துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.5.13

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்…1-[குவாலியர்]


குவாலியர் கோட்டை
தில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து செல்லப்போவது ஏறத்தாழ முடிவான 2012 நவம்பரிலேயே அந்த இடப் பெயர்வை ஒரு நெடிய இந்தியப் பயணமாக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுக்கத் தொடங்கி விட்டோம். பொருட்களை முதலில் ஏற்றி அனுப்பி விட்டு எங்கள் காரிலேயே மத்திய மற்றும் மேற்கிந்தியா வழி குடும்பத்தோடு கோவை வரை வந்து சேரும் திட்டம் அது.

அரசு தங்கும் விடுதிகள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ [உரிய கட்டணம் செலுத்தித்தான்] அவற்றை ஒட்டிய இன்றியமையாத இடங்களைப்பார்த்தபடியே கிட்டத்தட்ட 20 நாட்கள் நீளும் பயணம்…
ஒருவழியாக பயணத் திட்டத்தை வகுத்து விட்டாலும் மே மாத வெயில் கடுமையும், என் உடல்நலம் எந்த அளவு ஒத்துழைக்கும் என்ற ஐயமும், இத்தனை நெடிய பயணத்தைக் குழந்தைகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்னும் ஐயமும் இறுதிவரையிலும் கூட எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன. ஒரு வழியாக அவற்றையெல்லாம் புறந்தள்ளியபடி 25 மே சனிக்கிழமை காலை ஆறு முப்பது மணியளவில் தில்லியிலிருந்து கிளம்பினோம். நான்,மகள்,மருமகன் [வண்டி ஓட்டுநரும் அவரே], பேரக்குழந்தைகள் இருவர் என எங்கள் மொத்தக்குடும்பமும் இந்தியப் பயணத்தைத் தொடங்க,புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் யமுனை அதிவிரைவுச் சாலையில் எங்கள் வண்டி வழுக்கிக் கொண்டு சென்றது. மேலை நாடுகளைப் போன்ற அகலமான- அதிக போக்குவரத்துக்கள் அற்ற அந்தச்சாலை  எங்கள் பயணத்தை விரைவாக்க காலை 10 மணியை ஒட்டியே ஆக்ராவைத் தாண்டி விட முடிந்தது. பலமுறை பார்த்த ஆக்ராவைப் பயணப் பட்டியலிலிருந்து ஒதுக்கியபடி குவாலியர் நோக்கி விரைந்தோம். 

குளிரூட்டப்பட்ட காரும் கூட 45 டிகிரிக்கு மேல் அடித்துக் கொண்டிருந்த வெயிலிலிருந்து பாதுகாப்புத் தர முடியவில்லை.
உ.பி, ஹரியானா, ஆகிய மாநிலங்களைத் தொட்டுக் கொண்டு மத்தியப்பிரதேசத்தில் நுழைந்தோம். குவாலியர் செல்லும் பாதை நெடுகிலும் வறட்சியின் கொடுமை, பட்ட மரங்கள், பாலை நிலங்கள்!!, பூலான் தேவியின் இருப்பிடமான சம்பலின் ஒரு பகுதியும் கண்ணில் பட்டது.


வழியில்....சம்பலின் ஒரு பகுதி....

பிற்பகல் 1 15 மணியளவில் குவாலியர் தங்கும் விடுதிக்குச் சென்றபோது அங்கிருந்த படுக்கை தலையணையும் கூடக் கொதித்துக் கொண்டிருந்தது. மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு 15 கி.மீ. தள்ளியிருந்த மிகப்பழமையான குவாலியர் கோட்டையில் நிகழும் ஒலி-ஒளிக்காட்சியைக் காணச்சென்றோம்.
மத்தியப்பிரதேசத்தின் இதயமாகக் கருதப்படும் குவாலியர் நகரம் விசாலமான சாலைகள் கொண்ட பெரிய நகரம்தானென்றாலும் வெயிலின் வறட்சிக்கொடுமையால் நகரமும் கடைத் தெருக்களும் வெறிச்சோடிக் கிடந்தன. இராணுவ முகாம்களையும், தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் அகாதமியையும் 
தேசிய மாணவர் படைப் பயிற்சி அகாதமி


கொண்டிருக்கும் குவாலியரிலேதான் புகழ்பெற்ற இசைக்கலைஞர் தான்சேன் பயின்ற இசைப்பள்ளி இருக்கிறது.
குவாலியரில் ஒரு புராதனக்கட்டிடம்

நகரிலிருந்து விலகியிருந்த கோட்டை அரணை நெருங்கும்போதே தொன்மையின் தொட்டிலுக்குள் காலடி எடுத்து வைப்பதான உணர்வு…
இரவு நேரத்துக் கோட்டைக்காட்சியில் குடும்பத்தாருடன்....

[பயணம் தொடரும்…..]

1 கருத்து :

Devaraj Vittalan சொன்னது…

தங்களது பயணத்தை பற்றிய பதிவுகளை ஆவலுடன் வாசித்து வருகிறேன்.

அன்புடன்
தேவராஜ்விட்டலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....