துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.2.12

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-4

களவும் இருளும்

‘’களவு ஒரு விசித்திர செய்கை; பறவைக்கும் மீனுக்கும் மட்டுமே தெரிந்த தடமற்ற பயணத்தின் ரகசிய நெடுவழி’’ என்று கவித்துவமான மொழியில் களவை முன் மொழியும் காவல் கோட்டம் களவுக் கலையின் நுட்பங்கள் பலவற்றையும் விரித்துரைத்துக் கொண்டே செல்கிறது. இந்த விவரிப்புக்களின் வழி நாவலாசிரியர் களவை மேன்மைப்படுத்த முயல்கிறார் என்று கூறுவது பொருத்தமாகப் படவில்லை. ’களவும் கற்று மற’ என்பது நம் சமூகத்தில் நெடுநாட்களாய் நிலவும் வாசகம். களவுத் தொழிலில் கை தேர்ந்தவர்களாய்,அதன் சகல பரிமாணங்களையும் அறிந்து வைத்திருப்பதனாலேயே எந்த இடத்தில் புகுந்து எவ்வாறு களவை முறியடிப்பது என்னும் தந்திரம் தெரிந்து எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவும் காவல் பணியாளர்களாகவும் அவர்கள் மாற முடிகிறது.காவல் பணியைத் திறம்படச் செய்யும் அவர்களின் ஆற்றலுக்கான பின்புலம், காலம் காலமாகக் களவிலும் ஊறி உட்கலந்து அதன் சூட்சுமங்களில் தேர்ச்சி பெற்றதாலேயே விளைந்திருக்கிறது என்பதற்கு அழுத்தம் சேர்ப்பதற்காகவே களவு சார்ந்த பகுதிகள் சுவையான  தகவல்களாகவும்,நிகழ்வுகளாகவும் நாவல் முழுவது இடம் பெற்றிருக்கின்றன.

நகரக் காவல் செய்வோரும் கள்வரும் சஞ்சரிக்கும் நேரம் இருள்…! அடர்த்தியான இருள். ஊர் துஞ்சும் வேளையிலும் கூடக் கண்ணிமைக்காத இரவு சஞ்சாரிகள் இவர்கள். சங்கப் பாடல் ஒன்றில் ஊர்க்காவலர்கள் உறங்கிய பின்னும் நான் உறங்காது தனித்திருக்கிறேனே என்று புலம்புகிறாள் காதல் வயப்பட்ட தலைவி ஒருத்தி.

காதலுக்கு மட்டுமன்றிக் களவுக்கும், காவலுக்கும் கூடப் பின்னணித் திரையாகும் இருளை…
‘’’’இருளுக்குள் மூழ்கிக் கிடக்கும் நகரம்,கண்ணாடிப் பேழைக்குள்ளிருக்கும் காட்சிப் பொருளைப் போன்றது. இரவில்தான் நகரம் வடிவம் கொள்கிறது. கரும் பளிங்குச் சிலையென அது மிதந்து கொண்டிருக்கிறது..’’
என நேர்த்தியான புனைவுத் திறத்தோடு காட்சிப்படுத்தும் நாவல், இருள் கப்பிய அடர் மூலைகளுக்குள்ளே காவலர்கள் ஊர்ந்து செல்லும் நுட்பத்தை இவ்வாறு விவரிக்கிறது.
‘’பகல் மட்டும்தான் இருளற்ற இடம்; ஆனால் இருள் ஒளியற்ற இடம் அல்ல. இந்த சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டவர்கள், பின்னப்பட்ட வலையில் வந்தமரும் அதிர்வை உடனடியாக உள் வாங்கும் சிலந்தியைப் போலப் பிரிக்கப்பட்ட காவல் தெருக்களின் சலனத்தைத் தன் நரம்புகளோடு பிணைத்துக் கொண்டு கண்டறிகிறார்கள்’’


களவுக் கம்புக்கு ‘மொண்டிக் கம்பு’ என்ற பெயர் வந்த காரணத்தையும் சுவாரசியமாக விவரித்துக் கொண்டு போகிறது நாவல். ஒரு வீட்டில் களவுக்காகப்போன மொண்டி என்னும் தாதனூர்க் கள்வன்,கன்னம் போட்டுத் தலையை உள்ளே  நுழைக்கும்போது உள்ளே இருந்தவர்கள் அவன் தலையை  வெட்டி விடுகிறார்கள். அவன் தலை கிடைத்தால் எந்த ஊர்க்காரன் என்பது தெரிந்து விடும் என்பதற்காகக் கூட வந்த மற்ற திருடர்கள்,கிராமத்தாருக்குத் தெரியாமல் உடைகல்லைப் போட்டு அவனது தலையை உருத் தெரியாமல் சிதைத்துவிட்டு அவனது உடலோடு பனைமரத் தலையைச் சேர்த்து வைத்துப் புதைத்து விடுகிறார்கள். அன்றிலிருந்து கன்னம் வைத்தவுடன், உடனடியாக உள்ளே நுழைந்து விடாமல், ஒரு கம்பில் துணியையோ சாக்கையோ தலைப்பாகை போலச் சுற்றி ஓட்டையின் உள்ளே விட்டுவிட்டு அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றால்தான் திருடுவதற்காக ஆட்கள் உள்ளே போவது என்னும் வழக்கம் ஏற்படுகிறது. அந்தக் கம்புக்கும் ’மொண்டிக்’ கம்பு என்ற பெயரே நிலைத்து விடுகிறது. மேலும் முதன்முதலாகக் கன்னமிடச் செல்பவன்,மொண்டிக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என்ற வழக்கமும் அப்போது தொடங்கி உருவாகிறது. மொண்டியின் உருவகமாகப் பனைமரத்தை வழிபாடு செய்யும் அவனது உடன்பங்காளிகள் ‘பனைமரத்தான் வகையறா’ ஆகிறார்கள்.

’’கதை மண்ணிலிருந்து துவங்குகிறது;மண்ணைப் பற்றியே பேசுகிறது;இந்த மண்ணின் தலை விளைச்சல் கதைதான்;மண்ணும் கதையும் பிரிக்க முடியாத உருவாகக் கொண்ட கருவில் பிறந்தவர்கள்தான் தாதனூர்க்காரர்கள்’’  என்று நாவலில் அந்த இனத்தவர் பற்றி விவரிக்கும் வெங்கடேசன், ‘’பாட்டிதான் கதைகளின் ஊற்றுக் கண்ணைத் திறந்து விட்டவள்;அவை வெறும் கதைகள் அல்ல;கதையும் வரலாறும் பிரியா முது மொழியில் சொல்லப்பட்டவை;அம் மொழியில் முளைத்து என் போக்கில் வளர முயன்ற ஆசைதான் இது’’ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். 


கதை..கதைக்குள் கதை…அதற்குள் கிளை பிரியும் இன்னுமொரு கதை எனக் கிட்டத்தட்ட அறுநூற்றுக்கும் மேற்பட்ட குறுங்கதைகளை.., நாட்டார் வழக்கில் உலவும் வாய்மொழிக் கதைகளைக் கதை ஓட்டத்தோடு இயைந்தபடி நாவலில் படர விட்டிருக்கிறார் நாவலாசிரியர். இந்தக் கதைகள் சிலவற்றின் அடிப்படையிலேயே இயக்குநர் வசந்த பாலனின் ‘அரவான்’ திரைப்படமும் உருவாகி வருகிறதென்பதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.
வசந்தபாலனின் அரவானிலிருந்து...
கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும்ஊரும் கதையும் வேறல்லகதையும் உயிரும் வேறல்ல’’என்று நாவல் சொல்வது போல இவ்வாறான நாட்டார் கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் அரியதொரு கருவூலமாகவும் இந்நாவல் உருப்பெற்றிருக்கிறது.


(மேலும்-அடுத்த தொடர்ப்பதிவில்..) 


காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-3-
காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-2-
காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-1-

7 கருத்துகள் :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காவல்கோட்டம் குறித்த தங்கள் பதிவு அருமை. காவல்கோட்டம் முழுவதும் வாசித்து முடித்துவிட்டேன். அடுத்த மாதத்தில் காவல்கோட்டம் குறித்து நாலு பதிவாவது எழுத விரும்புகிறேன். அரவான் படத்தின் நிழற்படங்கள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மார்ச்3 வரை காத்திருக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

R. Gopi சொன்னது…

சுவாரஸ்யம். தொடருங்கள்.

R. Gopi சொன்னது…

மேடம், இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். படித்தவரை சுவாரஸ்யம். ஒரு சிறிய சந்தேகம்.

கங்காவுக்குத் தெலுங்கும் சமஸ்கிருதமும்தான் தெரியும் என்பதாக வருகிறது. பின் எப்படி, "வட்டமிட்டு உள் சுழித்து அ என்று அவள் எழுதக் கற்குமுன் குறுவாள் ஏந்தக் கற்பித்திருந்தாள் அவ்வா" என்று வருகிறது? (பக்கம் 18)அதுவும் மாதங்க மலையில் வளரும்போது? (தற்போது இந்த இடம் கர்நாடக மாநில எல்லைக்குள் வருகிறது) . ஒருவேளை இரண்டு மொழிகளுக்கும் (தமிழ், தெலுங்கு) கதை நடந்த காலத்தில் ஒரே 'அ' தானா?

R. Gopi சொன்னது…

முந்தைய பின்னூட்டதிற்குப் பிறகு இணையத்தில் தேடியதில் நாவலாசிரியர் தெலுங்கில் 'அ' எழுதும் முறையைப் பற்றித்தான் எழுதி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.

http://www.languagereef.com/youtube.php?lang=TELUGU&list=vowels

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்புள்ள கோபி..
அதை அப்படி literalஆக-நேர்பொருளாகக் கொள்ளாமல் மொழியின் [எந்த மொழியெனினும்]அரிச்சுவடியைப் பயிலத் தொடங்கு முன் குறுவாள் ஏந்தக் கற்பிக்கப்பட்டாள் என்று கொள்வதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//‘’பகல் மட்டும்தான் இருளற்ற இடம்; ஆனால் இருள் ஒளியற்ற இடம் அல்ல. இந்த சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டவர்கள், பின்னப்பட்ட வலையில் வந்தமரும் அதிர்வை உடனடியாக உள் வாங்கும் சிலந்தியைப் போலப் பிரிக்கப்பட்ட காவல் தெருக்களின் சலனத்தைத் தன் நரம்புகளோடு பிணைத்துக் கொண்டு கண்டறிகிறார்கள்’’//

அடடே இந்த வரிகள் நல்லா இருக்கே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....