இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவரும், எழுத்தாளருமான கொல்கத்தாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் 21 கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருப்பது புதிய காற்று - ஒப்பிலக்கியப் பார்வைகள் என்னும் அவரது நூல். வங்காளம், இந்தி, ஆங்கில மொழிகளிலிருந்து தமிழ் - தமிழிலிருந்து - ஆங்கிலம், வங்காளம் - வங்காளத்திலிருந்து ஆங்கிலம் என மிகச் செழுமையான மொழியாக்கப் பின்புலத்தைக் கொண்டிருப்பதோடு வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை, சிறுகதைத் தொகுப்புக்கள் எனப் பலவகைப்பட்ட ஆக்கங்களை உருவாக்கியுள்ள திரு கிருஷ்ணமூர்த்தியின் பரந்துபட்ட வாசிப்பையும், அனுபவத் தெறிப்புக்களையும் நூலில்லுள்ள பல கட்டுரைகளில் காண முடிகிறது.
தனது வாழ்வின் அரை நூற்றாண்டுக் காலகட்டத்தை வங்கத்தில் செலவிட்டிருப்பதோடு அம் மொழியில் இலக்கியப் புலமையும் பெற்றவர் நூலாசிரியர் என்பதால் வங்கப் படைப்பாளிகளான இரவீந்திரர், சரத்சந்திரர், மகாஸ்வேதா தேவி, புரட்சிக்கவி நஜ்ருல் ஆகியோரின் வாழ்விலும், படைப்பிலும் பொது வாசகர்களின் கவனத்திற்கு அதிகம் வந்திராத பல தகவல்களை அவரால் முன்வைக்க முடிந்திருப்பது நூலின் தகுதியை மேம்படுத்துகிறது.
தாகூர் பற்றிய மூன்று கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ள போதும் மூன்றும் அவரது வெவ்வேறு பரிமாணங்களை விளக்கும் முறையில் அமைந்திருக்கின்றன. குழந்தையைக் குழந்தையாக இருக்கவிடாத சமூக அவலத்தால் தாகூரின் இளமைப் பருவத்தில் அவர் பெற நேர்ந்த வடுக்கள், ஓரளவு நாம் அறிந்திருப்பவைதான் என்றாலும் அது தொடர்பான மேலதிகமான இன்னும் சில செய்திகளையும் முன் வைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
குமார சம்பவத்தில் பொருள் விளங்காமல் ஒரு சுலோகத்தைப் படித்தபோது உற்சாகமும், குதூகலமும் ததும்பி வழிந்த தாகூரின் குழந்தை உள்ளம் அதே பகுதிக்கான பொருளை ஒரு பண்டிதர் வழி அறிய நேர்ந்தபோது தனது பிள்ளைத்தனமான கற்பனை உலகம் சிதறிப் போனதால் துன்பத்தில் துவண்டு போகிறது.
பாரதி - வங்கப் புரட்சிக்கவி நஜ்ருல், பாரதி - இரவீந்திரர் ஆகிய ஒப்பீடுகளை அந்தந்த ஆளுமைகளின் குணவிசேடங்கள், அவரவரின் படைப்புச் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனத் தேர்ச்சியான ஆய்வுப் போக்குடன் திரு கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தபோதும் அத்தகைய அழகியல் மற்றும் உள்ளடக்க ஒப்பீடுகளை மட்டுமே அளவுகோல்களாக்கி ஒருவர், அடுத்தவருக்கு இணையானவர் என்றோ, உயர்வானவர் என்றோ ஒரு முடிவுக்கு வருவது எத்தனை அபத்தமானது என்ற உண்மையையும் புரிய வைக்க அவர் தவறவில்லை.
“பாரதி ஒரு மகாகவி; தமிழன் என்ற முறையில் எனக்கும் அவர் பற்றிப் பெருமைதான்.... ஆனால் பாரதி இரவீந்திரருக்கு இணையானவர் என்று சொல்ல மாட்டேன்.’’ என்று வெளிப்படையாகவும், துணிவாகவும் வெளிப்படும் அவரது சொற்கள் நம்மைக் கணநேர அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டாலும்.
