துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.3.15

சிக்கிமை நோக்கி..-6[காங்க்டாக்.]








காலை கண் விழிக்கும்போது மணி ஆறு. திரைச்சீலையை விலக்கியதும் வெளிச்சம் அழகாக உள்ளே படர்ந்தது. 

பத்து நிமிடத்துக்கெல்லாம் சூடான தேநீர் அறையைத் தேடி வந்தது. கொண்டு வந்த மங்கோலிய முகம் கொண்ட அழகான இளைஞர்கள்,அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டு பகுதி நேரப்பணியாற்றுபவர்கள் என அறிந்து கொண்டோம்.

கோட், மஃப்ளர் அணிந்தபடி காங்க்டாக்கின் காலை நடைக்காகக் கிளம்பினோம். சுற்றுலா ஊர் என்பதால் அந்த நேரத்திலேயே கடைகள் விழிக்கத் தொடங்கி விட்டிரு ந்தன.

என்னுடன் தங்கியிருந்த மோனிகா முகியா என்னும் கவிஞர்-திறனாய்வாளர் , நேபாள இனத்தவராயினும் இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர்.டார்ஜீலிங்கில் வாழ்ந்து வரும் அவர் ஒரு கத்தோலிக்கக் கிறித்தவர்
அறைத்தோழி நேபாளக்கவிஞர் மோனிகாவுடன்...

அவரைப்போலப் பிற மதங்களைப் பின்பற்றும் நேபாள இனத்தைச் சேர்ந்த பலரை இந்தியாவின் எல்லை மாநிலங்களில் காண முடியும்.

நாங்கள் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அடுத்தநாள் ஞாயிறு என்பதால் பூசைக்கு செல்வதற்கான தேவாலயத்தை இன்றே கண்டுபிடித்து வைத்து விட வேண்டுமென்றார் மோனிகா. அங்கிருந்த வாடகைக்கார் ஓட்டுநர்களிடம் சர்ச் இருக்கும் இடத்தை விசாரித்ததில் அருகில் இருப்பதாக அறிந்து அதைப் பார்த்து வைத்துவிடலாமென எண்ணியபடி மேலேறிச்சென்றோம்.

சர்ச்சில் அப்போதுதான் தினசரிப் பூசை முடிந்து பாதிரியார்,சில பெண் துறவிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.அவர்களில் பலரும் நேபாளிகள் என்பதை ஆச்சரியத்தோடு கண்டேன்.மோனிகாவும் அவர்களோடு நேபாள மொழியில் சற்று நேரம் உரையாடினார்;பிறகு உள்ளே சென்று சின்னதொரு பிரார்த்தனை செய்ய வேண்டுமென அவர் விரும்ப நானும் கூடச்சென்றேன்;மிகவும் சிறிதான-  சுத்தமும் எளிமையும் வாய்ந்த ஆலயம்.

மோனிகா பிரார்த்தனை முடித்தபின் இருவரும் வெளியே வந்து பார்த்தால் சர்ச்சின் இரும்புக்கதவு உட்புறமாகப்பூட்டப்பட்டிருந்தது;சர்ச்சிலும் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.நாங்கள் உள்ளே செல்வதைத்தான் பாதிரியார் முதல் எல்லோரும் பார்த்தார்களே…..பிறகு ஏன் இந்தப்பூட்டு..? வேறு எவரோ உள்ளே இருக்க வேண்டும் என்று இருவரும் சுற்றி வந்தால் உள்ளே இருந்த சிறிய அறை உட்பட எங்கும் எவரும் இல்லை;அப்படியானால் வெளிப்புறத்திலிருந்துதான் கதவைப்பூட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.கோயிலோடு தொடர்பு கொண்ட யாருடைய பெயரோ எண்ணோ -எதுவும் தெரியாத நிலையில் யாரை எப்படித் தொடர்பு கொள்வது? நாங்கள் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறுகதைக்கூடுகையின் தொடக்கவிழா காலை 10மணிக்கு!!; அறைக்குச்சென்று குளித்து சிற்றுண்டி முடித்து அதற்கு ஆயத்தமாக வேண்டும். தெரியாத ஊரில் இருவரையும் பதற்றம் தொற்றிக்கொள்ள டார்ஜீலிங்கில் உள்ள பாதிரியார் வழி முயற்சிக்கலாமா என எண்ணியபடி மோனிகா கைபேசியை எடுக்க அதற்குள் கீழ்ப்பகுதியிலிருந்து ஏதோ வெளிச்சம் வருவது கண்டு நான் எட்டிப்பார்த்தேன்;கீழே இறங்கிச்செல்லும் அந்தப்படிகளில் போனால் ஆலயத்தின் கீழ்த்தளம் சாலையோடு எந்தக் கதவும் இல்லாமல் இணைந்து கொண்டது; மலைப்பகுதிகளிலுள்ள இடங்களில் அப்படிக்கீழிருந்து சாலையோடு செல்லும் வசதி இருப்பது இயல்புதான்;அது எங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியதால்தான் அவர்கள் பூட்டுப்போட்டு விட்டுப்போயிருக்க வேண்டும்.எப்படியோ, நிம்மதிப்பெருமூச்சு விட்டபடி அறைக்குச் செல்லக்கிளம்பினோம். 

வழியெங்கிலும் சுற்றுலாவுக்கான வாடகைக்கார்கள் நிறைந்து கிடந்தன.

காங்க்டாக்கை சுற்றிப்பார்க்க எங்களுக்குக் கிடைத்திருந்த நாட்கள் 7,8 ஆகிய 2 நாட்கள் [சனி,ஞாயிறு] மட்டும்தான். விமானத் தாமதம் இல்லையென்றால் 6ஆம் தேதி  பிற்பகலே வந்து ஓரளவு பார்த்திருக்கலாம் ; நாங்கள் பங்கு பெறும் அமர்வை விடுத்து மற்ற நேரங்களில் ஊரை சுற்றிப்பார்க்க அமைப்பாளர்கள் முன்பே ஒப்புதல் தந்திருந்தாலும் இந்தியச்சிறுகதைகளை ஒருமித்துக் கேட்கக்கிடைத்த வாய்ப்பையும் முற்றாக விட மனம் வராததால் நாங்கள் இருவரும் பங்கு பெறாத அன்று பிற்பகல் அமர்வை விட்டு விட்டு அந்த நேரத்தில் காங்க்டாக்கை சுற்றிப்பார்க்க முடிவு செய்து ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்து கொண்டோம்.[ஆனால் மறுநாள் தன் ஆய்வுக்கட்டுரையை வாசிக்க வேண்டிய மோனிகா,அன்றே வாசிக்குமாறு நேர்ந்ததால் நான் மட்டுமே செல்ல நேர்ந்தது]

மிகச்சிறப்பாகத் தொடங்கிய சிறுகதை அமர்வின் தொடக்க விழாவும்,முதல் அமர்வின் 4 கதை வாசிப்புக்களும் முடிந்து [காண்க; சிக்கிமில் ஒரு சிறுகதைக்கூடுகை] மதிய உணவுக்குப்பின் சரியாகப் பிற்பகல் 2 மணிக்கு காங்க்டாக்கைச் சுற்றிப்பார்க்க வாடகை வண்டியில் ஏறினேன். காங்க்டாக்கைப் பொறுத்த வரை தனியாகச்செல்வதில் எந்த பயமுமில்லை என்றும் ‘இது பூலோக சுவர்க்கம்’என்றும் கூறி வழி கூட்டி அனுப்பி வைத்தார் விடுதிக்காப்பாளர்.

காரோட்டியான ரோஷனும் கூட இந்திய வம்சாவளியைச்சேர்ந்த நேபாளிக்கிறித்தவர்தான். 4 மணி நேரச்சுற்றுலாவுக்கு 1200 ரூ கட்டணம் என்பதில் பேரத்துக்கு இடமில்லை.

நதுல்லா பாஸ் என்னும் சீன எல்லைப்பகுதி காங்க்டாக்கிலிருந்து 50 கி மீ தொலைவுதான்!!;அங்கே செல்லும் வழியும் காட்சிகளும் அற்புதமாக இருக்கும்,அங்கிருந்து கஞ்சன்ஜங்கா சிகரத்தைத்தெளிவாகப்பார்க்கமுடியும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்தும் ஒரு முழு நாள் இருந்தால்தான் அது சாத்தியம் என்று ஓட்டுநர்கள் சொல்லி விட்டதால் உள்ளூருக்குள்ளேயே சுற்றுவதற்கு முடிவு செய்தேன்.[கதைக்கூடுகைக்கு வந்திருந்த மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா, ஒரு நாள் முன் கூட்டியே வந்து விட்டதால் நதுல்லாவுக்குச் சென்று வந்தததாகப் பிறகு பகிர்ந்து கொண்டார்]

முதலில் சென்ற இடம் மலர்க்கண்காட்சி மையம்[ Flower Exhibition Centre]. எல்லா சுற்றுலா மையங்களிலும் வழக்கமாகப்பார்க்கும் பூந்தோட்டம் போலத்தான் அதுவும் இருக்கும் என்றும் சற்று வித்தியாசமான இடங்களைப்பார்க்கலாமே என்றும்  எண்ணிய நான் இறங்குவதற்கே முதலில் சற்றுத் தயங்க காரோட்டிதான் என்னை வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

திபெத்திய பாணியில் அமைந்திருந்த கொடிவீடுகளுக்கு நடுவிலிருந்த சிறிய பூங்காவைத் தாண்டிச்சென்றதும்


பாதுகாக்கப்பட்ட கூரைகளின் கீழ் வண்ண வண்ண ஆர்க்கிட் மலர்கள்….இத்தனை நுணுக்கமான நிற வேறுபாடு கொண்ட மலர்களா என வியக்க வைத்த பூக்குவைகள்..! 

இயற்கையின் வண்ண வினோதம் தனித்துவம் கொண்டது;எப்படியெல்லாம் நிறங்களை மாற்றி மாற்றிக்கலந்து எவ்வளவுதான் செயற்கையாக வண்ணச்சேர்க்கை செய்தாலும் இயற்கைக்கு அவை நிகராவதில்லை
‘’எத்தனை பொருள் கொடுத்தும் மண்ணில் இது போல் இயற்ற வல்லார் யாவரே’’என அந்திவானில் தெரியும் வண்ணக்கலவைகள் கண்டு வியந்த பாரதியின் வரிகளே மனதில் ஓடின.
நல்ல காலம் இந்தப்பூங்காவைத் தவற விடாமல் இருந்தேன் என நினைத்துக்கொண்டேன்.








சுற்றுலாவுக்குரிய கோடை காலம் இல்லாததால் தேநிலவு தம்பதிகள் தவிர அதிகக்கூட்டம் இல்லை.











மலர்க்கண்காட்சிமையத்துக்கு எதிரிலேயே மலைச்சிகரங்களைப்பார்ப்பதற்கான ‘காண் இடங்கள்’[view points] சில இருந்தன.ஆனால் மேக மூட்டத்தின் அடர்த்தியால் காட்சிகள் தெளிவாகப்புலப்படவில்லை.




அடுத்தாற்போல 'கணேஷ் காண் இடம்’[view point] , 'தஷி காண் இடம்’[view point] என்ற இரு உயரமான பகுதிகளுக்கு அழைத்துச்சென்றார் காரோட்டி.

அவற்றில் கணேஷ் டாக் எனப்படும் பகுதி ,மிக உயரத்துக்கு இட்டுச்செல்லும் நிறையப்படிகளுக்கு நடுவே விநாயகர் கோயில் ஒன்றையும் கொண்டிருந்தது.



கணேஷ் டாக்கும் அங்கிருந்து புலனாகும்
மலை,நிலக்காட்சியும்

கணேசர் கோயில்





மற்றொரு காண் இடமான [view point] தஷி பகுதியில் கணேஷ் டாக்கை விடவும் கூடுதல் உயரம் ஏறிச்சென்றும் என் எதிரியான மேகமூட்டம் மனமிளகுவதாக இல்லை.


கீழ்த்தளத்தில் உணவு விடுதியோடு கூடிய திபெத்திய பாணி நவீனக்கட்டிடம் ஒன்றை அங்கே காண முடிந்தது.







’யானைக்கயிற்றுப்புறத்தன்ன கல் மிசைச்சிறுநெறி’
காண் இடங்களுக்குச் செல்லும் வழியில் பஞ்ச்ஹக்ரி[Banjhakri Falls]என்ற ஒரு சிற்றருவி செங்குத்தான ஓடை போல மேலிருந்து கோடாக வடிந்து கொண்டிருந்தது. [கீழிருப்பது போலக்கூட நீர் வரவில்லை;
இந்த அருவி மட்டும் இணையப்படம்] நொந்து போனபடி,காரிலிருந்து இறங்காமல் தொடர்ந்து சென்றேன்.
Banjhakri Falls
 பௌத்தமதம் தழைத்திருக்கும் திபெத்,நேபாளம்,பூடான் ஆகிய பல நாடுகளை ஒட்டி அமைந்திருக்கும் சிக்கிமிலும் அம்மதத்தைப்பின்பற்றுவோர் மிக அதிகம்;
அதனால் பௌத்த மடாலயங்களை மிகுதியாகக்கொண்டிருக்கிறது சிக்கிம்.

