ஏமாற்றம்,வஞ்சனை,சூது,பொய்மை,புரட்டு ,ஊழல்,உள்குத்து என்று பல சறுக்கல்கள் நிரம்பிய மானுட வாழ்வின் மீதான நம்பிக்கை நம்முள் இன்னமும் கூடச் சிதைந்து போகாமல் இருக்கிறதென்றால்
இன்னமும் கூடப் பெருமிதத்தோடும் தன்மதிப்போடும் நம்மால் நடை போட முடிகிறதென்றால்
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்கள் சிலரால்தான் என்கிறது கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்...
‘’உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது
எனத் தமியர் உண்டலும் இலரே
முனிவு இலர் துஞ்சலும் இலர்
பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்உலகொடு பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
தன்னலம் துறந்து வாழ்பவர்கள் இந்திரனின் தேவாமுதம் போன்ற கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும் கூடத் தனக்கென மட்டுமே பதுக்கி,ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவர்களாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.
யாரையும் அவர்களால் வெறுக்கவோ,பகையாளிகளாக ஆக்கிக் கொள்ளவோ முடியாது.
எவருமே செய்ய அஞ்சக் கூடிய பழிச் செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாமல் இருப்பதோடு,
அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய செயல்களில் மனச் சோர்வும் சலிப்பும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்குவர்.
புகழுக்காகத் தங்கள் உயிரையையும் கொடுக்கத் துணியும் அவர்கள் பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள்.
மனதை எந்த வகையான சஞ்சலங்களுக்கும்,உளைச்சல்களுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாதவர்களாக-எடுத்த காரியம் வெற்றியுடன் முடிய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே உறுதியுடன் இயங்குவர்.
தனது முயற்சிகளை,சக்திகளைப் பிறருக்காகவே அர்ப்பணித்து வாழும் அத்தகைய மாண்பிற்குரியாளர்களால்தான் உலகம் சுழல்கிறது என்கிறது பாடல்.
‘’உண்டால் அம்ம இவ்வுலகம்....
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
என்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சங்கப் பாடலின் இன்றைய வாழும் இலக்கணம் திரு அண்ணா ஹசாரே..
அவரது அறப் போர் வெல்லக் குறைந்த பட்சம் நம் குரலையாவது அவருடன் இணைந்து ஒலிக்கச் செய்வதே உலகக் குடிமக்கள் அனைவரின் தார்மீகக் கடமையாக இருக்க முடியும்!
5 கருத்துகள் :
உண்மைதான் அம்மா.
சங்கப்பாடலுக்கான விளக்கமும்
சமூகத்துடன் இணைத்துக் காட்டிய விதமும் நன்று.
இணைந்து குரல் கொடுப்போம்!
தொடர்ந்து குரல் கொடுப்போம்!
ஊழலை ஒழிப்போம்!
பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள் பிறந்த மண்ணில் தான் இன்று...
பழி பாவங்களுக்கு அஞ்சாத
அஞ்சா நெஞ்சர்களும் வாழ்கிறார்கள்.
அற்புதமான ஒப்பீடு அம்மா.
வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம் .
வாழ்க மகாத்மா .
நன்றி குணசீலன்,ராஜசேகரன்...
//பழி பாவங்களுக்கு அஞ்சாத
அஞ்சா நெஞ்சர்களும் வாழ்கிறார்கள்//என்பது உண்மைதான் என்றாலும் உங்களைப் போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் அண்ணா போன்றோரின் போராட்டத்துக்கு ஆதரவாய் மூட்டும் ஆவேசக் கனல் அத்தனை ஊழல் அழுக்கையும் ஒழித்துத் துடைத்து விடும்.
நல்ல பதிவு.
நன்றி அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
கருத்துரையிடுக