துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.3.11

சர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....


மகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்று என்பதை விடவும்
அனுசரிப்புக்கு உரியது ( to be observed rather than to be celebrated  ) என்பதே பொருத்தமாகப் படுகிறது..

பொதுவான தளத்தில் மதிப்பீடு செய்கையில் மகளிரின் நிலை ,முன்னேற்றம் பெற்று விட்டிருப்பது உண்மைதான் என்றபோதும்
இன்னும் தொடர்ந்து ஏற்பட்டாக வேண்டிய சமூக மனநிலை மாற்றங்கள் பற்றிய சில கருத்துக்கள்..இந்நாளின் பகிர்வுக்கு!
(இவற்றை எதிர்மறைச் சிந்தனைகள் என்று கொள்ளாமல்,.
அடுத்தடுத்த வளர்ச்சி நோக்கிய படிநிலைகள் குறித்த கரிசனமான முன் வைப்புக்கள் என்றே கருதிக்கட்டுரையை அணுக வேண்டுமெனக் கோருகிறேன்)

இந்தியப் பெண்கள் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டதாகவும்,.சாதனைச் சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரமையைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகையாகவே ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில், பாலின வேறுபாடு கடந்த சமத்துவத்தைப் பெண்கள் அனைத்துத் தளங்களிலும் பெற்றுவிட்டார்களா என்ற கேள்வியை விவாதத்திற்கு உட்படுத்த முனைகையில்...சில கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையும் காணமுடியும்.

பொதுவான மக்கள் வழக்கில் ’அந்தஸ்து’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் தகுதிப்பாடு ,
கீழ்க்காணும் இரண்டு காரணங்களைஅடிப்படையாக வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.
1. அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு
( human status )
2.பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு(material status )
இவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும்,நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.

இன்றளவும் மரபு வழிப்பட்டதாகவே இருந்து வரும் இந்திய சமூக அமைப்பில் - பழைய மரபுகளில் சில நெகிழ்வுப் போக்குகள் விளைந்திருந்தபோதும் , அவற்றை அடியோடு கைவிடத் தயங்கும் மனப்பான்மையும் நிலவுவது வெளிப்படை.
பழைய மரபுகளுக்கும், புதிய மாற்றங்களுக்கும் இடையே தோன்றும் சிக்கல்கள் புதிது புதிதான போராட்டங்களையும்,குழப்பங்களையும் தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

கல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது.அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.
வெளியே சென்று பொருள் ஈட்டும் செயல்,மனைவியின் மதிப்பை மேல்நிலைஆக்கமாக உயர்த்துகிறது; ஆனால் வீட்டு வேலைகளைக் கணவன் செய்வதோ கீழ்நிலை ஆக்கமாக..மதிப்புக்குறைவானதாகவே சமூகத்தால் கருதப்படுகிறது. இதனால் புறக்கடமைகளை ஆணுடன் பகிர்ந்து கொள்ளப்பெண் முன் வருவது போல இல்லக்கடமைகளை அவளுடன் பகிர்ந்து கொள்ளப்பெரும்பாலான ஆடவர்கள் முன் வருவதில்லை. இதனால் பெண் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமைகள் அவளை அமைதி இழக்கச் செய்கின்றன.

பெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ,தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர்
‘’பொருளாதார வசதியுள்ளபெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு’’
என்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார்.இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும்,அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி ,உயர் பொறுப்பில் பணியாற்றுதல் போன்றவை கூடக் கருத்தில்
கொள்ளப்படாமல் பெண்களை இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதுவதையும்,பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதையும் எல்லா மட்டங்களிலும் காண முடிகிறது.
இந்தியஆட்சிப்பணி(IAS)போன்ற மிக உயர்ந்த அரசுப் பதவிகளில்
அமர்ந்திருக்கும்பெண்களும் கூடப் பாலின அடையாளங்களாகக்
கீழ்மைப்படுத்தப்பட்டு வருவதற்கு ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரி,காவல் துறை அதிகாரியான கே.பி.எஸ்.கில் மீது தொடர்ந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு.பெரும் பொறுப்புக்களில் உள்ள பெண்களே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சூழலில் முறைப்படுத்தப்படாத பணிகளில்..கட்டிடக்கூலிகளாகவும்,விவசாயக்கூலிகளாகவும்,வீட்டுப் பணியாளர்களாகவும் செயல்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கணக்கற்ற பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தடையின்றிக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை; அது அவர்களது வாழ்வில் ஓர் அன்றாடநிகழ்வாகவே கூட ஆகிப் போயிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களாகவும்,அறிவிப்பாளர்களாகவும் வேலை செய்யும் பெண்கள் அதே துறையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களைப்போலத் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படாமல் அழகை அளவுகோலாக வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிப்பிட்ட (மிகக் குறைவான ) வயது வரம்பு அவர்களது பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது , மனதில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி.

