இன்றைய நவீனப்படைப்புலகிலும்,திறனாய்வுத் தளத்திலும் பரவலாகப் பேசப்படும் கருத்தியல்களுள் - மறுவாசிப்பு /மீட்டுருவாக்கம் என்பது, சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
ஒரு திறனாய்வாளன் மறுவாசிப்பு செய்கையில்
படைப்பை நோக்கிய அந்த ஆய்வு, ஆழமும்,கூர்மையும் பெறுகிறது.
படைப்பாளி சொல்லத் தவறிய இடங்கள்,
சொல்லத் தயங்கும் இடங்கள்,
வேண்டுமென்றே சொல்லாமல் இருந்துவிடும் இடங்கள்
ஆகியவற்றைச் சுட்டிக்காட்டித் தகுந்த சமூக உளவியல் பின்னணிகளோடு இயைத்துக் காட்டிவிடும் நுட்பம்,தேர்ந்த திறனாய்வுக்கு உண்டு.
இதே வகையான மறுவாசிப்பு ஒருபடைப்பாளியால் மேற்கொள்ளப்படும்போது,
புதிய பரிமாணத்துடன் கூடிய வேறொரு படைப்பே கிடைத்து விடுகிறது.
முந்தைய படைப்பின் பாதையிலேயே பயணிப்பதைப்போலப் போக்குக் காட்டிச் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் - முற்றிலும் வேறான ஓர் உண்மையை...மறுதலிக்க முடியாத ஒரு சமூகச் செய்தியை நெஞ்சுக்குள் மிக எளிதாகச் செருகி விடுகிறான் மீட்டுருவாக்கப் படைப்பாளி
( புதுமைப்பித்தனின் ’சாப விமோசன'த்தில் வரும் இறுதிப்பகுதி இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டு)
தொல் இதிகாசங்கள்,பழம்புராணங்கள்,பண்டை இலக்கியங்கள் முதலியவைகளை இன்றைய மாறிய சூழலில் படிக்கும் ஒரு வாசகன்,அவற்றிலுள்ள சில பகுதிகளை உட்செரிக்க முடியாமல் அவதியுறுகையில் இத்தகைய மீட்டுருவாக்கப் படைப்புக்கள் அவற்றின் மீது புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன.
''நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பல தந்தார்
கவிதை மிக நல்லதேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக்கண்டோம்''
என்று 'உயிர் பெற்ற தமிழர்பாட்டி'ல் பாரதி குறிப்பிட்டதை மனதில் கொண்டு,மூடக்கட்டுகளையும்,மூத்த பொய்மைகளையும் தகர்க்கும் சில தரிசனங்களைச்சாத்தியப்படுத்துகின்றன.
முன்னோர் மொழிந்த சொல்லையும்,பொருளையும் பொன்னே போலப் போற்றி வரும் ஒரு சமூகத்தில் இவ்வாறான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க மகத்தான துணிவு வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட கருத்தியலை எதிர்ப்புக் காட்டாமல் ஏற்றுக்கொள்ள அதற்குத் 'தொன்மை'என்னும் ஒரு தகுதி மட்டும் இருந்தாலே போதும் என்பது போன்ற பிரமைகளை ஆழமும் அழுத்தமும் கூடிய மறுவாசிப்புக் கதைகள் துணிச்சலோடு கட்டுடைக்கின்றன;
மனித மனங்களின் விகாரங்களை,வெளிக்காட்ட வாய்ப்பில்லாமல் உள்ளுக்குளேயே உறைந்து போயிருக்கும் உணர்வுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவுபவை இத்தகைய மறுவாசிப்பு மீட்டுருவாக்கங்களே.
புது தில்லியிலுள்ள மகளிரியல் கல்வி மையம் , மார்ச் 14,15 தேதிகளில்
'பெண்ணிய மறுவாசிப்பில் தொன்ம,மற்றும் காப்பியக் கதாநாயகியர்'
என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறது.
சிறந்த இலக்கிய விமரிசகரும்,இதிகாச இலக்கியங்களில் புலமையும்,தேர்ச்சியும் கொண்டவருமான திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் பங்கு பெறவிருக்கும் இக் கருத்தரங்கில்,
'தமிழ்க் காப்பியங்கள் மற்றும் புராணங்களில் பெண்ணிய மறுவாசிப்பு'
என்னும் பொருளில் நான் கட்டுரை வழங்க இருக்கிறேன்.
(இத் தருணத்தில் மறுவாசிப்பு மற்றும் மீட்டுருவாக்கம் குறித்து
மதுரையைச் சேர்ந்த பேராசிரியரும்,எழுத்தாளருமான திரு அருணன் அவர்களின் 'பூரு வம்சம்' நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையிலிருந்து
('பூருவம்சம்'நூலின் பின்னிணைப்பாக இம் மதிப்புரை இடம் பெற்றிருக்கிறது) சில பகுதிகளை மட்டும் மேலே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்)
தமிழில் ஒரு சில மறுவாசிப்பு/மீட்டுருவாக்க முயற்சிகள்:
(இது முழுமையான பட்டியல் இல்லை.ஒரு சில சான்றுகள் மட்டுமே)
புதுமைப்பித்தன்;சாப விமோசனம்,அகல்யா,அன்றிரவு
எம்.வி.வெங்கட்ராம்;நித்யகன்னி
வ.ரா.; கோதைத்தீவு நாவலில் சில பகுதிகள்
ஞானி;கல்லிகை(நெடுங்கவிதை)
ஞானி;கல்லிகை(நெடுங்கவிதை)
இந்திரா பார்த்தசாரதி; கொங்கைத் தீ (நாடகம்)
ராஜம்கிருஷ்ணன்;வனதேவியின் மைந்தர்கள்
அருணன்;பூருவம்சம்,சரயூ
ராஜம்கிருஷ்ணன்;வனதேவியின் மைந்தர்கள்
அருணன்;பூருவம்சம்,சரயூ
அம்பை;அடவி(ஒரு சில பகுதிகள்)
பாவண்ணன்;சாபம், மற்றும் ஏழுலட்சம் வரிகள் என்னும் தொகுப்பில் பல சிறுகதைகள்
ஜெயமோகன்;கொற்றவை
எஸ்.ராமகிருஷ்ணன்;உபபாண்டவம்
பகல் விளையாட்டு(சிறுகதை)
ஜெயமோகன்;கொற்றவை
எஸ்.ராமகிருஷ்ணன்;உபபாண்டவம்
பகல் விளையாட்டு(சிறுகதை)
இந்த வலைத் தளத்திலுள்ள எனது மீட்டுருவாக்கக் கதைகள்;
1 கருத்து :
ஒரு வேண்டுகோள்.குற்றமும் தனடனையும் மற்றும் அசடனை மொழிபெயர்த்தது போல மற்ற தாஸ்தாஎவ்ச்கி படைப்புகளையும் மொழி பெயர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .நன்றி
கருத்துரையிடுக