துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.11.14

’’பெண்களுக்குப் பிடிக்கும்” ........

கோவையிலுள்ள ’கோணங்கள்’ திரைப்படக்கழகம் சென்ற மாதம் திரையிட்ட  இத்தாலிய இயக்குநர் டிஸீக்கா[Bicycle Thieves இயக்கியவர்] வின்  ''Two women'' படத்தைக்காண நானும் சென்றிருந்தேன். 
[படம் பற்றிய பார்வை  வேறு பதிவில்]

’கோணங்கள்’ நிகழ்வுக்கு நான் செல்வது முதல்முறை என்பதால் குறுந்திரை அரங்கம் உள்ள பள்ளிக்குச்சென்று திரையிடப்படும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். ஓரிரு நடு வயது ஆண்கள் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்; அவர்களுக்குக் குறிப்பிட்ட இடம் தெரியுமா எனக்கேட்டேன்...அவர்கள் வழி சொன்னதோடு நிற்காமல் தொடர்ந்து இப்படிச் சொன்னார்கள்..

‘’ம் போங்க போங்க..நீங்க எல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்’’

அடுத்து அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய உரையாடல் வழி அவர்களுக்கு டிஸீக்காவைப்பற்றியும் தெரியவில்லை,அந்தப்படத்தின்சாரமும் தெரியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.....

உண்மையில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - அநாதரவான நிலையில் ஊர் ஊராக இடம் பெயர்ந்தபடி தவிக்கும் ஒரு தாயும் அவளது பதின்பருவ மகளும் நேசப்படையினரின் கூட்டு பலாத்காரத்துக்கு ஆட்படும் கொடுமையை முன் வைக்கும் படைப்பு அது. தாய்க்கு மகள் மீதான நெஞ்சுருக்கும் நேசம் படத்தில் பதிவாகியிருந்தபோதும்  அங்கே உண்மையில் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டது இராணுவத்தினரின் இராக்கதப்பாலியல் வெறி.

தலைப்பை மட்டுமே வைத்து ’இது உங்களுக்கான படம்’ என்று அவர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

ஆனால் அது எப்போதும் அப்படித்தான் இருக்கிறது..!!.
பெண் சார்ந்து எது எழுதப்பட்டாலும்....அல்லது காட்சிப்படுத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கானதில்லை....பெண்ணுக்கு மட்டுமே உரியது என்கிற அந்த மனோபாவம்.

பெண் எழுதும் கதை,கவிதை,கட்டுரைகளைப்படிப்பதும் கூட அப்படித்தான்....!

சொல்வனம் இணைய இதழில் அண்மையில் வெளியான எழுத்தாளர் அம்பையின் பேட்டியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

//எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்வார்: உங்கள் எழுத்து என் வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கும்” என்று. அதாவது அவர் ஓர் உயரிய வாசகர். அவர் இலக்கிய தளத்துக்கு நான் உயரவில்லை என்கிறார். இன்னொரு நண்பர் “நீங்கள் வீட்டுக்கு வந்தது பிடித்திருந்தது. உங்கள் பேச்சு முக்கியமாகப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்று கூறினார்.//-

அம்பையின் அதே அனுபவம் எனக்கும் பல முறை நேர்ந்திருக்கிறது. 
இன்னும் பல பெண்களுக்கும் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.

என் கதைத்தொகுப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் ஆண் அறிவுஜீவிகள் - அவர்கள் எழுத்தாளர்களாகட்டும்..
கல்விப்புலம் சேர்ந்த பேராசிரியர்களாகட்டும்,
பொதுத்தளத்தில் இருப்பவர்களாகட்டும்...
அவர்கள் யாரானாலும் அடுத்த முறை சந்திக்கும்போது 
இலேசான கோணல் சிரிப்போடு ’’உங்க கதையை  என் வைஃப் விழுந்து விழுந்து படிக்கிறா..அவளுக்கு ரொம்பப்பிடிச்சிருக்காம்’’
என்பார்கள். 

அதாவது அதன் உட்பொருள் - அம்பை சொன்னது போல 
ஒன்று....
அவரது இலக்கிய மட்டத்துக்கு அது உயரவில்லை/அல்லது உயரும் தகுதி ஒரு பெண்ணின் எழுத்துக்கு இல்லை  என்பதாக இருக்கலாம்.
ஆனால்....புரட்டிப்பார்த்துக் கொஞ்சமாவது  படிக்காமல் ஒரு அராஜக முன் முடிவோடு பெண்களின் இலக்கிய மட்டத்தை இவர்கள் எப்படி நிர்ணயிக்கிறார்களோ அது ஒரு புதிர்தான்.

இரண்டு..
பெண் எழுத்தின் உள்ளடக்கம் அவர்களின் மனச்சான்றைத் தொந்தரவு செய்வதாகவும்  இருக்கலாம்;ஓரிரு முறை அப்படி அனுபவப்பட்ட பிறகு ’எதற்கு வீண் தொந்தரவு’என்று அதைப்படிக்காமலே தங்கள் வீட்டுப்பெண்களுக்குக்கொடுத்து விடுவார்களாக இருக்கலாம்.அப்பொழுதும் அதைப்படித்து அவர்கள் ‘கெட்டுக்கிட்டு’ப்போய் விடக்கூடாதே என்ற பயம் அவர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

’’உங்களப்பத்தியே இன்னும் எத்தனை காலம்தான் எழுதிக்கிட்டிருக்கப்போறீங்க.....உலகத்தை சமூகத்தைப்பத்தி எழுதுங்க’’
என்று இலவச புத்திமதி சொல்ல வருபவர்களும் இருக்கிறார்கள்...
இவர்களின் சமூகத்தில்..
இவர்களின் உலகத்தில் பெண்ணுக்கு இடம் இல்லை போலிருக்கிறது..!1 கருத்து :

devarajvittalanbooks சொன்னது…

இலக்கியத்தில் பெண் எழுத்து, ஆண் எழுத்து என்ற வேறுபாடு எதுவும் இல்லை.
ஆணும்,பெண்ணும் சேர்ந்ததுதான் சமூகம்.
பெண்கள் தங்கள் அனுபவம சார்ந்த பதிவுகளை இலக்கியமாக படைக்கிறார்கள்.

அத்தகைய அனுபவங்கள் பெண்களுக்கு உள்ளதால் அவை மற்ற பெண்களுக்கு அதிமான பிடித்த விசயமாக போய் விடுகிறது .

ஆண், பெண் என் யார் எழுதினாலும்
பொதுவில் வைத்து பார்ப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

வரும் காலத்தில்
இளைய தலைமுறை
இத்தகைய வேறுபாடுகளை
கண்டிப்பாக களையும்.

தேவராஜ் விட்டலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....