துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.7.16

பலி ஆடுகள்!!


//ஊடகங்களை சரி வரக்கையாளும்முதிர்ச்சி பெற்ற மனோபாவத்தை இளம் தலைமுறையினரிடம் .விதைப்பது  பெற்றோர்,ஆசிரியர், எழுத்தாளர்,சமூக ஆர்வலர்,திரை இயக்குநர் என அனைவரின் சமூகக்கடமை என்பதைத் தவிர இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை./

தன்னம்பிக்கை தராத-கழிவிரக்கமூட்டும் பெண் சார்ந்த எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டுமென்பதை சில காலமாக நான் ஒரு கொள்கையாகவே வைத்துக்கொண்டிருக்கிறேன்;

ஆனாலும்.பெருகிவரும் ,ஒருதலைக்காதலும் அதன் உடனிகழ்வாக  அன்றாட நடவடிக்கைகளாகவே ஆகி வரும்,பாலியல் வல்லுறவுகள்,
ஆசிட் வீச்சு , கொலைகள் iஇவையெல்லாம் மனதைத் தொந்தரவுசெய்யாமல்இல்லை.

.எழுத்து என்ற கதவின் வழி 
சமூக மனச்சாட்சியைத் தட்டிக் கொண்டே இருப்பது ஒன்று மட்டுமே இன்றைய நிலையில் நான் செய்யக்கூடிய  தார்மீகக் கடமை என்று தோன்றுகிறது.

’’தீதும் நன்றும் பிறர் தர வாரா..’’-உண்மை.!!

சமூக வலைத் தளங்களைக்கையாள்வதில் கைக்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை இரு பாலாருக்கும் வீடும்,பள்ளியும் தீவிரத்துடன் உணர்த்த வேண்டிய தருணம் இது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை!!

ஆனாலும் பெண் சார்ந்த சமூக மனப்போக்கும்-அவளை நுகர்பொருளாக மட்டுமே அணுகும் ஆணின் உளக்கட்டமைப்பும் மாறினாலன்றி வெறும் வாய்ச் சொல் வீரங்களும், அந்த நேரத்து ஆவேசங்களும் இந்த நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப்போவதில்லை.  .சிறிது காலம் தில்லியில்வசித்தபோது பள்ளியிலிருந்து திரும்பி வரும் என் பேத்தியை அழைத்துச்செல்லப் பேருந்து நிறுத்தமொன்றில் காத்திருந்தேன்.
அன்று காதலர் தினம். 
பேருந்து நிறுத்தத்தில் மதியவேளை பள்ளிக்காகப் பல பதின்பருவத்துப்பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.சீருடையில்,பதின்பருவ இளமையுடன் வாலிபர்களும் கூட.அவர்களில் ஒருவன் பெரிய பரிசுப்பொதியைக் கையில் ஏந்தியபடி அங்கிருந்த மாணவிகளில் ஒருத்தியை நோக்கிச்சென்றான்..அவள் அவனை அந்தக்கோலத்தில் கண்டதுமே விலகி ஒடுங்கித் தோழியர் கூட்டத்தில் தன்னைமறைத்துக்கொள்ள முற்பட்டாள்.அவன் விடுவதாய் இல்லை. திரும்பத் திரும்ப அவன் அவளை நெருங்குவதும் அவள் ஒதுங்குவதுமாகவே இருந்த அந்தநாடகம், அவர்களுக்கிடையேயான ஏதோ ஒரு உரையாடலுடன் முடிந்து போனது. ஆவேசத்துடன் நகர்ந்து சென்ற  அவன் அந்தப்பெரிய பரிசுப்பொருளை வீதி ஓரத்தில் எடுத்துச்சென்றபடி வெறித்தனமாக உடைத்து நொறுக்க, அதிலிருந்த அழகான வேலைப்பாட்டோடு கூடிய கண்ணாடிப்பொருள் ஒன்று தெருவெங்கும் சிதறியது.இன்னும் மூர்க்கம் அடங்காத கோபத்துடன் - நல்லவேளையாக- நண்பர்களுடன் அங்கிருந்து நகர்ந்து போனான் அவன் .அந்தப்பெண் அதற்குள் பள்ளிப்பேருந்தில் ஏறிப்போய்விட்டிருந்தாள். இருவரும் 8 அல்லது 9 ஆம் வகுப்பு மாணவர்களாக மட்டுமே இருக்கக்கூடும் அங்கே .சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டுகளில் வெறி கொண்ட அந்தக்காதல்முகத்தை விட அவனது பெற்றோரின்கல்விச்சேமிப்பு வீணடிக்கப்பட்டுக்கிடந்ததை மட்டுமேஎன்னால் பார்க்க முடிந்தது..மிரட்சியுடன் வண்டிஏறிய அந்த இளம் பெண்ணின் முகத்தையும் கூட!  

கருத்தொருமித்தலே காதல்..., ஒட்டும் இரு உள்ளங்களின் இறுகிய பிணைப்பே காதல் என்பது புரியாததால்....அதைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை நம் ஊடகங்களும், so called ’திரைக்காவியங்களும் அளிக்காததால் - கணநேரச் சலனத்தையும்,ஒரு பக்கம் மட்டுமே ஜனிக்கும் வெறி பிடித்த காமத்தையும் மட்டுமே காதல் என்னும் மாயச் சிமிழுக்குள் வண்ணக்கனவுகளாக்கி வியாபாரம் செய்து கொண்டிருப்பதால் சாதனைப்பெண்களாக வலம் வர வேண்டியவர்கள் நாளும் சருகாகி உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் செய்த பாவம்...தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக்காதலை ஏற்க மறுத்தது...!

காதல் ஒருவனைக் கைப் பிடிப்பது பெண்ணின் கம்பீரமான உரிமை என்றால் அவனை மனம் ஏற்க விரும்பாதபோது நிராகரிக்கும் உரிமையும் அவளுக்கு உரியதே என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் மறுப்பதற்கில்லை.உண்மையான பெண்ணியத்தின் அடிப்படையும் அதுதான். ஆனால்...தன்னைப்பற்றிய பெருமிதத்தில் -அளவுக்கு மீறிய தன்னகங்காரத்தில் திளைக்கும் ஆணின் மனப்போக்கு அதை ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறது; முரண்டு பிடிக்கிறது...’என்னிடம் வயதும்,வாலிபமும் இருக்கும்போது என்னை இவள் எப்படி மறுதலிக்கலாம்என்று கெக்கலித்தபடி பேயாட்டம் போடுகிறது. அவ்வாறான காட்சி அமைப்புக்களையும்,வசனங்களையும் ஊக்குவிக்கும் திரைப்படங்களே ஆரவாரமான வரவேற்புக்களையும்,கைதட்டல்களையும் அள்ளிக் குவிக்கின்றன.வேலைவெட்டி இன்றி சுற்றித் திரிபவனாக....ஊரறிந்த  பொறுக்கியாகவே ஒருவன் இருந்தாலும் அவன் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தி விட்டால் அவள்  அதை ஏற்றே ஆக வேண்டும்...காரணம் அந்தப்படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் அவன் ஹீரோ ஆக்கப்பட்டு விடுவது உறுதி. அப்படிப்பட்ட அதிபராக்கிரமசாலியான (!?) ஒருவனை ஏற்க ஒரு பெண் முன் வரவில்லையென்றால்அவள் திமிர் பிடித்தவள்...ஆணவக்காரி.

எந்தக் காதலுமேஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்என்ற காவியக்காட்சி போல அமைந்து விடுவதில்லை; முதலில் ஒரு மனதில் தோன்றிப் படிப்படியாக அடுத்த உள்ளத்திலும் பற்றிக் கொளும் காதலே நடைமுறையில் சாத்தியமானது.’’ஒட்டும் இரு உள்ளங்களின் தட்டு’’ என்பான் பாரதி.
‘’யான் நோக்குங்கால் நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்’’
என்ற திருக்குறள் ஒரு மனத்தின் குரல் இன்னொரு மனதிலும் மெல்லப் பற்றிப்படரத் தொடங்கும் படிநிலையைப்படம் பிடிக்கிறது.

ஆனால்....அது...வெறித்தனமானதில்லை. தான் விரும்பும் இன்னொரு நெஞ்சின் ஒப்புதல் கிடைக்கும் வரை அது மௌனமாகக் காத்திருக்கவே செய்கிறது... ஒப்புதல் கிடைக்காதபோது ஆவேசமோ ஆத்திரமோ கொள்ளாமல் வழி விட்டு விலகிச் செல்கிறது. தனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரௌத்திரம் கொண்டு அதை அழிக்கவோ சிதைக்கவோ அது துடிப்பதில்லை...அதனாலேதான் அதற்கும் குறிப்பிட்ட ஒரு கால வரையறை இருப்பதைக் கைக்கிளை என்னும் சொல் உணர்த்துகிறது. முதலில் ஒரு தரப்பில் மட்டுமே அன்பு ஏற்பட்டிருக்கலாம்...ஆனால் மறுதரப்பு அதை உடன்படவில்லையென்றால் அது சிறுமைப்பட்டுப் போகும் என்ற காரணத்தால்... சிறிது காலம் மட்டுமே அது அவ்வாறு இருப்பது நியாயம் என்பதாலேயே குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்கு உட்பட்ட அன்பு கைக்கிளை என்கிறது தமிழ் மரபு.

மரபும் தெரியாமல்....பெண் மனமும் புரியாமல் பித்தேறித் திரியும் பேய்க்கூட்டங்கள் இருக்கும்வரை.....நம் சமூகத்தில் ஸ்வாதிகளும் வினுப்பிரியாக்களும் மட்டுமே பெருகிக்கொண்டிருக்க முடியும்

‘’பெண்விடுதலை வேண்டும்...
பெரிய கடவுள் காக்க வேண்டும்’’

என்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்....ஒவ்வொரு மனித மனசாட்சிக்குள்ளும் மறைந்தும் ஒளிந்தும் கிடக்கும் அந்தப் பெரிய கடவுளைத் தூசி தட்டி விழித்தெழச் செய்ய வேண்டியது நமது பொறுப்புத்தான் என்பதையும் நாம் என்றைக்குத்தான் புரிந்து கொள்ளப்போகிறோம்..?

பிகு

இது சார்ந்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தத் தவறாத சில திரைப்படங்களும் உண்டு. அவற்றில் வழக்கு எண்18/9 முக்கியமானது.[பதிவு இணைப்பில்]

ஒரு வகையில் மலையாள திருஷ்யமும் கூடத்தான் என்றாலும் அண்மையில் எனக்கு வந்த வாசகியின்கடிதம் ஒன்றில் கீழ்க்காணும் முக்கியமான  மாற்றுக்கருத்து  ,ஒன்றும் முன்  வைக்கப்பட்டிருக்கிறது. அதையும் முற்றாகநிராகரிப்பதற்கில்லை..

//மேடம், திருஷ்யம் படம் வெளி வந்தபொழுது அதன் வெற்றியைப் பார்த்து நான் பரிதாபமே அடைந்தேன். இதை விட காத்திரமான ஒரு படம் "இவ்விடம் சொர்க்கமாணு ". மோகன்லால், ரியல் எஸ்டேட் மாபியாவுடன் போராடி ஜெயிக்கும் சினிமா. அதிலும் காவல்துறையின் அடாவடித்தனம், எல்லாம் மிகவும் நேர்த்தியாகவும், திருஷ்யத்தை விட இன்னும் ஒரு படி நம்பும்படியாகவும் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. திருஷ்யத்தின் அதீத வெற்றிக்கு ஒரு காரணம், அடாவடி செய்யும் காவல் துறை அதிகாரி ஒரு பெண்மணி என்று சித்தரிக்கப் பட்டதால்  என்றே நினைக்கிறேன். திருஷ்யம் சினிமாவில் ஐஜி ஒரு ஆணாக சித்தரிக்கப் பட்டிருப்பின் இவ்வெற்றி சாத்தியமாகி இருக்குமா? 
[A VALID QUESTION!]
சினிமா என்ற ஊடகத்தின் சக்தி மிகவும் பெரிது என்று புரிந்தாலும், நம் சமூக மனநிலைதான் அதன் வெற்றியையும் தீர்மானிக்கிறது என்று புரியும்பொழுது, சமூகத்தின் ஒரு அங்கமான நானும்தான் அதற்கு காரணம் என்றே நினைக்கிறேன். (திருஷ்யம் படம் பார்த்தபிறகும், தமிழ் என்பதாலும், எனக்கு அதிகமும் பரிச்சயமான இடம்  என்பதாலும், பாபநாசம் படம் சென்று பார்த்தேன்.  ஐம்பது டாலர் செலவழித்து நானும் என் பங்குக்கு அந்த பைத்தார சினிமாவுக்கு ஆதரவு கொடுத்தேன்.)

பெருவெற்றியை சந்தித்தாலும், தற்பொழுதைய நம் சமூக மனநிலையைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்ற சினிமா என்ற விதத்தில் திருஷ்யம் முக்கியமான படமே. நம் மனநிலை மாறுகையில், அச்சன் உறங்காத்த வீடு போன்ற சினிமாக்களும் பல பொழிகளில் படமாக்கப் படும் அளவு வெற்றி அடையக் கூடும் என்று நம்புகிறேன்.//

ஊடகங்களை சரி வரக்கையாளும்முதிர்ச்சி பெற்ற மனோபாவத்தை இளம் தலைமுறையினரிடம் .விதைப்பது  பெற்றோர்,ஆசிரியர், எழுத்தாளர்,சமூக ஆர்வலர்,திரை இயக்குநர் என அனைவரின் சமூகக்கடமை என்பதைத் தவிர இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....