துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.2.12

’அசடன்’-ஒரு பதிவு

’அசடன்’நூலை வாங்கிப் படிக்கத் தொடங்கி.. 100 பக்கங்களைக் கடந்ததுமே நண்பர் இளங்கோ, நூலைப் பற்றிய ஒரு சிறு பதிவைத் தன் தளத்தில் வெளியிட்டதோடு நூல் முழுமையும் வாசித்து முடித்தபின் ஒரு கட்டுரை எழுதப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். உடனடியாகத் தான் சொன்னதைச் செய்து முடித்து இப்போது கட்டுரையையும் வெளியிட்டிருக்கிறார்...
எழுத்தாளர்களின் குருதிச் சூடு ஆறிவிடாமல் பார்த்துக் கொள்வதும்... தொடர்ந்து எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் துணை நிற்பதும் இளங்கோவைப் போன்றவர்கள் அளிக்கும் ஊக்கமே..!.
அவருக்கு என் உளமார்ந்த நன்றி.

இளங்கோவின் பதிவிலிருந்து...
//சாலையில் செல்லும்போது முன்பின் தெரியாத ஒரு குழந்தை நமக்கு ஒரு முத்தமோ அல்லது ஒரு புன்னகையையோ  வீசிச் சென்றால், அந்த கணத்தை பதிவு செய்வதென்பது கொஞ்சம் கடினம். அது போலவே, மிகப் பெரிய படைப்பான இந்த 'அசடன்' நாவலில் நான் உணர்ந்ததை சொல்வது கொஞ்சம் கடினம். எவ்வளவு எழுதினாலும் இன்னும் போதவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் நான் புரிந்து கொண்ட வரையில், இங்கே சொல்ல முயல்கிறேன்.


'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் இறைவனை வேண்டுகிறார். உள்ளே ஒன்றை நினைத்து வெளியே ஒன்றைச் சொல்லும் மனிதர்கள், அறிவு நிறைந்தவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். 'பேச வேண்டியத சரியா அவன் பேசிட்டான்' என்று சொல்லும்போதே, அவனை இந்த உலகம் அறிவாளி என்று போற்றுகிறது. எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைக்கத் தெரியாமல் பேசுபவனை முட்டாள் அல்லது அசடன் என்கிறோம் நாம். 'எல்லோரிடமும் எல்லாவற்றையும் உளறுகிறான்' என்று சொல்லும்போதே அவன் முட்டாளாகி விடுகிறான். அது சரி, மறைக்கத் தெரிந்தவன்தானே அறிவாளியாக இருக்க முடியும்?. 

இந்த நாவலில் வரும் இளவரசன் மிஷ்கின் கூட அப்படிப்பட்ட ஒரு வெகுளிதான். அனைவரிடமும் அன்பு செலுத்தும் அவன், கூட இருப்பவர்கள் சொல்வதைக் கேட்காமல், கெட்டவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கும் மனிதருக்கும் நல்லது செய்யவே எண்ணுகின்றான்.  தன்னலம் சார்ந்து முடிவெடுக்கும் மனிதர்களுக்கு மத்தியில், அவன் வித்தியாசம் நிறைந்தவனாக இருப்பதால், அதுவே அவனை 'அசடன்' என்று பெயர் பெற வைக்கிறது.


எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி என்னனங்கள், ரசனைகள், ஆசைகள்,  விருப்பங்கள், வெறுப்புகள்... என் ஒவ்வொருவரும் ஒரு விதம்.  நமது விரல்களில் உள்ள வித்தியாசம் போலவேதான் மனிதர்களும். இவ்வளவு வேறுபாடுகள் நிறைந்த அனைவரையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது 'அன்பு' மட்டும்தான். அந்த அன்பே இருப்பின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. அந்த அன்பை மட்டுமே பற்றிக்கொண்டு இருக்கிறான் இந்நாவலின் கதாநாயகன் மிஷ்கின்.

தன்னை ஏமாற்றி பணம் பறிக்க நினைப்பவர்களையும் அவன் மன்னிக்கிறான். தன்னையோ அல்லது அவன் விரும்பும் ஒரு பெண்ணையோ, ரோகோசின் கொல்லப் போகிறான் என்பது தெரிந்திருந்தும், அவனைத் தன் சகோதரனாகவே நினைத்து சிலுவையை மாற்றிக்கொள்கிறான். தன்னை இகழ்ந்து பேசுபவர்களை அவன் கண்டுகொள்வேதேயில்லை. அவனின் தேடல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறது. ஊரினால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணை அவன் நட்பாக்கி கொள்கிறான். குழந்தைகளிடம் கள்ளமற்ற அன்பைக் கண்டு, அவர்களிடம் நிறைய நேரம் செலவழிக்கிறான். மற்றவர்களைப் பொறுத்தவரையில் அவன் அசடனாக கருதப்பட்டாலும், அவனின் அன்பு தூய்மையான ஒளியுடன் நாவல் முழுவதும் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. 


மிஷ்கினின் மனப் போக்குகளை நாம் ஏதோ அவன் பக்கத்தில் இருந்து கவனிப்பது போல நாவல் கொண்டு செல்கிறது. மனிதர்களின் மனம் ஊசலாடிக் கொண்டே இருப்பதை வெகு விரிவாக கொண்டு போகிறது.  தன் மேல் மிகுந்த கழிவிரக்கம் கொண்ட நஸ்டாஸியாவைப் போன்ற மனிதர்கள் எத்தனை பேர்? எந்த முடிவுக்கும் வர முடியாமல், பிரச்சினைகளின் முடிச்சு எங்கே என்று தெரியாமல், மீண்டும் மீண்டும் புதிய முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டவர்கள் எத்தனை பேர்?. அத்தனை மனிதர்களையும் நாவல் விவரித்துக் கொண்டே செல்கிறது

'குற்றமும் தண்டனையும்' நாவலுக்குப் பிறகு எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள், பியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் 'இடியட்' நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலை மொழியாக்கம் செய்த சுசீலா அம்மா அவர்களின் உழைப்புக்கு என் வணக்கங்களும் நன்றிகளும். இப்படி ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்து அதை வெளியிட்ட மதுரை பாரதி புத்தகாலயம் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்//
முழுவதும் படிக்க....

2 கருத்துகள் :

NARAYAN சொன்னது…

அசடனைப் பற்றிய இளங்கோ அவர்களின் விமர்சனம் ரசிக்கும் படியும் எப்போது இந்த புத்தகத்தை வாங்கிப் படிப்போம் என்ற ஆர்வத்தையும் துண்டியது. .
மிஷ்கினின் இயல்புகளை படிக்கும் போது கண்களின் விளிம்பில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இப்படிப்பட்ட குணங்களுடன் கூடிய மனிதர்கள் உலகம் முழுவதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனம் வேண்டுகிறது.
நாம் வளர வளர நமது அறிவால், அகங்காரத்தால்
நமது குழந்தைத்தன்மையை, வெகுளித்தனத்தை மறப்பதும், மறைப்பதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.
ஆனால் இப்போது சிறு குழந்தைகளிடம் கூட அந்த குழந்தைத்தன்மை சீக்கிரம் காணமல் போய் விடுவதைப் பார்க்கும் போது நாகரீக வளர்ச்சியின் எதிர்மறை தாக்கத்தினை நினைத்து வருந்தத்தோன்றுகிறது. இளங்கோ அவர்கள் இந்த பெருநாவலின் கதைச் சுருக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் அதை நான் படிக்கவில்லை, கதையின் சுவாரஷ்யம் குறையும் என்பதற்காக.
இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சுசீலா அம்மா அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து இது போன்று நிறைய எதிர்பார்க்கிறோம்.
வாழ்க வளமுடன்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

அசடனைக் குறித்த விமர்சனமே அந்த நூலை வாசிக்க தூண்டுகிறது. நியூசெஞ்சுரி புக்ஹவுஸில் அசடன் புத்தகத்தைத் பார்த்தேன். வாசித்துக்கொண்டிருக்கும் காவல்கோட்டம்,கொற்கை போல பெரியநாவலாக இருந்தது. இவைகளை வாசித்தபின் வாங்கி வாசிக்க வேண்டும். இவ்வளவு பக்கங்கள் நிறைந்த புத்தகத்தை மொழிபெயர்த்த உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....