துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.2.12

''யானை புக்க புலம்....''

பயணம் இதழில்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் என்னும் தலைப்பில் சங்கப்பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறேன்.ஜன.இதழில் வெளி வந்திருக்கும் அதன் முதல் பகுதி கீழே....
சங்கப் பாடல்கள் தொன்மைப் பண்பாடுகளாலும்,வரலாற்றுத் தகவல்களாலும் நிரம்பியிருக்கும் ஆவணங்கள் மட்டுமல்ல. இன்று வரை அவை இறவாப் புகழோடு இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம்,என்றைக்கும் தேவையான மானுட மதிப்பீடுகளை, என்றும் எவருக்கும் பொதுவான மன உணர்வுகளை அவை முன் வைப்பதும்தான்.  புறமும் அகமுமாக இரண்டு வகைக் கருப்பொருள்களை மட்டுமே வைத்துக் கொண்டு எண்ணற்ற அறங்களை,எளிதில் அவிழ்த்துச் சொல்லி விட இயலாத ஆழ்மனப் பதிவுகளைச் செறித்து வைத்தபடி…உலக இலக்கிய வரிசையில் அழியாப் புகழுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கருவூலங்களில் சிலவற்றை இன்றைய தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவதே சங்கப்பாடல்களினூடேயான இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம்.
''யானை புக்க புலம்...''
சமகாலச் சமூக வாழ்வில் - இன்றைய ஜனநாயக அமைப்பிலும் கூட  அரசுஇயந்திரம் என்பது எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை முன் வைக்கிறது பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடல் ஒன்று. அரசு நடத்த அடிப்படை ஆதாரம் பொருள் என்பதையும் அந்தப் பொருளைச் சேகரிக்கும் வழிகளில் ஒன்று மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் என்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை.ஆனால்..அந்த வரி முறையான நெறிகளோடு பெறப்படுகிறதா,மக்களைக் கசக்கிப் பிழிந்து உறிஞ்சிப் போடுவதாக ஆகி விடுகிறதா என்பதே கேள்வி.


வழிப்பறிக் கொள்ளைக்காரன் வேலைக் காட்டி மிரட்டிப் பண வசூல் செய்கிறான்..அரசனும் தன் செங்கோலைக் காட்டி அதையே செய்து விடக் கூடாது என்கிறது ஒரு குறள்.
‘’வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடுநின்றான் இரவு’’


இதையே சற்று வேறுவகையாகக் கற்பனை செய்கிறார் பிசிராந்தையார்.
நெல் விளைந்து செழித்துக் கிடக்கும் ஒரு வயல்.அதில் கதிரறுத்து நெல்மணி பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால்…ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும்.அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டு விட்டால் நூறு நூறு ‘செறு’[ஏக்கர் போல அந்தக் காலத்துக் கணக்கு] அளவு கொண்ட நிலமாக இருந்தாலும் அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும். இந்த எடுத்துக் காட்டைச் சொல்லும் புலவர் பிறகு ஒப்பீட்டுக்கு வருகிறார்.


அறிவுத் தெளிவு வாய்ந்த அரசன் தன் குடிமக்களின் வாழ்க்கை நிலை,தகுதிப்பாடு,பொருளாதார நிலை ஆகியவற்றை எடை போட்டுப் பார்த்து அவரவர் திறனுக்கு ஏற்றபடி நெறிமுறையோடு வரி கொண்டால் கோடிக் கணக்கில் பொருளை ஈட்டி விட முடியும்…நாடும் வளம் கொழிக்கும் திருநாடாகும். மாறாக அறிவுக் குறைபாட்டால் அவசர கதியில்- எந்தத் தர வரிசையும் பிரிக்க அறியாத அமைச்சர்களின் துணை கொண்டு…வரித் திணிப்புச் செய்து - சிறிதும் இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அவன் முற்பட்டால்……அந்த நாடு ‘’யானை புக்க புலம்’’ போல…அவனுக்கும் பயன் தராமல்,மக்களும் பயன் கொள்ள வழியில்லாமல் சீர்கெட்டுச் சிதையும் என்று தன் உவமையைக் கொண்டு வந்து அரசின் நெறிமுறைகளோடு ஒருங்கிணைக்கிறார்.பிசிராந்தையார்.
’காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே’’-புறநானூறு-184
[மா,செறு-அக்கால நில அளவு; யாத்து-உற்பத்தி செய்து/வளம் பெருக்கி; நந்தும்-வளரும்/செழிக்கும்; பரிவுதப எடுக்கும் பிண்டம்-இரக்கமின்றி வலிந்து பெறும் வரிப்பொருள்;நச்சின் - விரும்பினால்;]


சங்க காலப் புலவர்கள் மன்னனைப் போற்றிப் பாடுவதோடு நின்று விடாமல் தேவையான தருணங்களில் அறிவு கொளுத்துபவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். உண்மையான அறிவுஜீவிகளின் வேலை அடிவருடுவதல்ல என்பதைத் தங்கள் சொல்லாலும்,செயலாலும் மெய்ப்பித்து-  வேண்டிய இடங்களில் துணிந்து தங்கள் கருத்தைக் கூறியபடி, எங்கள் ‘’சிறு செந்நா பொய் கூறாது’’என நிமிர்ந்து நின்றவர்கள் அவர்கள். அதனாலேதான் அரசனைப் பாராட்டும் பாடாண் என்னும் திணையில் அவனுக்கு அறிவு புகட்டும் ‘செவியறிவுறூஉ’ [மன்னனின் காதிலும் கருத்திலும் பதியுமாறு அறிவுறுத்தல்] என்னும் துறையும் சேர்க்கப் பெற்றிருக்கிறது.மேலே குறிப்பிட்டிருக்கும் பிசிராந்தையார் பாடலும் இடம் பெற்றிருப்பது அந்தத் துறையிலேதான். 


பாண்டியன் அறிவுடை நம்பியை நோக்கி அறத் துணிவோடு அவர் பாடிய அந்தப் புறநானூற்றுப் பாடல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் இன்றும் கூட ‘’யானை புக்க புல’’ங்களாய்ச் சீரழியும் நம் சமூகத்தை நமக்கு நினைவூட்டத் தவறுவதில்லை என்பதே அதனை என்றென்றும் நித்தியத்துவம் உள்ளதாக்குகிறது. இன்றைய அறிவுக் காவலர்களில் பிசிராந்தையாரின் துணிவும் தன்னம்பிக்கையும் எத்தனை பேருக்கு இருக்கிறது…என்பதை வேதனையோடு எண்ணி வருந்தவும் வைத்து விடுகிறது இப் புறப்பாடல்.
7 கருத்துகள் :

guna thamizh சொன்னது…

அருமை முனைவரே

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி குணா..நலம்தானே.

guna thamizh சொன்னது…

நலமாக இருக்கிறேன் அம்மா.

அப்பாதுரை சொன்னது…

சங்க இலக்கியங்களின் இறவாமைக்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் மிகச் சரி, மனித நேயம் காலவரையறைக்கப்பாற்பட்டது. பாடல் அருமை. உங்கள் விளக்கம் அதனினும். யானை புக்க நிலம் - சாதாரண விஷயங்களை எவ்வளவு சூட்சுமமாகப் பார்த்திருக்கிறார்கள்!

சித்திரவீதிக்காரன் சொன்னது…

சங்க இலக்கியங்களை இதுபோன்ற தொடராக எழுதுவதால் எங்களைப்போன்ற இணைய தமிழ் வாசகர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது. மதுரைக்காஞ்சியையும் தாங்கள் இதுபோல் எளிமையாக்கி எழுதினால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பகிர்விற்கு நன்றி.

மா.சரவணக்குமார் சொன்னது…

//சங்க இலக்கியங்களை இதுபோன்ற தொடராக எழுதுவதால் எங்களைப்போன்ற இணைய தமிழ் வாசகர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.//

என் கருத்தும் இது தான் மேடம்.

‘’சிறு செந்நா பொய் கூறாது’’

எப்படி பயமில்லாமல் பாடினார்.நினைப்பதற்கே பயமாக இருக்கிறது.

Devaraj Vittalan சொன்னது…

பயணம் இதழுக்கு வந்த வாசகர் கடிதத்திலிருந்து ...

சங்கப் பாடல்களினூடே ஒரு பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

தங்க. சங்கரபாண்டியன் Š சென்னை .103.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....