துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.8.11

நஞ்சும் அமுதும்

ஒரு முன் குறிப்பு
ஆகஸ்ட் மாதம் என்றாலே நினைவுக்கு வருபவைகளில்...
ஹிரோஷிமா,நாகசாகி ஆகிய ஜப்பான் நகரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு வீச்சுக்குக் குறிப்பிட்ட ஓரிடம் உண்டு.
அணுக் கதிர் வீச்சுக்கும்,.அணு உலைகளுக்கும் எதிப்பான இயக்கங்கள் மிகப் பெரும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில்,
மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பாகவே இத்தகைய சிந்தனையை முன் வைத்திருக்கிறார் என்பதைக் காணுகையில் தீர்க்கதரிசிகளின் தொலைநோக்குப் பார்வை நமக்கு வியப்பூட்டுகிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி,வேதாத்திரி மகரிஷி அவர்களின் 101ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி 
1957ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘அணு விஷம்’என்னும் சிறு நாடகம் குறித்து நான் எழுதிய கட்டுரை இங்கே.....
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தமிழ்த் தென்றல்’என்னும் இதழில் இக் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு என்னையும் கட்டுரை எழுதுமாறு ஊக்குவித்த புதுதில்லி வேதாத்திரி யோக மையத்தின் இயக்குநர் திரு பாலச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றி...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


''போரில்லா நல்லுலகம்'' - இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானியும்,அறிவை அறிவால் அறிந்த அருளாளருமான வேதாத்திரி மகான் அவர்கள் அளவற்ற மனித நேயத்தோடு அகிலத்துக்கு வழங்கியிருக்கும் கருணை வாசகம் இது.
எவ்வுயிருக்கும் துன்பம் தராமலிருப்பதும், துன்பப்படும் உயிர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதும் மனிதப் பண்பாட்டின் முக்கியமான இரு கூறுகள் என்பதை உணர்ந்து,அவற்றை இரண்டொழுக்கப் பண்பாடாகவே வகுத்தளித்திருப்பவர் அம் மகான்.
மேற்குறித்த நெறிமுறைகளுக்கு நேர்மாறானதும்,மனித குலத்துக்குப் பேரழிவை உண்டாக்குவதுமான அணு ஆயுதப் பரவல்,அணு உலைக் கட்டமைப்பு ஆகியவற்றைச் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்தே மகரிஷி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்;அவற்றுக்கு எதிரான தமது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்தும் இருக்கிறார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

 கடந்த கால அனுபவங்கள்,நிகழ்கால நடப்புக்கள்,எதிர்கால விளைவுகள் ஆகிய மூன்றையும் சீர்துக்கிப் பார்க்கும் முக்கால ஞானம் வாய்க்கப் பெற்ற தீர்க்கதரிசிகளே மகான்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்களின் துல்லியமான தொலை நோக்குப் பார்வையும் அவ்வாறானதுதான்.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களின் மீது நிகழ்ந்த குண்டு வீச்சுத் தாக்குதலும்,அதனால் நேர்ந்த அளப்பரிய தாக்குதல்களும் மகரிஷியின் உள்ளத்தில் ஆழமான பல அதிர்வுகளை உண்டாக்கின;  சில அனுதாபச் சொற்களை உதிர்த்து விட்டுப் போவதிலும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சிலஉதவிகளைச் செய்ய முன் வருவதிலும் மட்டும் அமைதி காண முடியாத மகரிஷியின் உள்ளம் ,
காலம் கடந்து , கண்டம் கடந்து தன் சிந்தனை வேர்களை விழுதாய்ப் பரப்பியது; அதன் விளைவாக உருவானதே 1957ல் எழுதப்பட்ட ’அணு விஷம்’என்னும் அவரது அற்புதமான தத்துவ நாடகம்.

மனித குல வரலாற்றில் அணுவிஞ்ஞானத்தின் அழிவுபூர்வமான பயன்பாட்டால் முதன் முதலாக நிகழ்ந்த பேரழிவைக் கண்டும் , அதன் தாக்கங்கள் எதிர்காலச் சந்ததியினரையும் சீரழித்து முடமாக்கும் அவலம் கண்டும் அத் தருணத்தில் அகிலமே நடுநடுங்கிப் போனது உண்மைதான் என்றபோதும் அணுஅறிவியலுக்கு எதிர்ப்பான வலுவான குரல்கள் அரசியல் , அறிவியல், ஆன்மிகம் எனச் சமூகத்தின் எந்தத் தரப்பிலிருந்தும் கடுமையாகப் பதிவாகவில்லை என்பதை வேதனையோடு உணர்ந்த வேதாத்திரி மகான் அவர்கள் - அணுப் போர் ,அணு ஆயுத உற்பத்தி மற்றும் அணு உலைகளால் நேரும் மிகப் பயங்கரமான விளைவுகளைத் தனது எழுத்தின் வழி முன் வைக்க முனைந்தார்;அதன் பயனாக உருப் பெற்றதே அவரது அந் நாடகம்.

நுட்பமான - ஆழமான ஆன்மீகத் தத்துவங்களையும் - கடுமையான உடற்பயிற்சிகளையும்- குண்டலினி யோக முறைகளையும் சாமானிய மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் மிக இலகுவான முறையில் எளிமைப் படுத்தித் தந்திருக்கும் மகரிஷி அவர்கள்,தனது வழக்கமான போக்கை ஒட்டி இப் படைப்பிலும் மிகக் கடுமையானதொரு சமூகச் சிக்கலை நாடகம் என்ற ஊடகத்தின் வழி சித்தரித்திருப்பதால் இக் கருத்துக்கள் பாமர மக்களையும் மிக எளிதாகச் சென்றடைய வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

''அணு உலைகளை அமைப்பதற்கும்,அணு குண்டுகளைத் தயாரிப்பதற்குமிடையில் உள்ள உறவை’’த் தெளிவுபடுத்தி,அவற்றால் ‘’மனித குலத்திற்கு ஏற்படும் அதீத விளைவுகளை முன் வை’’க்கும் இந்நூல், தான் அறிந்தவரையில் ‘’அணுசக்தி குறித்துத் தமிழில் வெளி வந்தமுதல் நூல் ஆகும்’’என்று இதன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் திரு மார்க்கண்டன்.
பிளவுபடாத சோவியத் யூனியனுக்கும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகம்,கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு-இன்றுள்ள சூழலுக்கும் மிகப் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது .
மகரிஷியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டும் அதே வேளையில்,
அவரைப் போன்ற சிந்தனையாளர்கள் முன் வைத்த கருத்துக்கள் ,உலக அரங்கில் தீவிர கவனத்தோடும்- கடந்த நாட்களில் பெற்ற அனுபவங்களிலிருந்து படிப்பினை கொள்ள வேண்டும் என்ற உணர்வோடும் செயல்படுத்தப்பட்டிருந்தால் கொடுமையான பேரழிவுகளிலிருந்து உலகை ஓரளவாவது காப்பாற்றியிருக்கலாமே என்ற ஆதங்கமும் மிகுதியாகவே மேலிடுகிறது.

அயல்நாட்டு அணுகுண்டுத் தாக்குதலிலிருந்து விடா முயற்சியோடு மீண்டு - உலக அரங்கில் கம்பீரமாகத் தலை உயர்த்தி நின்ற ஜப்பான்,தானே அமைத்துக் கொண்ட அணு உலைச் சீரழிவுகளால் தனக்குத் தானே பெருங்கேட்டை வருவித்துக் கொண்டிருப்பதற்கும் கூடக் கடந்தகால அனுபவங்களிலிருந்து தக்க பாடம் பெறாததுதானே காரணம்?

ஓருலக ஆட்சி என்பது , எப்பொழுது அகிலத்தில் நிலைப்படுகிறதோ - மக்கள் அனைவரும் ஒரே உலகின் குடிமக்கள் என்னும் உணர்வு எப்போது தழைக்கிறதோ அப்போது , சாதி,மதம்,மொழி,இனம் முதலிய குறுகிய எல்லைக்கோடுகள் தாமாகவே தகர்ந்து போகும் என்பது மகரிஷி கொண்டிருந்த அசைக்க இயலாத கருத்து.

அந்தக் காரணம் பற்றியே தன்னை உலகப் பிரஜையாகக் கருதிக் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை இந்நாடகத்தில் அன்பொளியாராக உருவாக்கும் மகரிஷி, நடுநிலைப் போக்கும் உலகப்பொதுநலனில் நாட்டமும் கொண்ட அறிவானந்தரைத் தன்னைப் போன்ற சாயல் படைத்த பாத்திரமாகப் படைத்து நீதி வழங்கும் பொறுப்பையும் உடனளிக்கிறார்.
இந்தியா, பிரிட்டன், ரஷியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளும்(அன்றைய காலப் பின்னணியில்)அணுவிஷ உற்பத்தியைக் கையில் எடுத்திருப்பதால் உலகின் சுகாதாரம் கெடுவதோடு பொருளாதார ,அரசியல் துறைகளிலும் குழப்பம் ஏற்படுகிறது;மேலும் அழிவுக்குப் பயன்படும் விஞ்ஞானம் பயனற்றதாய்ப் போய்விடுவதன் வழி எதிர்கால வாழ்வையே பாழாக்கி விடுமோ என்றும் மனித வர்க்கமே நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது என வாதிட்டபடி,குறிப்பிட்ட நான்கு நாட்டுத் தலைவர்கள் மீதும்,அந் நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்து வரும் ஐ.நா.அமைப்பின் தலைவர் மீதும் வழக்குத் தொடுக்கிறார் அன்பொளியார்.
அமெரிக்க ரஷிய விஞ்ஞானிகளும் , உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரும் வழக்கின் சாட்சிகளாக அழைக்கப்பட ,தத்துவ அறிஞர் அறிவானந்தர் நீதிபதியாகிறார்.

வேதாத்திரி மகான் அவர்கள் குறிப்பிட்ட இந்நாடகத்தை எழுதிய காலகட்டத்தில் அந்தந்த நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேருவும்,மாக்மில்லனும்,புல்கானினும்,ஐசன்ஹோவரும் வழக்கின் பிரதிவாதிகளாக அமைந்திருப்பது, கடந்த கால வரலாறு ஒன்றைப் படிக்கும் உணர்வைத் தோற்றுவித்தபோதும் - அந்தத் தலைவர்களின் வழியே வெளியாகும் ஒரு சில கருத்துக்களும்,இன்றைய சூழலின் அடிப்படையில் அவை தூண்டும் பல சிந்தனைகளும் காலம் கடந்து நிற்கக் கூடியவை;எந்தக் காலத்துக்கும் ஏற்புடையவை.

பாற்கடலைக் கடைந்தால் விஷமும் வெளியாக வாய்ப்புண்டு என்பதை நன்றாக உணர்ந்து கொண்டே தேவர்களும் அசுரர்களும் புராண காலத்தில் பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.அது போலவே அணு என்பது ஒரு நச்சாற்றல்,நாசகார சக்தி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டே வெவ்வேறு காரணம் காட்டியபடி அதை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் முனையும்  உலகத் தலைவர்களின் மனப் போக்குகளை - அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்நாடகம்.

ஒவ்வொரு தலைவரும் தங்கள் நிலைப்பாட்டுக்கான காரணங்களை நியாயப்படுத்த முனைகிறார்களேயன்றி அவற்றால் மனிதகுலத்துக்கு நேரக் கூடிய அபாயத்தை உணர்ந்து முற்றாக நிராகரிக்க முன் வருபவர்களாக இல்லை.
ஆன்மீகத் தொன்மையும்,பஞ்சசீல நெறிகளில் பிடிப்பும் கொண்ட பாரதம் அணு சக்தியை மனிதகுல முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்துமேயன்றி அணுகுண்டு உற்பத்தியில் ஈடுபடாது என உறுதிபடக் கூறுகிறார் நேரு.பிரிட்டிஷ் தலைவர் மாக்மில்லனோ பிற நாடுகளின் அணுகுண்டுத் தாக்குதல்களிலிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காகவே ’அணுகுண்டைச் செய்கிறோம்,பரீட்சிக்கிறோம்,வைத்திருக்கிறோம்’ என்றும் உலகில் போரில்லா நிலை உருவாகி விட்டால் அந்தக் கணமே தங்களிடமுள்ள அணுஆயுதங்களை அழித்து விடுவோம் என்றும் உறுதியளிக்கிறார்.ரஷியத் தலைவர் புல்கானினும் தங்கள் பாதுகாப்புக்காகவே அணுகுண்டுப் பரிசோதனையில் இறங்கியிருப்பதாகவும் எதிரிகளை விடவும் எண்ணிக்கையில் கூடுதலான குண்டுகளைக் கையிருப்பில் வைத்திருப்பதே தங்கள் இலக்கு என்றும் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார்.பொதுவுடைமைக் கொள்கையை அடியோடு குலைத்துப் போட்டுத் தனி மனித சுதந்திரத்தை நிலை நாட்டும் இலக்குடனேயே அணுகுண்டுசோதனையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்,’எளிய முறையில் யுத்தத்தைச் செய்து முடிவு காண அணுகுண்டே சிறந்தது’என வாதிடுகிறார்.

அனைத்துத் தலைவர்களுமே அணுசக்தி என்பது அபாயகரமானது என்றும் அதன் நச்சுத் தன்மை காற்று மண்டலத்தில் பரவிச் சுற்றுச் சூழலுக்கும் மானுட குலத்துக்கும் அழிவை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்;என்றாலும் அவரவரின் தன்முனைப்பும் - உலக அரங்கில் தனது நாடே முன்னணியில் இருக்க வேண்டுமென்னும் பேராசையுமே அணுவிஷத்தை நோக்கி அவர்களை ஈர்த்துச் செல்கின்றன என்பதைத் தமது நாடகத்தில் நயம்படப் பதிவு செய்கிறார் மகரிஷி.

உலகத் தலைவர்களோடு சேர்த்து ஐ.நா.சபைத் தலைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.ஐந்து வல்லரசுகளின் கைப்பாவையாக-அவர்களின் பிடியில் இயங்கும் ஐ.நா அமைப்பு அந்நாட்டுத் தலைவர்களை மீறிக் கொண்டு, ‘’அணுகுண்டு வெடிக்காதீர்கள்,வைத்திருக்காதீர்கள்’என்று உத்தரவு போட முடியாது ’’என்கிறார் அவர்.
மேலும் ஐ.நா என்ற உலகப் பொது அமைப்பு ஏற்பட்ட மறுகணமே எல்லா நாட்டு இராணுவங்களும் அவற்றின் கட்டுப்பாடும் அதன் வசம் ஒப்புவிக்கப்பட்டிருந்தால் இந்த வினா எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்கிறார் அவர்.குறிப்பிட்ட இந்த வாதம் ஐ.நா அமைப்பின் செயல்பாடு பற்றிய மகரிஷியின் சொந்தக் குரலாகவே ஒலித்திருப்பதைக் காண முடிகிறது.

இவ் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்படும் மூவரில் அமெரிக்க,மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் இருவரும் அணுசக்தியின் அனைத்துத் தீமைகளையும் மிகத் துல்லியமாக உணர்ந்திருப்பதாகவே கருத்துரைக்கிறார்கள்;எனினும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாதபடி அவரவர் நாட்டு அரசியவாதிகளின் விருப்பங்களைச் சார்ந்து மட்டுமே தாங்கள் இயங்க வேண்டிய நிலையில் இருப்பதை நீதி மன்றத்தில் முன்னெடுத்து மொழிகிறார்கள் அவர்கள்.
மூன்றாவது சாட்சியாக இடம் பெறும் உலக சுகாதாரநிறுவனத் தலைவர் ஒருவர் மட்டும் வழக்குத் தொடுத்திருக்கும் அன்பொளியாரின் தரப்பிலுள்ள நியாயத்தை முழுமையாக உணந்து ஆதரிக்க முன்வருகிறார்;
‘’அணுகுண்டு செய்வதை எல்லாநாடுகளும் நிறுத்தி விட வேண்டும்;மேலும் கைவசமிருக்கும் எல்லாக் குண்டுகளையும் அழித்துவிட வேண்டும்;விஞ்ஞானிகள் அனைவரையும் அகிலஉலகப்பிரஜைகளாக்கி.....உலக மக்களின் நலத்துக்காகவே அவர்களின் அறிவுத் திறமையைப் பயன்படுத்த வேண்டும்’’என்று துணிவோடு தன் கருத்தையும் முன் வைக்கிறார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட அறிவானந்தர் , வேதாத்திரி மகரிஷியின் குரலாகத் தன் தீர்ப்பை ஒலிக்கிறார்.
போரற்ற உலகம் காணவும்,ஐ.நா அமைப்பின் வசம் உலகநாடுகளின் பாதுகாப்பை ஒப்புவிக்கவும் பரிந்துரைக்கும் அத் தீர்ப்பு,அணுவிஷம் குறித்த கீழ்க்காணும் முடிவான உத்தரவுகளை இட்டு நாடகத்தை நிறைவு செய்கிறது.

-’இன்று முதல் எந்த நாடும் அணுகுண்டு பரீட்சை நடத்தவே கூடாது.
எல்லா அணுகுண்டுகளையும் அபாயமின்றி அழிப்பதற்காக ஐ.நா.ஸ்தாபனத்திடம் ஒப்புவித்து விட வேண்டும்.
-எந்த நாட்டிலிருந்தாலும் அணு உலைக் களம்,சர்வதேச உலகப் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும்.
-ஆக்க வேலைக்காக அணுசக்தியை உபயோகிக்கும் நிலையங்களில் அணுச் சாம்பல் உலக மக்கள் சுவாசிக்கும் காற்றை விஷமாக்காமல் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகளை ஐ.நா. ஏற்க வேண்டும்.

வேதாத்திரி மகானின் இச் சிறுநூல் எழுதபட்ட காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடையே அணுவியல் துறையில் அளவிறந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இன்றைய அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பயன்பட்டதை விடவும் பலமடங்கு வீரியம் வாய்ந்தவை.
1942ஆம் ஆண்டுக்கு முன் புளூட்டோனியம் எங்கும் சேமித்து வைக்கப்பட்டிருக்கவில்லை;இன்று மிக அதிக அளவு எடை கொண்ட புளூட்ட்டோனியம் உலக நாடுகள் பலவற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது.இலேசாக நுகர்ந்த மாத்திரத்திலேயே நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாக்கி விடும் நச்சுத் தன்மை இப் பொருளுக்கு உண்டு.
அணு குண்டுப் பயன்பாடுகள் ஒரு புறமிருக்க..., ஆக்கப் பணிகளுக்காக உருவாக்கப் படுவதாகக் கூறப்படும் அணு உலைகள் சந்தர்ப்ப வசத்தினால் பாதிப்புக்கு ஆளாகும்போது அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய கொடிய விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு அன்றைய எடுத்துக்க்காட்டு செர்நோபிள்;இன்றைய உதாரணம் ஜப்பான்.

‘’அணு உலைக் களத்திலும் அணுக்கள் மோதிச் சூடேறி அதன் சக்தியை மின் சக்தியாக மாற்றி வெளியிட்டு விடுவதால் சக்தியை இழந்துவிட்ட அணுச் சாம்பல்,காற்றில் பரவி மக்களுக்குத் தீமை பயக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?’’என்று இந்நாடகத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார் அன்பொளியார்.
அந்தக் கேள்விக்கு விடை காணும் பொறுப்பு மனித குலம் முழுமைக்குமானது;என்றைக்குமானது.

‘’அணுவிஷம் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் உண்ணும் உணவிலும் ஓடும் ரத்தத்திலும் கலந்து நீண்ட நாட்களுக்குப் பலவிதமான வியாதிகளைத் தோற்றுவித்துத் துன்பங்களைத் தரும்’’என்னும் மகரிஷியின் கூற்றே இன்றைய நிதரிசன நிஜமாகியிருப்பதைக் குடிநீரும் கூட மாசுபடுத்தப்பட்ட நிலையில் ஜப்பானிய மக்கள் தவிக்கும் தவிப்பில் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

சூரிய ஒளியே மண்ணுக்குள் புகாத வண்ணம் வான மண்டலத்தை மாசுபடுத்தி ‘அணுமழைக்கால’த்தை ஏற்படுத்தும் ஆற்றல் அணு ஆயுதங்களுக்கு உண்டென்கிறார் மகரிஷி.
‘’அணு விஷம்,உடல் ரசாயனத்தைப் பாதித்து நோயையும் மரணத்தையும் உண்டாக்குகிறது;விந்து அணுக்களையும்,விந்து பக்குவமாகும் இடமாகிய மூளையையும் பாதிக்கிறது’’என்னும் அவரது தொலைநோக்குப் பார்வைக்கேற்பக் கருவிலுள்ள குழந்தைகளும் கூட அணுக் கதிர்வீச்சின் கோரத் தாக்குதலுக்கு ஆட்பட்டு நிற்கும் அவலத்தையும் நாளும் நாம் கண்டு வருகிறோம்.
பருவநிலை மாற்றங்கள்,புவி வெப்பமடைதல் முதலிய தடுமாற்றங்களுக்கும் கூட அணுவிஷமே காரணமாவது கண்கூடு.

அணுகுண்டுகளை அழித்தால் மட்டுமே அதன் விஷக் கதிர்வீச்சிலிருந்து காத்துக் கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த வேதாத்திரி மகான்,அவற்றைச்செயலற்றுப் போகச் செய்ய வேண்டும் ,அதற்கான ஆய்விலேயே விஞ்ஞானிகள் முனைய வேண்டும் என்ற குரலை அன்றே எழுப்பியிருக்கிறார்.குறிப்பிட்ட இச் செயலில் நேரும் தாமதம் மனிதகுல வாழ்வில் அச்சத்தையும் அழிவையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடியது என அவர் சொல்லிச் சென்றது போலவே - அந்தத் தாமதத்தின் பலனை அகிலம் தினந்தோறும் சந்தித்து வருகிறது.

எந்த ஓர் உயிரினத்தின் வாழ்வுரிமையினையும் பறிக்கவோ அழிக்கவோ கூடாது என்ற மகத்தான அன்பும் கருணையும் வெள்ளமாய்ச் சுரக்க மகரிஷி அருளிய ஆழ்ந்ததொலைநோக்குப் பார்வைகளை அகிலமெங்கும் முன்னெடுத்துச் செல்லும் அன்பர் கூட்டம் பல்கிப் பெருகும் நிலையில் ,  அவர்களின் வழியே வேதாத்திரியச் சிந்தனைகள் பரவலாக்கப்படுகையில் ‘அணுவிஷம்; குறித்த அவரது தீர்க்கதரிசனங்களும் எச்சரிக்கையாகக் கொள்ளப்படவும்,அவற்றுக்கான தீர்வு நோக்கிய பாதையில் மனிதகுலம் பயணப்படவும் வழி பிறக்கும்.

அந்த விடியல்,அணுவிஷம் என்னும் நஞ்சை அகற்றிச் சகோதரத்துவம் என்னும் அமுதைப் புகட்டுவதாக அமையும் என நம்பிக்கையோடு காத்திருப்போம்.
1 கருத்து :

அப்பாதுரை சொன்னது…

ஓருலக ஆட்சி - வித்தியாசமான எண்ணம். எழுபதுகளோடு அடங்கிவிட்டதென்று நினைக்கிறேன் உலகப்பிரஜை அலை. சில நூறு ஆண்டுகளுக்குள் ஒரு மொழியின் கீழ் உலகமக்கள் சேரும் சாத்தியமிருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....