துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.1.17

தீரா நதியில்..என் மதிப்புரை

மலையாளத்தில் மனோஜ் குரூரால் எழுதப்பட்டு  கே வி ஜெயஸ்ரீ அவர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் குறித்து நான் எழுதிய மதிப்புரை, டிசம்பர் மாதக் [குமுதம்] தீராநதியில் 
வெளியாகி இருக்கிறது...





               15.7.16 நிகழ்ந்த  'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...நான்                                                                               உரையாற்றியபோது


நிலம் பூத்து மலர்ந்த நா’ளை முன் வைத்து….[மதிப்புரை-தீராநதி]

சங்ககால வாழ்வியலை,பண்பாட்டை,நிலவியலை  மிக விரிவான பின் கிழியுடன் முன்னிறுத்தும் ஒரு நாவல் - தமிழில் எழுதப்பட்டு மலையாளத்துக்குச் சென்றிருக்கவேண்டிய ஒரு படைப்பு , மலையாளத்திலிருந்து  தமிழுக்கு மாற்றுப் பரிணாமமாக வந்து சேர்ந்திருக்கிறது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதியிருக்கும் ’நிலம் பூத்து மலர்ன்ன நாள்’ என்னும் அற்புதமான மலையாளமொழி நாவல்,வம்சிபதிப்பகத்தின் வெளியீடாக, கே வி ஜெயஸ்ரீயின் நேர்த்தியான தமிழாக்கத்தில் ’நிலம் பூத்து மலர்ந்த நா’ளாகத் தமிழ்மரபுக்கும் நவீன தமிழ்இலக்கியப்பரப்புக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அண்மையில் வெளி வந்திருக்கிறது. தமிழும் மலையாளமும் மிகநெருங்கிய உறவு கொண்ட மொழிகள் என்பதால் அத்தகைய மாற்றுப் பரிணாமம் குறித்து வெட்கமோ வேதனையோ  படத் தேவையில்லை என்பதோடு கொடிவழி உறவாக அது இன்னமும் தொடர்வதில் மகிழ்வும் பெருமிதமுமே கொள்ளத் தோன்றுகிறது.

சங்கப்பாடல்களை அவற்றின் அடியாழம் வரை உட்செரித்துத் தனதாக்கிக்கொண்டபடி, மலையாள மூலநாவலாசிரியரான மனோஜ் குரூர் இந்தப்படைப்பை உருவாக்கியிருந்தபோதும், இந்த நாவலின் நோக்கம் சங்கச் சமூகப்பரப்பை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப் போற்றுதலுக்கு ஆளாக்குவதோ, மேன்மைப்படுத்துவதோ மட்டும் அல்ல. சங்கப்பாடல்களில் தோய்வும் பயில்வும் கொண்டோர்க்கு இதன் முதல் வாசிப்பு பித்தேற்றுவதாகவும், என்றோ தொலைந்து போன பழங்கனவின் சுகமான எச்சங்களாகக் கிளர்ச்சியூட்டுவதாகவும் உள்ளபோதும் இதன் அடுத்தடுத்த வாசிப்புக்கள்..மற்றும் .தொடர்சிந்தனைகள் இப்படைப்பை உள்ளடுக்குகள் நிறைந்த ஓர் ஆழ்பிரதியாக, சங்ககாலத்தின் உன்னதங்களோடு கூடவே, அந்தக்காலகட்டத்தின் கீழ்மைகளையும் சுட்டும் நடுநிலையான பிரதியாகவே இதை எண்ண வைக்கின்றன. சங்கப்பாடல்கள் வழி மேற்கொண்ட படைப்புப் பயணத்தில் அந்தச்சமுதாயத்தின் மீது நாவலாசிரியரால் வைக்கப்படும் விமரிசனங்கள் , சமகால அரசியல் விமரிசனத்தை நோக்கியும்  வாசகரை வழி கூட்டிச்செல்கின்றன; இதுவே இந்தப்பிரதியின் தனித் தன்மையும் கூட.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகம் என நாம் அறிந்திருக்கும் சங்கச்சமூகம், பண்பாடு மற்றும் நாகரிகத்திலும்,பொருளியலிலும்,அரசு சூழ்தலிலும் பூத்து மலர்ந்து  பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தப் பூத்தல் என்பது சமூகத்தின் எல்லா வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்மையான முழுமையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்ததா என்ற மிக முக்கியமானவினாவை எழுப்பி அது சார்ந்த தேடலுக்கு இட்டுச்செல்வதையே இந்நாவல் தன்  மையமாகக் கொண்டிருக்கிறது..
தங்களுக்கான நிலையான வாழ்விடம் அமைத்துக்கொள்ளாமல், வேறுபட்ட பலவகையான நிலப்பரப்புக்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இனக்குழுவினர், நானிலங்களோடு தங்களை இறுகப் பிணைத்துக்கொண்டு அந்தந்த நிலவியலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு விட்ட மாந்தர், குறுநில வேளிர் , சிற்றரசர்கள், பேரரசராகக்கொண்டாடப்பட்ட மூவேந்தர்  எனப் பல்வேறு அடுக்கிலுள்ளோரின்  வாழ்வையும் இந்தப்பிரதி ஊடறுத்துச் செல்கிறது.
சங்ககால மக்களில் ஒரு பகுதியினர், கட்டற்ற இனக்குழு வாழ்விலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு சற்றே நாகரிக மேம்பாடு கொண்டோராய் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நிலப்பாகுபாட்டுக்குள் தம்வாழ்வைப் பொருத்திக்கொண்டனர்; அவ்வாறு பொருந்த முடியாதோர் குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த பாலைநிலங்களில் ஆறலை கள்வராக மாறி வாழ்க்கை நடத்த, பொருளாதார அடிப்படையில் தங்களை இன்னமும் மேம்படுத்திக்கொண்டவர்கள், பெருநிலக்கிழார்களாய்,.வேளிர்களாய்.,குறுநில மன்னர்களாய்சிற்றரசர்களாய்,.இறுதியில் வேந்தர்களாய்ப் பரிணாமம் பெற்ற வரலாறும் கூடப் பூத்தலும் மலர்தலும்தான்..
ஆனால் அந்த மலருக்குள் ஒளிந்திருக்கும் பூநாகங்களாய். சக மனிதர்களிடையேயான வன்மங்கள்,காழ்ப்புணர்வுகள்,சக அரசுகளிடையே பகைமை,ஆதிக்க அதிகாரக் கைப்பற்றல்கள்,  அதற்கான சூழ்ச்சிகள்,வெற்று நுகர் பொருளாய்மட்டுமே கருதியபடி  பெண்மீது செலுத்தப்படும் ஆதிக்கங்கள், விதவை நிலை போன்ற சமூக வழக்கங்களால் அவள் மீது இழைக்கப்படும் வன்முறைகள்,எந்த முகவரியும் அற்ற சாமானியர்களாய்ப் பாடியும் ஆடியும் அரசர் புகழ் ஏத்தியும் தம் வறுமை தொலைத்துக்கொண்டிருந்த கலைஞர்களும் படைப்பாளிகளுமான பாணரும்  விறலியரும் கூத்தரும்  புலவர்களும் அந்த சூழ்ச்சியின் பகடைகளாக ஆக்கப்படுதல் எனப் பலப்பல சிறுமைகள் அந்தப் பொற்காலப்புகழுக்குள் பொதிந்து கிடப்பது சங்கப்பாடல்கள் காட்டும் மறுக்க முடியாத ஓர் உண்மை.. இந்த நிதரிசனத்தை உள்ளது உள்ளபடி கூற முயன்றிருக்கும் மனோஜ்குரூர் நுட்பமான கீற்றல்கள் போன்ற அவதானிப்புக்களாலும்  வீரியம் மிகுந்த சொற்சேர்க்கைகளாலும் அவற்றை எடுத்துரைத்துச் செல்லும் போக்கில்,மலரின் மணத்தை விடவும் குருதியின் கொடும் வாசத்தையே இந்நாவலில் கூடுதலாய் நுகர முடிகிறது.
வழிப்போக்கர்களாய்ச்செல்வோர்க்கு நானில மக்கள் அவரவர் நிலவியல்தன்மைக்கேற்ற உணவளிக்கும் உபசரிப்பு., மாரி பொய்ப்பினும் தான் பொய்க்காத அரசனின் வற்றாத கொடை, ’’காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை’’ ‘’.எத்திசைச்செலினும் அத்திசைச்சோறே’’ என்னும் புலமைச்  செருக்கு, ஆறலை கள்வரிடமும் கூட முக்கோல் பகவர்களான துறவியர் மீது சுரக்கும் கருணை, இரக்கமின்றி வேட்டையில் மூழ்கிக்கொன்று குவித்தாலும் சக மானுட நேயம் காட்டி வழிப்படுத்தி இரவுத் தங்கலுக்கு ஏற்பாடு செய்யும் எயினர் என்று சங்கத்தின் நல்ல பக்கங்கள் பலவற்றின் பெருந்திரட்டாய் இந்த நாவல் இருந்தபோதும் கூட, இதன் மைய அச்சை  சுழலவைக்கும்  ஆரக்கால்கள் சங்கச் சமூகத்தில் மறைந்து கிடந்த பல  இருண்ட பக்கங்களே.  
மூன்று பகுதிகளாய் விரியும் நாவலின் முதல் பகுதியில் பாணர் வாழ்வைப் பிரநிதித்துவப்படுத்தும்  கொலும்பன் என்னும் பாணன் கதை சொல்லியாகிறான். மகன் மயிலனையும் வறுமைத் தொலைப்பையும் தேடிக்கிளம்பும் அவனது புறப்பாடு அவனது மரணத்தோடு முடிவதான இந்தத் தொடக்கப்பகுதியில், ‘’ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீயும்மே’’  என அறிந்தோஅறியாமலோ சொன்ன புலவர் வாக்கால் தூண்டப்பட்ட மூவேந்தரின் சதிக்கு உண்மையான கூத்துக்கலைஞர்கள் பகடையாக்கப்படுகிறார்கள்; பெண்கொலை புரிந்த நன்னன் குறித்து அறிய நேரும் அறியாச் சிறுமியான சீரை,அவனால்   கொலைப்பட்ட அந்தப் பெண் தெய்வமாக்கப்பட்ட கோயிலில் தானும் ஒரு கற்சிலையாய் மாறிப்போனபடி, சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்ட ஓர் இனக்குழுவின் நிலைத்த தூய அடையாளமாய்த் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவளாய் உறைநிலைக்குச் செல்கிறாள். பிழைகள் மலியத் தொடங்கி விட்ட ஒருசமூகத்தில் - முன்னொரு காலத்தின் அப்பழுக்கற்ற மனச்சாட்சியாய் அப்பட்டமான உண்மை பேசும் அவளின் வார்த்தைகள் பலவும் கிரேக்கசோக நாடகங்களின் கோரஸை ஒத்திருப்பதாகக்கூடச்சொல்ல முடியும். சேரனுக்கு நண்பரான  பரணரும் அவரது நண்பர் கபிலரும்  பாணரையும் கூத்தரையும் பாரியை நோக்கி ஆற்றுப்படுத்துவதன் உள்நோக்கம் நாவலின் முற்பகுதியில்  மறை பொருளாகப் பொதிந்து கிடக்கிறது.
நாவலின் இரண்டாம் பகுதியின் கதைசொல்லியாகும் கொலும்பனின் மகள் சித்திரை ,பெண் வர்க்கத்தின் பாதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவள்; வேந்தரின் சூழ்ச்சியில் பகடையாக்கப்பட்ட தன் தந்தையைப்போலவே காதல் என்னும் பெயரால் நிகழும் சூழ்ச்சியை அறியாமல்தன் இயல்பான உடல்,உள்ள எழுச்சியால்  தூண்டப்பட்டபடி  தன் வாழ்வைத் தொலைத்தவள்.. முல்லை நிலத்தில் மட்டுமே தங்கியிருக்க மனமின்றி அவள் கூட்டத்தார் சேர நாட்டின் முசிறி நோக்கிப் பயணமாக..வீரன் .மகீரனின் காதல் மொழிகளில் தன்னை இழந்து ஏமாந்த சித்திரையோ அந்தக் குழுவிலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொள்கிறாள். என்றோ தங்களிடமிருந்து பிரிந்து போன அண்ணன் மயிலனின் நண்பனே தன் கணவன் என்ற உண்மை கூட அவன் பிரிவுக்குப் பிறகே அவளுக்குத் தெரிய வர அனைத்தின் மீதும் அவள் கொண்டிருந்தநம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன; தன் வாழ்வைத் தன் கையில் ஏற்றபடி தனக்குத் தோழியெனத் துணை வந்த புலவர் அவ்வை போலத் தனி வாழ்வு மேற்கொள்ளும் உரம் பெறுகிறாள் அவள். அரசரைச்சார்ந்து புகழ் மொழி சொல்லியே வாழ்க்கை நடத்துவதாய் இந்நாவலில் சொல்லப்படும் பிற  புலவர்களிடமிருந்து மாறுபட்டவராய் மக்களோடு மக்களாய்த் தெருப்பாடல் பாடியபடி, அதியனின் அன்பில் குழந்தையாகிக் கசிந்தாலும் தன் படைப்பால் விளைந்த  ஆளுமையை எதற்காகவும் விட்டுத் தராத செம்மாந்த ஞானச்செருக்குடன் அவ்வை இப்பகுதியில் உருவாகி இருக்கிறார்.
