துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.1.16

மூடிய நெய்யும்,கூடார வல்லியும்..

பொங்கலை மூடியிருக்கும் நெய்யைப்போல நம்மை மூடியிருக்கும்                                    அறியாமைகள்தான் எத்தனை எத்தனை?

இலக்கிய வரிகள் சில, காலப்போக்கில் தேய்ந்து போய் வேறுவகையாக மாறி விடுவதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆண்டாள் திருப்பாவையின் இருபத்தேழாம் பாடலின் தொடக்கமான ‘’கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா’’கூடாரவல்லியாய்த் திரிந்து போன கதை.

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா என்று தொடங்கும் பாடல் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்’’என இனிய முரணோடு முடிகிறது; மால் தன்னைக்கூடாதவருக்குக் கொடியவன்,தன்னைச்சேர்ந்தவர்களுக்குத் தண்மையானவன்,குளிர்ச்சி தருபவன். இந்தக்கூடல் கூடாரவல்லியாய் மாறி, இந்த நாளின் பெயரே ‘கூடாரவல்லி’என்று மருவி விட்டது விநோதம்தான்..

மார்கழி நோன்பின் நிறைவைச்சொல்லும் இந்தப் பாடலில் ’’மூட நெய் பெய்து முழங்கை வழி வார’’ பாற்சோறுசெய்துகூடியிருந்து உண்போம் என்றும் வருவதால் ’கூடாரவல்லி’யாக ஆக்கப்பட்ட இந்த நாளில் பொங்கல் படைத்து நிவேதனம் செய்து உண்ணும் வழக்கமும் தொடங்கியது,.

மார்கழி நோன்பு வெற்றியாக முடிந்து என்றென்றும் கண்ணன் திருவடியில் அவனுக்குத் தொண்டு செய்யும் பெரும்பேறு மட்டும் வாய்த்து விட்டால்- நோன்புக் காலத்தில் நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல்  துறந்திருந்த நல்லுணவை உண்போம்,மையிட்டெழுதி மலரிட்டு முடியாமல் விட்ட ஒப்பனைகளைப் புனைந்து கொள்வோம் என்று வரிசையாகச்  சொல்லி வரும் பாடல் இது.  ’மூட நெய் பெய்து முழங்கை வழி வார’’நெய்யால் முழுக்காட்டி  சர்க்கரை  இட்ட பாற்சோற்றைக் கையில் எடுத்தால் முழங்கை வழி அந்தநெய் வழிந்து வர வேண்டும் என்பதுதான் இதில் நாம் வெளிப்படையாகக்காணும் பொருள்,எல்லோரும் சொல்லும் பொருள்.
திவ்வியப்பிரபந்த உரைகாரர்கள் வியாக்கியான கர்த்தர்கள் அதற்குத் தரும்  விளக்கம் வேறு. கண்ணனைக்கண்டு விட்ட திகைப்பில்.....அவனைப்பணிந்து அவனது பெயர்கள் பலவற்றை சொல்லி அவன்  புகழ் பாடிய பரவசத்தில்  உள்ளங்கையில் ஏந்திய பொங்கலை உண்ண வேண்டும் என்பதும் கூட அந்தப்பெண்களுக்கோ அல்லது பரமாத்மாவைச்சேர வேண்டும் என்ற பசியோடு இருக்கும் ஜீவாத்மாக்களுக்கோ மறந்து போகக் கையில் எடுத்த பொங்கலிலிலிருந்து நெய் வழிவதைக்கூடக் கண்டு கொள்ளாத பிரமிப்பில் அவர்கள் அமிழ்ந்து போய்க்கிடக்கிறார்களாம்....அதனாலேதான் உண்ணப்படாத அந்த நெய் முழங்கை வழி சொரிகிறதாம்.

நோன்புக்கு முன்  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று தவிர்த்தவர்கள் இப்போது நோன்பு முடிந்து இறைப்பேறு  கிடைத்த பின்  அதை உண்ணமுடியாத   வேறொரு உன்னத நிலை[SUBLIMITY]க்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்..அப்போது நெய்யும் பாலும் அருந்துவது  அவர்களுக்கு ஒரு பொருட்டாக அல்லாமல் உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் கண்ணன் மட்டுமே என்று ஆகிப்போகிறது!
பொங்கலை மூடியிருக்கும் நெய்யைப்போல நம்மை மூடியிருக்கும் அறியாமைகள்தான் எத்தனை எத்தனை?

தொடர்புடைய பதிவுகள்

'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....