இந்திய வெளியுறவுத் துறையின் உயர் பதவியில் ( IFS )இருந்த முத்தம்மா என்னும் பெண் அதிகாரிக்கு, அவர் திருமணமானவர் என்ற ஒரே காரணத்தால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது.அது தொடர்பான வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையர் வழங்கிய தீர்ப்பில்
‘’திருமணமான ஆணுக்குள்ள உரிமை ,திருமணமான பெண்ணுக்கு இல்லை என்ற அயல்நாட்டுப் பணி விதி முறையே இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது ‘’ என்ற தெளிவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

கலைத் துறைகளில் தாங்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும்,மன அழுத்தங்களையும் மீறிய வண்ணம் சாதனை படைத்து வரும் பெண்கள் ஒரு புறம் இருந்தபோதும் இத்துறை சார்ந்த படைப்புக்கள் , பெண்ணின் தனி மனித இயல்புகளை விடவும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிக் கூறுகளையே முதன்மைப்படுத்திப் பால் அடையாளப் பொருளாக அவளைக்காட்டுவதிலேயே கருத்துச் செலுத்தி வருகின்றன.குறிப்பாகப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகம் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுகிறது;அல்லது அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய ஒரு அபலையாகச் சித்திரிக்கிறது. சிந்தனைத் திறன் அதிகம் பெற்றிராத கேலிப்பொருளாகப் பெண்ணைக் காட்டுமளவுக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் வாய்க்கப்பெற்ற பெண்ணைக் காட்டுவதில் இக் கலை வடிவத்துக்கு அக்கறையில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையான சித்திரிப்புக்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் ஆக்கிரமிப்பது ஒரு புறம் இருக்க இத் துறையில் படைப்பாளிகளாக இருக்கும் பெண்களும் மிகக் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.
‘’ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்குச் சமமாகவோ கொஞ்சம் சிறப்பாகவோ பெண் வந்து விட்டால் அவனுக்குப் பயம் வந்து விடுகிறது’’
என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் நடிகையும்,இயக்குநருமான சுகாசினி.

இலக்கியத் துறையில் ஈடுபடும் பெண்கள் ‘பெண் எழுத்தாளர்’ எனத் தனிப்பிரிவினராக வகைப்படுத்தப்படுவதையும் சில வேளைகளில் இரண்டாந்தர எழுத்தாளர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் கூடக் காண முடிகிறது.
இலக்கியத்தில் ஆணின் வாழ்வு எழுதப்படுகையில் அது மானுடம் தழுவிய பிரதிபலிப்பு என ஏற்கப்படுகிறது.அதே வேளையில் பெண் தனது அனுபவங்களை,பிரச்சினைகளை எழுத்தாக வெளிப்படுத்துகையில் அது பெண்கள் சார்ந்த குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டுமே உரியதாக மதிப்பிடப்படுகிறதேயன்றி,அதுவும் கூட மானுட அக்கறையின் மீதான வெளிப்பாடுதான் என்ற எண்ணம் எவருக்கும் எழுவதில்லை.

சமயக் களம் (அது எந்தச் சமயமாயினும்) என்பது, அன்று முதல் இன்று வரையில் பாலின வேறுபாடுகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிறுவனமாகவே நீடித்து வருகிறது. செவ்வாடை புனைந்து சக்தியின் வடிவங்களாகச் சமய வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களிலும் ‘சிவப்பு’ என்ற குறியீடு , இன மறு உற்பத்தியின் அடையாளமாக வாரிசைப் பெற்றுத்தரும் செழுமை பெற்றவளாய் அதற்குரிய தகுதிப்பாட்டோடு பெண் இருப்பதையே சுட்டுகிறது.

தந்தை வழிப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணுக்குச் சாதகமான சமூக மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது அவர்களுக்கு அரசியல் உரிமை தருவதன் வாயிலாகவே சாத்தியமாகும் என்று சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். எனினும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் சென்ற பின்பும் தங்களது குடும்பப் பின்புலங்களால் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில பெண் அரசியல்வாதிகள் தவிர ...அரசியல் களத்தில் பெண்ணின் பங்கேற்புக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.
ஆட்சியிலுள்ள ஆண்கள் ஊழல் செய்கையில் தனி மனிதர்களாக மட்டுமே அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம், பெண் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது மட்டும் பாலின அடையாளத்தோடு கூடிய விமரிசனங்களைக் கூசாமல் முன் வைக்கத் தவறுவதில்லை.

பெண் என்பவள் இரண்டாம் பாலினம் என்ற உணர்வு , நடப்பியலில் காலங்காலமாக..வெகு ஆழமாக வேர் பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.
ஆணிடம் மட்டுமன்றிப் பெண்ணின் உள்ளத்திலும் தலைமுறை தலைமுறையாய் நிலைப்பட்டுப் போயிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலையும்,அது சார்ந்த மூளைச் சலவைகளையும் ஒழிக்க உணர்ச்சி பூர்வமான தொடர்ச்சியான பன்முனைத் தாக்குதல்கள் தேவைப்படுவதை மனத் தடைகள் இன்றி உள் வாங்கிக் கொள்ளும் மன நிலை இரு பாலார்க்குமே வாய்த்தாக வேண்டும்.
‘’ஆணின் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்ணுக்கு உண்மையான விடுதலையை அளித்து விட முடியாது’’
என்றார் பெரியார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் மீது விதிக்கப்பட்ட நடைமுறை மரபுகளையும்,வாழ்க்கை முறைகளையும் வாய் திறக்காமல் ஏற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே தியாகச் சிலுவைகளில் அறைந்து கொள்ளும் மனப் போக்கிலிருந்து பெண்கள் விடுபடும்போதும்,
பால் அடையாளமாக மட்டுமே இனங்காட்டப்படுவதையும்,
பாலின சமத்துவம் மறுக்கப்படுவதையும்
விழிப்புணர்வோடு எதிர்க்கும் எழுச்சி அவர்களிடம் முழுமையடையும்போதும்தான் உண்மையான விடுதலை என்பது பெண்களுக்குச் சாத்தியமாகும்.
அந்த நாளின் விடியலிலேயே மகளிர் தினம் என்பது பூரணத்துவம் பெற்றுப் பொலியவும் கூடும்.

பார்வைக்கு;இத் தளத்திலுள்ள பெண்ணியக் கட்டுரைகள் சில..



1 கருத்து :

Balachandran சொன்னது…

Very thought provoking, balanced and constructive views. Let us all rededicate ourselves for the emancipation of women in whatever way possible by each one of us.
Balachandran

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....