடிதங்கள்
1.ஐராவதம் மகாதேவன் பற்றிய உங்கள் பதிவு உண்மையிலேயே அற்புதம். பத்மஸ்ரீ விருது என்பது அவருக்கு ஒன்றுமே இல்லை. அவர் அந்த விருதினை விட மேன்மையானவர். உண்மையாகவே இவருக்கு விருது வழங்கியதால் மைய அரசு தன்னை சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.
இது வெறும் புகழ்ச்சி இல்லை -
முழுதும் கற்றறிந்த உங்களைப் போன்றவர்கள் பதிவிடும்போது அதன் சிறப்பே தனியாக இருக்கிறது.
YADARTHA பென்னேஸ்வரன்,ஆசிரியர்,வடக்குவாசல்
http://www.sanimoolai.blogspot.com/
http://www.vadakkuvaasal.in/
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக