ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி நாவல் மொழியாக்க வரிசையில் என் ஐந்தாவது மொழியாக்கமான ‘இரட்டையர்’ நாவலை நற்றிணை பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது.
முன்னவை
குற்றமும் தண்டனையும்- 2007,இரண்டாம் பதிப்பு-2012,செம்பதிப்பு 2017
அசடன்-2010
தஸ்தயெவ்ஸ்கி கதைகள்-2015
நிலவறைக்குறிப்புகள்-2018
‘இரட்டையர்’ நாவல் வெளி வந்ததை அறிந்ததுமே
‘’ஒரு சிக்கலான தளத்தை மேலும் சிக்கலாக்கிச் செல்லும் எழுத்தும் உரையாடலும். உண்மையில் வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் கடும் பயிற்சி கொடுக்கும் அற்புதமான நாவல் இது.’’
என்று முகநூலில் ஒரு பின்னூட்டம் பார்த்தேன். என் பின்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததும் அதுவே.
ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட ..இந்த நாவலை சரியானபடி
உள்வாங்கும் முயற்சி - கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக -
இன்னும் கூடத்தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில்
உண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச்சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய
தொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை
அமைத்துக்கொண்டிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அந்த முடிவுகளை
வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான
மறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார்.
இரட்டையர் நாவல்,நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே
இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.
மிகத் தற்செயல் நிகழ்வாக 2006ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றபோது நான் தொடங்கிய மொழிபெயர்ப்புப்பணி இப்போது தஸ்தயெவ்ஸ்கி என்னும் அம்மாமேதையின் குறிப்பிடத்தக்க ஐந்து படைப்புக்களைப் பெயர்த்து முடித்த நிறைவையும் மகிழ்ச்சியையும் என்னுள் உண்டாக்கியிருந்தபோதும் இயன்றவரை அவரது இன்னும் பல படைப்புக்களையும் தமிழில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற தாகம் ஒவ்வொரு மொழிபெயர்ப்பு முடிந்ததும் என்னுள் தொடர்ந்து மூண்டு கொண்டே இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து வெளிப்படுத்தும் அபாரமான மனிதநேயமும் மானுட இனத்தின் மீது அவர் கொண்டிருக்கும் எல்லையற்ற காருண்யமும் தமிழ்மொழி வழியே பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உந்து விசையாகி அந்தப்பணியில் மீண்டும் மீண்டும் என்னை ஆழ்த்திக்கொள்ள வைக்கிறது.
.
‘’நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.என்று உரத்துப்பிரகடனம் செய்த தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சொற்கள் தஸ்தயெவ்ஸ்கியின் ஒவ்வொரு படைப்பை வாசிக்கும்போதும் என் நினைவுக்கு வரத் தவறுவதில்லை. வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் ஆபாசங்கள்...தனி மனிதக்கோணல்கள், விசித்திரமான பாத்திரங்களின் வித்தியாசமான செயல்பாடுகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும்- எந்தப்பாணியில் கதை சொல்லலை அமைத்துக்கொண்டாலும் நடப்பியல் சித்தரிப்பு என்ற பெயரில் அருவருக்கத்தக்க ஆபாச வருணனைகளோ உரையாடல்களோ சொற்பிரயோகங்களோ அவர் படைப்புக்களில் கிஞ்சித்தும் தலை காட்டியதில்லை. காதல் வயப்பட்டிருக்கும் பெண்ணானாலும், விலைமகளாக ஆக நேர்ந்த பெண்ணானாலும் அவளை உயிருள்ள ஒரு ஜீவனாக மட்டும்தான் அவர் அணுகியிருக்கிறாரே தவிர ஒரு நுகர்பண்டமாக ஆக்க அவரது எழுதுகோல் ஒருநாளும் துணிந்ததில்லை.
உலக இலக்கிய மாமேதை என தஸ்தயெவ்ஸ்கியைக் கொண்டாடும் சமகால இளைஞர்களும் எழுத்தாளர்களும் அந்தப்படைப்பாளியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் இது மிக முக்கியமானதென்று கருதுகிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக