துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.1.13

ஒழிமுறி-உறவெனும் புதிர்-1



நன்றி;கட்டுரையை வெளியிட்ட சொல்வனம் இணைய இதழுக்கு...
வாழ்வின் கணங்களிலேயே சிக்கலானது மனித மனங்களை வாசிப்பதும், புரிந்து தெளிந்து கையாள்வதுமே. உறவிலும்,நட்பிலும் பூரணத்துவம் பெற்ற புரிதல்கள் மிக அரிதாகவே சாத்தியமாகின்றன.
கூடவே வாழும் உறவுகள் சார்ந்த புரிதல்கள் இன்னும் கூடச் சிக்கலானவை.சிண்டும்,சிடுக்குமான மனக்குகை ஆழங்களில் பொதிந்திருப்பது என்னவென்பதை இனங்கண்டு முடிப்பதற்குள் ஒரு ஆயுட்காலமே நம்மிலிருந்து நழுவிப்போய் விடுகிறது.நெருக்கம் என நினைத்துக் கொண்டிருப்பது, ஏதோ ஒரு புள்ளியில் விலக்கமாக மாறிப்போவதும், விலக்கம் என எண்ணிக்கொண்டிருப்பது எதிர்பாராத ஒரு நொடியில் நெருக்கமாக மாயம் காட்டுவதும் மானுட வாழ்வின் விளங்காப் புதிர்களில் ஒன்று. மதுபால் இயக்கத்தில்,எழுத்தாளர் ஜெயமோகனின் கதை,திரைக்கதை,வசனத்தில் வெளிவந்திருக்கும் ஒழிமுறி-மலையாளத் திரைப்படத்தை [ஒழிமுறி-மணவிலக்கு கோரும் விண்ணப்பம்[A DOCUMENT OF SEPARATION] இந்தப் புதிர்களின் ஆவணமாகவே கொள்ளலாம்.
தந்தை-மகன்,தாய்-மகன்,கணவன்-மனைவி,மாமியார்-மருமகள் ஆகிய உறவுகள் எல்லோருக்கும் பரிச்சயமானவை, பழகிப்போனவை;ஆனால் அந்த உறவுகளின் அடியாழம் வரை சென்று அங்கே புதையுண்டு கிடக்கும் சில அழகுகளை, அவலங்களை,மேன்மைகளை, அருவருப்புக்களை, மகத்துவங்களை, மனக்கோணல்களை அகழ்ந்து எடுத்து வந்து அப்பட்டமாகக் காட்சிப்படுத்தி மனித மனச்சாட்சியின் உச்சிமுடி பிடித்து உலுக்கியிருக்கிறது இந்தப்படம். இது தரும் வெவ்வேறான தரிசனங்கள்,அச்சமா…பரவசமா எனப் பிரித்துக் காட்ட முடியாத மன எழுச்சிகளையும்,சிலிர்ப்புகளையும் கிளர்ந்தெழச் செய்யக்கூடியவை; ஆழமும், அழுத்தமுமான கட்டங்களின் காட்சிப்படுத்தல்கள், அவற்றை கூர்மையாகக் கொண்டு சேர்க்கும் வசனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே மேற்குறித்த மன உச்சங்களைப் பார்வையாளர்களுக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் வழி முக்கியமான இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகியிருக்கிருக்கும் ஒழிமுறி,கோவா திரைவிழாவுக்கும் திருவனந்தபுரம் திரைவிழாவுக்கும் இந்தியன் பனோரமாவுக்கும் தேர்வாகியிருக்கிறது.
கதைகளிலும்,கதைக்குள் வரும் உரையாடல்களிலும், கதையல்லாத பிற எழுத்துக்களிலும் ஜெயமோகனின் அபாரமான வீச்சும் திறனும் பலருக்கும் பரிச்சயமானவைதான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும் பங்களிப்புச் செய்திருக்கும் ஜெயமோகன், வணிகப்படத்துக்கான மலிவான பரபரப்புக்கள் அற்றதும், அதே வேளையில் ஒரு கட்டத்திலும் தொய்வே இல்லாததுமான விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பால் நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தொடுக்கப்பட்டிருக்கும் முன்னும் பின்னுமான காட்சிகள்- துண்டுதுண்டான கதை இழைகளைச் சீராக நெய்திருக்கும் செய்நேர்த்தி இவற்றால் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்னும் பரிமாணத்தையும் இந்தப்படத்தின் வழி ஜெயமோகன் பெற்று விடுகிறார். நீதிமன்ற நடுவருக்குக் குரல் தந்திருப்பதும் கூட ஜெயமோகன்தான்; அந்தப்பாத்திரம் பேசும் எள்ளலும் மெல்லிய நகைச்சுவையும் இழையோடும் பல வசனங்களுக்குத் தன் குரலாலேயே உயிரும் தந்திருக்கிறார் அவர்.
தொழில்நுட்ப உத்திகள் மலிந்த இன்றைய திரை உலகிலும் கூடக் கதையும், திரைக்கதை அமைப்பும், கூர்மையான உரையாடல்களும் வலுவாக இருந்தால் ஒரு படத்தால் மொழி கடந்தும் ஒரு பார்வையாளனைக் கட்டிப்போட முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் ஒழிமுறி, ஒரு கதையின் படம்; ஒரு கதாசிரியனின் படம்; உரையாடல்களாலும் அவை முன் வைக்கும் எளிய தருக்கங்களாலும்,வாழ்வியல் உண்மைகளாலும் தொடுக்கப்பட்டிருக்கும் படம். ‘ஒழிமுறி’, நானெழுதிய நான்கு அனுபவக்கட்டுரைகளின் திரைவடிவம் எனலாம்’என்கிறார் ஜெயமோகன். [பாஷாபோஷிணி வார இதழில் வந்த ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகளின் தொகுப்பான உறவிடங்கள் என்ற நூலில் உள்ள எந்நிரிக்கிலும் என்ற கட்டுரையே இந்தத் திரைப்படத்துக்கு அடிப்படையாகியிருக்கிறது]. மூலக் கதை சொல்லியே அதன் திரை வடிவத்தையும்,திரைக்கதை அமைப்பையும் தீர்மானிக்க முடியும்போது அதன் தாக்கம் எத்தனை வலுவானதாக முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் படம் ஒழிமுறி.
ஐம்பத்தைந்து வயது நிறைந்த மீனாட்சியம்மா, எழுபத்தோரு வயதான தன் கணவர் தாணுப்பிள்ளையிடமிருந்து மணவிலக்கு கேட்பதில் தொடங்கும் படம், இறுதியில் அந்த பந்தத்திலிருந்து மனக்கசப்பு இல்லாமல் அவள் கழன்று கொள்வதாக இயல்பாக முடிகிறது. திரைப்படத்தின் அடித்தளமான இந்த இரு கட்டங்களுக்கும் இடையே சுழலும் கதையையும், அதற்கான பின்புலங்களையும் மீனாட்சியம்மாவின் மகனும், எதிர்த்தரப்பில் வாதாடும் பெண் வழக்குரைஞர் பாலாவும் கிரேக்க நாடகங்களின் கோரஸ் போல நகர்த்திச் செல்கிறார்கள் 
.
மொழிவாரிமாநிலங்கள் பிளவுபடாமலிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாய்வழிச்சமூக அமைப்பே மேலோங்கியிருந்த ஒரு சூழலில் பிறந்தவர்  தாணுப்பிள்ளை; ஒரு மகாராணி போன்ற பீடு கொண்டவளும்,அரசி போன்ற கம்பீரம் மிக்கவளுமான தனது தாயின் ஆளுமை அவரை அச்சுறுத்த,தந்தை வழிக்குடும்ப அமைப்புக் கொண்ட குடும்பத்தை வலியத் தேடிப்போய்ப் பெண்ணெடுத்து மீனாட்சியை மணக்கிறார்.அவளும் அவர் கைக்கு அடங்கியவளாக - அவர் விரும்பும் குடும்ப அடிமையாக மட்டுமே இருந்தபடி முன்கோபமென்ற பெயரில் அவர் இழைக்கும் அத்தனை வன்முறைகளையும் பொறுமையோடு சகித்துக் கொள்கிறாள். இடையே ஒருமுறை சகோதரனின் தூண்டுதலால் மணவிலக்குக் கோரினாலும் பிறகு அதை ரத்து செய்து விட்டுக் கணவனிடம் திரும்பிய பின் பிறந்த வீட்டு உறவையே முற்றாகத் துண்டித்துக் கொண்டு தந்தையின் சாவுக்குக் கூடப் பிறந்தகம் செல்லாமல்  கணவனின் காலடி நிழலில் மட்டுமே வாழ்ந்து பழகி விடும் அவள் 60 வயதை எட்டும் நிலையில் மணமுறிவு கேட்பதற்கான காரணம்....ஒரு வரியிலோ,ஒற்றைச் சொல்லிலோ சொல்லி விடும் அளவுக்கு அத்தனை எளிதானதல்ல. அதற்கான தேடலே துண்டு துண்டான முன்னிகழ்வுகளாக- மீனாட்சியம்மாளின் மகன் சரத்தின் தேடல்களாகத் திரையில் வளர்ந்து விரிகின்றன.

எதிர்த் தரப்பு வழக்குரைஞராக இருந்தாலும் முதலில் தோழியாக வந்து பிறகு காதலியாக மாறிப்போகும் பாலாவே சரத்துக்குள் அந்தத் தேடலை விதைக்கிறாள். அதுவரை அம்மாவுக்கும்,அவள் தொடுத்த வழக்குக்கும் உறுதுணையாக சரத் இருந்தாலும் பாலா எழுப்பும் கேள்விகளும்,அவளோடு நிகழ்த்தும் உரையாடல்களும், அவை தரும் தூண்டுதல்களுமே அம்மாவின் ஒழிமுறிமனுவுக்கான அடிப்படைக் காரணத்தை நோக்கி சரத்தை செலுத்துகின்றன.அதுவரையிலும் வழக்கு பற்றி  அவன் கொண்டிருந்த புரிதல் இளமையிலிருந்து அவன் கண்டு பழகிய தந்தையின் மூர்க்காவேசக் கோபத்தையும்,அடிதடிஆரவாரக்கூச்சல்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக...,மேலோட்டமானதாக மட்டுமே இருக்கிறது. தன் தாயின் வாழ்க்கையை..தந்தையின் ஆளுமையை பாலாவிடம் விவரித்துக் கொண்டு போகிறபோதுதான் அவனுக்குள்  தன் பெற்றோரின் வாழ்க்கை பற்றிய மறுவாசிப்பு ஒன்றே நிகழ ஆரம்பிக்கிறது. அவனுள்ளும் கூட அவ்வப்போது தலை காட்டுவது அவனது தந்தையின் ஆளுமையே என்பதைக் கோயில் தேங்காய்க்கு அவன் கோபப்படும் சந்தர்ப்பத்தில் பாலா அவனுக்கு உணர்த்த....அதே காட்சியின் தொடர்ச்சியாக அவன் தாயும் ‘’அப்படியே அப்பா மாதிரி.’’என்று சொல்ல அந்த நேரத்தில் ஆவேசம் கொண்டாலும் ஒரு தலைமுறையின் நீட்சியே அடுத்ததடுத்ததாக வருவதை அவன் படிப்படியாகப் புரிந்து கொள்கிறான்.

ஒரு பக்கம் ஒழிமுறிக்கான வழக்கைத் தொடுத்து விட்டு,மற்றொரு பக்கம் எதிர்த்தரப்பு வக்கீலின் ஒரு கேள்விக்கு விடை தரும்போது  தன் கணவர் அன்பானவர்,அவர் மீது தனக்கு அன்பு இருக்கிறது,அவரைப்போன்ற அன்பான தந்தை இல்லை என்றெல்லாம் அம்மா சொல்லுவது அவனை ஆச்சரியப்படுத்துகிறது. ’’வாக்தேவியின் உறைவிடமான - உண்மையின் தலமான நீதிமன்றத்தில் பொய் சொல்லலாகாது’’என்கிறாள் அம்மா. பின் ஏன் இந்த ஒழிமுறி....? சரத் குழம்ப புதிர் தொடர்கிறது.
(தொடர்ச்சி- அடுத்த பதிவில்..)


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....