துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.5.11

’’குழவி இறப்பினும்..’’



சங்கச் சமூகம்,போர் முதன்மைப்பட்ட சமூகம்.
போரில் புறப் புண் பட்டதற்கு நாணி வடக்கிருந்து(உண்ணாநோன்பு)உயிர் விடும் சமூகம்.

தன் மகனுக்குப் புறப்புண் பட்டு விட்டதென்று செவி வழிச் செய்தியாகக் கேள்வியுற்றதுமே அது உண்மையாக இருந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை வாளால் அறுப்பேன் என ஒரு தாய் வஞ்சினம் கூறிப் போர்க்களம் புகுந்த சமூகம்.

‘உன் மகன் எங்கே இருக்கிறான்?’என்று யாரோ கேள்வி கேட்டதற்குப் பதிலாக,
‘’தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே ‘’(மாதோ என்பது தனக்கென்று தனிப் பொருளற்ற அசைச் சொல்.)என்று ஓர் அன்னை,தன் மகன் போர்க்களத்திலேயே குடியிருப்பதைப் பெருமிதமாகக்கொண்டு முழங்கிய சமூகம்.

தனக்கு மகன் பிறந்திருப்பதைப் போர்க்களத்திலிருக்கும்போது அறிய நேர்ந்த அதியமான் , தன் குழந்தையைக் காணும் ஆவலுடன் ஓடோடி வந்தாலும் ‘போர்முகத்தில் பகைவரை நோக்கியபோது சிவந்திருந்த அவன் கண்களின் செம்மை தன் சிறுவனைக் கண்டும் மாறவில்லை’(’’செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாதே’’)என்று ஔவை,கவி பாடி மேன்மைப்படுத்திய சமூகம்.

.’’ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலுமே ‘’வழக்கமாய்ப் போயிருந்த - விலங்கினப் பண்புகளே மேலோங்கியிருந்த- அப் போர்ச் சமூகத்தில் நிலவிய விசித்திரமான வழக்கம் ஒன்றை முன் வைக்கிறது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் புறப்பாடல் ஒன்று.

சோழ மன்னனுடன் நிகழ்ந்த போரில் சிறை பிடிக்கப்பட்டசேரன் கணைக்கால் இரும்பொறை,தனது தாகத்துக்குத் தண்ணீர் கேட்க,சிறைக்காவலன்,அதைப் பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தி நீர் கொண்டு வந்து தந்ததாகவும்,அந்தச் சிறிய அவமானத்தைக் கூடப் பொறுக்க இயலாத சேரன்,அந்நீரை ஒதுக்கிவிட்டு வடக்கிருந்து உயிர் நீத்ததாகவும் - அப்போது இறுதியாக அவன் எழுதி வைத்த பாடல் இது என்றும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் பின்னணி உரையாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘’குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே’’’(புறநானூறு-74)


(மதுகை-கொள்கைப்பிடிப்பு;
இரீஇய -அளபெடுத்து வருகிறது;நாயைச் சங்கிலியால் பிணைத்து இழுப்பதைப்போல.
ஊன்தடி - குறைப்பிண்டம்-குறைக்குழவி;
ஞமலி-நாய்)

‘’ஒரு சிறிய குழந்தை இறந்து போனாலும்,பிறக்கும்போதே இறந்து பிறந்தாலும்,குறைப்பிண்டமாக ஒரு குழந்தை பிறந்தாலும் அவற்றையும் கூட அலட்சியம் செய்து விடாமல் - வீரக் குடியில் ஜனித்த மக்களாகவே எண்ணி - ஒரு வாளால் கீறிப் புண் உண்டாக்கிய பிறகே இறுதிச் சடங்கு செய்வது மறக்குடியினரின் வழக்கம்.
அவ்வாறிருக்கையில் - நாயைச் சங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்வதைப்போலச் சிறுமைக்கு ஆளாக்கும் பகைநாட்டவர்,ஏதோ பிச்சை போடுவதைப் போலத் தரும் தண்ணீரையும்,உணவையும் வேண்டாம் என மறுக்கும் மன வலிமையின்றி,அவற்றை இரந்து உண்ணும் தன்மானமற்ற மக்களை இம் மறக்குடி பெறக் கூடுமா?என்ற வினாவை எழுப்பி அவ்வாறான மான உணர்வவற்ற மனிதர்களை இவ்வுலகில் வாழும் மறக்குடி ஒரு நாளும் பெற்றெடுக்காது ‘ என விடையும் கூறுகிறது சேரனின் பாடல்.
(கேளல் கேளிர்; நண்பர்களாக இல்லையென்றாலும் அவர்களுடன்தான் இப்போது இருந்து ஆக வேண்டியிருக்கிறது என்பதையே கேள் அல் கேளிர்- நட்புணர்வு இல்லாமல் உடனிருப்போர் என்ற தொடர் சுட்டுகிறது.
ஊன்தடி - குறைப்பிண்டம்-குறைக்குழவி;
மதுகை-கொள்கைப்பிடிப்பு,மன உரம்.
இரீஇய -அளபெடுத்து வருகிறது;நாயைச் சங்கிலியால் பிணைத்து இழுப்பதைப்போல
ஞமலி-நாய்)

குறைப்பிண்டமாக ஒரு குழந்தை பிறந்தாலும் கூட வாளால் சற்று பின்னப்படுத்திய பிறகே இறுதிச் சடங்கு செய்வார்கள் என்னும் வழக்கத்தைக் கூறும் இச் சங்கப் பாடலின் தொடர்ச்சியை அதன் எச்சத்தை இன்றைய நடப்பிலும் காண முடிகிறது.
உடலில் ஒரு பின்னம் கூட ஏற்படாமல் - சிறு மறு கூட இல்லாமல் இறக்கும் குழந்தைகளைக் கீறிப் புதைக்கும் வழக்கம் இன்னும் கூடத் தமிழகத்தின் சில குடியினரிடம் தொடரத்தான் செய்கிறது.

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் சிறியதொரு வடு,புண் இன்றி மரணிப்பது கேவலம் எனக் கருதப்பட்ட சங்க மதிப்பீடுகளின் மிச்சங்களாகவே - அவற்றின் நீட்சியாகவே இம் மரபுகளைக் கொள்ள முடிகிறது.


பி.கு;
காது குத்தும் வழக்கமும் கூட இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ஆண்குழந்தைகளுக்குக் கூடக் காது குத்துவது அதனால்தானோ என்னவோ?
பின்னாளில் நகை,தோடு,கடுக்கன் அணிதலாக அது மாறியிருக்கக் கூடும்.



3 கருத்துகள் :

Unknown சொன்னது…

அம்மா
அருமையான விளக்கங்களுடனும் , எளிதாய் புரிந்துகொள்ளும்படியும்
தொகுத்துள்ளீர்கள் .

Prabu Krishna சொன்னது…

இன்றுதான் முதல் முறை வருகிறேன். அருமையாக உள்ளது. பாடலும் விளக்கமும் மிக அருமை.

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம். புறநானூற்றுப் பாடல் சிலிர்க்க வைக்கிறது. இன்றைக்கும் அந்தப் பழக்கம் தொடர்வது கொஞ்சம் குறுகுறுக்க வைக்கிறது - அறியாமையோ?

ஆண்கள் காது குத்துவது, சால்ஜாப்புப் பெண்களிடம் 'எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சுமா' என்பதற்கு :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....