துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.1.17

சப்பாத்திக்கட்டையும் சகிப்புத் தன்மையும்-ஒருசெய்தி,சிலகேள்விகள்

[கமலா கல்பனா கனிஷ்கா உரையாடலாக]இனம் விளங்காத சில அதிர்வுகளையும் ஓர் இருப்புக்கொள்ளாமையையையும் என்னுள்கிளர்த்தியிருக்கிறது...

 “உத்தரகாண்டில் ஹால்ட்வனி மருத்துவமனையில் ஒரு பெண் வயிற்றுவலியுடன் சேர்க்கப்பட்டார். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் சப்பாத்தி தேய்க்கும் கட்டையைப் பிறப்புறுப்பில் சொருகிவிட்டார் தன் கணவர் என்று மருத்துவரிடம் அந்தப் பெண் சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, 40 செ.மீ. நீளமுள்ள சப்பாத்திக் கட்டையை எடுத்திருக்காங்க. ‘இப்படியொரு கொடூரத்தை நாங்க கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெண்ணின் உள் உறுப்புகள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. காவல்துறைக்குத் தகவல் சொல்லிட்டோம். இந்தப் பெண்ணின் கணவர் மாயமாகிவிட்டார்’னு தலைமை மருத்துவர் சொல்லிருக்கார்”




செய்தி படிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மீறியதாய்ச் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன




‘90களில் நான் பேராசிரியப்பணியில் இருந்த காலகட்டத்தில் பயிற்சிப்பணி மனை ஒன்றில் கலந்து கொள்வதற்காக பங்களூரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் பேராசிரியைகளும் பங்கேற்ற அந்தப் பயிற்சிக்காலத்தில் இரவு நேரங்களில் உணவு முடிந்து உறங்கச்செல்லும் முன் அவரவர்  சொந்த வாழ்க்கை அனுபவங்களை மனம் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்வது வழக்கம். மும்பை கல்லூரி ஒன்றில் சமூகவியல் பேராசிரியையாக இருந்த...டாக்டர் பட்டம் பெற்ற ஒரு தோழி அப்போது எங்களோடு பகிர்ந்து கொண்ட செய்தி இன்னும் முள் உறுத்தலாக என் நெஞ்சுக்குள். வசதியான குடும்பத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் அந்தக்கால கட்டத்திலேயே ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர் நிர்வாகப்பொறுப்பு ஒன்றில் இருந்தார். இரண்டு மகள்கள். குடும்பத்தோடு கூட வசித்து வந்த மாமியாருக்குப் பேரன் வேண்டுமென்ற தீராத ஆசை.அதை நிறைவேற்றவே மீண்டும் ஒரு முறை கருத்தாங்கிய அந்தத் தோழிக்கு அப்போதும் பெண் குழந்தையே பிறக்க , மாமியார் எரிச்சல் அடையத் தொடங்கியதோடு வீட்டிலிருக்கும் பிஞ்சுப்பெண்குழந்தைகளிடமும் அந்த வெறுப்பு விஷத்தைக் கக்கத் தொடங்கினார். அதோடு விடாமல் வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டும் என்ற வற்புறுத்தலும் பல வழிகளில் விடாமல் தொடர்ந்தது. அதைத் தட்ட முடியாத அந்தத் தோழி பல முறை கருச்சுமக்க ஆயத்தமானார்; ஆனாலும்  மீண்டும் பெண்குழந்தைகளே பிறக்க நேர்ந்தால் வீட்டாரின் துன்புறுத்தலுக்கும் வசைக்கும் அவை ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்ப்பதற்காகத் தன்னையே சுய வதை ஒன்றுக்கு ஆளாக்கிக்கொண்டார் அவர். சட்ட பூர்வமாகத் தவறுதான் என்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் ஸ்கேன் நிலையம் ஒன்றை நாடிச்சென்று , தன்னுள்  வளரும் கருவின் பாலினம் பெண் என்பது தெரிய வந்தால் வீட்டுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்து கொண்டு அதை அழித்துக்கொள்வார் அவர். கருக்கலைப்பும் கருச்சுமப்பும் இவ்வாறு தொடர்ந்து கொண்டே போனதில் அவரது உடல்நிலை மிக மோசமான சீர்குலைவுக்கு ஆளானதே  இறுதியில் எஞ்சியது..

நான் அறிந்த மற்றுமொரு உண்மைச் சம்பவம் மிகச்சிறந்த அறிவாளி என்ற  அங்கீகாரத்தையும் அவரது மாணவர்களிடம் பெருமதிப்பையும் பெற்றிருந்த  ஆண் பேராசிரியர் ஒருவரைப்பற்றியது. அவரது  முதற்குழந்தை, மூளை வளர்ச்சி குன்றியதாகப்  பிறந்து விட ,அதற்கான முழுமையான காரணகர்த்தா தன் மனைவி மட்டுமே என்று முடிவு கட்டிக்கொண்ட அந்தப்பெரிய மனிதர், வாழ்நாள் முழுவதும் தன் மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்து அந்தக்குழந்தையை ஏறெடுத்து நோக்குவதையும்  தவிர்த்தார். குழந்தைக்காகவே உயிரைப்பிடித்துக்கொண்டு அதுவரை வாழ்ந்து வந்த அவரது மனைவி அந்தக்குழந்தை  இறந்த பத்தே நாட்களில் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களும் இந்துவில் வெளியான செய்தியும் எடுத்துரைக்கும் குடும்ப வன்முறை ஒரு புறம் இருக்க என்னுள் மூண்டெழும் வினா வேறு வகையாகச் செல்கிறது...

சப்பாத்திக்கட்டையைத் தன் உடலுக்குள்  செருகும் வரை அந்தப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தது ஏன்...?  உடல் சார்ந்த கொடூரமான அந்த நிகழ்வுக்குத் தன்னிச்சையான சிறுஎதிர்ப்பையும் கூட அந்தப்பெண்ணால் காட்ட முடியாமல் அவளைத் தடுத்ததுதான் எது  ? அது பற்றிய விவரங்கள் செய்தியில் விரிவாக இல்லையென்றபோதும் வயிற்றுவலி வந்த பிறகே மருத்துவமனையில் அவர் சேர்ந்திருப்பது குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட அவர் காட்டியிருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதன் பிறகும் கூட அந்த வாழ்விலிருந்து வெளியேற முடியாமல் அவளைத் தடை செய்தது எது?
 பொருளாதாரத் தற்சார்பின்மையைக் காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் கூலி வேலை செய்தோ நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவியோ கூடத் தன்மானத்தோடு தன்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் ஏற்படாதது ஏன்? அதை அவளிடம் ஏற்படுத்தத் தவறியது யார்?

நளாயினி காலத்து சகிப்புத் தன்மை காலங்காலமாக  அந்தப்பெண்ணுக்குள் மூளைச்சலவையாகிக் கடத்தப்பட்டது இதற்கான காரணமா...?’கல்லானாலும் கணவன்’ ..அவனிடம் அடி வாங்குவதே பேரானந்தம்..அப்படி அடி வாங்கியே செத்தாலும் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் நம் குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே  ஆளாக்கிய அவளது பிறந்த வீடு இதற்கான பின்புலமா...? வாழ்க்கை பற்றிய விரிவான கண்ணோட்டமும் புரிதலும் அவளுக்குள் ஏற்படாதபடி குறுக்கிட்ட வேறு தடைகள்தான் என்னவாக இருக்க முடியும்?

பொருளாதார அடிப்படையில் ஆணைச் சார்ந்தாக வேண்டியிருப்பதை மட்டுமே  இதற்கான முழு முதல் காரணமாகக் காட்ட முனைந்தால் நான் குறிப்பிட்டிருக்கும் முதல் உண்மைச்சம்பவத்தில் உயர்கல்வியும் பொருளாதாரத் தற்சார்பும் பெற்றிருந்தவரும் சமூகவியல் பாடத்தில் ஆண் பெண் சமத்துவத்தைக் காலம் காலமாக வகுப்பறையில் கற்பித்தவருமான  அந்தப்பேராசிரியத் தோழியின் கோழைத்தனமான நடவடிக்கைக்குக்காரணமாக  எதை முன் வைப்பது?

சப்பாத்திக்கட்டை செருகப்பட்ட கிராமத்துப்பெண்ணைவிடவும் கொடூரமான முறையில் தன் கணவனால்  வலுக்கட்டாயமாக வாயில் அமிலம் ஊற்றப்பட்டுத் தொண்டையெல்லாம் புண்ணாகி இறக்கும் தருவாயிலும் கூடக் கணவனைக்காட்டிக்கொடுக்காமல் தானே அப்படிச்செய்ததாகத் தன் மீதே பழி சுமத்திக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபடி மரித்துப்போனவரும்,... பெண் சுதந்திரம் நாடிக்காலமெல்லாம் கவிதை தீட்டியவருமான என் இன்னொரு தோழியின் செயலை என்னால் எதைக்கொண்டு  நியாயப்படுத்துவது சாத்தியம்?

ஆண்முதன்மை பெற்ற சமூக அமைப்பே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது என்பதும், அதன் ஒரு பகுதியே  குடும்ப வன்முறை என்பதும் வரலாற்று உண்மைகள்தான்...

1903ஆம் ஆண்டு நாவலாசிரியர் அ மாதவையா எழுதிய ‘முத்துமீனாட்சி’ நாவலில் மிக மிக இளம் வயது கொண்டவளான தன் மருமகள் விரைவில் கருவுற வேண்டுமென்பதற்காக உயிருள்ள பிள்ளைப்பூச்சி ஒன்றை விழுங்குமாறு அவளது மாமியார் வற்புறுத்திய சம்பவம் ஒன்றை அவர் விவரித்திருக்கிறார்...

அவையெல்லாம் கடந்த காலத்தின் கசப்பான நிஜங்கள்...

அவற்றின் கொடுமைகளிலிருந்தெல்லாம்  விடுபடத் தொடங்கியவர்களாய்ப் புதிய சிந்தனை மாற்றங்களோடு  வெகுதொலைவுகளை நோக்கிப் பெண்கள் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. தனக்கு நேரும் கொடுமைகளுக்காகக் கழிவிரக்கம் கொண்டு புலம்புவதோ...சமூக அமைப்பின் கோளாறை மட்டுமே பெரிதுபடுத்திச் சுட்டிக்காட்டி அதன் மீது  பழியைப் போட்டு விட்டுத் தான் தப்பித்துக்கொள்ளப்பார்ப்பதும் 21 ஆம் நூற்றாண்டுப்பெண்ணின்   நிலைப்பாடுகளாக இனிமேலும் தொடர வேண்டியது அவசியம்தானா?

தன் கல்வியை, தான் விரும்பும் பணியை.., தன் வாழ்வைத் தானே முடிவு செய்யும் திடம்.., தன் துணையை எப்படித் தேர்வது../ஒதுக்குவது/ அல்லது தேராமலும் கூட இருப்பது என்பதைத் தானே தீர்மானிக்கும் நெஞ்சுரம்..., தன் கருப்பை இருப்பது தன் வசத்தில் மட்டுமே என்பதை உணர்ந்திருக்கும் உளத் திட்பம் இவையே இந்த நாளின் தேவைகள் என்பதை இன்றைய பெண் எப்போதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறாள் ?

சமூக மறுஉற்பத்தி தடையின்றித்  தொடர்வதற்கான  கருவியாக மட்டுமே ஒரு காலத்தில்  பெண் எண்ணப்பட்டு வந்திருக்கிறாள் என்பது பழங்கதை.

இன்று அவள்  உற்பத்தி செய்தாக வேண்டியவை வருங்கால வாரிசுகளை மட்டும் இல்லை..எவரது  துணையோ  சார்போ  தேவைப்படாமல் தன்னிடம் உறைந்திருக்கும்  அளப்பரிய சக்தியை தன்னுள்ளே பொங்கிப் பெருகும் ஆற்றலின் ஊற்றை ..அவள் தானாகவே  மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்..தன்னை தன் சுயத்தை இனம் கண்டு மீட்டெடுத்தபடி  தேவையற்ற அச்சங்களிலிருந்து தன்னை அவள் விடுவித்துக் கொண்டாக வேண்டும்.. அதுவே  இன்றைய காலத்தின் தேவை என்பதை அவள் எப்போதுதான் விளங்கிக்கொள்ளப் போகிறாள் ?

இவை முடிந்த முடிவுகள் இல்லை...
சிந்தனைக்கான சில தேடல்கள் மட்டுமே...

’நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி’என்று புதுமைப்பெண்ணுக்கு பாரதி முன்வைக்கும் நெறியும் கூட  இதுவாக இருக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது...
   

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....