துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.3.22

கனலி- நேர்காணல், தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழ்

 கனலி    ( https://kanali.in/category/special-editions/special-editions_200/ )ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி (200 ஆம் ஆண்டு) சிறப்பிதழில் என் நேர்காணல்


முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.


சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம் கொண்டிருந்தவள் நான். புனைவு , அபுனைவு, மொழிபெயர்ப்பு என்று எதையும் புறந்தள்ளாத கலவையான பல நூல்களின் வாசிப்பு. பேராசிரியப்பணியில் சேர்ந்தபின்பு அந்த வாசிப்புக்கான வாய்ப்புக்கள் மேலும் கூடுதலாயின. பொறுப்புக்களும் அவ்வாறே. மற்றொரு புறம் எழுத்திலும் ஆர்வம் இருந்ததால் ‘79 முதல் சிறுகதைகளும் வெளிவரத்தொடங்கியிருந்தன. இந்த மும்முனைப்பயணத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்ற எழுத்தாளரை நான் எதிர்ப்படாமல் போயிருக்க உறுதியாக வாய்ப்பில்லை. ஆனாலும் பலவகைப்பட்ட பணிகளுக்கு இடையில் அவரது எழுத்தின் மீது மட்டுமே தீவிர கவனம் செலுத்தும் வாசகியாய், அவரை நான் கண்டுகொண்ட தருணமாக, அவர் என்னை வந்தடைந்த கணமாக அதை எடுத்துக்கொள்ள முடியாது. பேராசிரியப்பணி ஓய்வுக்குப்பின் , என் 56 ஆவது வயதில் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கப்பணியை என்னிடம் ஒப்புவிக்க முன் வந்த மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் வழியாகவே என்னிடம் தஸ்தயெவ்ஸ்கி முறைப்படி வந்து சேர்ந்தார் ( இப்போது அந்தப்பதிப்பகம் இல்லை. நற்றிணை பதிப்பகமே என் தஸ்தயெவ்ஸ்கி நூல்களின் செம்பதிப்புக்களையும், அவரது பிற மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு வருகிறது).  நான் அதுவரை ஈடுபட்டிராத மொழிபெயர்ப்புப்பணியும், தஸ்தயெவ்ஸ்கியும் ஒருசேர என்னை வந்தடைந்த கணம் அதுவே. தீமையிலும் நன்மை என்பது போல இது இத்தனை தாமதமாக நேர்ந்ததிலும் ஒரு நன்மை இருப்பதையே என்னால் பார்க்க முடிகிறது. முன்பு வாசித்திருந்தால் வேறு நூல்களோடு பத்தோடு பதினொன்றாக நான் இவரையும் வாசித்து விட்டுப்போயிருக்கலாம், ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்தில் முழு நேர ஓய்வும் மொழிபெயர்ப்புப்பணியும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டதால் ஒரு சொல், ஒரு வரி என்று எதையும் இம்மியும் தவற விடாமல் - திரும்பத்திரும்ப தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்களுக்குள் , அவர் படைத்துக்காட்டும் அக உலகத்துக்குள் ஆழமான விரிவான பயணம் செய்யும் வாய்ப்பு கைகூடியது இந்தத்தாமதத்தாலேதான். அதில் எனக்கு மகிழ்ச்சியே.


தமிழ்தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் 1979 தொடங்கி ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இருந்து
உங்களுக்குப் பிடித்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகள் எவையெவை? அவை பிடிப்பதற்கான காரணங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா.

குற்றமும் தண்டனையும் மொழிபெயர்த்து முடித்ததுமே தஸ்தயெவ்ஸ்கி என் நெஞ்சுக்கு நெருக்கமான கதைசொல்லியாகி விட்டார்,அதனால் அவரது படைப்புக்களில் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று இனம்பிரித்துச் சொல்ல முடியாதபடி அவரது படைப்புலகோடு நான் ஒன்றிக்கலந்து விட்டிருப்பது போன்ற உணர்வுதான் என்னை ஆட்கொண்டிருக்கிறது. எந்தஒரு படைப்பாளியும் தன் படைப்புக்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் பாராட்டுவதில்லை. தஸ்தயெவ்ஸ்கியைத் தமிழ் வழி மறு ஆக்கம் செய்யும் நானும் அப்படித்தான். நான் ஒரு வாசகராக,விமரிசகராக,ஆய்வாளராக இருந்து பார்த்தால், இந்தக்கேள்விக்கு என் பதில் வேறாக இருக்கலாம். இப்போது தஸ்தயெவ்ஸ்கியுடன் மனரீதியாக ஒரு அபேத நிலையில் நான் இருந்து கொண்டிருப்பதால்,அவருடையவற்றில் பிடித்தது பிடிக்காதது என்று இனம் பிரித்துப்பார்க்க நான் துணியவில்லை . ‘நவில்தொறும் நூல்நயம்’ என்பது போலப் படைப்புக்குப் படைப்பு அவர் காட்டியிருக்கும் ரகம்ரகமான மன உணர்வுகளை, வாழ்வியல் சிக்கல்களை, அவற்றை அவர் தொடுத்துக்கதை பின்னிக்கொண்டு போகும் நேர்த்தியை,கதைக்கூற்று முறைகளில்,பாத்திர வார்ப்புக்களில் காட்டியிருக்கும் மாறுபாடுகளைப் பார்த்து வியந்து மட்டுமே நிற்கிறேன். அந்த மேதையின் எழுத்துச் சன்னதியில் என்னால் இப்போது செய்யக்கூடியது அது மட்டுமே.



ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி படைப்புகளை மொழியாக்கம் செய்யும் போது தங்களுக்கு அகம் சார்ந்து எப்படிப்பட்ட மாறுதல்கள் கிடைக்கிறது தஸ்தயெவ்ஸ்கி அகம் சார்ந்து அதிகம் எழுதியிருக்கிறார் அதனால் இக் கேள்வியை முன் வைக்கிறோம்.

வாழ்க்கைப் பயணத்தில் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளுடன் அதிகம் பயணம் செய்துள்ளீர்கள். இதன் வழியாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிச் சொல்லிட இயலுமா.


இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒன்றாகவே பதில் சொல்லி விடலாமென்று நினைக்கிறேன்.
என் வாழ்க்கைப்பயணத்தில் எழுத்தும் வாசிப்பும் சார்ந்த காலகட்டத்தை தஸ்தயெவ்ஸ்கிக்கு முன்- தஸ்தயெவ்ஸ்கிக்குப் பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு வேறெந்த நாவல் எழுத்தாளரையும் விட அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது.
‘குற்றமும் தண்டனையும்’ மற்றும் ‘அசடன்’ நாவல்களில் அவர்  அமைக்கும் மிகப்பெரிய ‘கான்வாஸ்’..பிரம்மாண்டப்பின்னணி…,
அதில்தான் எத்தனை விதம் விதமான மனிதர்கள்..அவர்களின் வாழ்க்கைப்போராட்டங்கள்? அத்தனை மனித மனங்களின் ஆழம் காண முடியாத இருட்டு மூலைகளுக்குள்ளேயும் இலாவகமாய் சஞ்சாரம் செய்து அங்கே உறைந்திருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை சொல் வழி கடத்துவதென்பது சாமானியமல்ல. அது கலை என்பதையும் மீறி சக மனிதர்கள் குறித்து நமக்கு அவர் புகட்டும் ஒரு பாடமாகவே பல நேரங்களில் அமைந்து விடுகிறது. மனிதர்களின் பலம்,பலவீனங்களை மட்டுமே வைத்து இவன் நல்லவன்,இவன் தீயவன் என்று வரையறுத்துக் கோடு கிழிக்க தஸ்தயெவ்ஸ்கி என்றுமே முற்பட்டதில்லை. அவரவர் வாழ்வை,அவரவர் குணங்களை அவரவர் வாழ்க்கைப்பின்னணியோடு பொருத்திக் கொடுப்பதை மட்டுமே செய்து விட்டு அவர் நகர்ந்து கொள்ள.., நாமும் நல்லவன்,தீயவன் என்று எந்த ஒருவரைப்பற்றியும் தீர்ப்பு வழங்க , இனம்பிரிக்க மனம் வராமல் தடுமாறிப்போகிறோம். அதுவே அவரது எல்லையற்ற காருண்யம். அது அவர் படைக்கும் எல்லா சிருஷ்டிகளிலும் வெள்ளமாய்ப் பெருகிக் ததும்ப அதில் நீராடி நாமும் அகத்தூய்மை கொள்கிறோம். குறுகிய அபிப்பிராயங்களைக் களைந்து நீக்கி விட்டு விசாலமான விரிந்த பார்வையோடு கதை மாந்தர்களை மட்டுமன்றி நம்மைச் சுற்றி இயங்கும் உலகையும் காணப்பழகிக்கொள்கிறோம். அடுத்தவரின் அக உலகத்துக்குள் போக முனைவதற்குள் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் உந்துதல் அளிப்பவை அவரது எழுத்துக்கள். அகத்தைத் தூய்மை செய்துகொள்ளும் முயற்சியில் அடியெடுத்தாவது வைக்க வேண்டும் என்ற உந்துதலைக் கிளர்த்த நிச்சயம் தஸ்தயெவ்ஸ்கி எனக்குத் துணை வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

அவரது மிகப்பெரும் படைப்புக்களான ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகியவற்றையும் ‘நிலவறைக்குறிப்புகள்’, ‘இரட்டையர்’, ‘வெண் இரவுகள் ‘ போன்ற குறுநாவல்களையும் அவரது பல சிறுகதைகளையும் மொழிபெயர்த்து முடித்த பின் ஒரு படைப்பாளி என்ற வகையில் நான் படைப்பை அணுகும் கோணங்களுமே சற்று மாறிப்போய் நான் பக்குவமடைந்திருப்பதை, என் எழுத்து சற்றே கூர்தீட்டப்பட்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.  ஒரு மகத்தான கதைசொல்லியின் நிழலில் இளைப்பாறும் கணங்களில் என் ஆன்மாவும், எழுத்தும் இரண்டுமே தொடர்ந்து பட்டை தீட்டப்பட்டு வருவதாகவே என் அகத்தில் உணர்கிறேன்.

….

உங்களுக்குப் பிடித்த தஸ்தயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் எவையெவை. முக்கியமாகப் பெண் கதாபாத்திரங்கள்.
…..
குற்றமும் தண்டனையும் சோனியாவை யாரால்தான் விரும்பாமல் இருக்க முடியும்? ரஸ்கோல்னிகோவின் தாயும்( பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா) , மர்மலேதோவின் மனைவியும் ( காதரீனா இவானோவ்னா) துணைப்பாத்திரங்கள் என்றாலும் நாவலாசிரியரின்படைப்புத் திறமையால் நெஞ்சுக்குள் பதிந்து நின்று விடுபவர்கள். உண்மையில் நாவலின் தொடக்கத்தில் ரஸ்கோல்னிகோவின் தாய், பல்கலைக்கழகமாணவனான அவனுக்கு எழுதும் கடிதமே -நாவல் முழுவதையும் படித்து முடிக்காத கட்டத்திலும், மொழியாக்கத்தை உடனே தொடங்கி விடும் தூண்டுதலை எனக்கு அளித்தது என்றே சொல்லலாம். அசடன் நாவலில் மனதளவில் மிஷ்கின் மீது எல்லையற்ற பிரேமை இருந்தாலும் தான் அதற்குத்தகுதி கொண்டவள்தானா என்ற தீராத கேள்வியோடு நாவலின் இறுதி வரை ஊசலாடும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா, சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவை நினைவூட்டி அவளுக்காக …, அவள் கடந்து வந்த வாழ்க்கைப்பின்னணிக்காக என்னை நெகிழ வைக்கிறாள். வீட்டு வேலைகள்,பொறுப்புக்களுக்கிடையே உழலும் நடுத்தர வயதுப்பெண்ணானாலும்..காதல் ஊசலாட்டத்தில் சிக்கியிருக்கும் இளம் வயதுப்பெண்ணானாலும்( ‘வெண் இரவுகள்’-  நஸ்டெங்கா)  அவர்களது உளவியலுக்குள் புகுந்து புறப்பட்டபடி குறிப்பிட்ட பெண்பாத்திரப்படைப்பைக் கச்சிதமாக முன் நிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புத் திறன் அபாரமானது.

………..

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் லியோ டால்ஸ்டாய் இருவரில் யாரை முதன்மையாக வைப்பீர்கள்?
……
ரஷ்ய இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்த இந்த இரு மேதைகளை அப்படி வேறுபடுத்திப்பார்ப்பது தேவையில்லை என்பதே என் கருத்து. தமிழுக்குக் கம்பன் எவ்வளவு தேவையோ அதே அளவுக்கு இளங்கோவும் தேவை. மிக உன்னதமான உயரிய இடத்தில் இருக்கும் இரு இலக்கியகர்த்தாக்களின் படைப்புப் பார்வைகள்,அணுகுமுறைகள், கதை சொல்லும் போக்கு, சொல் ஆளுமை என்று பல கூறுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்க்கலாமே தவிர எவருக்கு முதன்மை தருவது என்பது அவரவர் அந்தரங்க வாசிப்பு சார்ந்தது. அதைப்பொதுவில் வைத்துப் புதிய வாசகர்களை ஒரு சார்பான நிலைப்பாடு கொள்ள வைக்க நான் விரும்பவில்லை.
………..


நவீன இலக்கியச் சூழலில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தஸ்தயெவ்ஸ்கி வாசிக்கப்படுகிறார். அதே நேரத்தில் நவீனத்துவம் பேசும் நிறைய இலக்கியவாதிகளிடம் தஸ்தயெவ்ஸ்கி மீது வெறுப்பு என்றும் இருந்து கொண்டிருக்கிறது. நமது இலக்கியச் சூழலுக்கு ஏன் தஸ்தயெவ்ஸ்கி தேவை என்பதைச் சொல்லத் தகுதியான ஒரு ஆளுமை என்பதால் தான் இதை உங்களிடம் கேட்கிறோம்.
ஏன் நமக்கு உண்மையில் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி தேவை.?
……..

புனைவிலக்கியக்கித்தின் மீது தீராத பெரு விருப்பம் கொண்ட எந்த ஒரு வாசகராலும் புறந்தள்ளி விட்டுப்போய் விட முடியாத ஓர் ஆளுமைதஸ்தயெவ்ஸ்கி. ஒரு சில இலக்கியக்குழுக்கள் முன் வைக்கும் காழ்ப்புணர்வு சார்ந்த விமரிசனங்களை நாம் அதிகம் பெரிது படுத்தவோ கருத்தில் கொள்ளவோ தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு படைப்பாளியின் படைப்புக்களைப் படிக்காமல்- அவற்றின் வழி அவனது அகத்தை ஆன்மாவை அறிய முற்படாமல், இத்தகைய எதிர்மறை விமரிசனங்களை மட்டுமே எதிர்ப்பட்டு அவற்றின் வழி எழுத்தாளரைப் புறமொதுக்கும் ஓர் இளம் வாசகன் , புதிய வாசகன் , இதன் வழி இலக்கிய ரீதியான பேரிழப்பையே சந்திக்கிறான். அரிய மகத்தான செய்திகளை,தரிசனங்களைத்தவற விட்டு விட்டு இத்தகைய சில்லறை விவாதங்களில் ஈடுபடுவது தன் இலக்கியப் பயணத்துக்கு 
(எழுத்து ,வாசிப்புஎதுவானாலும்) எப்படிப்பட்ட ஒரு தடை என்பது காலப்போக்கில் உணர்வாகும்போது காலம் அவனைக்கடந்து போயிருக்கும்.

(உங்கள் கேள்வியின் அடுத்த பகுதி, தஸ்தயெவ்ஸ்கி இன்றைய இலக்கியச்சூழலுக்கு ஏன் தேவை என்பது. )
இன்றைய நவீனத்துவ பின் நவீனத்துவ சூழலில் புனைவு என்பது பெரும்பாலும் இருண்மையின் பிடியில் சிக்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன். காலப்போக்கில் புனைவின் உத்திகள் மாறிக்கொண்டே செல்வது தவிர்க்க முடியாதது என்றாலும் படைப்பாளி முன் வைப்பது என்னவென்பதையே உள்வாங்கிக்கொள்ள முடியாத புனைவுகளே நவீனம் என்ற பெயரில் இன்று மலிந்து கொண்டு செல்வதைக்காண முடிகிறது. கலை, வாழ்க்கைக்கு மட்டுமே என்று நான் கோடுகிழித்துச் சொல்ல விரும்பவில்லையென்றாலும் பரிசோதனை என்ற பெயரில் கலைத்தன்மையும் கை கூடாமல், வாழ்க்கைக்கும் பயன் தராமல் எழுதப்படும் எழுத்துக்களை ஒரு தட்டில் வைத்து நிறுத்துப்பார்த்தால் மட்டுமே இன்றைய இலக்கிய சூழலுக்கு தஸ்தயெவ்ஸ்கி ஏன் தேவை என்ற கேள்விக்குப் பாசாங்கில்லாத விடை கிடைக்கும். 
முதல் பகுதி முழுவதும் ஒரே ஒரு மனிதனின் அகத்தனிமொழியாக ஒலிக்கும் ‘நிலவறைக்குறிப்புகள்’ உட்பட, நுண் அங்கதத்தோடு கூடியதாய் உலகப்புகழ்பெற்ற திறனாய்வாளர்களுக்குக் கூடப் பொருள் மயக்கம் ஏற்படுத்தும் ‘இரட்டையர்’ வரை- பலவகையான  இலக்கியப்பரிசோதனைகளை செய்ய அவரும் தவறவில்லை. 
அதே வேளையில் மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை.

வாழ்வின் இருள் மண்டிய பக்கங்களை- அழுக்கும், அசிங்கமும்,அவலமும் நிறைந்த மூலைமுடுக்குகளைச் சித்தரித்தாலும் அவற்றின் வழி எவரையும் கொச்சைப்படுத்தவோ, தன் எழுத்தைக்கொச்சைப்படுத்திக்கொள்ளவோ தஸ்தயெவ்ஸ்கியின் எழுதுகோல் ஒருபோதும் துணிந்ததில்லை என்பதை ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லிவிட முடியும். மானுடத்தின் எல்லாத் துன்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் இடையே ஊடாடியபடி அவற்றுக்கிடையில் உறைந்திருக்கும் மானுடத்தின் மாண்பைக் காட்டவே அவர்  எப்போதும்  முயன்று வந்திருக்கிறார். ‘குற்றமும் தண்டனையும் நாவலில் பெண்பித்தனாக ஏமாற்றுக்காரனாக வரும் ஸ்விட்ரிகைலோவிடமும்  கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது. கண்டிப்பாக செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கோல்னிகோவ் மீதுதோழமை ஜனிக்கிறது. ‘அசடனில்’ நஸ்டாஸ்யாவைக்கவர்ந்து கொண்டு சென்று இறுதியில் அவளைக்கொன்று விட்டுப்பித்துப்பிடித்தவன் போலப்புலம்பும் ரோகோஸின் மீதும் கூட மிஷ்கினுக்குக் கருணையும் இரக்கமும் சுரக்கிறது.

மனித வாழ்வு துயரமும் தீமையும் பிரச்சினைகளும் மலிந்ததுதான், ஆனால் அவற்றுக்கு நடுவிலும் கூட ஒளிந்திருக்கும் மானுட நல்லியல்புக்கு முதன்மை தந்து அதற்குத் தன் எழுத்தின் வழி வெளிச்சம் பாய்ச்சி வாழ்க்கை மீதான நம்பிக்கை வறண்டு விடாமல் காக்கின்றன தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.  அந்த நம்பிக்கை இன்றைய காலத்தின் தேவையென்றால் தஸ்தயெவ்ஸ்கியும் இன்று தேவை என்றே சொல்வேன்.

பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கடவுள் ஏற்பு அல்லது மறுப்பு என்கிற விடயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். அவர் படைப்புகளில் அவருக்குத் தொடர்ந்து சிக்கல் தரும் விடயமாக இது இருந்துள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்களை அது எப்படிச் சிந்திக்க வைத்தது.?

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகத்துக்குள் கடந்த 16 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு வழியே தொடர்ந்து பயணப்பட்டு வரும் நான் , டால்ஸ்டாய் போலத்தன்னை வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு நம்பிக்கையாளர் என்றே உணர்கிறேன். தான் பிறந்து வளர்ந்த சமயநெறிகளின் தாக்கத்தால், கிறித்தவக்கோட்பாடுகளையும், விவிலிய வாசகங்களையும் தன் படைப்புக்களில் ஆங்காங்கே முன்வைத்தாலும், மரபு சார்ந்த- நிறுவனமாக்கப்பட்ட,வழி வழி வந்த பாதையின்பாற் பட்டதல்ல அவர் முன் வைக்கும் ஆன்மீகம்.
அவற்றில் அவருக்கு நிறைய ஐயங்களும்,தேடல்களும்,விமரிசனங்களும்,விவாதங்களும் உண்டு,அவற்றையே அவரது பாத்திரங்களும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறியதாய் ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தியின் வழிகாட்டுதலும்,நெறிப்படுத்தலும் மனித குலத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவராகவே தன் ஆக்கங்களில் வெளிப்படுகிறார் அவர். அந்த வழிகாட்டலை ஸோனியா வழி ரஸ்கோல்நிகோவ் கண்டடைகிறான். ஒரு விலைமகளும் கொலைகாரனும் ஒன்றாகச்சேர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதிய ஏற்பாடு படிக்கும் அந்தக்கட்டத்தை மறந்து விட முடியுமா என்ன? அது ஒரு சமய போதனை.., அது அவளது இறைப்பற்று என்பது போன்ற வரையறைகளையெல்லாம் கடந்த ஒரு தாக்கத்தை - அந்த எளிமையான பெண்ணுக்குள் இருக்கும் எல்லையற்றமானுட நேயமும் பரிவும் அவனுக்குள் கிளர்ந்தெழ வைக்கின்றன. அவனது மனச்சான்றில் சிறியதொரு அசைவை ஏற்படுத்தும் குறிப்பிடத்தகுந்த திருப்புமுனைக்கட்டமாகிறது அது. தன் இரட்டைக் கொலைகளால் மானுடத்தைக் கறைபடுத்தி விட்ட அவனை முச்சந்திக்குப் போய் மனிதத்தை மண்டியிட்டு வணங்குமாறு அவள் சொல்லும்போது தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மீகம் மானுடம் நோக்கிய தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மீகப்பார்வையென்பது புலப்பட்டுப்போய் விடுகிறது. ‘அசடன்’ நாவலில் கள்ளம் கபடு,சூது வாது அற்றவனாய், குழந்தை உள்ளத்தோடு, எவரிடமும் குறை காணாதவனாய், எல்லோரையும் நேசிக்க முடிகிற மிஷ்கின் என்னும் அசடனை, உலோகாயதத்தை முன்னிலை பெற்றிருக்கும் உலகியல் வாழ்வில் தான் காண விரும்பிய நிறைஆன்மீக மனிதனின் பிரதிபலிப்பாகவே உருவாக்கியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. சமயச் சிமிழ்களுக்குள் அடங்காததும், மனிதனின் அகத்தைத் துலக்குவதுமான ஓர் ஆன்மீக அனுபவமாகவே தஸ்தயெவ்ஸ்கியின் இறைக்கோட்பாட்டை என்னால் காண முடிகிறது

இன்றைய இளைய தலைமுறையினருக்கு முக்கியமாக தஸ்தயெவ்ஸ்கியை முதன் முதலில் வாசிக்க முயலும் ஒரு வாசகனுக்கு அவரின் எந்த படைப்பை முதலில் பரிந்துரை செய்வீர்கள்.?

உறுதியாக ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத்தான்.
விறுவிறுப்பான கதைப்போக்கோடு கூடிய உணர்ச்சிகரமான கட்டங்களும்,திருப்பங்களும் கொண்டது என்பதற்காக மட்டுமல்ல. உன்னதமான ஒரு தரிசனத்தை மிகச்சாதாரண மனிதர்களின் வாழ்வியல் வழி காட்சிப்படுத்தும் மகத்துவம் கொண்டது அது என்பதாலும்தான். அதில் தொடங்கி தஸ்தயெவ்ஸ்கியின் கதை உலகுக்குள் நுழைபவர்களுக்கு அவரது பிற நாவல்களைத்தேடிப் போகும் தூண்டுதல்தன்னிச்சையாகவே பிறப்பது தவிர்க்க இயலாதது. ‘ குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழிபெயர்த்து விட்டு இன்று வரை தொடர்ச்சியாக அவரது நாவல்களைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் என் தனிப்பட்ட அனுபவமே அதற்கு சாட்சி.

தஸ்தயெவ்ஸ்கியின் இரட்டையர்கள் ஒரு சிக்கலான நாவல். இருத்தலியல் கூறுகள் அதிகம் கொண்ட நாவலும், அதை மொழியாக்கம் செய்யும் போது கடினமாக உணர்ந்தீர்களா?

உண்மையில் ‘நிலவறைக்குறிப்புகள்’ நாவலை மொழிபெயர்க்கும்போது நான் உணர்ந்து அனுபவித்துக்கடந்த மிகக்கடினமான மனநிலைக்கு ஒரு மாற்றாக இருக்கக்கூடும் என்று எண்ணியே, ‘இரட்டையர் ‘ மொழிபெயர்ப்பையும் அதோடு கூடவே செய்யத்தொடங்கினேன். முதல் பார்வைக்கு நகைச்சுவையும், அங்கதமும் கலந்ததாக- மிக இலகுவாகத்தோன்றிய ‘இரட்டையர்’ அப்படிப்பட்ட எளிதான பிரதி இல்லை என்பது போகப்போகப் புரியத்தொடங்கியது. அதை மூடி வைத்து விட்டு ‘ நிலவறைக்குறிப்புக’ளை முடித்த பிறகே மீண்டும் ‘ இரட்டையர்’ மொழிபெயர்ப்பைத் தொடர ஆரம்பித்தேன். ஆங்கில மொழியாக்கங்களில் இந்த இரண்டு படைப்புகளும் பெரும்பாலும் சேர்த்தே பதிப்பிக்கப்பட்டிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. நிலவறைக்குள் இருக்கும் மனிதனின் தனிமொழி, முதல் நாவல் என்றால்..,அதே நிலவறை மனிதன் தன் நிலவறைக்குள்ளிருந்து வெளிப்பட்டு சமூகத்தோடு ஊடாடும்போது எப்படிப்பட்ட மனநிலைகளை எதிர்கொள்வான் என்று காட்டுவது ‘இரட்டையர்’. அந்த வகையில் இருப்பியல்வாத அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இரு நாவல்களும் தம்முள் தொடர்பு கொண்டிருப்பவையே. நிலவறையின் நீட்சியே ‘இரட்டையர்’ என்று கூடச் சொல்லி விட முடியும். “ துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மா,தனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞை,நிலவறைக்குள் தப்பித்து முடங்குதல்” ஆகிய சிக்கல்களையே ‘ இரட்டையர்’ நாவலிலும் எதிர்ப்படுகிறோம்” என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்பையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதி இருக்கும் காண்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி. கதையின் பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் நிறைந்த மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படி நிலைகளும் பல நெருக்கடிகளை உருவாக்கியிருந்தன. அவற்றுக்கு இடையே சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’ (sample) யாகவே கோலியாட்கின் என்னும் பாத்திரம் உருப்பெற்றிருக்கிறது. ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட இந்த நாவலை சரியாக உள்வாங்கும் முயற்சி கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேல் இன்னும்கூடத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்டுத் தன் சுய அடையாளம் குறித்த தேடலால் தன்னையே தொலைத்துக்கொள்ளத் துணிந்து விடும் ஒரு மனிதனின் கதை இது. நாவலில் நடக்கும் சம்பவங்களில் உணமை எது, கற்பிதம் எது என்று எதையும் வரையறுத்துச் சொல்லாமல் வாசக மயக்கம் ஏற்படும் வகையில்
உள்ளடங்கியதாகவே இந்த நாவலின் தொனியை அமைத்துக்கொண்டிருக்கிறார் நாவலாசிரியர். வாசக ஊகத்துக்கு உரியதாக - நுணுக்கமான மறை பொருளாக சிலவற்றை சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறார். இதை மொழிபெயர்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஐயங்களும் நான் எதிர்கொண்ட சவால்களும் எந்த வகையிலும்’நிலவறைக்குறிப்புகள்’ மொழியாக்க அனுபவத்துக்குக்குறைவானவை அல்ல, சொல்லப்போனால் கூடுதலானவை என்றே கூடச்சொல்லி விடலாம். தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியங்களான ‘ குற்றமும் தண்டனையும்’ , ‘ அசடன்’ ஆகியவற்றை விட மொழிபெயர்ப்பில் என்னைக்கடுமையாக உழைக்க வைத்து அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் வைத்தவை இந்த இரு குறுநாவல்களுமே.


ஆங்கிலத்திலிருந்து தமிழில் தஸ்தயெவ்ஸ்கியை மொழியாக்கம் செய்யும் போது யாருடைய ஆங்கில மொழியாக்கத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்? அதற்கான  தனிப்பட்ட காரணங்கள் என்னவென்று  கூற இயலுமா? 

தஸ்தயெவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களைப்பொறுத்தவரை Constance Garnett இன் மொழிபெயர்ப்பு பெரிதும் நம்பகத்தன்மையுடையது என்று சொல்லப்படுவதால் அதை அடிப்படையாக வைத்துக்கொள்கிறேன்; ஆனால் அது அடிப்படை மட்டும்தான். அதில் தெளிவு ஏற்படாத ஆங்கிலப்பகுதிகளில் வேறு பல ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கி , அந்தக் குறிப்பிட்ட கட்டத்தையும் சூழலையும் குறித்த முழுமையான திருப்தி என்னுள் ஏற்பட்ட பிறகுதான் அதைத்தமிழில் வைக்கிறேன். பொதுவாக ஒவ்வொரு தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கத்துக்கும் குறைந்த பட்சம் 3 ஆங்கில மொழியாக்கங்களையேனும் ஒப்பு நோக்குவது என் வழக்கம். மொழிபெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடாமல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம்( Progress publishers, Moscow )வெளியிட்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் ‘அசடன்’ நாவலிலும் இப்போது நான் செய்து வரும் அவரது வேறொரு பெரும் படைப்பிலும் எனக்கு மிகவும் துணையாகவும் புரிதலை எளிமைப்படுத்துவனவாகவும் உள்ளன.


கடைசிக் கேள்வி 
ஒருவேளை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால். அந்த சந்திப்பை எப்படி எதிர்கொள்வீர்கள்.?

தமிழ் வாசகர்கள் அவரை எப்படிக்கொண்டாடித்தீர்க்கிறார்கள் என்பதையும் அவரது எழுத்துக்கள் வழி நான் பெற்ற அக அனுபவங்களையும் அவரோடு பகிர்ந்து மகிழ்வேன்.
……………….

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....