துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.3.11

தினமணி கதிரில் என் நேர்காணல்...


இன்று - 6/3/2011 தினமணி கதிரில் வெளியாகியிருக்கும் எனது நேர்காணல்....

ஓய்வின்றி உழைப்பது பிடித்திருக்கிறது!

First Published : 06 Mar 2011 12:00:00 AM IST


எப்படா வேலையிலிருந்து ஓய்வு பெறுவோம், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்று நினைப்பவர்கள் மத்தியில்
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் மிக உற்சாகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

அதுவும் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் கடினமான பணியைச் செய்து வருகிறார். இதற்கு முன்பு அவர் பெரிய அளவுக்கு வேறு எந்த மொழிபெயர்ப்பு பணிகளும்  செய்ததில்லை. இன்று அவர் மொழிபெயர்த்த நூல் பலருடைய பாராட்டுகளைப் பெற்று தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் அவருக்கு என்று ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' என்ற மிகப் பெரிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எம்.ஏ.சுசீலாவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எம்.ஏ.சுசீலா தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

""எனது சொந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழா, தமிழில் எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. என்னுடைய அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியை. வீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். இளமையிலேயே படிப்பதில் ஆர்வம். புத்தகங்களுடனான உறவு அதிகம்.

கல்லூரியில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்த நான், பின்பு தமிழில் முதுகலை பயில நினைத்ததற்குக் காரணம் எனது இந்தப் பின்னணியே. எம்.ஏ., தமிழ் முடித்தவுடன் மதுரை பாத்திமா கல்லூரியில் வேலை கிடைத்துவிட்டது. அப்புறம் எனது முனைவர் பட்ட படிப்பு எல்லாம் வேலை பார்த்துக் கொண்டே படித்ததுதான். ஆசிரியையாகப் பணிபுரிந்தாலும் படைப்பிலக்கியத்தின் மேல் நிறைய ஆர்வம்.

1979-இல் நான் எழுதிய முதல் சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இதுவரை 3 சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துவிட்டன. கட்டுரை நூல்கள் நான்கு வெளிவந்துவிட்டன. தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்திருக்கிறேன். 2007-ஆம் ஆண்டிலிருந்து வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதிலும் தொடர்ந்து பல்வேறு படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் பெருமையுடன்.
மொழிபெயர்ப்புப் பணிக்கு வந்ததெப்படி? என்று கேட்டோம்.

""நான் கல்லூரியில் 36 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தேன். எப்போதும் வேலை செய்து கொண்டு இருந்த எனக்கு, ஓய்வு வாழ்க்கை சகிக்க முடியாத வெறுமை உணர்வைத் தந்து கொண்டிருந்தது. மதுரை பாரதி புக் ஹவுசைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்னிடம் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்குத் தமிழைப் போலவே ஆங்கில மொழியிலும் ஆர்வம் அதிகம். மொழிபெயர்த்துப் பார்க்கலாமே என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் மொழி பெயர்க்க ஆரம்பித்தவுடன் தஸ்தயெவ்ஸ்கி என்னை முழுவதுமாக ஈர்த்துக் கொண்டார். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான அதை மொழிபெயர்க்கும்போது ஒவ்வொரு சொல்லையும் நன்றாக மனதில் வாங்கி அதன்பின்புதான் மொழிபெயர்த்தேன். ரஷ்யமொழி எனக்குத் தெரியாததால் மூலநூலுடன் மிகவும் நெருங்கியிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.

இதே "குற்றமும் தண்டனையும்' நாவலுக்கு நிறைய ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் இருக்கின்றன. நான் மொழிபெயர்க்கும்போது அவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து மொழிபெயர்த்தேன்'' என்ற அவரிடம், மொழிபெயர்ப்பது அவ்வளவு எளிதான பணியல்ல. ரஷ்ய மொழியின் மரபுத் தொடர்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது சிரமம் அல்லவா? என்று கேட்டோம்.

""இந்த நாவலை மொழிபெயர்க்கும்போது பொருளைப் புரிந்து கொள்வதில் நான் மிகுந்த கவனம் செலுத்தினேன். உரையாடல்களை மொழி பெயர்க்கும்போது வட்டாரத் தமிழைப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் வட்டாரத் தமிழ் பலவிதமாக இருக்கிறது. வேறுபடுகிறது. அதற்காகச் செந்தமிழிலும் உரையாடல்களை மொழிபெயர்க்கவில்லை.

நீங்கள் நினைக்கிற மாதிரி ரஷ்ய மரபுத் தொடர்களை மொழிபெயர்ப்பதில் அதிகச் சிரமம் எனக்கு ஏற்படவில்லை. "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்த போது எனக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. அடிப்படையான மனித உணர்வுகள் இங்கிருப்பதைப் போலவே ரஷ்யாவிலும் இருப்பதை அறிந்து வியந்தேன். மனிதர்களுக்கிடையிலான உறவுகள், அந்த உறவுகளால் ஏற்படக்கூடிய மனச் சிக்கல்கள் உலகம் முழுக்கப் பொதுவானவைதாம்.

