துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.7.20

’தப்ப’டும்(Thappad-Hindi movie) தப்பான அடிகளும்


கால மாற்றங்களால் நம் அணுகுமுறைகளும் மாறியிருந்தாலும் ’’புருஷன் பொண்ட்டியை அடிக்கறதிலே என்ன பெரிய தப்பு இருக்கு’’ என்று அந்தச் செயல்,சர்வ சகஜமான- இயல்பான ஒரு நிகழ்வாகவே இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறான ஒரு சமுதாய அமைப்புக்குள் வாழ்ந்து வரும் நம்மால் ’தப்பட்’ போன்ற படங்களின் உள்ளுறையாகப் பொதிந்திருக்கும் பெண் உளவியலைப் புரிந்து கொள்வது கடினம்தான்.
அமு என்னும் அம்ரிதா , தான் காதலித்து மணந்த விக்ரமை,அவன் குடும்பத்தை, மாமியாரை நேசித்து வாழும் துடிப்பும் மகிழ்ச்சியுமான ஒரு பெண். பள்ளிப்பருவக்கனவுகள் கலைந்து போனதைக்கூடப் பொருட்படுத்தாமல் அது குறித்த எந்தப் புகாரும்,ஏக்கமும் இல்லாமல் ஒரு நல்ல இல்லத்தரசியாக மட்டுமே தன்னை உருவாக்கிக்கொள்ள விரும்புபவள். ஒரு சிந்தனாவாதி என்றோ, பெண்ணியவாதி, ’ஆக்டிவிஸ்ட்’ என்றோ எந்த முத்திரைகளும் இல்லாதவள். குரோட்டன்ஸ் இலைகளைச் சீராக வெட்டுவது, தேநீர் போடுவது,கணவனை தினமும் வழியனுப்பி வைப்பது என்று அன்றாட வாழ்வின் இனிமைகளுக்குள் கடமைகளுக்குள் மட்டுமே சந்தோஷ லயிப்போடு கரைந்து போகிற ஒரு சராசரிப் பெண்.
கணவனின் பதவி உயர்வுக்காக நிகழும் பகட்டான விருந்தில் விருந்தினர் முன்னிலையில் அவள் கன்னத்தில் விழும் ஒரே ஒரு அறை அவள் வாழ்வையே புரட்டிப்போடுகிறது. இத்தனைக்கும் - தான்,தன் பதவி வெறி என்று மட்டுமே இருந்தாலும் –அதுவரை அவன் அவளை எந்த வன்முறைக்கும் ஆளாக்கியதில்லை. அந்தக் குறிப்பிட்ட சம்பவத்திலும் அதை அவன் வேண்டுமென்று செய்திருக்கவில்லை; எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்திருக்கவில்லை என்று விருந்து நேரத்தில் கிடைக்கும் செய்தியால் பதட்டமாகி, அது குறித்த வாக்குவாதத்தில் ஈடுபடும் அவனை அந்தப் பேச்சு வார்த்தை தடித்து விடாமல் தடுப்பதற்கு அவள் முயல்கிறாள்; அப்போது தன்னிச்சையாக அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை அறைந்து விடுகிறான் அவன்.
அமுவை அது அதிர வைக்கிறது; அவள் நிலை குலைந்து போகிறாள். உருகி உருகிக்காதலித்தவன்தான் என்றாலும் அதன் பிறகு அவனை அவளால் அன்பு செய்ய முடியாமல் போகிறது. அந்தக் கணத்தோடு மனதின் மெல்லிய, நுட்பமான பிரிய இழை ஒன்று அவளுக்குள் அறுந்து போகிறது. காதல் இல்லாமல் ஒப்புக்காகக் கூடி வாழும் போலி வாழ்க்கையில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியுள்ள உறவும் உலகமும் அதையே அவளிடம் எதிர்பார்க்கிறது. தன் வேலை சார்ந்த பதட்டங்களால் தற்செயலாய் நிகழ்ந்து விட்டஅந்த செயலை அவள் தேவையில்லாமல் ஊதிப்பெருக்குவதாகவே அவனுக்குத் தோன்றுகிறது. அலுவலகத்தோடு ஒன்றிக்கலந்து தன் மூளையையும் உழைப்பையும் மூலதனமாக்கி வேலை செய்தும் அங்கே தனக்கு உரிய மதிப்பில்லை என்றும், அவள் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திரும்பத் திரும்பச்சொல்கிறானே தவிர அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதே இல்லை; அலுவலகத்தில் அவன் செய்தது போல -அதே மாதிரியில்- குடும்பத்துக்குள் மட்டுமே தன் உணர்வுகளையும் உழைப்பையும் முதலீடு செய்திருக்கும் தனக்குக் கிடைத்திருக்கும் மதிப்பு என்ன என்று அவள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை
அமு தாய் வீட்டுக்குப்போகிறாள். தாய் சகோதரன் என்று உறவு வட்டங்கள் எல்லாமே அதை அவள் அதை மிகைப்படுத்துவதாகவே சொல்லும் நிலையில்…அவள் தந்தை மட்டும் அவள் மனக்காயத்தையும் அதிர்ச்சியையும் உள்ளபடி புரிந்து கொள்கிறார் ஆனாலும் எந்தத் தீர்வையும் ஆலோசனையையும் வழங்காமல்,தன் மனம் சொல்லும் வழியில் அவளாகவே முடிவெடுக்க ஆதவாய் நிற்கிறார்.

தாய் வீடு தற்காலிகப் புகலாகாமல் பிரிவு நீண்டுகொண்டு செல்லும் நிலையில் தாம்பத்திய உரிமை கோரி வழக்குத் தொடுக்கிறான் விக்ரம். அவளும் நேத்ரா என்ற பெண் வழக்கறிஞரிடம் போகிறாள். நீதிமன்றப் படி ஏறினால் எதிர்ப்பட வேண்டியிருக்கும் கேவலங்களைச் சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட நிகழ்வுகளோடு சமரசம் செய்து கொண்டு கடந்து போவதுதான் குடும்ப வாழ்வில்…நடைமுறைக்கு உகந்தது என்று தொடக்கத்தில் ஆலோசனை கூறும் அந்தப் பெண் வழக்கறிஞரையே பிறகு தன் உறுதியான நிலைப்பாட்டால் மாற்றிப் போட்டு விடுகிறாள் அமு.
’’எனக்கு வாழ்க்கையில் வேண்டியது இரண்டு மட்டும்தான் – ஒண்ணு சுய மதிப்பு, இன்னொனாண்ணு உறுத்தல் இல்லாத சந்தோஷம்.. இதை இப்படியே ஒத்துக்கிட்டு சமரசமாப் போயிட்டா… அப்புறம் என் மேலேயே எனக்கு மதிப்பிருக்காது, மகிழ்ச்சியும் இருக்காது ’’ என்ற சுருக்கமான சொற்களால் அதைத் திடமாக நிராகரித்து விடுகிறாள் அமு. வக்கீல் பரிந்துரைக்கும் குடும்ப வன்முறைக் காரணத்தையோ , ஜீவனாம்சம் கோருவதையோ கூட அவள் உடன்படவில்லை.
சட்டப்போராட்டம் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்க அவள் கருவுற்றிருக்கும் செய்தி கிடைக்கிறது; அவனுக்கும் அதுவரை அவன் எதிர்பார்த்த லண்டன் பதவி உயர்வு கிடைக்கிறது. எல்லாம் சுபம்தானே..’ALL FINE..JUST MOVE ON’ …இதற்கு மேலும் ஏன் இதை வளர்த்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று அவன் உட்பட எல்லாரும் நினைக்க ALL FINE எப்படி ஆகும் என்ற வினாவோடு அவள் உறுதியாய் நிற்கிறாள். வாழ்க்கை இப்போது இனிமைகளைக் கொண்டு வந்தாலும் தனக்கு அன்று நடந்ததை அத்தனை லகுவாய் ஒதுக்கிப்போட்டு விட்டு அன்றாட வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ள- அது எத்தனை லாபங்களைத் தந்தாலும் கூட- அவளுக்கு விருப்பமில்லை.
அதே வேளையில் அவளது அன்பும் கரிசனமும் அவளைச்சார்ந்த மற்றவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அவள் பிரிந்து வாழ்ந்தாலும் கணவன் அலுவலகம் சென்று விடும் பகல் வேளைகளில் சர்க்கரை நோயாளியான மாமியாரை வந்து கவனித்துக்கொள்கிறாள்; குழந்தைப் பேற்றுக்காக அந்தக்குடும்பம் நடத்தும் பூஜையிலும் கூட!..

ஆனாலும் அவள் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அருவருப்பான குற்றச்சாட்டுக்களை அவள் மீது சுமத்தியபடி விக்ரமின் வழக்கறிஞர் கீழிறங்கும்போது அவளும் குடும்ப வன்முறை என்று தன் மனுவில் குறிப்பிட வேண்டியதாகிவிடுகிறது.
பரஸ்பர ஒப்புதலின் பேரில் இருவரும் விவாகரத்து பெறும் அந்தத் தருணத்தில் தன் தவறை மட்டுமல்லாமல் அவள் இல்லாத தன் வாழ்வின் வெறுமையையும் உணர்ந்து தன் வேலையைக்கூடத் துறந்து வரும் அவன், தன் செயலுக்காக இதுவரை அவளிடம் தான் மன்னிப்பு கோரவேயில்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறான்.
’இது நடந்திருக்க வேண்டாம்’ என்று எண்ணியபடி இருவரும் பாரமாய் மனம் கனத்துப்போய்ப் பிரியும் அந்தத் தருணத்தை - ஓடும் ரயிலில் மூச்சிரைக்க வந்து ஒன்று சேர்வதாக.-.மௌன ராகம் போன்ற செயற்கையான நாடகீயக் கணங்களாகக் காட்டாமல் ’’இந்தச்செயலின் விளவு இதுமட்டுமே’’ என்று - அவளது நிலைப்பாட்டுக்கு அழுத்தம் சேர்க்கும் வண்ணம் படத்தை நிறைவு செய்திருப்பதே இதன் உள்ளடக்கத்துக்கு நியாயம் சேர்க்கிறது.
ஒரு முறையோ , பல முறையோ …எப்படியானாலும்…ஒருவரை அடிப்பதற்கு.., அவரது தன்மதிப்பைக் காயப்படுத்துவதற்கு [கணவன் என்றாலும் கூட ] அடுத்தவருக்கு உரிமை இல்லை, வெளிப்பார்வைக்கு மென்மையானவளாக, குடும்பத்தை உயிராக நேசிப்பவளாக இருக்கும் ஒரு பெண்ணும் கூட அப்படி taken for granted ஆக நடத்தப்படும் வேளையில் - தன்னையும் அறியாத ஓர் உந்துதலால் இப்படிப்பட்ட முடிவை நோக்கி நகர்ந்து விடக்கூடும் என்பதை ஓர் எச்சரிக்கையாக DON’T EVER TAKE WOMEN FOR GRANTED! என்று சொல்லியிருக்கிறது தப்பட்.
இது, இந்தத் திரைக்கதையின் மைய இழை என்றபோதும், அதை முன்வைத்து ஒடுக்கப்பட்ட பெண் உணர்வுகளை வேறுபட்ட தர நிலையிலுள்ள பல பெண்கள் வழியாக நுட்பமாகத் தொட்டுக்காட்டிக்கொண்டே போகிறது படம்.
தினந்தோறும் கணவனிடம் அடி வாங்கும் பணிப்பெண், ’சந்தியாஜி’ என்று அமுவின் தந்தை அவள் தாயை மதிப்போடு அழைத்தாலும் அவளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் ஆசாபாசங்கள், பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட அமுவின் மாமனாரால் ஒரு அலங்காரப்பொருள் போல,அந்தஸ்தின் சின்னம் போல மட்டுமே நோக்கப்படும் அமுவின் மாமியார், அமுவின் விடாப்பிடியான போர்க்குணத்தால் தன் சுயத்தை மீட்டுக்கொள்ளும் வழக்குரைஞர் நேத்ரா என்று பல பெண் மாதிரிகளுக்கு- அதுவரை தோன்றியே இராத தன்மதிப்பு உணர்வை மீட்டெடுத்துத் தரும் ஒரு முன்னோடியாய் இருந்தபடி ஒரு புதிய பாடத்தையே கற்றுத்தருகிறாள் அமு என்னும் அம்ருதா.
புகுந்த வீட்டாரை இறுதியாகப் பிரியும்போது அமுவும் மாமியாரும் உரையாடும் கட்டம் படத்தின் சிகரம்...!’’ நீங்க என் மேலே அன்பைப் பொழிஞ்சீங்க, ஆனா அந்த விருந்து நடந்த ராத்திரிதான் என்னை அமுவா நெனக்காம விக்ரமோட மனைவியா மட்டுமே நெனச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க எல்லார் மேலேயும் நான் அன்பு செலுத்தினேன்…ஆனா அவர் செஞ்சது தப்புதான்னு நீங்க யாருமே சொல்லலை அதுக்கு உங்களை என்னாலே மன்னிக்கவே முடியாது’’என்று ஆவேசமே காட்டாமல் பாசத்தின் நெகிழ்வோடு மட்டுமே சொல்கிறாள் அமு. அப்போது மாமியாரும் மனம் திறக்கிறார்… ’’நடந்ததுக்கு உன்னைக் குறை சொல்ல முடியாது. ஒரு மனைவி எது நடந்தாலும் ஏத்துக்கிட்டுதான் போகணும்னு சொல்லிக்கொடுக்கிற/நெனக்கிற அம்மாக்கள், மாமியார்கள், பெண்டாட்டியை அடிக்கக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்து வளர்க்காத அப்பா அம்மா…தப்பு இவங்க எல்லார் மேலேயும்தான்’ ’என்கிறாள்.
