கிட்டத்தட்ட என் இருபத்தைந்து ஆண்டுக்கனவு ’’த்வன்யாலோகா’!.
ஏதோ நாளிதழ்க்குறிப்பாகவோ வார இதழ்ச்செய்தி ஒன்றாகவோ ’’த்வன்யாலோகா’ குறித்தும் அங்கேயே தங்கியிருந்து தங்கள் படைப்புக்களை உருவாக்க எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஓர் இடம் அது என்றும் அப்போது படித்திருந்தேன். அன்று தொடங்கி என்றாவது ஒரு நாள் அங்கே செல்ல வேண்டும் என என்னுள் கனன்று கொண்டிருந்த ஆசை நனவானது, டிச 2016 இன் இறுதியில்!
அங்கே நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஆங்கிலப்பேராசிரியையான தோழி ஒருவர், அங்கிருந்த கல்வியாளர்களுக்கும் எழுத்தாளார்களுக்கும் வாசகர்களுக்கும் என் ‘யாதுமாகி’ நாவல் பற்றி அறிமுகம் செய்ததோடு அங்கே வருவதில் நான் கொண்டிருக்கும் விருப்பத்தையும் கூறி நான் தங்குவதற்கான அடித்தளம் அமைத்துத்தர, நான்கு நாட்கள் ’த்வன்யாலோகா’வில் தங்கியிருந்து என் அடுத்த படைப்புக்கான சிந்தனையுடன் மட்டுமே சஞ்சரிக்கும் சூழல் எனக்கு வாய்த்தது.
மைஸூரிலிருந்து ஆறு கி மீ தொலைவில் இனிமையான இயற்கைச் சூழலுடன் மிகப்பெரும் பரப்பளவில் அமைந்திருக்கும் ’த்வன்யாலோகா’, இந்தியக்கலைகள்,தத்துவம், இலக்கியம்,பண்பாடு ஆகியவை சார்ந்த கல்வி, மற்றும் ஆய்வுகளுக்கானது..[Centre For Indian Studies].அவை தொடர்பான கருத்தரங்குகளும்,பயில் அரங்குகளும் நிகழும் இந்த இடம், எழுத்தாளர்களின் தனிமைக்கும் சிந்தனைக்கும் ஏற்ற ஏகாந்தமான ஒரு மண். தனித்திருந்து படைப்புக்களை உருவாக்க எண்ணும் எழுத்தாளர்களோடு அயல்நாட்டவரும் கூட இங்குள்ள விருந்தினர் விடுதியில் தங்கி இந்தியச்சிந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள இடமளிக்கும் த்வன்யாலோகா, மைஸூரிலுள்ள மகாராஜா கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராகப்பணிபுரிந்த பேராசிரியர் பத்மபூஷண் சி டி நரசிம்மையா அவர்கள் கண்ட கனவில் உருவானது.
இதன் நோக்கங்களை
The centre has been established for promoting the study, researchand development of Indian Culture, Fine Arts, Literature, Performing andTraditional Arts, Ayurveda, Yoga, Dance and Music in India as well as in the overseas countries, which are influenced, by such Arts and Culture.
என்று குறிப்பிடுகிறது ’த்வன்யலோகா’வின் அதிகாரபூர்வ தளமான http://www.dcismysore.org/home
’த்வன்யாலோகா’ என்னும் பெயர் கி பி 9ஆம் நூற்றாண்டில் ஆனந்தவர்த்தனா என்னும் அறிஞர் உருவாக்கிய தலைசிறந்த ஆராய்ச்சி நூல் ஒன்றின் தலைப்பிலிருந்து உருப்பெற்ற ஒன்று. பொதுப்படையான பொருளில் ’த்வனி’ என்பது ஒலியைக்குறிக்கும் சொல்லாக இருந்தபோதும் அதன் உட் பொருள் பற்றி ஆராயும் ஆனந்த குமாரசுவாமி அவர்கள், ஆழ்ந்த மௌனத்தில் திளைத்திருக்கும் மனதின் உள் ஒலிகளை ஒருவரால் உள்வாங்கிக்கொள்ளவும் , காணவும், கேட்கவும் முடிவதே ’த்வனி’ என்கிறார். கலை இலக்கியங்களின் மீதான தோய்வும் ரசனையும் அப்படிப்பட்ட ஒரு த்வனியைக்கண்டடைவதே என்பதே ஆனந்தவர்த்தனா முன் வைப்பதும் கூட...
இந்தியக் கலைகளை இலக்கியத்தை தத்துவத்தை ஆழ்மன அமைதி கொண்டு உணர வைக்கும் நோக்கமே மைஸூர் ’’த்வன்யாலோகா’வின் உருவாக்கத்துக்கும் அடிப்படை. அமைதி ஒன்று மட்டுமே ஆட்சி செய்யும் இடமாக இது இருப்பதும் அதனாலேதான்..! சந்தை இரைச்சலில் காணாமல் போய்த் தொலைந்து விடும் கலைகளை இலக்கியத்தை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. மௌனத்திலே மூழ்கியிருக்கும் மனம் ஒன்று மட்டுமே! உள்ளதிர்வுகளின் ஒலிகளை உணரும் உலகமே த்வனியால் ஆன உலகம். அதுவே ‘த்வன்யாலோகா.’..!
எழுத்தாளரும் திறனாய்வாளருமான திரு நரசிம்மையா உருவாக்கிய இந்த அமைப்பை அவரது புதல்வர் சி என் ஸ்ரீநாத் தலைமையிலான வல்லுநர் குழு தற்போது வழி நடத்தி வருகிறது. மைஸூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணியாற்றிய திரு சி.என். ஸ்ரீநாத் தந்தையைப் போலவே சிறந்த அறிஞர், கவிஞர், திறனாய்வாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவ்விருவரின் சேகரிப்பில் உருவான அரிய புத்தகங்கள் அடங்கிய பெரிய நூலகம்,கூட்ட அரங்குகள்,திறந்த வெளிக்கலையரங்கம்,விருந்தினர் விடுதி இவை அனைத்தையும் உள்ளடக்கியதே ’’த்வன்யாலோகா’.
நூலகமும் சி டி நரசிம்மையாவின் மார்பளவுச் சிலையும் |
மரங்களின் செறிவு,பறவைகளின் கூவல் இவற்றோடு ஒன்றிணைந்து ,இயற்கையை மட்டுமே நுகர்ந்தபடி,
விருந்தினர் விடுதி |
ஆரவார இரைச்சல்கள்,அலுப்பூட்டும் பதட்டங்கள் இவற்றிலிலிருந்து விட்டுவிடுதலையாகிப் படைப்பாளிகள் தங்கள் கனவுகளோடு மட்டுமே சஞ்சாரம் செய்தபடி அவற்றை வளர்த்தெடுக்கவும்...சின்னக்கவலைகள் தின்னத்தகாதபடி பொழுதுகள் ஆக்கபூர்வமாகக் கழியவும் வழி செய்யும் ’’த்வன்யாலோகா’வில் முழுவதுமாய் நான்கு நாட்கள் செலவிட்டாலும் மீண்டும் மீண்டும் போகத் தோன்றுகிறது அந்த ஏகாந்தத்தை நாடி...! அங்கே ஆரம்பப்புள்ளி வைத்துவிட்டு வந்திருக்கும் என் புதிய ஆக்கத்தைத் தொடரவும்..முடிக்கவும் கூடத்தான்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக