பனிப் போர்வைக்குள் சிம்லா |
2008இல் ஒரு முறை சிம்லா சென்றதுண்டு.ஆனாலும் பனி மழை பொழியும் நேரத்தில் அதைக் காண வேண்டுமென்று குழந்தைகளுக்குள் கிளர்ந்து கொண்டே இருந்த விருப்பத்தைத் தீர்த்து வைக்க உரிய சூழல் வாய்த்ததால் புத்தாண்டின் முதல் வாரம் சிம்லாவை நோக்கிய பயணம் அமைந்தது.
வட மாநிலங்கள் அனைத்துமே கடும் குளிரின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த வேளையில்...இப்படி நாமாக வேறு பனிக்குள் போய்ச் சிக்கிக் கொள்ளப் போகிறோமா என்ற பயம் குளிரை விடக் கடுமையாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்க என்னை விட்டு விடுங்கள் என்று எவ்வளவுதான் கெஞ்சி இறைஞ்சினாலும் வீட்டாரின் அன்புத் தொல்லை விட்டபாடில்லை.
இயற்கையின் பேரருள் மீதான நம்பிக்கையோடு...என் துணிவையெல்லாம் திரட்டியபடி அதற்கு ஒப்புதலளித்தேன்.....…
இயற்கையின் பேரருள் மீதான நம்பிக்கையோடு...என் துணிவையெல்லாம் திரட்டியபடி அதற்கு ஒப்புதலளித்தேன்.....…
குளிரில் வெடவெடத்தபடி..., சிம்லாவை நோக்கிய எங்கள் கார்ப்பயணம், ஜன.4ஆம் தேதி
சண்டிகார் சென்று அங்கிருந்து கல்கா என்னும் சிறு நகரத்தை அடைந்து,அங்கிருந்தே சிம்லா மலை மீது பயணிக்க வேண்டும். அகலமும் நீளமுமாய் விரிந்து சென்ற தில்லி-சண்டிகர் நெடுஞ்சாலை விரைவான பயணத்துக்கு மிகவும் ஏற்ற வசதிகளுடன் இருந்தபோதும்,.வழியில் செல்லும் வாகனங்கள் தெரியாதபடி கவ்விப் படர்ந்திருந்த பனி மூட்டம் எங்கள் வேகத்தை அவ்வப்போது மட்டுப்படுத்திக் கொண்டே இருக்கப் பழைய புராணப் படங்களில் வரும் மேக மண்டலக் காட்சிகள் போலச் சாலைக் காட்சிகளும் அங்கே விரையும் வாகனங்களும் பனியினூடே தேசலாகப் புலனாகிக் கொண்டிருந்தன.
நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் ’வைஷ்ணோ தாபாக்கள்’எனப்படும் சைவ உணவகங்கள் நீக்கமற நிறைந்திருந்தன.பெரும்பாலும் பஞ்சாபிகளால் நடத்தப்படும் அந்த தாபாக்கள் பலவும் வெறும் சாலையோரக் கடைகள் என்று ஒதுக்கிப் புறந்தள்ளிவிட முடியாத தூய்மையுடனும் சுகாதாரத்துடனும் இருப்பவை; நெடிய பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள்…ஓட்டுநர்கள் ஆகியோர் இளைப்பாறிச் செல்ல அந்த தாபாக்களில் நார்/கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டிருப்பதைக் கூடப் பார்க்க முடியும்...வட நாட்டில் மேற்கொள்ளும் பல பயணங்களில் கை கொடுப்பவை இந்த ‘தாபாக்கள்’தான்! அவற்றில் ஒன்றில் சூடான ஃபூல்கா-வறட்டுச் சப்பாத்தி,தால் ஃப்ரை..தால் மக்கனி.,தால் தடுக்கா.(பெயர்களைப் பார்த்து மலைத்து விட வேண்டாம்…நம் ஊர்களில் ஒரே மாவு இட்லி தோசை எனப் பல வடிவம் எடுப்பது போலத்தான் இங்கும் ஒரே பரம்பொருள் பல வடிவமெடுத்துப் பெயர் தாங்கியபடி வருகிறது என்பதை வடக்கில் வாழ நேர்ந்த ஒரு சில ஆண்டுகளில் புரிந்து கொண்டேன்)-ஆகியவற்றோடு காலை மதிய உணவுகளை ஒன்றாய்ச் சேர்த்துப் பகல் 11 மணியளவில் முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
சண்டிகரில் இரவு தங்கியிருந்து ஓய்வெடுத்தபின் மறுநாள் காலையில் சிம்லா செல்ல வேண்டுமென்பதே எங்களின் முதல் திட்டம்.ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே -பகல் 2 மணி அளவிலேயே-சண்டிகரை அடைந்து விட்டதால் , சிம்லா வரை ஒரே மூச்சில் தொடர்ந்து சென்று விட்டால் மறுநாள் பயணம் செய்வதைத் தவிர்த்து அங்கே கூடுதல் நேரத்தைச் செலவிட முடியுமே எனத் தோன்றியதால் பயணத்தைத் தொடர்ந்தோம்...[அது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்பது...பயணத்தின் முடிவிலேயே எங்களுக்குப் புரிந்தது..].
மாலை 6 ,7 மணி வாக்கில் சிம்லாவைச் சென்று சேர்ந்து விடலாம் என நினைத்திருந்தபோதும் மலைப்பாதை உண்டாக்கிய மயக்கமும், படரத் தொடங்கி விட்டிருந்த இருட்டும் எங்களைத் தாமதமாக்க 8 மணிக்கு மேலேதான் சிம்லாவுக்குள் நுழைந்தோம்.எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்தினர் விடுதியைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே அடைக்கலமாக இன்னும் ஒரு மணிநேரமாயிற்று. சிம்லா டவுனிலிருந்து சற்றே தள்ளி வேறொரு மலைப் பாதையிலுள்ள சரிவில் அமைந்திருந்த விடுதி,ஹீட்டர் வசதியோடு இருந்தாலும் மைனஸை எட்டிக் கொண்டிருந்த அந்தக் குளிரின் தாக்குதலிலிருந்து எங்களை அது முற்றிலுமாய்க் காப்பாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அங்குள்ள வழக்கமான உணவான ரொட்டி தால் சப்ஜியுடன் இரவுணவை முடித்துக் கொண்டு கனத்த ரஜாய்களுக்குள் சுருண்டு கொண்டோம்.
நாங்கள் சென்றபோது சிம்லாவில் பனிப் பொழிவு தொடங்கியிருக்கவில்லை...மறுநாள் அது எதிர்பார்க்கப்படுகிறதென்றும், அங்கிருந்து சற்று மேலே உள்ள குஃப்ரி என்னும் இடத்துக்குச் சென்றால் பனிப் பரப்புக்களையும் பனிப் பொழிவையும் காணலாம் என்றும் விடுதிக் காப்பாளர் உறுதியாகச் சொல்ல,பனிக் கனவுகளோடு கண்ணயர்ந்தோம்.
மறுநாள் காலை,தங்குமிடத்திலேயே சிற்றுண்டி முடித்து குஃப்ரி நோக்கிக் காரில் கிளம்பினோம்.குஃப்ரி செல்லும் பாதையிலேயே எங்கள் விடுதியும் அமைந்திருந்தது ஒரு வகையில் பயணத்தைச் சற்றே எளிதாக்கியது..
மலைப் பாதையில் ஒரு சில கிலோ மீட்டர்கள் செல்லத் தொடங்கியதுமே...பனி மூடிய தேவதாரு மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகள் சற்றுத் தொலைவில் தென்படத் தொடங்க..பனிப் பொழிவைக் காணும் நோக்கம் நிறைவேறாமல் போகப் போவதில்லை...என்னும் எண்ணம் வலுப்படத் தொடங்கியது
தொடர்ந்து மேலே செல்லச் செல்லச் சாலை ஓரங்கள்...கட்டிடங்கள் இவற்றிலெல்லம் பனியின் பொழிவு படர்ந்திருந்தது..
.
குஃப்ரி செல்லும் சாலையில்...குடும்பத்தாருடன்... |
தொடர்ந்து மேலே செல்லச் செல்லச் சாலை ஓரங்கள்...கட்டிடங்கள் இவற்றிலெல்லம் பனியின் பொழிவு படர்ந்திருந்தது..
.
ஆனாலும்...அந்தக் கட்டத்தோடு பனிக் காட்சிகளை முடித்துக் கொண்டு விட எங்கள் மனம் ஒப்பவில்லை..’பெரிதினும் பெரிது கேள்’என்று பாரதி சொன்னது எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தானே..
இன்னும் இன்னும் என்று நாங்கள் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்க,ஒரு இடத்தில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.அதற்கு மேல் வாகனப் போக்கு வரத்துக்குத் தடை. வாகனங்களை விட்டுவிட்டுச் சற்று மேலேறிச் சென்றால் பனி தரிசனம் மிக நன்றாகவே கிடைக்கும்.,.பனி படர்ந்த வெட்டவெளியிலேயே பனிச் சறுக்குக் கூடச் செய்ய முடியும் என்றார் மட்டக் குதிரைகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்த வழிகாட்டி..மட்டக் குதிரையில் 2 ,3 கி மீ பயணம் செய்வது... என்னால் முடியுமா என்ற கணநேரத் தயக்கத்தை நொடியில் உதறிவிட்டு நானும் மட்டக் குதிரை ஒன்றில் ஏறிக் கொள்ள , வழியில் விரிந்தபனிக் காட்சிகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவை....வினாடி நேரம் தயங்குவதால் வாழ்க்கையில் எத்தனை விஷயங்களைத் தவற விட நேர்ந்து விடுகிறது என்பதற்கான கண்திறப்பு அது...அந்த நேரத்தில் அவ்வாறான மனநிலையை என்னுள் ஏற்படுத்தித் தந்த இறைப் பெருங்கருணைக்கு நன்றி செலுத்திக் கொண்டே பிரபஞ்சப் பேரழகில் உள்ளம் பறிகொடுக்கத் தொடங்கினேன்..
.
.
மட்டக் குதிரையில்... |
கூம்பு வடிவில் விரிந்து படர்ந்திருக்கும் தேவதாரு மரங்களை மூடிப் போர்த்தியிருக்கும் பனி .....
சின்னச் சின்னக் கட்டிடக் கூரைகளைப் போர்த்தியிருக்கும் பனி
என்று காட்சிகள் விரிந்து பெருகிக் கொண்டே வர...மட்டக் குதிரை நிறுத்தப்பட்ட இடத்தைப் பார்த்தால் அது சற்றே மேடு பள்ளங்களுடன் கூடிய பெரியதொரு பனிப் பரப்பு...அங்கே பனிக்குள் துளைந்து கொண்டும்,பனியைத் துழாவியபடியும் குதூகலித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்ததும் நாங்களும் பனியின் குழந்தைகளாகவே ஆகிப் போனோம்......
மகள்,பேரன் ஆகியோருடன்... |
வயது காலப் பிரக்ஞைகளை மறக்கடிக்கும் அந்தத் தருணத்தில்... ஒருவர் மீது ஒருவர் பனிக் கட்டிகளை வீசிக் களித்திருந்த அந்தக் கணத்தில்....ஒரு கூடுதல் போனஸ்...! வேகமாகச் சில மல்லிகை மொக்குகள்...எங்கள் மீது சில்லென்ற தண்மையுடன் அவசரமாய் வந்து விழ...பனித்துளிப் பொழிவுகள்தான்.அந்த வெண்மொக்குகள் என்பது உணர்வானபோது பரவசப் பேரானந்தத்தின் உச்சம்........
பேத்தியின் கூந்தலில் வெண்மொக்குகளாக வீழ்ந்து படிந்திருக்கும் பனித் துளிகள்... |
இயற்கையின் இனிமையான அந்தக் கொடை....நாங்கள் தாங்கும் அளவை மீறிச் சென்று எங்களைத் துன்புறுத்தாதபடி , அனுபவித்து ரசிக்கும் மிதத்திலேயே தொடந்ததால் நாங்களும் புதிதாய்ப் பொழியும் அந்த வெள்ளை மழையில் மனம் போல நனைந்து மகிழ்ந்தோம்....என் வாழ்வின் மிகச் சிறந்த தினங்களில் இந்த நாளுக்கும் கட்டாயம் ஓரிடம் உண்டு என்று குறித்துக் கொண்டேன்...2009இல் நான் மேற்கொண்ட ஐரோப்பியச் சுற்றுலாவில் சுவிடர்லாந்தின் பனி படர்ந்த பெருநிலப் பரப்புக்களை..மலைச் சரிவுகளைக் கண்டிருந்தபோதும் அந்த நில அமைப்புக்கும் இங்குள்ள அமைப்புக்கும் உள்ள வேறுபாடும், ‘என் தாய் மண், என் வெள்ளிப் பனி இமயம்’என்று பொங்கிய பெருமிதமும் என் ரசனையைக் கொஞ்சமும் குறைக்காமல் உச்சத்திலேயே வைத்திருந்தன..
மறுநாள் சிம்லா நகரத்தின் மையப் பகுதிக்குச் சென்று [மால்] பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோடைத் தலைநகராக விளங்கிய அந்த நகரிலிருக்கும் புராதனப் பாணிக் கட்டிடங்கள்..கடைத் தெருக்கள் ஆகியவற்றுக்குள்ளேயே நாள் முழுவதும் சுற்றியலைந்து கொண்டிருந்தோம்...மாலை 5 மணியளவில் அங்குள்ள உல்லாசக் குதிரை சவாரியில் குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த நேரத்தில்...எவரும் எதிர்பாராதபடி .சற்றே கடுமையான, மிகவும் வேகமான பனிப் பொழிவொன்று சட்டென்று நேர்ந்துவிட...அதன் உக்கிரமான மற்றொரு முகம் எங்களுக்கு அச்சமூட்டி விட்டது... கையில் குடையுமில்லை...ஒதுங்க இடம் தருவார் எவருமில்லை என்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் சில்லிட்டு உறைந்து போய்க் கிடந்த பின் ஒரு வழியாகத் தப்பித்து விடுதியை வந்தடைந்தோம்....
மூன்றாம் நாள் காலை..எங்கள் தங்குமிடத்துக்கே எங்களைத் தொடர்ந்து வந்தணைந்து விட்ட பனி...அங்கே நின்றிருந்த வாகனங்கள் அனைத்தின் மீதும் வெண் போர்வையாய்ப் படந்திருந்தது. எங்கள் காரும் பனிக்கிரீடத்தைத் தரித்தபடி அங்கே நின்று கொண்டிருந்தது.பனிப் பொழிவின் வேகமும்,கடுமையும் கூடுதலானால்...குடிநீர் மின்சாரம் இவை கிடைப்பதும் கூடக் கடினமாகி விடும்[அன்றே எங்களுக்குப் பால் கிடைப்பது சிரமமாகியிருந்தது]...என்றும்..செல்லும் பாதையில் பனி மூடிப் போனால்...2,3 நாட்கள் கூட அங்கேயே தங்க வேண்டியதாகி விடும் என்றும் விடுதிக் காப்பாளர் அச்சுறுத்தல் விடுக்க...வரமாய் வாய்த்த பனியைச் சாபமாக்கிக் கொண்டு என்றும் மனச் சேமிப்பில் உறைந்தாக வேண்டிய நாட்களின் பக்கங்களைக் கசப்பான அனுபவங்களால் நிரப்பிக் கொண்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு..சற்றே வெயில் தலை காட்டத் தொடங்கியதுமே சண்டிகர் நோக்கி விரையத் தொடங்கினோம்;பனி வழுக்கும் பாதைகளில் சறுக்கி விடாதபடி மருமகன் சாமர்த்தியமாய் வண்டி ஓட்ட.,மாலை 6 மணியளவில் சண்டிகர் வந்து சேர்ந்து மறுநாள் காலை தில்லி திரும்பினோம்........
தில்லி வந்து சேர்ந்து அடுத்தடுத்த நாட்களின் செய்தித் தாள் பார்த்து... சிம்லாவின் பனிப் பொழிவு அங்குள்ள அன்றாட வாழ்வையே முடக்கிப் போட்டிருப்பதைக் கண்டபின் - மிகத் துல்லியமாக-மிகையும் குறைவும் இன்றி- எங்கள் பயணம் அமைந்து விட்டிருந்ததையும்...ஒரு நாள் தாமதமாக அது அமைந்திருந்தாலும் கூட அந்த அனுபவத்தின் முழுமை கை நழுவிப் போயிருக்கும் என்பதையும் எண்ணி ஒரு கணம் வியக்காமல் இருக்க இயலவில்லை.
புகைப்படங்கள்; பதிவர்
மேலும் சில பனிக் காட்சிகள்...
9 கருத்துகள் :
அழகான படைப்பு
சுவாரசியமானப் பயணக்கட்டுரை. படங்களும் பிரமாதம். நல்லவேளையாக தீவிரப் பனியில் சிக்காமல் திரும்ப முடிந்ததே..
இந்தியப் பயண வரிசையில் இதையும் சேர்க்க வேண்டியது தான். 'குருக்ஷேத்திரம்' கொஞ்சம் கட்டிப் போட்டது. அது கிராமமா, நகரமா? ஒரு முறையாவது போய்ப் பார்க்கத் தோன்றியது.
மிக அழகான சரளமான பயணம் அம்மா.. எனக்கும் வாய்த்தது இந்த எழுத்துக்கள் மூலம்..:)!
இனிமையான பயணக் கட்டுரை அம்மா... நாங்களும் உங்கள் மூலம் பனியில் நனைந்தோம்.....
படங்களும் அருமை....
Our visit to simla was a great experience too..kurusethram temple. great..simla temple visit by horses...Great experience!
Bombay-Gujarat somnath temple.Rajastan,Punjab Golden temple,Kali mandir,Haryana.Simla..UP.kasi temple..Kolkata Kali temple.Mother teresa home...orissa temples..jarkand,Satiskar...Bombay..Great experience!
இனிமையான பயணத்தை அழகாக நேர்த்தியாக விவரித்து எழுதியிருப்பது நாங்களும் உஙகளுடன் எங்கள் குடும்பத்துடன் பயணம் செய்ததைப் போன்ற உணர்வை அளித்தமைக்கு நன்றி !!
அழகான அருமையான பதிவு ! ஒவ்வொரு படமும் சூப்பர் ! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி !
அருமையான புகைப்படங்கள் அம்மா..
அருமையான சுற்றுலா பதிவு. அருமையான புகைப்படங்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி அம்மா.
கருத்துரையிடுக