ஆனால் அமுவுக்குக் கிடைத்தது போல் அவளைப் புகுந்த வீட்டுக்குப் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்தாத பெற்றோரும் அவளைப்புரிந்து கொள்ளும் மாமியாரும் பாதிப்புக்குள்ளாகும் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பது சந்தேகம்தான்.
அழுகையும் புலம்பலும் ஆவேசப்பிரகடனமும் இல்லாமல் ஆழ்ந்த மனக் காயத்தின் கொடுந்துயரை முகத்தில் மட்டும் தேக்கி, மெதுவான குரலிலும் செயலிலும் மட்டுமே உள்ளத் திண்மையை வெளிக் காட்டிக்கொண்டபடி… எல்லோரிடமும் பிரியம் செலுத்தும் பெண்ணாக ’தப்பட்’ படத்தில் அமுவாகவே வாழ்ந்திருக்கிறார் தாப்சி. பிற பாத்திரத் தேர்வுகளும் கச்சிதமானவை. வசனங்கள் ஆழ்ந்த கவனிப்புக்கு உரியவை என்பதோடு தீட்டிய வாள் நுனி போலக் கூர்மையாக இதயத்தில் இறங்குபவை. கருத்துக்களின் அடர்த்தியால், கனத்தால்.. படத்தின் விறுவிறுப்பு குறைந்து விடாமல், அதே வேளையில் பிரச்சாரமாக.. over dramatic melodrama வாகவும் மாற்றி விடாமல் மிகை நடிப்போ மிகைக்காட்சிகளோ பாவனைகளோ இல்லாமல் யதார்த்தமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகப் பெண்ணின் ஒடுக்கப்பட்ட உளவியலை முன் வைத்திருக்கிறது ’தப்பட்’.
குடும்ப அமைப்பில் பெண்ணுக்கு நேரும் சுயகௌரவச் சிதைவு, அவளது தனிப்பட்ட உணர்வுகள்,விருப்பு வெறுப்புக்கள் ஆகியவை புரிந்து கொள்ளப்படாமல் போதல்… ஆகியவற்றின் குறியீடே’தப்பட்’! அதையெல்லாமல் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எல்லாரோடும், எல்லாவற்றோடும் அவள் இணங்கிப்போக வேண்டும் என்று எண்ணும் சமூக எதிர்பார்ப்பின் கன்னத்தில் சுளீரென்று அறை விட்டிருக்கிறது ’தப்பட்’ திரைப்படம்.
’தப்பட்’ என்றாலே அறைவிடுவதுதான் இல்லையா?..
ஒரு பின் குறிப்பு:
இப்படியும் சில ’தப்பட்’கள்..தப்படிகள்!
பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த வேறொரு தமிழ்ச்சிறுகதை ‘அடி’ (அய்க்கண் என்று நினைவு) : நோய்வாய்ப்பட்டுக்கிடக்கும் மனைவியின் உயிர் பிரிந்து போகாமல் இழுத்துக்கொண்டே கிடக்க, ஏதோ நிறைவேறாத ஆசை போலிருக்கிறது என்று ஊரார் முடிவு செய்கிறார்கள். முன்கோபக்காரரான அவள் கணவருக்கு எல்லோரையும் அறைந்தே பழக்கம். திருமணம் ஆகும்போது மனைவியை மட்டும் அடிக்கக்கூடாதென்று அவர் உறுதி எடுத்துக்கொண்டாராம். அவர் தன்னை மட்டும் அடிக்கவில்லையே என்பதுதான் மனைவியின் நிறைவேறாத ஆசை என்றும் அவர் ஒரு அறை விட்டதும் அவள் உயிர் போய் விடுவதாகவும் அந்தக் கதை முடியும்…
’உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் தன்னை அதுவரை இலட்சியம் செய்யாமலிருந்த கணவர் அறை விட்டதும் அதை லேடீஸ்கிளப்பில் அவள் பகிர்ந்து கொள்ள அதுதான் அவர் காட்டும் அன்பின் தொடக்கம் என்று மற்ற பெண்கள் அடியெடுத்துக்கொடுக்க ..அந்த வேடத்தில் வரும் சௌகார் ஜானகி உடனே சிலிர்த்துப்போய்ப் பியானோ வாசித்தபடி அந்த அடிகளை ’அத்தானின் முத்தங்கள்’ என்று பாட ஆரம்பித்து விடுவார்..
2020இல் வந்திருக்கும் ’தப்பட்’தான் இப்படிப்பட்ட தப்புத் தாளங்களை மாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....