என்ச்சி என்ற பெயர் கொண்ட ஒரு மடாலயத்துக்குப்போய்ச்சேர்ந்தபோது மாலை 5 மணியாகி விட்டதால் அது மூடப்பட்டு விட்டிருந்தது. இலங்கைப்பயணத்தின்போது நிறைய பௌத்த ஆலயங்களையும் மடாலயங்களையும் பார்த்திருந்ததால் இது பெரியதொரு குறையாகப்படவி ல்லை.


காங்க்டாக்கும் ஒரு சுற்றுலா நகரம்தான் என்றபோதும் நாம் வழக்கமாகப்பார்க்கும் சுற்றுலா இடங்களைப் போல நம் மேலே விழுந்து பொருட்களைத் திணித்து வாங்குமாறு நம்மை வற்புறுத்தும் வியாபாரிகளோ...இயற்கை எழிலைக்காண விடாமல் அந்த்தந்தக்காணிடங்களில் மொய்த்துக்கிடக்கும் கடைகளோ சுத்தமாக இல்லை. உள்ளடங்கி அமைந்திருக்கும் ஒரு சில கலைப்பொருள்கடைகளை  மட்டுமே அங்கங்கே காண முடிந்தது.

நாங்கள் தங்கியிருந்த எம் ஜி மார்க், புதிதான மையக்கடைத்தெரு.;மிக நவீனமான விலை உயர்வான பொருட்களை இங்கே அதிகம் பார்க்க முடிந்தது. இந்த வீதியை ஒட்டிக் கீழே இறங்கிச்செல்லும் படிகளோடு கூடிய பாதையில் லால் பஜார் என்ற சாதாரணமான ஒரு கடைத்தெரு கலகலப்பாக ஓரளவு மக்கள் கூட்டத்துடன் இருந்தது. பாரம்பரியமான பட்டுத் துணிப்பைகள்,பலரக பீங்கான் கோப்பைகள்,பளிங்கிலும் பலவகை உலோகங்களிலும் ஆன விதம் விதமான புத்தர் சிலைகள் இவையே சிக்கிமின் அடையாளமாக இந்த இரண்டு கடைத்தெருக்களையும் நிறைத்திருந்தவை.


இரண்டு நாள் காங்க்டாக் தங்கலில் பொதுவான வட இந்திய உணவு வகைகள்தான் [ரொட்டி,பூரி,தந்தூரி ரொட்டி,பனீர்,போஹா என] எங்கள் முழுவினருக்குப் பரிமாறப்பட்டனவே தவிர சிக்கிமின் சிறப்புணவான மோமோ [நம்மூர் கொழுக்கட்டை போன்றது]தரப்படவில்லை;
அந்தக்குறையைப்போக்கிக்கொள்ள இரண்டாம் நாள் மாலை நானும் மோனிகா முகியாவும் எதிரில் இருந்த சுத்த சைவ ‘மோமோ’ உணவகத்துக்குச்சென்று அந்தப்பாரம்பரிய உணவைச்சுவைத்தோம்; இப்போது தமிழ்நாட்டிலும் கூட மோமோ கிடைத்தாலும் சிக்கிமில் இவற்றின் சுவையே அலாதியானதுதான்.

நிகழ்வுகளெல்லாம் முடிந்ததும் ஏற்படும் நிறைவு  ஒரு பக்கமும், மறுபக்கம் வெறிச்சோடலுமாய்  இரு வேறு மனநிலைகளுடன் மறுநாள் 9ஆம் தேதி விடியற்காலையில் பாக்தோக்ரா நோக்கிய சாலைப்பயணம், பிறகு விமான வழி கொல்கத்தா,அங்கிருந்து கோவை....  


காங்க்டாக்கின் எந்தப்பக்கத்திலிருந்து பார்த்தாலும் உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்கா சிகரம்

கண்ணில் படும் என்று படித்து விட்டு ஆவலுடன் வந்திருந்தாலும் - இது கோடைப்பருவம் இல்லையென்பதால் அது மட்டும் நிறைவேறாமல் போனது சற்று வருத்தம்தான்; ஆனாலும்,தங்கியிருந்த மிகச்சில நாட்கள் நிறைவான,என்றும் நினைவுச்சேமிப்பிலிருந்து அகற்ற முடியாத அரிய அனுபவங்களையும் என்றும் கிடைப்பதற்கு அரிதான எழுத்தாள நட்புக்களையும் பெற்றுத்தந்த காங்க்டாக்கை மறப்பது கடினம்.
[நிறைவு]

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....