துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.9.18

பரப்புரைப் பயணம் வெல்க!





பெண்மை வெல்க என்றான் பாரதி.
மானுடத்தின் முழு வெற்றி பெண்மையின் வெற்றியிலும்தானே அடங்கியிருக்கிறது..
தொடர் சங்கிலிகளாகிக் கொண்டிருக்கும் குடும்ப, சமூக வன்முறைகளும் பச்சிளம் பிஞ்சுகளின் மீதான பாலியல் தாக்குதல்களும் செய்தித்தாள்களின் பக்கங்களை நாளும் நிரப்பியபடி பாலின சமத்துவத்தை இன்னும் கூட ஒரு தொலைதூரக்கனவாக மட்டுமே ஆக்கி வரும் இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் பலவும் கூடி  நடத்தத்திட்டமிட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு காலத்தின் இன்றியமையாத தேவையுமாகிறது.  
மானுடம் தழைக்கவும் மனிதம் உயரவும் இப்பேரணியை முன்னெடுத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி இதில் பங்கு கொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும் தோழமையோடு கூடிய அன்பு வாழ்த்துக்கள்.


அரசியலமைப்புச் சட்டப்படியும், ஜனநாயக அடிப்படையிலும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை மீட்பதையும், அன்பும்  அமைதியும் நிறைந்த  வன்முறையற்ற சமூகத்தை முன் நிறுத்துவதையும்  நோக்கமாகக்கொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு நிகழ்த்துவதே  ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் இந்தப் பரப்புரைப் பயணம் ..
 அமைதிக்கான உரையாடல் வழியே இந்தியாவை உருவாக்க முனையும்  பெண்களின் பரப்புரைப் பயணம் இந்தியாவின் ஐந்து முனைகளில் இருந்து (காஷ்மீர், டெல்லி, அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து இடங்களில்) 2018 செப்டம்பர் 22ஆம் நாளில் தொடங்கி அக்டோபர் 13 வரை தொடர்ந்து தில்லியில் நிறைவுறுகிறது..  









தமிழகத்தில், பெண்கள் தலைமையில் கன்னியாகுமரியில் பரப்புரைப் பயணம் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.







திருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம், வழியாக செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை வந்தடைந்து, சென்னையில் ஒரு பெரிய அரங்கக் கூட்ட நிகழ்வுக்குப் பிறகு, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் , குடியாத்தம், வழியாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் வழியாக டெல்லி நோக்கிப் பயணிக்க உள்ளது. 

சென்னைக்கூட்டம்



அக்டோபர் 13 ஆம் தேதி அனைத்துப் பெண்களின் மாபெரும் கூட்டம் இறுதியாக தில்லியில் நிகழ்கிறது.


23.1.17

சப்பாத்திக்கட்டையும் சகிப்புத் தன்மையும்-ஒருசெய்தி,சிலகேள்விகள்

[கமலா கல்பனா கனிஷ்கா உரையாடலாக]இனம் விளங்காத சில அதிர்வுகளையும் ஓர் இருப்புக்கொள்ளாமையையையும் என்னுள்கிளர்த்தியிருக்கிறது...

 “உத்தரகாண்டில் ஹால்ட்வனி மருத்துவமனையில் ஒரு பெண் வயிற்றுவலியுடன் சேர்க்கப்பட்டார். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் சப்பாத்தி தேய்க்கும் கட்டையைப் பிறப்புறுப்பில் சொருகிவிட்டார் தன் கணவர் என்று மருத்துவரிடம் அந்தப் பெண் சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, 40 செ.மீ. நீளமுள்ள சப்பாத்திக் கட்டையை எடுத்திருக்காங்க. ‘இப்படியொரு கொடூரத்தை நாங்க கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெண்ணின் உள் உறுப்புகள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. காவல்துறைக்குத் தகவல் சொல்லிட்டோம். இந்தப் பெண்ணின் கணவர் மாயமாகிவிட்டார்’னு தலைமை மருத்துவர் சொல்லிருக்கார்”




செய்தி படிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மீறியதாய்ச் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன




‘90களில் நான் பேராசிரியப்பணியில் இருந்த காலகட்டத்தில் பயிற்சிப்பணி மனை ஒன்றில் கலந்து கொள்வதற்காக பங்களூரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் பேராசிரியைகளும் பங்கேற்ற அந்தப் பயிற்சிக்காலத்தில் இரவு நேரங்களில் உணவு முடிந்து உறங்கச்செல்லும் முன் அவரவர்  சொந்த வாழ்க்கை அனுபவங்களை மனம் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்வது வழக்கம். மும்பை கல்லூரி ஒன்றில் சமூகவியல் பேராசிரியையாக இருந்த...டாக்டர் பட்டம் பெற்ற ஒரு தோழி அப்போது எங்களோடு பகிர்ந்து கொண்ட செய்தி இன்னும் முள் உறுத்தலாக என் நெஞ்சுக்குள். வசதியான குடும்பத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் அந்தக்கால கட்டத்திலேயே ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர் நிர்வாகப்பொறுப்பு ஒன்றில் இருந்தார். இரண்டு மகள்கள். குடும்பத்தோடு கூட வசித்து வந்த மாமியாருக்குப் பேரன் வேண்டுமென்ற தீராத ஆசை.அதை நிறைவேற்றவே மீண்டும் ஒரு முறை கருத்தாங்கிய அந்தத் தோழிக்கு அப்போதும் பெண் குழந்தையே பிறக்க , மாமியார் எரிச்சல் அடையத் தொடங்கியதோடு வீட்டிலிருக்கும் பிஞ்சுப்பெண்குழந்தைகளிடமும் அந்த வெறுப்பு விஷத்தைக் கக்கத் தொடங்கினார். அதோடு விடாமல் வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டும் என்ற வற்புறுத்தலும் பல வழிகளில் விடாமல் தொடர்ந்தது. அதைத் தட்ட முடியாத அந்தத் தோழி பல முறை கருச்சுமக்க ஆயத்தமானார்; ஆனாலும்  மீண்டும் பெண்குழந்தைகளே பிறக்க நேர்ந்தால் வீட்டாரின் துன்புறுத்தலுக்கும் வசைக்கும் அவை ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்ப்பதற்காகத் தன்னையே சுய வதை ஒன்றுக்கு ஆளாக்கிக்கொண்டார் அவர். சட்ட பூர்வமாகத் தவறுதான் என்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் ஸ்கேன் நிலையம் ஒன்றை நாடிச்சென்று , தன்னுள்  வளரும் கருவின் பாலினம் பெண் என்பது தெரிய வந்தால் வீட்டுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்து கொண்டு அதை அழித்துக்கொள்வார் அவர். கருக்கலைப்பும் கருச்சுமப்பும் இவ்வாறு தொடர்ந்து கொண்டே போனதில் அவரது உடல்நிலை மிக மோசமான சீர்குலைவுக்கு ஆளானதே  இறுதியில் எஞ்சியது..

நான் அறிந்த மற்றுமொரு உண்மைச் சம்பவம் மிகச்சிறந்த அறிவாளி என்ற  அங்கீகாரத்தையும் அவரது மாணவர்களிடம் பெருமதிப்பையும் பெற்றிருந்த  ஆண் பேராசிரியர் ஒருவரைப்பற்றியது. அவரது  முதற்குழந்தை, மூளை வளர்ச்சி குன்றியதாகப்  பிறந்து விட ,அதற்கான முழுமையான காரணகர்த்தா தன் மனைவி மட்டுமே என்று முடிவு கட்டிக்கொண்ட அந்தப்பெரிய மனிதர், வாழ்நாள் முழுவதும் தன் மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்து அந்தக்குழந்தையை ஏறெடுத்து நோக்குவதையும்  தவிர்த்தார். குழந்தைக்காகவே உயிரைப்பிடித்துக்கொண்டு அதுவரை வாழ்ந்து வந்த அவரது மனைவி அந்தக்குழந்தை  இறந்த பத்தே நாட்களில் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களும் இந்துவில் வெளியான செய்தியும் எடுத்துரைக்கும் குடும்ப வன்முறை ஒரு புறம் இருக்க என்னுள் மூண்டெழும் வினா வேறு வகையாகச் செல்கிறது...

சப்பாத்திக்கட்டையைத் தன் உடலுக்குள்  செருகும் வரை அந்தப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தது ஏன்...?  உடல் சார்ந்த கொடூரமான அந்த நிகழ்வுக்குத் தன்னிச்சையான சிறுஎதிர்ப்பையும் கூட அந்தப்பெண்ணால் காட்ட முடியாமல் அவளைத் தடுத்ததுதான் எது  ? அது பற்றிய விவரங்கள் செய்தியில் விரிவாக இல்லையென்றபோதும் வயிற்றுவலி வந்த பிறகே மருத்துவமனையில் அவர் சேர்ந்திருப்பது குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட அவர் காட்டியிருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதன் பிறகும் கூட அந்த வாழ்விலிருந்து வெளியேற முடியாமல் அவளைத் தடை செய்தது எது?
 பொருளாதாரத் தற்சார்பின்மையைக் காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் கூலி வேலை செய்தோ நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவியோ கூடத் தன்மானத்தோடு தன்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் ஏற்படாதது ஏன்? அதை அவளிடம் ஏற்படுத்தத் தவறியது யார்?

நளாயினி காலத்து சகிப்புத் தன்மை காலங்காலமாக  அந்தப்பெண்ணுக்குள் மூளைச்சலவையாகிக் கடத்தப்பட்டது இதற்கான காரணமா...?’கல்லானாலும் கணவன்’ ..அவனிடம் அடி வாங்குவதே பேரானந்தம்..அப்படி அடி வாங்கியே செத்தாலும் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் நம் குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே  ஆளாக்கிய அவளது பிறந்த வீடு இதற்கான பின்புலமா...? வாழ்க்கை பற்றிய விரிவான கண்ணோட்டமும் புரிதலும் அவளுக்குள் ஏற்படாதபடி குறுக்கிட்ட வேறு தடைகள்தான் என்னவாக இருக்க முடியும்?

பொருளாதார அடிப்படையில் ஆணைச் சார்ந்தாக வேண்டியிருப்பதை மட்டுமே  இதற்கான முழு முதல் காரணமாகக் காட்ட முனைந்தால் நான் குறிப்பிட்டிருக்கும் முதல் உண்மைச்சம்பவத்தில் உயர்கல்வியும் பொருளாதாரத் தற்சார்பும் பெற்றிருந்தவரும் சமூகவியல் பாடத்தில் ஆண் பெண் சமத்துவத்தைக் காலம் காலமாக வகுப்பறையில் கற்பித்தவருமான  அந்தப்பேராசிரியத் தோழியின் கோழைத்தனமான நடவடிக்கைக்குக்காரணமாக  எதை முன் வைப்பது?

சப்பாத்திக்கட்டை செருகப்பட்ட கிராமத்துப்பெண்ணைவிடவும் கொடூரமான முறையில் தன் கணவனால்  வலுக்கட்டாயமாக வாயில் அமிலம் ஊற்றப்பட்டுத் தொண்டையெல்லாம் புண்ணாகி இறக்கும் தருவாயிலும் கூடக் கணவனைக்காட்டிக்கொடுக்காமல் தானே அப்படிச்செய்ததாகத் தன் மீதே பழி சுமத்திக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபடி மரித்துப்போனவரும்,... பெண் சுதந்திரம் நாடிக்காலமெல்லாம் கவிதை தீட்டியவருமான என் இன்னொரு தோழியின் செயலை என்னால் எதைக்கொண்டு  நியாயப்படுத்துவது சாத்தியம்?

ஆண்முதன்மை பெற்ற சமூக அமைப்பே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது என்பதும், அதன் ஒரு பகுதியே  குடும்ப வன்முறை என்பதும் வரலாற்று உண்மைகள்தான்...

1903ஆம் ஆண்டு நாவலாசிரியர் அ மாதவையா எழுதிய ‘முத்துமீனாட்சி’ நாவலில் மிக மிக இளம் வயது கொண்டவளான தன் மருமகள் விரைவில் கருவுற வேண்டுமென்பதற்காக உயிருள்ள பிள்ளைப்பூச்சி ஒன்றை விழுங்குமாறு அவளது மாமியார் வற்புறுத்திய சம்பவம் ஒன்றை அவர் விவரித்திருக்கிறார்...

அவையெல்லாம் கடந்த காலத்தின் கசப்பான நிஜங்கள்...

அவற்றின் கொடுமைகளிலிருந்தெல்லாம்  விடுபடத் தொடங்கியவர்களாய்ப் புதிய சிந்தனை மாற்றங்களோடு  வெகுதொலைவுகளை நோக்கிப் பெண்கள் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. தனக்கு நேரும் கொடுமைகளுக்காகக் கழிவிரக்கம் கொண்டு புலம்புவதோ...சமூக அமைப்பின் கோளாறை மட்டுமே பெரிதுபடுத்திச் சுட்டிக்காட்டி அதன் மீது  பழியைப் போட்டு விட்டுத் தான் தப்பித்துக்கொள்ளப்பார்ப்பதும் 21 ஆம் நூற்றாண்டுப்பெண்ணின்   நிலைப்பாடுகளாக இனிமேலும் தொடர வேண்டியது அவசியம்தானா?

தன் கல்வியை, தான் விரும்பும் பணியை.., தன் வாழ்வைத் தானே முடிவு செய்யும் திடம்.., தன் துணையை எப்படித் தேர்வது../ஒதுக்குவது/ அல்லது தேராமலும் கூட இருப்பது என்பதைத் தானே தீர்மானிக்கும் நெஞ்சுரம்..., தன் கருப்பை இருப்பது தன் வசத்தில் மட்டுமே என்பதை உணர்ந்திருக்கும் உளத் திட்பம் இவையே இந்த நாளின் தேவைகள் என்பதை இன்றைய பெண் எப்போதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறாள் ?

சமூக மறுஉற்பத்தி தடையின்றித்  தொடர்வதற்கான  கருவியாக மட்டுமே ஒரு காலத்தில்  பெண் எண்ணப்பட்டு வந்திருக்கிறாள் என்பது பழங்கதை.

இன்று அவள்  உற்பத்தி செய்தாக வேண்டியவை வருங்கால வாரிசுகளை மட்டும் இல்லை..எவரது  துணையோ  சார்போ  தேவைப்படாமல் தன்னிடம் உறைந்திருக்கும்  அளப்பரிய சக்தியை தன்னுள்ளே பொங்கிப் பெருகும் ஆற்றலின் ஊற்றை ..அவள் தானாகவே  மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்..தன்னை தன் சுயத்தை இனம் கண்டு மீட்டெடுத்தபடி  தேவையற்ற அச்சங்களிலிருந்து தன்னை அவள் விடுவித்துக் கொண்டாக வேண்டும்.. அதுவே  இன்றைய காலத்தின் தேவை என்பதை அவள் எப்போதுதான் விளங்கிக்கொள்ளப் போகிறாள் ?

இவை முடிந்த முடிவுகள் இல்லை...
சிந்தனைக்கான சில தேடல்கள் மட்டுமே...

’நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி’என்று புதுமைப்பெண்ணுக்கு பாரதி முன்வைக்கும் நெறியும் கூட  இதுவாக இருக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது...
   

13.11.14

’’பெண்களுக்குப் பிடிக்கும்” ........

கோவையிலுள்ள ’கோணங்கள்’ திரைப்படக்கழகம் சென்ற மாதம் திரையிட்ட  இத்தாலிய இயக்குநர் டிஸீக்கா[Bicycle Thieves இயக்கியவர்] வின்  ''Two women'' படத்தைக்காண நானும் சென்றிருந்தேன். 
[படம் பற்றிய பார்வை  வேறு பதிவில்]

’கோணங்கள்’ நிகழ்வுக்கு நான் செல்வது முதல்முறை என்பதால் குறுந்திரை அரங்கம் உள்ள பள்ளிக்குச்சென்று திரையிடப்படும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். ஓரிரு நடு வயது ஆண்கள் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்; அவர்களுக்குக் குறிப்பிட்ட இடம் தெரியுமா எனக்கேட்டேன்...அவர்கள் வழி சொன்னதோடு நிற்காமல் தொடர்ந்து இப்படிச் சொன்னார்கள்..

‘’ம் போங்க போங்க..நீங்க எல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்’’

அடுத்து அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய உரையாடல் வழி அவர்களுக்கு டிஸீக்காவைப்பற்றியும் தெரியவில்லை,அந்தப்படத்தின்சாரமும் தெரியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.....

உண்மையில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - அநாதரவான நிலையில் ஊர் ஊராக இடம் பெயர்ந்தபடி தவிக்கும் ஒரு தாயும் அவளது பதின்பருவ மகளும் நேசப்படையினரின் கூட்டு பலாத்காரத்துக்கு ஆட்படும் கொடுமையை முன் வைக்கும் படைப்பு அது. தாய்க்கு மகள் மீதான நெஞ்சுருக்கும் நேசம் படத்தில் பதிவாகியிருந்தபோதும்  அங்கே உண்மையில் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டது இராணுவத்தினரின் இராக்கதப்பாலியல் வெறி.

தலைப்பை மட்டுமே வைத்து ’இது உங்களுக்கான படம்’ என்று அவர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

ஆனால் அது எப்போதும் அப்படித்தான் இருக்கிறது..!!.
பெண் சார்ந்து எது எழுதப்பட்டாலும்....அல்லது காட்சிப்படுத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கானதில்லை....பெண்ணுக்கு மட்டுமே உரியது என்கிற அந்த மனோபாவம்.

பெண் எழுதும் கதை,கவிதை,கட்டுரைகளைப்படிப்பதும் கூட அப்படித்தான்....!

சொல்வனம் இணைய இதழில் அண்மையில் வெளியான எழுத்தாளர் அம்பையின் பேட்டியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

//எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்வார்: உங்கள் எழுத்து என் வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கும்” என்று. அதாவது அவர் ஓர் உயரிய வாசகர். அவர் இலக்கிய தளத்துக்கு நான் உயரவில்லை என்கிறார். இன்னொரு நண்பர் “நீங்கள் வீட்டுக்கு வந்தது பிடித்திருந்தது. உங்கள் பேச்சு முக்கியமாகப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்று கூறினார்.//-

அம்பையின் அதே அனுபவம் எனக்கும் பல முறை நேர்ந்திருக்கிறது. 
இன்னும் பல பெண்களுக்கும் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.

என் கதைத்தொகுப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் ஆண் அறிவுஜீவிகள் - அவர்கள் எழுத்தாளர்களாகட்டும்..
கல்விப்புலம் சேர்ந்த பேராசிரியர்களாகட்டும்,
பொதுத்தளத்தில் இருப்பவர்களாகட்டும்...
அவர்கள் யாரானாலும் அடுத்த முறை சந்திக்கும்போது 
இலேசான கோணல் சிரிப்போடு ’’உங்க கதையை  என் வைஃப் விழுந்து விழுந்து படிக்கிறா..அவளுக்கு ரொம்பப்பிடிச்சிருக்காம்’’
என்பார்கள். 

அதாவது அதன் உட்பொருள் - அம்பை சொன்னது போல 
ஒன்று....
அவரது இலக்கிய மட்டத்துக்கு அது உயரவில்லை/அல்லது உயரும் தகுதி ஒரு பெண்ணின் எழுத்துக்கு இல்லை  என்பதாக இருக்கலாம்.
ஆனால்....புரட்டிப்பார்த்துக் கொஞ்சமாவது  படிக்காமல் ஒரு அராஜக முன் முடிவோடு பெண்களின் இலக்கிய மட்டத்தை இவர்கள் எப்படி நிர்ணயிக்கிறார்களோ அது ஒரு புதிர்தான்.

இரண்டு..
பெண் எழுத்தின் உள்ளடக்கம் அவர்களின் மனச்சான்றைத் தொந்தரவு செய்வதாகவும்  இருக்கலாம்;ஓரிரு முறை அப்படி அனுபவப்பட்ட பிறகு ’எதற்கு வீண் தொந்தரவு’என்று அதைப்படிக்காமலே தங்கள் வீட்டுப்பெண்களுக்குக்கொடுத்து விடுவார்களாக இருக்கலாம்.அப்பொழுதும் அதைப்படித்து அவர்கள் ‘கெட்டுக்கிட்டு’ப்போய் விடக்கூடாதே என்ற பயம் அவர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

’’உங்களப்பத்தியே இன்னும் எத்தனை காலம்தான் எழுதிக்கிட்டிருக்கப்போறீங்க.....உலகத்தை சமூகத்தைப்பத்தி எழுதுங்க’’
என்று இலவச புத்திமதி சொல்ல வருபவர்களும் இருக்கிறார்கள்...
இவர்களின் சமூகத்தில்..
இவர்களின் உலகத்தில் பெண்ணுக்கு இடம் இல்லை போலிருக்கிறது..!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....