நாவலின் மூன்றாம் பகுதியின் கதை சொல்லியான கொலும்பனின் மகன் மயிலன், இன்மையின் இளிவரல் தாங்க மாட்டாமல் தன் இளமையிலேயே குழுவிலிருந்து அகன்று சென்றவன்; அரசு சூழ்தலை வலிய முயன்று பயின்று ,புலவர்களும் அரசர்களுமாய்ப்பின்னி வைத்த சூழ்ச்சி வலையின் கண்ணிகளில் வலியப்போய்ச் சிக்கியபடி, அத்தனை  சூழ்ச்சிக்கும் துணைநின்று,அறியாமலேயே  தன் இனக்குழுவின் அவலத்துக்குக்காரணமாகி விடுபவன்.தன் தந்தையின் மரணத்துக்கும் தங்கை சித்திரைக்கு நேர்ந்த அவலத்துக்கும் கல்லாய் உறைந்து விட்டசீரையின் நிலைப்பாட்டுக்கும் தானே காரணம் என இறுதியில் உணர்ந்தபடி கழிவிரக்கத்தில் மூழ்கிக்கழுவாய் தேடி அலைபவன்
குட்ட நாட்டிலிருந்து பயணம் தொடங்கும் கூத்தர்கள், குறிஞ்சி திரிந்து பாலையான எயினர் வாழும் மண், முல்லை திரிந்து பாலையான ஆறலை கள்வர்வாழும் வறண்டநிலம், உழவரின் மருதம், குறவரின் குறிஞ்சி ,ஆயரின் முல்லை, கடல் சார் பரதவரின் நெய்தல், நன்னனின் ஏழிமலை, பாரியின் பறம்பு நிலம், சேரனின் முசிறிப்பட்டினம் எனப்பலநிலப்பகுதிகளிலும் சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். குப்பைக்கீரை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கதவடைத்து உண்ட இல்லாமை போக்கும் அலைக்கழிவில் உழவரின் திருவிழாக்களில் கூத்தாடுகிறார்கள்; முல்லை நிலத்து ஏறுதழுவுதலுக்குப் பக்கப்பறை முழக்குகிறார்கள். எதிலும் நிலைக்காத அவர்களின் வாழ்வு, சுரண்டலுக்கும் சூழ்ச்சிக்கும் ஆளாக்கப்படுவதைத் தவிர அரசரிடமிருந்து  அவர்கள் பெற எண்ணிய வறுமைத் தொலைப்பு இறுதி வரை வாய்ப்பதே இல்லை. அதுவே நாவல் உணர்த்தும் யதார்த்தம்..
இனக்குழுவின் இளைய தலைமுறை சார்ந்தோரில்  சீரை இறுகிப் போய்த் தொல் மரபின் அடையாளச்சின்னமாகி விட,[Totemic], சித்திரையோ புதியதோர் பெண்ணாய்ப் பிறப்பெடுக்கிறாள். சந்தன் அவ்வப்போது சிறு சிறுஎதிர்ப்புக்களைக்காட்ட மயிலனோ மகாஸ்வேதாதேவியின் 1084இன் அம்மாவில் தீவிரவாதியாகிவிடும் மகனைப்போல ஏதோ ஒரு கணநேரத்தூண்டுதலில் இனக்குழுவின் கபடம் களையப்பெற்ற சூழ்ச்சிக்காரனாக உரு மாற்றம் பெறுகிறான்; தன் இல்லாமை மீதான வன்மம் துடைக்கும் உத்வேகமேஅவனை ஆட்டுவிக்கிறது.
’’ஒரு தலைப்பதலை தூங்க.’’..…
’’தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை’’
’’திறவாக் கண்ணசாய்செவிக்குருளை’’
’’நீர்வழிப்படூஉம் புணை’’
’’நாடா கொன்றோ கொன்றோ’’
’’கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி’’
’’செறுநரைநோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே’’போன்ற பலசங்கவரிகளும் குறள்கள் பலவும் நாவல் வாசிப்பின்போது தொடர்ந்து கொண்டே வருகின்றன. ஏறுதழுவலின் வன்முறைகள்…,கணவனின் ஈம நெருப்பில் உடன் வீழ்ந்து இறக்கும் நெருக்கடியில் பெண்கள்.., மன்னனுக்காக உயிரை வழங்க முன்வரும் முகவரி தொலைத்த போர்வீரர்கள், விளைநிலத்தை வெற்று நிலமாக்கும் உழபுலவஞ்சி,மழபுல வஞ்சி போன்ற எரிபரந்தூட்டல்கள்,போரின் அழிவுகள், புலவர்களின் சார்பு நிலைப்பாடுகளில் தோன்றும் ஐயங்கள் ஆகியனவும் கூடவே தொடர்ந்து கொண்டு வருகின்றன.
‘’அரண்மனைக்கான வழிகள் அகலமானவை; ஆனால் அவற்றின் உள்ளே உள்ள இடைநாழிகள் குறுகலானவை’’
‘’பால் மணமும் இரத்தக்கவிச்சியும் ஒருசேர வெளியேவருகிறது’’
‘’பாடல்களில் அரசருக்குத்தானே இடம் இருக்கிறது’’
என இடைஇடையே வரும் வரிகள் இந்தப்பிரதியில் உறைந்து உள்ளோடி விரவியிருக்கும்  அரசியல் எது என்பதை அப்பட்டமாகக்காட்டும் சாட்சியங்கள். நவீன மயமாகியிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட சமகால அரசியல் சூழ்ச்சிகள் சாமானியர்களைக்குறி வைத்தே இயங்குவதைக் குறிப்பாகக் கோடிட்டுக்காட்டுபவை இவை. சங்கப்பின்னணியில் நவீனநாவல் ஒன்றை ஆக்கும் முயற்சி என்று கூட இந்த நாவலை மதிப்பிட முடிவது அதனாலேதான்..
பெரும்பறையின் முழக்கத்தில் ஓரிலைத்தாளத்தின் இல்லாமையை யாரும் அறிய மாட்டார்கள்என நாவலில் இடம் பெறும் ஒருவரி சொல்வது போல நிலம் பூத்து மலர்ந்த நாள் என்னும் நாவல் வரும் வரை, சங்க மக்களில் ஒரு சாராரின் வாழ்வியலில் ஊடும்பாவுமாய்ப் பின்னிப்பிணைந்திருந்த சோகத்தின் தீவிரத்தை இத்தனை ஆழமாய் எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

மனோஜ் குரூர் கண்டடைந்த அத்தனை சங்கப்பாடல்களுக்குள்ளும் பயணித்தபடி மலையாள நாவலைத் தமிழ் நாவலாகவே மாற்றிக்கொடுத்திருக்கிறார் கே வி ஜெயஸ்ரீ.  அதற்கான அவரது உழைப்பு அசாதாரணமானது. வேற்று மொழி நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களுக்கேற்ற பொருத்தமான நிகரன்களுக்கான தேடலில் மூழ்கி, சங்க இசைக்கருவிகளின் நுட்பமானஒலி வேறுபாடுகளைப் பற்றி ஆய்ந்து துருவி அவற்றை உள்வாங்கி, நாவலில் இடம்பெறும் சங்க அக,புற பாக்களை இனம்கண்டுதன் உள்ளார்ந்த அர்ப்பணிப்போடு ஆறே மாதத்தில் இந்த மொழிபெயர்ப்பை முடித்திருக்கும் அவர் பாராட்டுக்கும் பலப்பல விருதுகளுக்கும் மிகச்சரியான தகுதி கொண்டவராகிறார்

தொடர்புடைய பதிவுகள்;


'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...



                 கே வி ஜெயஸ்ரீ,ஷைலஜா, மனோஜ் குரூர்,சந்தோஷ் இச்சிக்காணம்,
                      சு வெங்கடேசன் ஆகியோருடன்..



கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....