துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.1.10

இரண்டு பெண்கள்

அண்மையில் படிக்க நேர்ந்த இரண்டு பெண்களைப் பற்றிய நாளிதழ்ச் செய்திகள், நெஞ்சை நெகிழ வைப்பவை;அவை வெறும் பரபரப்புச் செய்திகளாக- இன்று பேசி நாளை மறக்கப்பட்டு விடாமல் - சமூக மனச்சாட்சியின் பிடரியைப் பிடித்து உலுக்கவும் பயன்படுமானால் குறிப்பிட்ட அந்தப் பெண்களின் சோக முடிவுகளாலும் கூடச் சற்றே பயன் விளைந்திருப்பதாக ஆறுதல் கொள்ள முடியும்.

இருவரில் ஒருவர் 14 வயதேயான இளம் பெண் ருச்சிகா.டென்னிஸில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு சண்டிகர் டென்னிஸ் சங்கத்துக்குக் கள்ளம் கபடமின்றிச் சென்ற ருச்சிகா, தன்னை ருசி பார்க்கவென்றே மனித மிருகம் ஒன்று காவல்துறை அதிகாரியின் உருவத்தில் அங்கே ஒளிந்து கொண்டிருப்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான்;அதன் பிறகு,அந்த அதிகாரி தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதைக் காவல்துறை நேர்மையாக விசாரிக்கும் என்று நம்பி ஏமாந்ததும் அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம்தான்.

புகார் கொடுத்த காரணத்தினாலேயே பள்ளியிலிருந்து நீக்கம்,குடும்பத்தார்க்கு மன உடல் ரீதியான பலவகை அச்சுறுத்தல்கள் என்று திரைப்படக் காட்சிகள் போலச் சம்பவங்கள் அடுத்தடுத்துத் தொடர , இறுதியில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார் ருச்சிகா.



அவரது குடும்பத்தாரே பயந்து வழக்கிலிருந்து பின் வாங்கிவிட்டபோதும் ருச்சிகாவுக்கு நடந்த அவலத்தை நேரடியாகக் கண்ட ஒரே சாட்சியான அவரது தோழி ஆராதனாவும் அவர் குடும்பமும் அடுத்தடுத்து ஆண்டுக் கணக்காகச் செய்து வந்த தொடர் முயற்சிகளின் பயனாய் -
(400 முறை அவர்கள் நீதிமன்றப் படிகளில் ஏற வேண்டியிருந்ததாக ஆராதனாவின் தாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்)-
1993இல் நிகழ்ந்த மரணத்துக்கான ஓரளவு நியாயம், கடந்த டிசம்பரில் கிடைத்திருக்கிறது. 2002இல் எல்லாப் பொருளாதாரப் பலன்களையும் ஜாம் ஜாமென்று பெற்று ஓய்வும் பெற்று விட்ட ரத்தோர் என்ற அந்தக் கொடுமனக்காரக் காவல் அதிகாரி பெற்ற தண்டனை....வெறும் ஆறுமாதச் சிறையும்,1000- ரூபாய் அபராதமும்தான்!அதிலும் தண்டனை அறிவிக்கப்பட்ட பத்தாவது நிமிடமே ஜாமீன் பெற்றுச் சிரித்தபடி செல்ல அவரால் முடிகிறது;நம் சட்டமும் அதற்கு இடமளிக்கிறது.

ஓர் உயிரின் விலை, ஒரு பெண்ணின் தன்மதிப்பு இந்த அளவு மலினமாகிவிட்டிருப்பது நெஞ்சுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தினாலும் சரியான நீதி கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்றும்,தொடர் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் ஆராதனாவின் குடும்பம் அறிவித்திருப்பது சிறிது ஆறுதலளிக்கிறது.

மற்றொரு மனித மிருகத்தின் அடுத்த இரை அருணா ராமச்சந்திர ஷண்பக்.
36 ஆண்டுகளுக்கு முன்பு, 25 வயது இளம்பெண்ணாக மும்பை மருத்துவ மனை ஒன்றில் மருத்துவத் தாதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்;
அதே மருத்துவமனையின் வார்டுபையனாக இருந்த சோகன்லால் ,நாய்கட்டும் சங்கிலியால் இவரது கழுத்தைப் பிணைத்துப் பாலியல் வன்முறைக்கு முயல அதைத் தடுக்கும் முயற்சியில் சங்கிலி அறுபட,கழுத்து நெரிந்து ரத்த நாளங்கள் உடைந்து ஆண்டுக் கணக்காகக் ‘கோமா’வில் ஆழ்ந்தபடி தாவரமாய்க் கிடக்கிறார் அருணா.
தன் தோழி படும் துன்பத்தைப் பொறாமல் கருணைக் கொலைக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை நாடியிருக்கிறார் பிங்கி விரானி.
கருணைக் கொலைக்கு இன்னும் சட்ட சம்மதம் கிடைக்காதது ஒரு புறமிருக்க..
இங்கும் குற்றம் செய்தவருக்குச் சேதாரம் அதிகமில்லை;
7 ஆண்டுக்காலச் சிறைவாசம் மட்டுமே;
இப்போது அந்த நபர் தில்லி மருத்துவமனையில் அதே(!?)பணியைத் தொடர்வதாகத் தகவல்.

முதல் வழக்கில் அதிகார மையம்;அடுத்த வழக்கிலோ கடை நிலை ஊழியம்.
ஆனால் இரு வழக்குகளிலுமே காணக்கிடைப்பது,பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் அசுரப் பார்வை மட்டுமே .
விளைவு.....எதிர்கால வாழ்வை,சாதனைகளை இழந்துவிட்டுப் பிணமாகவும்,நடைபிணமாகவும் மாறிப்போன இரண்டு பெண்கள்.
இரு செய்திகளிலும் ஒரே ஆறுதல்,சாவுக்குப் பின்னும்,சக்கையாகிப்போன பின்னும் தொடரும்...அவர்தம் தோழியரின் நட்பும் ,அவர்கள் நடத்தும் துணிவான போராட்டமுமே.

(செய்தி ஆதாரம்-
தினமலர்-3.1.10
ஜூனியர்விகடன் -30.12.09
குமுதம்-30.12.09 )

5 கருத்துகள் :

Haji Ajmeersha சொன்னது…

Fisrst of all , i would like to apreciate your feelings about our society,

When we read this kind of articles we are getting angry with our indian laws,

everybody understood , indian law is against poor poeple and womens according to this incident.

Regards

Ajmeer Sha

Unknown சொன்னது…

சில நேரங்களில் அரபு நாடுகளில் இருப்பது போல கடுமையான தண்டனைகள் வேண்டும் - இப்படிப்பட்ட குற்றங்களுக்காவது - என்று தோன்றுகிறது.

Pandian R சொன்னது…

என்னதான் சொல்றது. துயரம் தொடருவது வேதனையாய் இருக்கிறது.

ராஜசேகர் சொன்னது…

உங்களுடைய இந்த எழுத்து படிப்பவர்களின் கவனத்தைத் திருப்பி, எங்கும் இதுபோன்ற தவறுகள் நடக்காதிருக்க இறையருளை வேண்ட வேண்டும். நம்முடைய நம்பகமான நல்வாழ்த்தலைகளே இது போன்ற சிக்கலகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.இன்றிருக்கும் சட்டங்களை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்.தனது தோழிக்காகத் தொடர்ந்து போரடுவது அசாதாரண விஷயம். இது போன்ற நட்புக்கள் கிடைத்தால் உலகில் நிச்சயமாகத் தவறுகள் குறைந்து விடும். சகோதரி ஆராதனாவிற்கு நாம் தொடர்ந்து வாழ்த்து அலைகளை அனுப்பி, அவருக்குப் பக்கபலமாக நிற்போம். வாழ்க வளமுடன்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுசீலா - இது மாதிரிக் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் எளீதில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். பாதிக்கப் பட்டவர்கள் படும் பாடு - சொல்லொணாத் துயரம் இவற்றிற்கெல்லாம் ஈடு ஏது ? மரண தண்டனை விதிக்க வேண்டீய குற்றம். நல்லதொரு பதிவு சுசீலா - நட்புடன் சீனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....