துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.11.14

குருகும் உண்டு ....

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-11

கடற்கரை மணல் வெளிகளிலும்,தோட்டத்துப் புல் வெளிகளிலும் ஒருவனும்,ஒருத்தியும் ஜோடியாகச் சஞ்சரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது...ஒரு காலம்.

இன்றோ நிலைமை...தலை கீழாக மாறிக் கிடக்கிறது !
இரண்டு பெண்கள்,ஒரு ஆண்-
இரண்டு ஆண்கள் ,ஒரு பெண்-
இப்படிப்பட்ட முக்கூட்டணிகளே தனிமையான இடங்களில் ஏராளமாகப் பெருகிப் போய்க் கிடக்கின்றன.
இவர்களின் நோக்கம் என்ன ?
 நட்பா?காதலா?
நட்பென்றால் தனியிடம் தேடி ஒதுங்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை.
காதலென்றால் இன்னுமொரு ஆணுக்கோ,பெண்ணுக்கோ அங்கே என்ன வேலை?
உடனிருக்கும் மூன்றாம் நபர்,நெருங்கிய நண்பன் அல்லது தோழியாகவே இருந்தாலும்,அவரவர் மனங்கள் மட்டுமே உணரக்கூடிய
அந்தரங்கத் தூய்மை கொண்ட காதல் பரிமாற்றங்கள்... அடுத்தவர் முன்னிலையில் சாத்தியம்தானா?

குறுந்தொகையின் ஒரு காட்சி கண்முன் நீள்கிறது.
நீண்ட நாட்களாகத் தன்னைப் பார்க்க வராத தலைவனின் நினைவில் ஏக்கமுற்றிருக்கிறாள் ஒரு தலைவி.
மனத்தின் ஒரு மூலையில் அவன் தன்னைக் கை விட்டு விட்டானோ என்ற மிக இலேசான நெருடலும் கூட......
தானும்,அவனும் சந்தித்துக் காதல்மொழி பேசிக் களித்திருந்த அந்தத் தருணத்துக்குச் சாட்சியாக வேறு யாருமே உடனில்லை.
அவனுக்கும்,அவளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு இரகசியக் கணம் அது.
அதை அவன் மறுத்துவிட்டால்,பொய் கூறிப் பிழைத்துவிட்டால் வேறு சாட்சிகளைத் தேடிக் கொண்டு அவள் எங்கே செல்ல முடியும்?
நினைவு அடுக்குகளைத் துழாவிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று அவளுக்கு ஒரு தடயம் கிட்டிவிடுகிறது.

அவர்கள் சந்தித்தது...தனிமையான ஒரு நீர்நிலைக்குப் பக்கத்தில்.
ஆள் அரவங்களே அற்றுப் போயிருந்த அந்த இடத்தில்,
மீன் பிடிக்கும் வேட்கையுடன் ஒரு நாரை(குருகு)மட்டும் தண்ணீருக்குப் பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த காட்சி அவள் நினைவுத் திரையில் படமாய் விரிகிறது.

ஆனால்...அதிலும்  ஒரு ஏமாற்றம்!
அந்தக் குருகும் கூட...ஓடுமீன் ஓட உறுமீன் வருவதையும்,அதைப் பிடிக்கப் போகும் தருணத்தைதயும்தான் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்ததே தவிர அவர்களின் காதல் விளையாட்டுக்கு அது ஒன்றும் சாட்சியாகி விடவில்லை.

தனக்குத் துணைவரச் சாட்சியில்லாமல் போய்விட்டதே  என்ற ஏமாற்றத்தை விடவும்....நல்ல வேளையாக அல்திணைப்(சிந்திக்கும் அறிவற்ற) பொருளாகிய அந்தக் குருகு கூடத் தங்களைப் பார்த்து விடவில்லை என்பதிலேயே பெருத்த நிம்மதி அடைகிறாள் நுட்பமான நாண உணர்வு கொண்டிருக்கும் அந்தச் சங்கத் தலைவி.

’யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’’-குறுந்தொகை25(கபிலர்)

இதே போன்ற செய்தி, ஒரு நற்றிணைப் பாடலிலும் உண்டு.
நாள்தோறும் தலைவியைத் தொடர்ந்து சந்தித்துவரும் தலைவன்,ஒரு நாள் அவளை ஒரு புன்னை மரத்தடியில் சந்திக்க,அவள் நாணத்தோடு அங்கிருந்து நழுவப் பார்க்கிறாள். அதற்குக் காரணம்,அந்தப் புன்னைமரம்,அவளது தாய் நீரூற்றி வளர்த்த மரம்.
‘’இம்மரம் உன் தமக்கையைப் போன்றது ‘’
என்று சொல்லிச் சொல்லியே அவளை வளர்த்திருக்கிறாள் அவள் தாய்.
தமக்கையை அருகில் வைத்துக் கொண்டு காதல் புரிவதைத் தகாத செயலாக நாணிக்கூச்சம் அடைகிறாள் அந்தப் பெண்.

’’நும்மினும் சிறந்தது நுவ்வை(உன் தமக்கை)யாகுமென்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே’’-நற்றிணை172

புனிதமான தங்கள் நேசத்துக்கு உயிரற்ற பொருட்களும்....வாய்பேச முடியாத ஐந்தறிவு உயிர்களும் சாட்சியாவதைக் கூடச் சங்கக்காதலால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
காரணம்.... அந்தரங்கம் புனிதமானது!

இணைப்பு;
சங்கக்காதல்(நற்றிணை)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....