"எடுத்த காரியம் யாவினும் வெற்றி","எண்ணத்து இருக்கும் எரியேசக்தி " பாரதி .
வணக்கம்.
தமிழ் கூறும்நல்லுலகிற்கு என் சிறிய பங்களிப்பு இந்த வலைப்பூ . இதில் ஈடுபடுமாறு என்னை அறிவுறுத்தியதோடு ,தக்க வழிகாட்டுதல்களையும் நல்கி ஊக்கப்படுத்திய என் பிரியத்திற்குரிய எழுத்தாளர்கள்,திரு ஜெயமோகன்,திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் இதைத்தொடங்கும் வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.தங்களது தொடர்ந்த எழுத்துப்பணிகளுக்கு இடையிலேயும் சகஆர்வலர்களை ஊக்குவிக்கும் அவர்களின் பெருந்தன்மை நெஞ்சை நெகிழ்விப்பது..அவர்களது வலைப்பதிவுகளைப்படித்து விட்டு,தமிங்க்ளிஷில் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்த நான்,தமிழில் மின் அஞ்சல் அனுப்பத்தொடங்கிய மறு கணமே அதிசயிக்கத்தக்க வகையில் இருவரும் ஒரே மாதிரியான பதிலை-நான் வலைப்பதிவு தொடங்கலாமே- என்ற எண்ணத்தை வெளியிட்டிருந்தனர்.இன்றைய நவீன தொழில் நுட்ப உலகின் புதிய எல்லைகளுக்குள் அடியெடுத்து வைக்க அவர்களின் வார்த்தைகள் நன்னிமித்தமாக அமைய, kasilingam.com/wiki/doku.php?id=Tamil blogging வழிகாட்டநானும் இணைய உலகில் முதலடி பதிக்கிறேன். தமிழ் வலைப்பதிவு பற்றி விரிவாக விளக்கி வழிகாட்டிய அந்த சுட்டிக்கும் என் நன்றி .
பணி நிறைவு பெற்று புது தில்லி வந்தபின் என் எழுத்தார்வத்திற்கு ஏற்ற வடிகால்களை ஏற்படுத்தித்தந்து என்னை ஊக்குவித்து வரும் வடக்கு வாசல் இதழுக்கும் அதன் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன்அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
கணினியை என் கைக்கு வசப்படச்செய்து பயிற்சி அளித்த என் அன்பு மகள் மீனு பிரமோதையும்அவளது துணைவர் பிரமோத் பாசத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழில் எழுத முடிந்திருக்காவிட்டால், இந்த வலைப்பூவே சாத்தியப்பட்டிருக்காது; பலபல வழிகளிலும் முயன்று வெற்றி அடையாமல் தவித்துக்கொண்டிருந்த தருணத்தில்,மிக எளிய வழி ஒன்றைக்காட்டி, கணினித்தமிழை என்னருகே கொண்டுவந்து சேர்த்த வாசகர் சந்தோஷ்குமாருக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
பத்து வயதில் தொடங்கிய எழுத்தார்வம், ஒரு சில நூல்களைப்பதிப்பித்திருந்தாலும் கூட (பார்க்க-சுயவிவரம்),இன்னும் முழுமையான வெளிப்பாடு கொள்ளாத ஒரு தாகமாகவே நெஞ்சில் தங்கிப்போயிருக்கிறது.அந்த ஆற்றாமைக்கு இந்த வலைப்பதிவுகள் நல்ல வடிகால்களை ஏற்படுத்தித்தரும் என நம்பி அவ்வாறே விழைகிறேன்.படைப்பவை,படிப்பவை,பார்ப்பவை ஆகிய அனைத்தையும் வலைப்பூவில் ஏற்றம் செய்து இணைய வாசகர்களின் பார்வைக்கும்,விமரிசன வாதங்களுக்கும் முன் வைப்பதே என் விருப்பம்.இப்பதிவுக்கு வருகை புரிந்து கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் அன்பு அழைப்புக்களை இதன் வழி விடுக்கிறேன்.
அன்னையாய், தந்தையாய், என்னை நானாக்கிய என் அன்புத்தாய் அமரர் திருமதி சோபனாதேவி அனந்தராம் அவர்களுக்கு இவ்வலைப்பதிவு சமர்ப்பணம்.
4 கருத்துகள் :
அன்புள்ள திருமதி சுசீலா அவர்களுக்கு
வலையுலகுக்கு வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.
வலைப்பதிவராக நீங்களும் இணைந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.
வாங்க.
பொளந்து கட்டுங்க.
வானம் மட்டுமே எல்லையாக இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
ராகவன்தம்பி
congrats madam ! wish you all the best in your new innings.
- J RAVICHANDRAN
அறிமுகம் படிச்சேன் .கடின உழைப்பு தெரிகிறது.முடியலை மேடம்!
நிறைவுறாத ஆர்வம்;
குறும்படம் எடுப்பது-இன்னமுமா எடுக்க வில்லையா?
வாழ்த்துக்கள் தொடருங்கள்...!
கருத்துரையிடுக