துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.12.14

’யாதுமாகி’ .....கனவு மெய்ப்படுதல்


என் 
திருவண்ணாமலையிலுள்ள  
வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள் 

எனது நெடுங்காலக்கனவொன்று இந்தப்புத்தகம் வெளிவந்ததன் வழி சாத்தியமாகி இருக்கிறது. உடன் இருந்து இதைச் சாத்தியமாக்கிய  அனைவருக்கும் நெகிழ்வான நன்றி....

ஒரு வாழ்க்கைச் சித்திரத்தைப் புனைவாக்கித் தரும் சிறிய முயற்சியே                                                                           ‘யாதுமாகி

நெடுங்கதை ஆக்கத்தில் நான் எட்டும் முதல்கல் இது.

தாயாய்த் தந்தையாய் சகலமுமாய் இருந்த அன்னையின் ஆளுமை தன்னுள் விதைக்கும் தேடல்களின் தடம் பற்றிக் குறுக்கும் நெடுக்குமாய்க் காலத்தை ஊடறுத்தபடி அவள் வாழ்வுக்குள் அகமுகப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறாள் மகள் சாரு. அந்தப் பயணத்தில் தேவியின் வாழ்க்கை ஏடுகள் புதிரும் பிரமிப்புமாய் விரிந்தபடி அவளைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. தடைகளும் சவால்களும் முட்களாய் விரவிக்கிடந்த ஒரு பாதையில் மனத்திண்மை என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே உறுதியாகப் பற்றிக்கொண்டு - தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அது பற்றிய முழுமையான தன்னுணர்வோடு பதித்தபடி- அரற்றல்களோ ஆவேசக்கூச்சல்களோ இல்லாத அனாயாசமான லாவகத்தோடு அவற்றைப்புறங்கண்டு வென்றிருக்கும் அவளது சாதுரியம் அடுத்த தலைமுறைப்பெண்ணான அவளுக்கு வியப்பூட்டுகிறது.

எவராலும் பொருட்படுத்தப்படாத….., யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இருட்டறை மூலைகளில் கிடந்து புழுதி படர்ந்து பாசி பிடித்து வீணடிக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுமே மலிந்திருந்த ஒரு வாழ்க்கை ; அதற்குள் புதையுண்டு போயிருக்க வேண்டிய ஞானம்; இவற்றை அரிதாக வாய்த்த ஒரு சில ஊன்றுகோல்களால் மீட்டெடுத்தபடி தனக்கென்று ஒரு தகுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட தாயின் வாழ்க்கை, கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்னும் எண்ணம் அவளுக்குள் பிறக்கிறது; அதன் செயல்வடிவமே அவள் வரையும் தாயின் வாழ்க்கைச் சரிதம்.
[’யாதுமாகி’என்னுரையிலிருந்து...]

பாரதியின் பல வரிகள் இந்நாவலின் அடிநாதங்கள்....
’’பால ருந்து மதலையர் தம்மையே 
பாத கக்கொடும் பாதகப் பாதகர் 
மூலத் தோடு குலங்கெடல் நாடிய 
மூட மூடநிர் மூடப் புலையர்தாம், 
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக் 
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
 சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
 தாத ராகி அழிகெனத் தோன்றுமே! ’’[பாரதி சுயசரிதை]
என்று குழந்தை மணம் பற்றி அவன் கொதித்தது பெண்ணின் மணவாழ்க்கை சார்ந்தது மட்டுமில்லை. கல்வி....ஆளுமை என அவள் சார்ந்த அனைத்துமே மண்ணோடு மண்ணாகி ஒரு மனித வாழ்வே வீணாகி விடுவதை என்பதை எண்ணியதே அவனது தார்மிகச்சீறல்.

அவனது குமுறலும்..ஆதங்கமும் எந்த அளவுக்கு நடப்பியல் உண்மையில் தோய்ந்தவை என்பதன் நிதரிசன நிரூபணமே என் யாதுமாகியின் ‘தேவி’

சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தின்  இந்தியப்பெண்ணின் ’மாதிரி’அவள்;
அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்...அதிலும் ஆசாரக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பெண்  சுமந்தாக வேண்டிய  எல்லாச் சிலுவைகளையும் - அலுப்போ சலிப்போ - வேதனைப்புலம்பலோ வெற்று அரற்றலோ இல்லாமல் இலாவகமாகச் சுமந்து அவற்றைப்புறங்கண்டவள் அவள். புலியை முறத்தால் விரட்டிய சங்கப்பெண் போலக் கல்வி என்னும் கவசத்தால் சமூகத் தடைகள் என்ற கொடிய விலங்குகளை அநாயாசமாக எதிர்கொண்டு வீழ்த்தியவள்; அதை ஆரவாரத்தோடு..ஆர்ப்பாட்டத்தோடு..கோஷ முழக்கங்களோடு செய்யாமல் இயல்பான கதியில் செய்துவிட்டு ஒரு புன்னகையோடு கடந்து போகிறவள்.
அது பற்றிய அலட்டல்களோ பெருமிதமோ கூட அவளுக்கு இல்லை.
அவை செய்தே ஆக வேண்டிய அவளின் கடமைகள் மட்டுமே.

செதுக்குவதற்கு வேறு யாருமற்றநிலையில் தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட சிற்பம் அவள்...!
ஆம்..அவள் ஒரு கர்ம யோகி மட்டுமே!!

நாவலைப்பெற
யாதுமாகி- வம்சி பதிப்பகம்
vamsibooks@yahoo.com
32, Vettavalam Road,
ALC Teacher Training Institute (opp)
Tiruvannamalai,
Tamilnadu - 606601
Phone : 04175 251468
கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....