குற்றமும் தண்டனையுமில் ஒருவன் ஒரு கொலையைச் செய்து விடுகிறான். அந்தக் குற்ற உணர்வு அவனைத் துரத்திக் கொண்டே வருகிறது. தாயின் மீது கொண்டுள்ள பாசத்தால் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதுகிறான். அவன் அதிகமாக அன்பு வைத்துள்ள அவனுடைய தங்கையின் வாழ்க்கை சீரழிவுக்கு உள்ளாகிவிடுகிறது. அது அவனை மிகவும் வருத்துகிறது. இப்படிப்பட்ட மனித உணர்வுகள் நமது நாட்டிலும் இருக்கின்றன.

இப்படி உலகம் முழுவதற்கும் பொதுவான உணர்வுகளை  வெளிப்படுத்தியதால்தான் "குற்றமும் தண்டனையும்' நாவல் உலக இலக்கிய வரிசையில் இடம் பிடித்துவிட்டது என்று கருதுகிறேன்.''
அந்த நாவலை மொழிபெயர்த்த பின்பு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி இருந்தன? என்றோம்.
""மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் அந்த மொழிபெயர்ப்பு பெற்றது.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கு.சின்னப்பபாரதி, கோணங்கி,  திலகவதி,லக்ஷ்மிமணிவண்ணன் போன்றோர் அதைப் படித்துவிட்டுப் பாராட்டினர். இது எனக்கு நிறைய ஊக்கத்தைக் கொடுத்தது. நேரடியாக ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்த்தால்தான் சிறப்பு என்று கூறி புறக்கணித்த ஒருசிலரைத் தவிர, பரவலாக எனக்குக் கிடைத்த பாராட்டுகள் நான் எதிர்பார்க்காதவை'' என்கிறார் சிரிப்புடன்.

படைப்பிலக்கியவாதியான நீங்கள் மொழிபெயர்ப்பாளராக மாறிவிட்டதற்காக வருத்தப்படவில்லையா? என்றோம்.
""எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது.  சொந்தமாகப் படைப்பதிலிருந்து விலகிப் போகிறோமோ என்ற ஐயம் இருந்தது. சொந்தப் படைப்பை எழுத தவமான மனநிலை அவசியம். மொழிபெயர்ப்பு என்பது அந்நிலையில் இல்லாமல் இளைப்பாறுதல் போன்றது. குற்றமும் தண்டனையும் மொழிபெயர்ப்பு வந்த பின்பு,  அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த பின்பு, மொழிபெயர்ப்பு பணி படைப்பிலக்கியப் பணியைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்று தோன்றியது.

எனவே தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட நினைத்த போது தஸ்தயெவ்ஸ்கியின் இன்னொரு நாவலான "இடியட்'டை மொழிபெயர்க்கச் சொன்னார் துரைப்பாண்டியன். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். இப்போது அந்தப் பணி நிறைவடைந்துவிட்டது. இது குற்றமும் தண்டனையும் நாவலை விட மிகப் பெரியது.

இதை யாரும் தமிழில் இதுவரை முழுவதுமாக மொழிபெயர்க்கவில்லை. மிகச் சிறிய அளவில் கதைச் சுருக்கம்போல் நீண்ட காலத்திற்கு முன்பு "அசடன்' என்ற பெயரில் ஒரு சிறு மொழிபெயர்ப்பு மட்டுமே வந்திருந்தது. நானும் அதே பெயரில் இந்த நாவலை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன்.'' என்ற அவரிடம், "இடியட்' என்றால் "முட்டாள்' என்றுதானே வரும்? என்று கேட்டோம்.
""இடியட் என்றால் முட்டாள்தான். ஆனால் இந்த நாவலில் வரும் கதாநாயகன் மிஷ்கின் என்ற இளவரசன் முட்டாளாக இல்லை.

எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே பார்க்கும் மனம் அவனுக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனை ஏமாற்றிவிடுகின்றனர். அவனுடன் பழகிய பல மனிதர்களுடனான அவனுடைய உறவும், அவர்களுடனான உணர்வுப் போராட்டமும் இந்த நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. எனவே "அசடன்' என்ற தலைப்புப் பொருத்தமாக இருக்கிறது.

இந்த நாவல் மிகப் பெரிய நாவல். நான்கு பாகங்களாக வெளிவர இருக்கிறது. பதிப்பாளர் முன்வெளியீட்டுத் திட்டம் எல்லாம் போட்டு இந்த நாவலைப் பரவலாக மக்களிடம் கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்'' என்கிறார். மதுரையில் பணிபுரிந்த நீங்கள் தில்லியில் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு பணி தவிர பொழுது எப்படிப் போகிறது? என்று கேட்டோம்.

""என் ஒரே மகள் மீனு பிரமோத் தில்லியில் மைய அரசின் சுங்கம் மற்றும் கலால் துறையில் கூடுதல் இயக்குநராக இருக்கிறார்.  எனவே அவருடன் இருக்கிறேன். பேரப் பிள்ளைகளைக் கொஞ்சிப் பொழுது போகிறது. தில்லி தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு இருக்கிறது. "வடக்கு வாசல்' இதழுடன் தொடர்பு இருக்கிறது. என்னுடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து "தேவந்தி' என்ற  பெயரில் "வடக்குவாசல்' புத்தகமாக வெளியிட இருக்கிறது. ஓய்வின்றி உழைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.


20 கருத்துகள் :

ராம்ஜி_யாஹூ சொன்னது…

இப்போதுதான் உங்கள் நேர்காணல் படித்தேன் கதிரில்

அருமை.

சுதர்ஷன் சொன்னது…

நேர்காணல் நன்று ..வாழ்த்துக்கள் :)

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மே !!! நேர்காணல் இரசிக்கும்படியாக இருந்தது

குமரி எஸ். நீலகண்டன் சொன்னது…

அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உங்களது இலக்கியப் பணிகளில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்

Unknown சொன்னது…

அம்மா ,
வணங்குகிறேன் - தங்களின் அறிவைக் கண்டு.
வியக்கிறேன் - தங்களின் உழைப்பைக் கண்டு.
கற்றுக்கொள்கிறேன் - தங்களைக் கண்டு.
அன்புடன்
தேவராஜ் விட்டலன்

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

அருமை.. வாழ்த்துக்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

(நண்பர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்.எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பெற்றது)

S.i. Sulthan
தினமணிகதிரில் பேட்டி மிக அருமை சுசிலாம்மா.
வாழ்த்துகள்

Prakash Shankaran
சுசீலாம்மா, பேட்டியில் எனக்கு புது தகவல் உங்கள் சிறுகதைத் தொகுப்பு. நீங்கள் விரும்பினால் ஏதாவது ஒரு கதையையாவது இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன். படிக்க ஆவலாயிருக்கிறேன். பேட்டியில் photoவும் அருமையாக வந்துள்ளது, குறிப்பாக உங்கள் பேரக்குழந்தைகள் .
பிரகாஷ்.

Madhan
You are truly Inspiring Suseela Mam! Thks a lot :

Ramachandra Sarma
சிறுகதை தொகுப்பு எழுதியிருப்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. மன்னிக்க.
வாழ்த்துக்கள் மேடம்.
நன்றி
ராமசந்த்ர சர்மா

kamaraj mani
அன்புள்ள சுசீலா அம்மா,
வணக்கம் & வாழ்த்துக்கள்
பேரார்வமிக்க ஆளுமைகளின் பட்டியலில் உங்களுக்கு அழியா இடம் உண்டு.
தமிழ்சங்கத்தில் (நாஞ்சில் நாடான் விழாவில்) தங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
அன்புடன்
காமராஜ்மணி

ஆயிஷா சொன்னது…

நேர்காணல் அருமை. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

நினைக்கவே பெருமையாய் இருக்கிறது அம்மா தினமணிக்கதிரில் தங்களின் நேர்காணல் படித்தேன். மிக அருமை.
மொழிபெயர்ப்பு என்பது சாதாரண வேலையல்ல. ருஷ்ய இலக்கியங்களை தமிழில் படிக்க ஆரம்பித்து இலக்கிய வாசிப்புக்கு வந்த பலரில் நானும் ஒருவன். சீக்கிரம் உங்கள் மொழியில் அசடனை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

Unknown சொன்னது…

தினமணியிலும் தங்களது " ஓய்வின்றி உழைப்பது பிடித்திருக்கிறது"
என்ற கட்டுரையைப் படித்தேன். ரஷ்ய மொழி பெயர்ப்பு நூலான குற்றமும் தண்டனையும்
பற்றியும் சொல்லி இருந்தீர்கள். மிக நன்றாக இருந்தது.அந்த நாவலைப் படிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் அம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

உங்கள் முயற்சியும் உழைப்பும்.. அனைவருக்கும் உதாரணமாக இருக்கின்றது.

இளங்கோ சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா

R. Gopi சொன்னது…

மதுரை செல்லும்போதோ, சென்னை செல்லும்போதோ இந்த நூல்களை அவசியம் வாங்கிவிடுகிறேன்.

அடுத்ததாக கரமசாவ் சகோதரர்கள் நாவலையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டா?

பாச மலர் / Paasa Malar சொன்னது…

தமிழ்ப்பணிக்கும், நேர்காணலுக்கும் வாழ்த்துகள்...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நண்பர்களுக்கு நன்றி.
கரமசோவை ஏற்கனவே ஒருவர் செய்து கொண்டிருக்கிறார் கோபி.

suneel krishnan சொன்னது…

பெருமையாக உள்ளது அம்மா :) வாழ்த்துக்கள் ...

விக்னேஷ்வரி சொன்னது…

உங்களைப் பார்த்து கற்க நிறைய உள்ளது. உங்கள் தொடர்பு கிடைத்ததில் மகிழ்கிறேன் அம்மா.

Meyyammai சொன்னது…

Amma, enjoyed your interview. All the very best for your endeavours. What a small world!!!

Meyyammai

Meyyammai சொன்னது…

amma, enjoyed your interview. All the very best for all your endeavours.

Meyyammai

பெயரில்லா சொன்னது…

எவ்வளவு உற்சாகமாக பதில் அளித்துள்ளீர்கள்,ஆச்சர்யம் சுசீலம்மா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....