கே வி ஜெயஸ்ரீ,ஷைலஜா, மனோஜ் குரூர்,சந்தோஷ் இச்சிக்காணம், சு வெங்கடேசன் ஆகியோருடன்... |
கே வி ஜெயஸ்ரீயுடன்... |
திருவண்ணாமலையில் 16 மாலை நிகழ்ந்த ’’நிலம் பூத்து மலர்ந்த நாள்’’
மொழிபெயர்ப்பு நூலின் வெளியீட்டு விழா, நிறைய ஆச்சரியங்களையும் சொல்லித் தீராத இனிமைகளையும்
உள்ளக்கியதாய் இன்னமும் கூடப் பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது..
15 காலை கோவையிலிருந்து கிளம்பிய நொடியில் தொடங்கிய அந்த இனிமையின்
கணங்கள் இப்போது இதை எழுதும்வரை விடாமல் தொடர்ந்தபடி…
சனிக்கிழமை மாலை நிகழ்ச்சிக்கு மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலை
போய்ச் சேர்ந்த என்னை ’சுசீலா அம்மா’ என்ற அன்புக்கூவலோடு ஓடி வந்து ஆரத்தழுவியபடி
வரவேற்ற கே வி ஜெயஸ்ரீ, அதையே சிறிது நேர இடைவெளிக்குப்பின்பு
தானும் வந்து சேர்ந்ததும் தொடர்ந்த கே வி ஷைலஜா..என்று நேசத்தின் பரிமாற்றங்களோடு விழாவுக்கான
மனநிலை வெகு இதமாக இலகுவாக வாய்த்தது.
அடுத்தடுத்து பவா செல்லதுரை, உத்திரகுமாரன்,
மதுரையிலிருந்து வந்திருந்த இசை அறிஞர் திரு மம்மது,அவரின் மனைவி, மலையாளப்படைப்பாளிகளானதிரு
மனோஜ் குரூர் [நாவலின்மூல நாவலாசிரியர்],சந்தோஷ் இச்சிக்காணம் என அனைவருடனும் மிக எளிதாக
உரையாடலில் ஒன்றி விட முடிந்தது…
மதுரையில் முன்னமே என்னை அறிந்திருந்த காவல் கோட்டம்
சு வெங்கடேசனும், முருகேசபாண்டியனும் நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் என்னோடு நேர்ந்த
சந்திப்பில் நெகிழ்ந்துபோய் என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டனர்.பேச்சற்ற மௌனத்தில் நிகழ்ந்த
அன்பின் வெளிப்பாடு அது. இளம் வயதில் நான் பார்த்திருந்த அந்த இருவரும் இன்று அவரவர்
துறையில் பெரும் ஆளுமைகளாக வளர்ந்திருந்தாலும் என் மீது கொண்ட மதிப்பிலும் அன்பிலும் காட்டிய அந்த எளிமையான தோழமை,நெகிழச்செய்வது.
வம்சி குடும்பம் என்றுமே விரிவான விருந்தோம்பலுக்குப்
பெயர்பெற்றது…அதிலும் தங்கள் கைகளால் தாங்களே ஆக்கிப்படைக்கும் அறுசுவை உணவால் விருந்தாளிகளை
அசர அடிப்பவர்கள் அவர்கள். மிகப்பெரும் ’உண்டாட்டு’ ஒன்று நிகழ்ந்தேற,ஓய்வுக்கு ஒதுங்கும்
முன் இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
வம்சி குடும்பத்தைச்சார்ந்த விருந்தினர் குடிலுக்கு
எல்லோரையும் அழைத்துச்சென்று…அங்கே முன் பகுதியில் தனித் தனிக்கற்பலகையில் புதிதான
சிமிட்டிக்கலவை பரப்பி வைத்து வந்த விருந்தினர்களின் பாதச்சுவடு பதிக்க வைத்து, அந்தந்தச்சுவடுகளில் அவரவர் பெயர்
பொறித்து அதைக் கையெழு[காலெழு]த்தாக்கிக் கொள்ளும் [autograph] புதிய சடங்கொன்றை சமீபத்தில் வம்சியினர் தொடங்கி
இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது இலக்கியவாதிகளுக்கு அவர்கள் அளிக்கும் உயர்வான மதிப்பு
ஒரு கணம் பிரமிக்க வைத்தது..
