பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்;
அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக...மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.
இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான சோகக் கதையைச் சொல்லி நெக்குருக வைக்கிறது..இத்துடன் இணைத்துள்ள வீடியோ இணைப்பு.
Sunitha Krishnan's fight against sex slavery
http://www.youtube.com/watch?v=jeOumyTMCI8
இதன் உள்ளர்ந்த நோக்கம் அனுதாபத்தை மட்டும் கிளர்த்திவிட்டு ,அங்கலாய்ப்புக்களைச் சம்பாதித்துக் கொள்வதல்ல.
பாரதி சொல்வதைப் போன்ற வெற்றுப் புலம்பல்களும்,பரிதாபப் பெருமூச்சுக்களும், உச்சுக் கொட்டல்களும்,இரங்கல் தீர்மானங்களும் இவர்களுக்குத் தேவையில்லை.சமூக விலக்கம்,மனித ஜீவிகளாகவே மதிக்கக் கூசும் மனத்தடைகள் இவற்றிலிருந்து சமூகம் விடுபட்டாக வேண்டும் என்பதே இந்த உரைவழி சுனிதா கிருஷ்ணன் விடுக்கும் செய்தி.
வலியின் கடுமை...அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்கம் அது உணர்வாகும்போதே உறைக்கும்.அத்தகைய வலிக்கும்,வேதனைக்கும் ஆட்பட்டவர் சுனிதாகிருஷ்ணன்.
தனது பதின் பருவத்தில் -15 வயதில்- எட்டு மூர்க்கர்களால் gang rape எனப்படும் ஒட்டுமொத்தமான பாலியல் வன்முறைக்குத் தான் ஆட்பட நேர்ந்ததை எந்த மனத்தடையும்
இன்றி முன் வைக்கும் சுனிதா கிருஷ்ணன்,அந்தச் சம்பவத்தின் வலியும்,அதனால் விளைந்த கோபமும் மட்டுமே தன்னிடம் இன்னமும் கூடக் கனன்று கொண்டிருப்பதை ஆக்ரோஷமாக வெளியிடுகிறார்.அதனால் தான் பட்ட உடல் காயங்கள் ஒரு புறமிருக்க அதற்காகவே பெண்ணைப் புறக்கணிப்புச் செய்யும் ‘நாகரிக சமூக’த்தின் மீதே அவரது சினம் பொங்கி வெடிக்கிறது.
சுனிதாகிருஷ்ணனின் கோபம் எரிக்கும் சினமல்ல;இது போன்ற குற்றங்களுக்கு மாற்றுத் தேடி அவற்றைத் தணிக்கும் சினமாகத் தன் ரௌத்திரத்தை மடை மாற்றிக்கொண்டதிலேதான் சுனிதாவின் வாழ்க்கை,முத்திரையைப் பதிக்கிறது;தன் சமூக அக்கறையைப் பதிவு செய்கிறது;கழிவிரக்கத்தால் தன் வாழ்வையும் வீணடித்து சமூகத்துக்கும் பயன்படாமல் போவதில் அவருக்குச் சம்மதமில்லை; தனக்கு ஏற்பட்ட இழப்புக்குள் முடங்கிப் போய்விடாமல்... தன் பார்வையை விசாலமாக விரித்துத் தன்னைப் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்களைத் தேடித்தேடி,அவர்களின் நோய்க்கு மருந்திடும் அற்புதமான பணியில் தன்னை தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதன் வழி தன் வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்மணிக்கு வெற்றுப் புகழ்ச்சிகள் தேவையில்லை;அவற்றை அவர் நாடுவதும் இல்லை.
பாலியல் தாக்குதல்களுக்கு ஆளான 3200 பெண்கள், அவரவர்க்கு ஏற்ற வழியில் மறுவாழ்வு பெற வழி காட்டி உதவியிருக்கிறார் இவர்.குறிப்பாக ஆணாதிக்கம் மிகுந்த சமூக அமைப்பில்-ஆண் செய்யும் கடினமான பணிகளையே துணிந்து மேற்கொண்டு (வெல்டிங்,தச்சு,மேஸ்திரி)தங்கள் உடல் வலுவைக் காட்டுவதன் வழி தாங்கள் உடலால் வீழ்த்தப்பட்ட நிலையைக் கடந்து போகும் இந்தப் பெண்கள்,இவ்வாறான பணிகளையே தங்கள் எதிர்ப்பின் குறியீடாக வெளிப்படுத்தும் துணிவை இப் பதிவில் காண முடியும்.
3,4,5 வயதிலுள்ள பச்சிளம் குழந்தைகளின் பாலியல் பலியோடு தன் உரையைத் தொடங்கும்
சுனிதா,தன் உரையின் நிறைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மகாகனம் பொருந்திய ...மேன்மை தங்கிய இந்தச் சமூக அமைப்பைத்தான்.
நாய்க்கு எலும்புத் துண்டை வீசுவது போல இத்தகைய உதவி அமைப்புக்களுக்குத் தானம் தர முன் வரும் மனிதர்களும் கூட வீட்டு உதவிக்காக என்று வரும்போது இந்தப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளத் துணியாத இரட்டை மனப்போக்கைப் பிட்டுப் பிட்டு வைத்து’’இவர்களுக்கு வேண்டியது உங்கள் தான தருமமோ பிச்சையோ அல்ல, அவர்களையும் தன்மதிப்புமிக்க மனிதஜீவிகளாக ஏற்க முன் வரும் மாண்பு மட்டுமே’’என்பதை அழுத்தமாக முழக்கமிட்டுச் சமூகச் சுயத்தைத் தோலுரிப்புச் செய்கிறர் சுனிதா.
அவர் வைக்கும் குற்றச் சாட்டில் என்ன பிழை இருக்கிறது? விஸ்தாரமாக....விவரணைகளோடு gang rape ஐ முன் வைத்த ’பருத்தி வீர’னைக் கொண்டாடி விழா எடுத்து அதுவே உலகத் தரம் என்று கொண்டாடுபவர்கள்தானே நாம்? பாதிப்பைத் துல்லியமாகக் காட்டியாக வேண்டும் என்பதில் எடுத்துக் கொண்ட முயற்சி-அப்படிப்பட்ட செயல்பாடுகள் தவறு என்பதை இம்மியளவு கூட உணர்த்துவதாக இல்லையே?
அவ்வாறான தாக்குதலுக்கு ஆளான பெண் என்பது வெளிப்பட்டு விட்டால் கூட ஊரும்,சுற்றமும் இழிவுபடுத்தும் என்பதற்காகத்தானே அவளைக் காதலனின் கையால் கண்ட துண்டமாகக் கூறு போட விடுகிறார் இயக்குநர்?
பழகிப் போன மதிப்பீடுகளுடன் அதைப் பார்க்கும் சராசரிப் பார்வையாளனின் பொதுப் புத்தியிலும் அது நியாயம் என்ற எண்ணம்தான் ஆழமாகப் படியுமே ஒழிய,அவளும் வாழ்வதற்குத் தகுதி படைத்தவள் என்ற சிந்தனை எப்படி உதிக்கும்?
கலைப் படைப்புக்கள் என்ற பெயர் சுமந்து இத்தகைய படங்கள் வந்தாலும்
பார்வையாளர்களின் இரக்கத்தைத் தூண்டுவதைத் தவிர இவை வேறு எதைச் சாதித்திருக்கின்றன?
எந்தப் போர்வையில்- எந்த முகமூடியுடன் சொன்னாலும், இவ்வாறான தாக்குதல்களுக்கு ஆட்பட்ட பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுதானே இவைகளெல்லாம் வலியுறுத்த விரும்பும் கருத்து?அதுதானே அவை முன் வைக்கும் நிஜம்?
இந்தச் சந்தை இரைச்சல்களுக்கிடையே ....
இப்படிப்பட்ட மூளைச் சலவைகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் நமக்கு ஆயிரம் சுனிதா கிருஷ்ணன்கள் கூடப் போதாது என்பதுதான் கசக்கும் உண்மை.
இந்தப் பதிவைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.
இதன் இணைப்பான வீடியோ பதிவைப் பாருங்கள்;சுனிதா கிருஷ்ணனின் உரையைக் கேளுங்கள்.......
உங்களால் முடிந்த எல்லை வரை இந்தச் செய்தியைக் கொண்டு சென்று சமூக மனச் சாட்சியை உலுக்கி எழுப்புங்கள்.
சுனிதா போன்றவர்கள் செய்யும் தொண்டின் மகத்துவத்தை மனங்கொள்ளச் செய்யுங்கள்.
நாம் நல்ல மனிதர்கள் என்று காட்டுவதற்காக அல்ல,
நாம் மனிதர்கள் என்பதே அப்போதுதான் நிரூபணமாகும்.
எதிர்வினைக் கடிதங்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.
பின் இணைப்பு;
இந்த வீடியோ பதிவைப் பார்த்த என் இணையத் தோழியின் சத்திய ஆவேசவரிகள்...
கீழே,
யாருக்காக .
எதற்காக ,
ஏன்
எப்படி இந்த மழலைகள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாகிறார்கள் ?
சகோதரி சுனிதாவை வணங்குகிறேன்
தாயே உன் கரங்களின் , இதயத்தின் , வார்த்தைகளின் ,
கண்களின் வலிமை மேலும் மேலும் வளரட்டும்
உன் கனிந்த இதயம் ஊற்றும் நெருப்பில்
அனாதைகளின் காயங்கள் ஆறி விடுவதைப் போல
சமூகத்தின் கலாச்சார மௌனமும் உருகி அகலட்டும் ,
போலிக் கலாச்சாரம் எரிந்து சாம்பலாகட்டும் ......
தாயே உன் புண்பட்ட ,பெண்மையின் ,ஆளுமையின் வலி
சமூக மனசாட்சிக்குள்ளும் கொழுந்து விட்டெரியட்டும்...
பொழுதுபோக்கு உச்சங்களின் பலிப் பீடங்களில் ,
அலறி வீழும் குழந்தைகளின் ,பெண்களின்
இயலாமையின் கதிர்வீச்சுக்கள்
மனிதர்கள் மீதும் நெருப்பை உமிழட்டும் ......
பூஷணாதேவி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
11 கருத்துகள் :
வாழ்க வளமுடன். உண்மையிலேயே உலுக்கி விட்டீர்கள். அருமை. திரைப்படத்தோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது பாரட்டுக்குரியது. கதையின் முடிவு ஒரு திருப்பு முனையாக இருக்க வேண்டுமே தவிர சாதரணமாக இரக்கத்தைச் சம்பாதிக்கும் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். மிக்க நன்றி அம்மா.
பின் இணைப்பில் தோழியின் எழுத்தையும் கொடுத்து சிறப்புப் படுத்தியுள்ளீர்கள். இவற்றைப் படித்துச் சமுதாயத்தில் பல உள்ளங்கள் மாற வாழ்த்துவோம்.
நீங்களாவது பருத்திவீரனின் வக்ரத்தை சொன்னீர்களே.
கொடுமை. அம்மா.
யாரோ செய்த தவறுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணைப் புறக்கணிக்கும் சமூகத்தில் நானும் ஒருவன் என்று வெக்கமாக இருக்கிறது.
நான் உட்பட சமூகத்தின் அத்தனை அவலங்களுக்கும் மவுனமே பதிலாய் இருக்கிறது.
என் வாழ்க்கை நல்லா இருந்தா போதும். அடுத்தவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்கிற போக்குதான் நாகரீக சமூகத்தில் இருக்கிறது.
எல்லாமே சகிச்சிக்கிறோம். நம்ப வேலையப் பாக்கிறோம்.
யாரு அந்த சுனிதா. யாரோ ஒரு பெண் அவ்வளவே.
நம்ப வீட்டுல தீ எரியும்போது அடுத்தவன் முகம் திருப்பிச் செல்லும்போதுதான் அந்த வலி தெரியும்.
சாபம். இது சாபக்கேடு.
படிப்போடு சமூக நலத்தை ஊட்டி வளர்க்காத நம்மூரின் சாபக்கேடு
நன்றி நண்பரே.
நம் சமூகக் கோபத்தை சுனிதாவைப் போல ஆக்க பூர்வமாக ஆக்கிக் கொள்வோம்.உங்கள் சமுதாய அக்கறை தழைக்கட்டும்.
எம்.ஏ.சுசீலா
பருத்தி வீரனை இறுதிக் காட்சிக்காக நாங்கள் ரசிக்க வில்லை, போற்ற வில்லை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை வரும் அந்த மதுரைத் தமிழ் (ஆங்கிலம் கலக்காத கலப்படமற்ற தமிழ்)., சரவணன், கார்த்தி, கஞ்சா கருப்புவின் நடிப்பு போன்றவைக்காகவே நாங்கள் போற்றினோம்.
இறுதிக் காட்சி இல்லாவிட்டாலும் அந்த படத்தை நான் பதினைந்து தடவை பார்த்து இருப்பேன்.
அதுவும் ஆரம்ப காட்சியில் வசனம் வருமே, பருத்தியூர் திருவிழா கமிட்டியின் சார்பாக வரவேற்கிறோம், அப்படியே மதுரை தேனிக்கு கொண்டு போய் விட்டார் இயக்குனர் என்னை.
அன்பு நண்பரே,
வணக்கம்.
பருத்தி வீரனின் மண்வாசனையை நான் மறுக்கவில்லை.
அது முன் வைக்கும் கருத்தியல் மீதே எனக்குக் கோபம்.
உங்களைப் போன்றவர்கள் இருபது தடவை பார்த்தாலும் தவறான கருத்துக்களின் தாக்கங்கள் இல்லாமல் இருக்கலாம்.மன முதிர்ச்சி அற்றுப் பொறுப்பற்றுத் திரியும் விடலைகளை எண்ணிப் பாருங்கள்.
நானும் உங்களைப் போல நல்ல படங்களின் ரசிகைதான்.
ஆனால்,திரைப்படங்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைச் சமூக அக்கறையோடு நம்மால் முன் வைக்காமல் இருந்து விட முடியாது.
படத்தை விடுங்கள்.
சுனிதா கிருஷ்ணன் சுட்டிக் காட்டும் பிஞ்சில் கருகிய மழலைகளுக்கு எந்த வகையில் தார்மீகப் பொறுப்பேற்கப் போகிறோம் நாம்.
சமூக மனச் சாட்சியின் நெடுந்துயில் கலைக்க இயன்றதைச் செய்யுங்கள்.
பிரியமுடன்,
எம்.ஏ.சுசீலா
It was really heartbreaking to watch Sunitha Krishnan's video. We share your concern and pain. You are doing a great job. God will give you enough strength and long healthy life to fight these social evils.
Regards
Jaya
சரியான விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள் தோழி! கட்டுரையும் அதனுடன் இணைத்த வீடியோ படமும் உண்மையை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறது.
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று கேள்வி எழுகிறது. மனிதர்களின் தோல் கொண்ட மிருகங்கள். மனத்தின் வக்கிரங்கள் நீங்கினால் தான் இந்த கொடுமைக்கு நிரந்தர தீர்வு வரும்.
உள்ளத்தில் ஆன்மீக சிந்தனைகளை கொண்டுவந்தால் அன்றி இப்போது உள்ள நாகரீகம் மிருகங்களின் பாதையில் செல்வதைத் தடுக்க முடியாது. முடிவில் இந்த நாகரீகம் அழிந்துப்போதலையும் தடுக்க முடியாது.
பிராத்தனையும், தியானமும், சைவ உணவுப் பழக்கமும், யோகாசனங்களும் மனிதனை நெறிப்படுத்தும். இவை தாம் மனிதனை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்லும் வழிகள். குற்றங்கள் களையப்பட வேண்டும் என்றால் இந்த வழிகளை எவ்வளவு பேர்களுக்கு முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவைகளைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேன். நேரம் இருக்கும் போது நீங்கள் என் வலைப்பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.
சுனிதா அவர்கள் மூலமாக நாம் உணர்வது புறக்கணிப்பின் வலி அந்த சமபவத்தை விட வலியது .அவர் இறுதியாக விடுக்கும் கோரிக்கையில் ,நீங்கள் மகாத்மாக்களாகவோ இல்லை லூதர் கிங் ஆகவோ இருக்க வேண்டாம் குறைந்த பட்சம் பாதிக்க பட்டவர்களை உங்களில் ஒருவராக ,சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்று கொள்ளுங்கள் .இது என் மனதின் ஆழம் வரை சென்று ஏதோ செய்கிறது ,சுனிதா அவர்களின் சத்தியம் மிக சக்திவாய்ந்தது உள் வரை பாய்ந்து நம்மை நிலை குலைய செய்கிறது .அவரது பேச்சின் முத்தாய்ப்பான கருத்து victims are victimised...இன்று காலை இந்த காணொளியை கண்டதிலிருந்து நாம் எத்தகைய சமூகத்தில் வாழ்கிறோம் எனும் ஆதங்கம் என்னை வாட்டுகிறது.
உங்கள் உள்ள வலி புரிகிறது.அதை முதலில் பார்த்தபோது அவ்வாறான உணர்வே என்னையும் ஆட்கொண்டு நெடுநாட்களாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது.இப்போதும் திரும்பப் பார்க்கும்போது நிலைகுலையச் செய்வதுதான் அது.உண்மை இவ்வாறிருக்கும்போது, நம் ஊடகங்கள் எந்த அளவு பொறுப்பில்லாமல் சர்வசகஜமாக இப்படிப்பட்ட நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறார்கள் என்ற அறக்கோபமே இப்பதிவை எழுதத் தூண்டியது.
அம்மா உங்களது கோபம் நியாயமானதே .
ஆகினும் கூட ,சினிமா ஊடகத்தின் மீது உங்களது கோபம் நியாயமானதே ,சினிமாவை பொறுத்த வரை அது முதலில் ஒரு வணிகம் ,சந்தைக்கேற்ற சரக்கு தான் செல்லு படியாகும் .நாம் கேட்பதை தான் அவர்கள் வழங்குகிறார்கள் என்றும் அவர்கள வழங்குவதால் நாம் பார்க்கிறோம் என்று இந்த வாதம் முடிவிலி .இதன் பின் உள்ள உளவியல் இது தான்
இந்த திரைப்படத்தை பொறுத்த மட்டில் -இது மட்டும் அல்ல எல்லா படைப்பாளியும் தனது படைப்பை நிறுவ முயல்கிறான் ,எதிர்மறை காட்சிகள் நம் மனதின் ஆழத்திற்கு சென்று விடுகிறது ,புரட்சி முடிவுகள் காட்டிலும் இத்தகைய எதிர்முறை முடிவுகள் மக்களின் மனதை ஆக்கிரமிக்கிறது ,படம் வந்து பல காலம் தாண்டியும் விவாதிக்கப்படுகிறது ,இது அந்த இயக்குனரின் வெற்றி படைப்பின் வெற்றி அவரது ஆசை படைப்பை நிலைக்க செய்வதே அதை அவர் செய்து விட்டார் .
சுய நிறுவுதல் தாண்டி வருவது ஒரு படைப்பாளிக்கு சிரமம் தான்
கருத்துரையிடுக