துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.10.08

வலைப்பூவின் இலக்கு

"தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித்துன்பம்மிக உழன்று பிறர்வாடப்பல செயல்கள் செய்து -நரை
கூடிக்கிழப்பருவம் எய்திக்கொடும் கூற்றுக்கு இரைஎனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
-பாரதி


இந்த வலைப்பூ என் இலக்கிய ரசனைக்கு ஒரு வடிகால்;என்சிந்தனைகள் , வெறும் மன ஓட்டங்களாக மடிந்து போய் விடாமல் பாதுகாக்கும் பெட்டகம்;சிறுகதைகளாகவும்,கட்டுரைகளாகவும் நான் எழுதும் ஆக்கங்களை சேமிக்க உதவும் கருவூலம்;ஒத்த மனம் படைத்தோரையும்,முரண்பட்ட கருத்துக்கொண்டோரையும் என்னுடன் உரையாடவைக்கும் களம்;பகிர்வுகளின் வழியே நட்புக்களை ஏற்படுத்தும் பாலம்;இன்னும்..இன்னும்..எவ்வளவோ!! கடந்து போகும் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு கணமும் நமக்குள் ஏதோ ஒரு பதிவை,பாதிப்பை ஏற்படுத்தியபடிதான் நகர்ந்து செல்கின்றன..அவற்றுள் எல்லாமே பொருட்படுத்தக்கூடியவையாக இருப்பதில்லை என்ற போதும்,ஒரு சில கணங்கள் அழியாத சுவடுகளை நெஞ்சில் பதித்து விட்டுப்போகிறவை. லா.ச.ராவின் வார்த்தைகளில் சொல்லப்போனால் "நித்தியத்துவம்"பெறத்துடிப்பவை. அந்தத்தருணத்தில் தவற விட்டு விட்டால் பின் எப்பொழுதுமே மீட்டெடுத்துக்கொள்ள முடியாதவை.அத்தகையஅபூர்வமான கணங்களை உடனுக்குடன் பதியவும்,பகிரவும் முடிகிற அற்புத வாய்ப்பை இந்த வலைப்பூவில் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விழைவு..சமூக அக்கறையும் ,தரமான வாசிப்பு,நுகர்வு ரசனைகளுமே நான் முதன்மை தந்து வலியுறுத்த விரும்பும் செய்திகள்.கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது,இவற்றைஎல்லாம் அவ்வப்போது மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டபடியே நாட்கள் நகர்ந்துவிட்டதால் ,சிறுகதைகள்,திறனாய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியதோடு நிறைவு கொள்ள முடிந்து விட்டது.இலக்கியப்பகிர்வுகளுக்கும் தோழிகள் உடனிருந்ததால் பேசித்தீர்த்து விட முடிந்தது.தமிழ் நாட்டிலிருந்து வெகு தொலைவில்,புதுதில்லியின் புரியாத பாஷைகளுக்கு நடுவே,சிந்தனைகளை பரிமாறிக்கொள்ள "சக ஹிருதயர்"(நன்றி;ஜெயகாந்தன்)களைத்தேடித்தவிக்கும் நெஞ்சு,இவ்வலைப்பூவால் தேறுதல் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இதைத்துவங்குகிறேன். எழுத்தை,எழுதும் முயற்சியைக்கை விட்டு விடாமல் அதை ஒரு சாதகமாக்கிக்க்கொண்டு பயிலவும் இந்தக்களம் வழியமைத்துத்தரக்கூடும்.எல்லாவற்றுக்கும் மேலாக ,பணி நிறைவு பெற்ற பின், வாழ்வே நிறைவுற்று விட்டதாக எண்ணி,நான் சோர்ந்து போய்விடாதபடி என்னை என்றென்றும் புதிய உயிராக இயங்க வைத்து ,உற்சாகம் கொள்ள வைக்கும் ஒருமா மருந்தாக,எனது அடுத்த இன்னிங்க்ஸ் ஆக இந்த வலையிடலைத்தொடங்கி, ,இணைய வாசகர்களின் பார்வைக்கு உரித்தாக்குகிறேன்.நன்றி.

3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

//பணி நிறைவு பெற்ற பின், வாழ்வே நிறைவுற்று விட்டதாக எண்ணி,நான் சோர்ந்து போய்விடாதபட//

எப்பா எவ்வளவு தன்னம்பிக்கை ஒங்களுக்கு சான்சே இல்லை.

தங்களின் அனைத்து பதிவையும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து விட்டு எழுதுகிறேன் மேடம் !

P.M.Rajkumar சொன்னது…

அருமை., பாராட்டுக்கள் தாயே..!

P.M.Rajkumar சொன்னது…

அருமை., பாராட்டுக்கள் தாயே..!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....