“இரவீந்திரருக்கு இணையாகக் கூறப்பட்டால் தான் நமது கவி பாரதிக்குப் பெருமை என்று நாம் நினைக்கத் தேவை இல்லை.’’ எனக் கட்டுரை முடிவில் அவர் வைக்கும் முத்தாய்ப்பு அவரது கருத்தைத் தெளிவாக்கி விடுவதோடு - ஒப்பீடுகள் என்பவை, இலக்கியப் புரிதலுக்கு மட்டுமேயானவை, தனித் தன்மை பெற்றிருக்கும் படைப்பாளுமைகளுக்கானவை அல்ல என்பதையும் பொட்டில் அறைந்தாற்போலப் புரிய வைத்து விடுகின்றன.
பாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ, ஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதை விளக்கும் ஆசிரியர், அப் பரிசு பெறத் தகுதியானவராக மட்டும் இல்லாமல் அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும் கூடவே எடுத்துக் காட்டி விளக்கம் தருகிறார்.
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வடமொழித் தேர்ச்சி, வால்மீகியின் உவமை நயங்களை விரிவாகச் சொல்லிக் கொண்டு போக அவருக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது; அந்த எல்லையோடு நின்று விடாமல் தனது கூரிய கண்ணோட்டத்தால் அவற்றுக்குப் புதுப் பரிமாணங்களை ஏற்றவும் அவர் தவறவில்லை என்பது அவரது சமூக விமரிசனப் பார்வைக்குச் சான்றாகிறது.
வால்மீகி, காளிதாசன், இளங்கோ ஆகியோரின் பாதிப்புக்கள் கம்பனிடம் தென்படுவதைச் சுட்டிக் காட்டும் ‘கம்பன் வாங்கிய கடன்கள்’ என்னும் கட்டுரை, மணிமுடி தரியென்ற போதும், மரவுரி அணியென்றபோதும் அலர்ந்த செந்தாமரையினை விஞ்சி நிற்கும் இராமனின் முகச் செவ்வியைக் காட்டும் கம்பனின் கவிதை, தன் முன்னோடிகளைக் கடந்து செல்வதையும் சுட்டத் தவறவில்லை. நாட்டுப்புறக்கதை வடிவங்களின் ஒருங்கிணைப்பாய் உருவாகியிருக்கும் கிருத்திவாசரின் வங்க மொழி ராமாயணம் பற்றிய கட்டுரை பிற இராமாயணங்களில் இலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல சுவையான செய்திகளையும் சம்பவங்களையும் உள்ளடக்கி இருப்பதைச் சுவாரசியமாக விவரித்துக் கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி. தவறவிடக் கூடாத அருமையான கட்டுரைகளில் அதுவும் ஒன்று.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘யமுனைக் கரையில் ஒரு மாலை நேரம்’, பிற கட்டுரைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு, மகாபாரதக் கதையை - அதில் இடம் பெறும் பாத்திரக் குறைபாடுகளை - அதன் சிருஷ்டிகர்த்தாவான வியாசனின் பார்வையிலிருந்து ஒரு சிறுகதை போல மறுவாசிப்புச் செய்கிறது.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழி பெயர்ப்புத் துறையில் சிறப்பான பல முத்திரைகளைப் பதித்திருப்பவரென்பதால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் மற்றும் மொழிபெயர்ப்பில் சொற்கள், மொழி பற்றிச் சில சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் கூடுதல் கவனம் பெற உகந்தவையாகப் படுகின்றன. மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என இலக்கிய உலகில் நிலவும் சில தவறான கருத்துக்களுக்கு ஏற்ற மறுமொழியாகத் “தரமான மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல.... இரண்டாந்தர இலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது பெரிய தொண்டாகும்.’’ என விடையளிக்கிறார் அவர்.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘யமுனைக் கரையில் ஒரு மாலை நேரம்’, பிற கட்டுரைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு, மகாபாரதக் கதையை - அதில் இடம் பெறும் பாத்திரக் குறைபாடுகளை - அதன் சிருஷ்டிகர்த்தாவான வியாசனின் பார்வையிலிருந்து ஒரு சிறுகதை போல மறுவாசிப்புச் செய்கிறது.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழி பெயர்ப்புத் துறையில் சிறப்பான பல முத்திரைகளைப் பதித்திருப்பவரென்பதால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் மற்றும் மொழிபெயர்ப்பில் சொற்கள், மொழி பற்றிச் சில சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் கூடுதல் கவனம் பெற உகந்தவையாகப் படுகின்றன. மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என இலக்கிய உலகில் நிலவும் சில தவறான கருத்துக்களுக்கு ஏற்ற மறுமொழியாகத் “தரமான மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல.... இரண்டாந்தர இலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது பெரிய தொண்டாகும்.’’ என விடையளிக்கிறார் அவர்.
மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்’’ என்ற அதிர்ச்சி தரும் இத்தாலியப் பழமொழி ஒன்றை எடுத்துக்காட்டி - எவ்வளவுதான் மூலப்படைப்புக்கு உண்மையாக ஒருவன் மொழிபெயர்த்தாலும் அது 100 சதம் உண்மையாக இருக்காது என்பதாலேயே மொழிபெயர்ப்பவன் துரோகி போலக் காட்சியளிக்கிறான் என்றும்.. ஆனாலும் சில துரோகங்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகி விடுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் அவர்.
துகிலுரி படலத்தில் துரியோதனன் திரெளபதியை என் தொடை மேல் வந்து உட்கார் என்கிறான்.... அந்தக் காலத்து வங்காள வாசகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? ஆகவே மொழிபெயர்ப்பில் தொடையை முழங்காலாக மாற்றி விட்டார் மொழிபெயர்ப்பாளர் என இவர் குறிப்பிடுகையில் தொடையில் சீதையை அமர்த்தித் தூக்கிச் சென்ற வால்மீகியின் இராவணனும், அது, தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறானதென்பதால் பர்ணசாலையோடு அவளை அகழ்ந்து சென்ற கம்பனின் இராவணனும் - கம்பன் காவியம் தழுவல்தான் என்றாலும் கூட - மனதுக்குள் ஒரு கணம் வந்து போகிறார்கள்.
இத்தாலிய நாவல் “ஃபாண்டமாரா, ஆஸ்திரிய நாவலான “இரக்கம் ஜாக்கிரதை’’ ஆகிய இரண்டைத் தவிர நூலிலுள்ள பிற கட்டுரைகள், இந்திய மொழி ஒப்பிலக்கியம் சார்ந்தவையே. உலக இலக்கியம் குறித்த சில அயலகக் கட்டுரைகளும் இவற்றுடன் இணைத்துத் தரப்பட்டிருந்தால் நூலின் அழுத்தம் இன்னும் கூடியிருக்கும்.
கி.வா.ஜ., தனுஷ்கோடி ராமசாமி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கட்டுரைகள் நெகிழ்ச்சி தரும் வகையில் இருந்தபோதும் அக் குறிப்புகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தன் வரலாற்று நூலில் முன்பே இடம் பெற்று விட்டதாலும்,பொதுத் தலைப்பிலிருந்து அந்நியப்பட்டிருப்பதாலும் அவற்றை இந்நூலில் தவிர்த்திருக்கலாம். பின்னிணைப்பாக இடம் பெறும் கிருஷ்ணமூர்த்தியின் வடக்கு வாசல் நேர்காணலும், அவரது வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த பேராசிரியர் நாச்சிமுத்துவின் மதிப்புரையும், நூலாசிரியரின் முழுமையான நூற்பட்டியலும் நூலின் உள்ளடக்கத்தோடு ஒருங்கிணைந்து கூடுதல் வலுச் சேர்த்திருக்கின்றன.
இந்திய இலக்கியத்தின் தொன்மை மற்றும் மேன்மையான உன்னத அழகுகளைத் தரிசிக்க விரும்புவோருக்கு ஒரு வாயிலாக அமையக் கூடிய தகுதி இந்நூலுக்கு உண்டு.
புதிய காற்று ஒப்பிலக்கியப் பார்வைகள்
சு.கிருஷ்ணமூர்த்தி
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு,
எம்.ஜி.ஆர்.நகர், சென்னை - 600078.
விலை ரூ.120/-
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு,
எம்.ஜி.ஆர்.நகர், சென்னை - 600078.
விலை ரூ.120/-
நன்றி;
கட்டுரையை வெளியிட்ட வடக்கு வாசல் (பிப் .2011)இதழுக்கு..
2 கருத்துகள் :
வாங்கிப் படிக்க வேண்டியது தான்; அறிமுகத்துக்கு நன்றி. பாரதி பாடல்கள் பற்றிய கருத்து ஏற்கமுடிகிறது. அவருடைய வசன கவிதைகளின் நுட்பத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன் - அதைக்கூட சரியாக மொழிபெயர்க்கவில்லையே என்ற வருத்தம் அவ்வப்போது தோன்றியதுண்டு (நான் படித்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் பாடப்புத்தகங்களே)
இலக்கிய உலகில் வாங்கி படிக்கவேண்டிய புத்தகம். தங்களின் புத்தகப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக