துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.3.15

சிக்கிமை நோக்கி....-4[பாக்தோக்ரா வழியே..]

எவரெஸ்ட் தரிசனம்

ஃபிப். 6 ஆம் தேதி காலையில் கண்விழித்தபோதே அன்று காங்க்டாக் செல்லப்போகும் குதூகல உணர்வு.

காலைத் தேநீர் அறைக்கு வருவது போலத் தெரியவில்லை;காலை 9 30க்குள் விமானநிலையத்தில் இருக்கவேண்டுமென்பதால் 8 மணிக்கு நேற்று காரோட்டி வந்த தாக்குரிடமே சொல்லி வைத்திருந்தேன்.குளித்துத் தயாராகிக் கீழே சிற்றுண்டி கிடைக்கக்கூடுமா என்று பார்க்க இறங்கினேன்.மணி 7 30தான் ஆகியிருந்தது. 

வெளியூர்களில் விடியும் காலைப்பொழுதுகளே காலை நடைக்கு உரியவை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எத்தனை முயன்றாலும் நாம் நிலையாக வசித்து வரும் ஊர்களில் காலை நடையைக் கைக்கொள்ள எனக்கு அதிகம் முடிவதே  இல்லை. அடுத்துச்செய்வதற்குக் காத்திருக்கும் கடமைகள் பொறுப்புக்கள் என்று எதுவுமில்லை என்பதும் புதிய ஊரை முடிந்த மட்டும் முடிந்த நேரங்களிலெல்லாம் காணத் துடிக்கும் ஆர்வமும் நிலையாகவசிக்கும் ஊர்களை விட வெளியூர்களில் இருக்கும்போது நம்மைக் காலைநடைக்கு உந்தும் சக்திகள்.

விடுதியிருந்த வீதி ஒரே போக்கில் நீண்டு செலும் மைய வீதிகளில் ஒன்றாக இருந்ததால் குறிப்பிட்ட அடையாளம் வைத்துக்கொண்டபின் அது இருந்த பக்கத்திலேயே சிறிது தூரம் நடந்து சென்றேன். தேநீர் வியாபாரம் சூடுபிடித்துக்கொண்டிருக்க காலை காஃபி பருகாத என்னையும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.பிளாஸ்டிக் மற்றும் காகிதக்கோப்பைகளை விட சுத்தமான மிகச்சிறிய மண்குப்பிகளில் 4 ரூபாய்க்குத் தேநீர் கிடைக்கிறது  ஆனால்,மண்கோப்பைத் தேநீரில் மூன்று குப்பி ஊற்றினால் மட்டுமே நம்மூர் கண்ணாடி டம்ளர்களை நிரப்ப முடியும்.[தில்லியில் மண்கோப்பைகளில் தயிர், லஸ்ஸி அருந்துவது போல இங்கே தேநீர்; குடித்து முடிந்ததும் அந்தக் கோப்பைகளை அப்படியே வீசி எறிந்து உடைத்திருப்பதும்,அந்தத் துண்டுகள் வீதியில் சிதறிக்கிடப்பதும் மட்டும்  பார்க்க சகிக்கவில்லை]




காலை நடையை சிக்னலோடு முடித்துவிட்டுத் திரும்பி விட எண்ணிய என் கண்களில் வலப்புறம் திரும்பும் வீதியின் பெயர்ப்பலகை பட்டது. 


ஷேக்ஸ்பியர் தெரு என்ற பெயர் கொண்ட அந்தத் தெருவில் சற்றுதூரம் நடந்தபின் நடைபாதையில் ஷேக்ஸ்பியரின் உருவத்தோடு ஒரு சிறு கல்வெட்டு; முதலில் தியேட்டர் சாலை [நாடக வீதி] என்று இருந்த பெயரை ஷேக்ஸ்பியரின் 4ஆம் நூற்றாண்டை ஒட்டி இப்படி மாற்றியதான ஒரு குறிப்பும் கூடவே. [சென்னையின் அவ்வை ஷண்முகம் சாலை நினைவுக்கு வந்தது. அது, அவ்வை வேடம் தரித்து நாடகமே வாழ்வெனக்கொண்டிருந்த டி கே ஷண்முகம் அவர்களுக்கு -அந்த மகத்தான கலைஞருக்கு ஒரு அழியாத நினைவுச்சின்னம் அல்லவா?] 




கலையும் இலக்கியமும் கொல்கத்தாவின் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருப்பதை அசை போட்டபடி விடுதிக்குத் திரும்பி அதன் முன் பகுதியில் இருந்த உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை [அதற்கான டோக்கன் அறைக்கு செய்தித் தாளோடு காலை எழுந்ததுமே வந்திருந்தது] முடித்துக்கொண்டேன்; அவரவராகப் பரிமாறிக்கொள்ளும் பஃபே
சிற்றுண்டி வகைகளில் வழக்கமான ரொட்டி ஜாம் பழஜூஸ் இவற்றுடன் பூரி உருளையும் இருந்தது; சற்று அதிகப்படியான காலை உணவுதான் என்றாலும் ஓரளவு அதைச்சாப்பிட்டுக்கொண்டதாலேயே மதியச்சாப்பாட்டை அன்று தவற விட நேர்ந்தபோது சமாளித்துக்கொள்ள முடிந்தது.

நேற்றைய பழக்கத்தில் ஓட்டுநர் தாக்குர் வந்து காத்திருக்க காலை 9 15 க்குக் கொல்கத்தா விமான நிலையம்; வழக்கமான சோதனைகள் முடிந்து பாக்தோக்ரா செல்லும் குறிப்பிட்ட விமானத்துக்கான நுழைவாயில் அருகே 10 மணிக்கே வந்தாயிற்று. அரை மணிக்கு மேலாகியும் அறிவிப்பு வந்தபாடில்லை; விமானம் கிளம்பவேண்டிய 10 45 மணியை ஒட்டி பாக்தோக்ராவின் பருவநிலை காரணமாக விமானம் தாமதம் என்ற அறிவிப்பு. தொடர்ந்து அதே காரணத்தால் புறப்பாட்டைத் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்று ஒரு வழியாகப் பகல் 12 30க்கு விமானம் கிளம்பியது. மதுரையிலிருந்து சென்னை செல்வதைப்போல மிகவும் சுருக்கமான 45,50 நிமிடப்பயணம்;

பாக்தோக்ராவை நெருங்குவதற்குச் சற்று முன்பு ’’இடப்புற இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் எவரெஸ்ட் சிகரத்தையும் வலப்பக்கம் உட்கார்ந்திருப்பவர்கள் கஞ்சன் ஜங்காவையும் இப்போது ஓரளவு காணலாம்’’ என்று  ஒலித்தது விமான ஓட்டியின் குரல். எப்போதும் ஜன்னலோர இருக்கையைக் கேட்டு வாங்கும் எனக்கு ,இன்றைக்கு அது வாய்க்காமல் போனது; இடப்புறம் மூன்றாவதாக உட்கார்ந்திருந்தாலும் தலையையும் கழுத்தையும் முன்னே நீட்டி சின்னதொரு மின்னலாய்ப் பளிச்சிட்ட எவரெஸ்டைக் காமராவிலும் பதிந்து கொள்ள நான் தவறவில்லை. ஜன்னல் வழி எக்கிப்பிடித்து காமராவில் பதிவது கடினமாக இருந்ததே ஒழிய அதில் பதிவாகி இருப்பதை விட எவரெஸ்டின் காட்சி அற்புதமாக தெளிவாகவே கிடைத்தது. அதைப்பார்த்து வலப்புறம் திரும்பும் முன் கஞ்சன் ஜங்கா கை நழுவிப்போய் விட்டிருந்தது. ஏதோ எவரெஸ்டுக்கே போய்வந்தது போல ஓர் உற்சாகம்!!

மிகத் தொலைவில் வெண்கட்டியாய் ஒளிவீசும் எவரெஸ்ட்


பாக்தோக்ரா விமான நிலையம் வந்து சேருகையில் மதியம் 1 30 மணி ஆகி இருந்தது.


சிக்கிமின் நில அமைப்பு விமான நிலையஅமைப்புக்குச் சாதகமில்லாமல் இருபதால்,இதுவரை அங்கே விமான நிலையம் இல்லை;மேற்கு வங்கத்தைச்சேர்ந்த பாக்தோக்ரா என்னும் சிறுநகருக்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாகவே காங்க்டாக்கை அடைய முடியும்.தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்திருக்கும் டார்ஜீலிங் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்தோக்ரா, மேற்கு வங்கமாநிலத்தின் மற்றொரு பெருநகரமான சிலிகுரியை ஒட்டியிருப்பதால் அதன் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. வங்காளத்தின் வட பகுதியில் இருக்கும் பன்னாட்டு விமானநிலையம் இப்போதைக்கு இது ஒன்று மட்டும்தான்.
பன்னாட்டு விமானநிலையத்துக்கான ஆடம்பரப்புறத்தோற்றங்கள் இன்றி மிகவும் சிறியதாக,எளிமையாய்க் காட்சி தந்தது பாக்தோக்ரா விமானநிலையம். சுற்றுலாவுக்கான பல இடங்கள் அருகே இருப்பதால் உள்ளிருந்து வெளியே வந்த நொடியிலேயே எந்த ஒழுங்கு முறையும் இன்றி கார்,ஜீப் ஓட்டுநர்கள் நம்ம சுற்றி வளைத்துக்கொண்டு விடுகிறார்கள். பகிர்ந்து கொள்ளும் [share taxi] கட்டண வசதியுடன் பல பெரிய வண்டிகள். பாக்தோக்ராவில் இறங்கியதும் அவ்வாறான ஒரு வண்டியில் நாங்களாகவே காங்க்டாக் வந்து சேர வேண்டும் என்றுதான் சாகித்திய அகாதமி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதலில் குறிப்பிட்டிருந்தார்கள்; இணையத்தில் அது பற்றிய தகவல்களைத் தேடியதில் மொழி தெரியாத ஒரு புதிய இடத்தில் சிக்கல் ஏற்படலாம் என எண்ணியதால் சுங்கத் துறையில் பணி புரியும் என் மகள் பாக்தோக்ரா விமானநிலையத்தின் சுங்கத் துறை அதிகாரிகளோடு பேசி என்னைப் பாதுகாப்பான ஒரு வாடகைக்காரில் காங்க்டாக் அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தாள். இதற்கு இடையே நான் கொல்கத்தாவை விட்டுக்கிளம்பும் முன் சாகித்திய அகாதமிப் பொறுப்பாளர் ஒருவரே என்னைத் தொடர்பு கொண்டு தங்கள் அலுவலர்களே என்னை பாக்தோக்ராவில் எதிர்கொண்டு காங்க்டாக் அழைத்துச்செல்வார் என்று தெரிவித்து விட்டார். ஆனால்…விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்து பொருட்களையும் சேகரித்துக்கொண்ட என் கண்ணில் எனக்காக அட்டை ஏந்திக்கொண்டு நுழைவாயிலில் நின்ற சுங்கத் துறையினரோ அகாதமி ஆட்களோ படவே இல்லை. ஒருவழியாக என்னைப் ’பிடித்துவிட்ட’ சுங்கத்தினர் தங்கள் அறைக்கு அழைத்துப்போய்த் தேநீர் தந்து அன்பில் நீராட்டிக்கொண்டிருந்தபோது அகாதமிக்காரர்களும் தேடி வந்து விட சுங்கத்தினரின் பிடியிலிருந்து விடுபட்டு சாகித்திய அகாதமியினரிடம் சரண் அடைந்தேன்.

அன்று வேறு வேறு வேறு சமயங்களில் இந்தியாவின் பல இடங்களிலிருந்து சிறுகதைக்கூடுகைக்காக வந்து சேரும் எழுத்தாளர்களுக்காக அகாதமியினர் பல வாடகைக்கார்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வண்டியில் நான் வந்த விமானத்திலேயே வந்து சேர்ந்திருந்த [அப்போது எனக்கு அறிமுகம் இல்லாததால்தெரிய வாய்ப்பில்லை] கொல்கத்தாவைச்சேர்ந்த ஒரு வங்காள எழுத்தாளரும்- அவர் பேராசிரியரும் கூடத்தான் - உடன் வந்திருந்த அவர் மனைவியும் எனக்காகக்காத்திருந்தனர். பின்னிருக்கையில் நாங்கள் மூவரும் முன் இருக்கையில் ஓட்டுநரோடு கொல்கத்தா சாகித்திய அகாதமியைச்சேர்ந்த இரு அலுவலர்களும் ஏறிக்கொள்ள கிட்டத்தட்ட 3 30 மணியளவில் காங்க்டாக்கை நோக்கிக்கிளம்பினோம். 

கார்களின் நெருக்கடியோடு ஜன நெரிசலும்சேர்ந்து கொள்ள ஏதோ எழும்பூர் அல்லது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருவதைப்போல அங்குலம் அங்குலமாக நீந்தித்தான் விமானநிலையத்திலிருந்தே வெளியே வரமுடிந்தது. பௌத்த மதம் பரவலாக நிலவும்  திபெத் பூட்டான் நாடுகள் அருகில் இருந்ததால்  தலாய்லாமா வரப்போகிறார் என்ற தகவலை அறிந்து அவரை வரவேற்க நின்றிருந்த புத்த பிக்குகளின் கூட்டமும் அங்கிருந்தது.

ஒருவழியாக சாலையை எட்டிப்பிடித்து எங்கள் வாகனம் செல்லத் தொடங்கியபோது பிற்பகல் 3 45 ஆகியிருந்தது. மாலை 4 30 மணியளவில் சிலிகுரியும் தாண்டி மலைப்பாதைக்கு முன்பாக இருந்த ஒரு உணவகத்தில் எங்கள் ’மதியஉணவுக்காக’ வண்டி  நிறுத்தப்பட்டது.




காரை பெயர்ந்த மிகப்பழைய கட்டிடம், பல இடங்கள் திறந்த வெளிகள்…அப்படி ஒரு உணவகத்தில் சாப்பிடுவது பற்றிப் பிற நாட்களில் கற்பனை கூடச்செய்ய முடியாது.ஆனால் பயணத்தில்  அதையெல்லாம் பார்க்க முடியாதுதான்.ஓரளவு சுத்தமாக இருந்தால் சரிதான் என்று நானும் மற்றவர்களும் அங்கே கிடைத்த தந்தூரி ரொட்டி,பனீருடன் [பிறர் சோறும் கூட.என்னால் தயிரோ குழம்போ இன்றி சோறு சாப்பிட முடியாததால் நான் அதைத் தவிர்த்தேன்]

மாலைத் தேநீர் குடிக்கும் நேரமாகி விட்டதால் அதே உணவகத்தில் கேட்க அவர்கள் தங்களிடம் உணவு மட்டும்தான் என்றபடி அருகிலிருந்த சிறுகடையைக் கை காட்டி விட்டனர்.அங்கே காத்திருந்தபோது கடை வாசலில் சில தமிழ்க்குரல்கள்கேட்க நான் ஆர்வத்தோடு விசாரித்தேன்;சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாக வந்திருந்த இளைஞர்கள்..காங்க்டாக் சுற்றிப்பார்க்கச்சென்று கொண்டிருக்கிறார்களென்பதை அறிந்து அவர்களுக்கு வாழ்த்துச் சொன்னேன்.

பயணம் தொடர ஆரம்பித்ததும் தீஸ்தா நதி கண்ணில் தென்படத் தொடங்கியது










கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....