மதியம் சிறிது ஓய்வுக்குப்பிறகு நிகழ்ச்சி நடைபெறும்
இடத்துக்குச்சென்றால் அந்தப்பள்ளி வளாகத்தின் திறந்த வெளி அரங்கின் மேடை அமைப்பில் அடுத்த வியப்பு காத்திருந்தது…
திருவண்ணாமையிலுள்ள
இயல்பான பாறைகளின் பின்னணியில் மலையாள மண்ணுக்குரிய பாளைகளைப் பாத்திரத்தில் விரித்து வைத்து,
மாடுகள்பூட்டப்படாத வண்டி ஒன்றை ஒரு புறம் நிறுத்தி வைத்து….தமிழக கேரள மண் வாசனைகளை
மிக இயல்பான எளிமையான அந்தப் பின்புலத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்த அந்த ரசனை
எல்லோருக்கும் எளிதாக வாய்த்து விடுவதில்லை. மேடைஅலங்காரத்துக்காகப் பணத்தைப்பகட்டாகப்
பணத்தை வாரி இறைக்கும் கூட்டங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அது…
முறையான நிகழ்ச்சிக்கு முன்பு தெருவிலிருந்தே தொடங்கிவிட்ட
பாப்பம்பட்டி பறை மேள ஆரவாரத்துடன் எல்லோரையும் கூட்டி வந்து அவையிலும் மேடையிலும்
ஒன்றுதிரட்டிய புதுமையும் நிகழ்ந்தது…
திறந்த வெளி அரங்கின் அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்கள்
காட்டிய ஈடுபாடும் அமைதி காத்த கண்ணியமும் தமிழகத்தில் நிகழும் பல இலக்கியக்கூட்டங்களுக்கும்
முன்னோடியாய் இருக்கும் தகுதி பெற்றவை.
பவாசெல்லதுரையின் சிறிய அறிமுகத்துக்குப்பின் கே
வி ஷைலஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வெளியீட்டுவிழா தொடங்கியது….
நூலைப்பலரும்
படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்த பொதுவானசெய்திகளை முன் வைத்துத் தலைமை
உரை ஆற்றினார் முருகேச பாண்டியன்; ஓவியர் ராகவ்,
இசைஅறிஞர் மம்மது ஆகியோரின் சிறிய வாழ்த்துரைகளுக்குப் பின் நான் உரை ஆற்றினேன்.. மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாளின் நோக்கம் சங்கச்சமூகத்தின் மேன்மையை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப்போற்றுதலுக்கு ஆளாக்குவதோ,மேன்மைப்படுத்துவதோ மட்டும் அல்ல. உள்ளடுக்குகள் நிறைந்த ஓர் ஆழ் பிரதியாக, சங்கச்சமுதாயத்தின் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் வழி சமகால அரசியல் விமரிசனத்தை நோக்கியும் வாசகரை வழி கூட்டிச்செல்வதாகவே அது அமைந்திருக்கிறது என்பதையும் அதுவே இந்தப்பிரதியின் தனித் தன்மையும் கூட என்பதையும் என் உரை முன்னிலைப்படுத்தியது.
சங்கச்சமூகம், பண்பாடு மற்றும் நாகரிகத்திலும்பொருளியலிலும்,அரசு சூழ்தலிலும் பூத்து மலர்ந்து
பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தப்பூத்தல் என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பைச்
சார்ந்தவர்களுக்கும்
உண்மையான முழுமையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்ததா என்றமிக முக்கியமானவினாவை எழுப்பி அது சார்ந்த தேடலுக்கு இட்டுச்செல்வதையே இந்நாவல் தன்
மையமாகக் கொண்டிருக்கிறது
என்ற கருத்தின் அடித்தளத்திலும் கே வி ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பு நுட்பங்கள் நோக்கியும் என்
உரையை அமைத்துக்கொண்டேன்..நேரம் குறைவுதான் என்றாலும் சொல்ல வேண்டியதைச்சொல்லி
விட்ட நிறைவு என்னுள்; அதற்கேற்ற பார்வையாளர் எதிர்வினைகளும் பின்பு கிடைதததில்
மகிழ்ச்சி.
மனோஜ் குரூரும் சந்தோஷ் இச்சிக்காணமும் மலையாள உரை ஆற்றியபோதும்
அதை மொழிபெயர்ப்பு செய்தாக வேண்டிய தேவை நிகழவில்லை என்பதும் அவர்களின் அந்த உரை அந்த
மொழி அறியாத தமிழ் மனங்களையும் கூட மிக
இயல்பாகச்சென்று தொடக்கூடியதாக இருந்ததென்பதையும் பார்வையாளர் கூட்டத்திலிருந்து எந்தச்சலசலப்பும்
எழாததே உணர்த்தி விட்டது…
மனோஜ் குரூர் நாவல் பற்றிப் பேச சந்தோஷ் இச்சிக்காணத்தின் பல
வரிகள் கவிதைக்குப்பக்கத்திலிருந்தன. மனதிலுள்ள துர்க்கந்தத்தை நீக்கி சுகந்தத்தை
எழுப்பும் வல்லமை இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு என்பதைக் கவித்துவ மொழியில்
கேட்பவர்களிடம் கடத்த அவருக்கு மொழி ஒரு தடையாக இல்லை.
காவல் கோட்டம் சு வெங்கடேசன், தன் வழக்கமான பாணியில்
பல ஆழமான ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் விரிவாக உரை நிகழ்த்தினார்.
எல்லாரது உரையிலுமான ஒரே
செய்தி, முதலில் தமிழில் எழுதப்பட்டு மலையாளத்துக்குச்சென்றிருக்கவேண்டிய இந்தப் படைப்பு
ஒரு மாற்றுப்பரிணாமமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து சேர்ந்திருப்பது
பற்றியதே…!
அது குறித்த வெட்கமும் வேதனையும் தமிழ்ப்படைப்பாளிகளுக்குத் தேவை இல்லை
என்பதை அதைத் தமிழ் நாவலாகவே மாற்றிக்கொடுத்ததன் வழி போக்கியிருக்கிறார் கே வி ஜெயஸ்ரீ. மனோஜ் குரூர் கண்டடைந்த அத்தனை
சங்கப்பாடல்களுக்குள்ளும் பயணித்து, தமிழில் நாவலைத் தருவதற்கேற்ற பொருத்தமான நிகரன்களுக்கான
தேடலில் மூழ்கி,..சங்க இசைக்கருவிகளின் நுட்பமானஒலி வேறுபாடுகளைப் பற்றி ஆய்ந்து துருவி
அவற்றை உள்வாங்கி…அத்தனை அசுர உழைப்பையும் இந்த மொழியாக்கத்துக்கு அளித்தபடி
ஆறேமாதத்தில் இந்த மொழிபெயர்ப்பை முடித்திருக்கும் அவர் மிகுந்த பாராட்டுக்கும்
பலப்பல விருதுகளுக்கும் மிகச்சரியான தகுதி கொண்டவராகிறார்… கவித்துவ உச்சத்தைத் தொடும் பலப்பல.வரிகளோடு மூலத்துக்கு மிக உண்மையாய் அணுக்கமாய் சங்கத் தொனி சற்றும் விலகாமல் இந்நூலைத் தமிழுக்குக்கடத்தி வந்து சேர்த்திருக்கும் ஜெயஸ்ரீக்கு அன்று குவிந்த பாராட்டுக்கள்
வெறும் முகத்துதிகள் அல்ல; மெய்யானநெகிழ்வின் உண்மையான வெளிப்பாடுகள் அவை…
இரவு 10 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற மீண்டும் ஓர் உண்டாட்டுடன் உறங்கி, மறுநாள் ஞாயிறு மதியம் கபிலர்குன்றுசெல்லும் திட்டத்துடன் கிளம்பி வழியில் சில மாற்றங்களால் அதியமான் குறித்த கல்வெட்டு இருக்கும் சில பாறை மலைகளை ஞாயிறு மதியம் வந்தடைந்தோம்….
கி பி ஒன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழமையான அந்த ஜம்பைக்கல்வெட்டு பற்றிய விளக்கம் இந்தப்படத்தில்….
கல்வெட்டுக்குன்றின் முன்புறத் தோற்றம்
|
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக