துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.1.09

புத்தாண்டின் புலரியில்....

 
Posted by Picasa


இணைய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
''கெட்ட போரிடும் உலகினை வேரொடு சாய்ப்போம்''என உலகக்குடிமக்கள்
ஒவ்வொருவரும் உறுதி கொண்டாலன்றி, உலகின் பல இடங்களிலும் பலவடிவங்களிலும் புகைமூட்டமாக சூழ்ந்து பரவிவரும் பகைமைத்தீயை அழிக்க முடியாது என்பதைக்கண்டு கவலை கொள்ளும் சம்பவங்கள் அன்றாட நடப்பாகி வருகின்றன. இத்தருணத்தின் தேவை ஆவேசத்தின் பிடியில் சிக்காத நிதானமும், அன்பும்,பொறுமையும் மட்டுமே என்பதை தார்மீக,சமூகப்பொறுப்புள்ள பிரஜைகள் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். அந்த மெய்யறிவை அனைவரும் பெற்றால் போர்,பகை,அச்சம் நீங்கி அமைதியும்,சாந்தமும் எங்கும் குடிகொள்ளும். அந்த நன்னாளின் விடியல்,விரைவில் வரவேண்டும் என்பதும், அதற்கான சிறியதொரு முன் முயற்சியையாவது தன்னளவில் தனிமனிதர்கள் எல்லோருமே மேற்கொண்டாகவேண்டும் என்பதும் புத்தாண்டில் நாம் கைக்கொள்ளும் சிறியதொரு இலட்சியமாக அமையட்டும். உலகில் பிறப்பெடுத்ததற்கு,இம்மண்ணுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன், சுற்றுச்சூழலால் அதை மாசுபடுத்தாமல், இரத்தக்களரிகளால் அதைகோரப்படுத்தாமல் அடுத்த தலைமுறைக்கு அழகாய்க்கொண்டு போய்ச்சேர்ப்பது மட்டுமே.




அறிவிப்புக்கள்

1.புத்தாண்டு புலரும் தருணத்தில், இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி வாய்த்திருக்கிறது. தமிழில் பல ஆண்டுகளாக எளிய மக்களின் குரலாக, விவசாயத்தரப்பினரின் குரலாகத்தன் படைப்புக்களை சிறுகதை,நாவல் என்ற பல வடிவங்களிலும் ஒலித்து வந்திருக்கும்- முற்போக்கு எழுத்தாளர் பாசறையைச் சேர்ந்த திரு மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதமி பரிசுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்த உவப்பான செய்தி.
காலம் அதிகம் கடந்து விடாமல் இப்பரிசு அவரை வந்தடைந்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. கரிசல் காட்டு மக்கள்- குறிப்பாகப்பெண்கள் படும் துன்பங்களையும், வறுமை அப்பிக்கிடக்கும் தென்மாவட்டசிற்றூர்களில் தீப்பெட்டி ஆபீசுக்கு-பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில்,
அங்கே பலவகையான நெருக்குதல்களுக்கு ஆளாக வேண்டிய வாழ்க்கைச்சூழல்களில் நாட்களை நகர்த்தும் அரும்புகளையும் (சிறார் மற்றும் பெண்கள்) - அசலாக- யதார்த்த வாழ்வுக்கு மிக நெருக்கமாகத் தன் படைப்புக்களில் சித்தரித்துக்காட்டிய வீரியமான படைப்பாளி,திரு பொன்னுசாமி அவர்கள்.
இந்திய இலக்கியத்தின் மேன்மையான விருதை அவர் பெறவிருக்கும் இத்தருணத்தில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்த விரும்புவோர் தொடர்புக்கு: திரு மேலாண்மை பொன்னுசாமி, மேலாண் மறைநாடு, ராஜபாளயம்வழி, விருதுநகர் -626127



2.புத்தாண்டின் தொடக்கம் புத்தகப்பிரியர்களுக்கு விருந்தளிப்பதாக புத்தகக் கண்காட்சியுடன் (சென்னை- 8.1.09 முதல்)தொடங்குகிறது. அதற்கு முன்பே நூல் வெளியீட்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள், திரு ஜெயமோகனின் நான்கு புதிய நூல்கள் 'உயிர்மை' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
எஸ்.ராமகிருஷ்ணன்;' பதினெட்டாம் நூற்றாண்டின் மழை', 'சித்திரங்களின் விசித்திரங்கள்','நம் காலத்து நாவல்கள்','காற்றில் யாரோ நடக்கிறார்கள்', 'கோடுகள் இல்லாத வரைபடம்', 'அதே இரவு அதே வரிகள்', 'உலக சினிமா', 'எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்'
ஜெயமோகன்; 'ஊமைச் செந்நாய்'-சிறுகதை,குறுநாவல், 'நிகழ்தல்'-கட்டுரை,
'இன்று பெற்றவை', 'தனிக்குரல்'


3. 2008 ஆம் ஆண்டின் 'டாப் டென்' புத்தகங்களாகக் 'குமுதம்'இதழ் (31.12.08)
தொகுத்து வெளியிட்டுள்ள பட்டியலில் (தொகுத்திருப்பவர்,திரு தளவாய் சுந்தரம்)
இந்த வலைப்பூவின் ஆசிரியரான(எம்.ஏ.சுசீலா) என் மொழியாக்க நூலும்-
'குற்றமும் தண்டனையும்' (ரஷிய மூலம்;தஸ்தயெவ்ச்கி)- இடம் பெற்றுள்ளது. இச்செய்தியை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். எல்லாப்புகழும், பெருமையும் தஸ்தயெவ்ச்கிக்கே உரியது.தமிழில் அது வெளிவர நான் ஒரு கருவியாக இருந்ததை எண்ணுகையில் மட்டுமே பெருமையும்,பூரிப்பும் கொள்கிறேன்.


4.. சென்ற ஆண்டின் இறுதியில், ஒரு சுற்றுலாக்குழுவுடன் இணைந்து,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச்செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் பலவகையாக அந்நாடுகளின் பலதரப்பட்ட அம்சங்களை முன்வைத்திருக்கிறார்கள். எனினும் என் பார்வையில், நான் கண்ட மனிதர்களையும், காட்சிகளையும் ,நான் எடுத்த புகைப்படங்களுடன் இணையத்தில், பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பயணக்கட்டுரைகளின் ஊடே ,அவ்வப்போது,பிற படைப்புக்களும் வெளியாகும்.

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சின்சியரா இருக்கீறீங்க. உங்கள் முன்னாடி டோம் அண்ட் ஜெர்ரி ஆக நிறைய பேர் விளையாடி இருப்பார்களே இல்லையா மேடம் ?

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சின்சியரா இருக்கீறீங்க. உங்கள் முன்னாடி டோம் அண்ட் ஜெர்ரி ஆக நிறைய பேர் விளையாடி இருப்பார்களே இல்லையா மேடம் ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....