கோவையிலுள்ள பி எஸ் ஜி கலைக்கல்லூரியில் விடுதி மாணவர்களுக்காக வாரம் ஒரு முறை நடத்தப்படும் நிலாமுற்றம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நேற்று மாலை சென்றிருந்தேன். தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் இனிய பணி...
விடுதியில்தங்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஆர்வமுள்ளோர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லோருமே[கிட்டத்தட்ட நூறுபேர் இருக்கலாம்]மிகுந்த ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் உரையைக்கேட்டதோடு ஆழமான பல வினாக்களையும் முன் வைத்தது ஆச்சரியப்படுத்தியது;வளரும் தலைமுறையின் படிப்பார்வம் சமூக அக்கறை ஆகியவற்றின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.[ஆனால் அவர்களில் தமிழ்மாணவர் ஒருவர் கூட இல்லை என்பதில் மனம் கனக்கவும் செய்தது]
சிறப்பு விருந்தினரின் உரையோடு மட்டுமல்லாமல் மாணவர்களில் ஒருவரின் படைப்பை அரங்கேற்றல்,பொது அறிவு வினா விடை,சங்க சித்திரமாய் ஒரு பாடலை விளக்கம் செய்தல்,குறள் விளக்கம் ஆகிய இளையோரின் பங்கேற்புக்கும் இடம் தருகிறது நிலாமுற்றம். நேற்று காலை நடந்த தாலிபானிய தாக்குதலை வீதிநாடக பாணியில் பத்தே நிமிடங்களில் பேராசிரியர் ராமராஜின் துணையோடு மாணவர்கள் நடித்துக் காட்டியது நெஞ்சை நெகிழ வைத்தது,
மாதம் ஒருமுறை இலக்கியக்கூட்டம் நடத்தவே பல அமைப்புக்களும் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் எதிர்காலத் தலைமுறையின் பல்துறை வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு வாரந்தோறும் அரங்கேறி வரும் நிலாமுற்றம் நிகழ்வு மிகப்பல ஆண்டுகளாக இந்தக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது என்பதை அறிந்தபோது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.நாஞ்சில்நாடன் போன்ற படைப்பாளிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
ஆசிரியப்பணியை ஒரு தொழிலாக மட்டுமே கருதி விடாமல்....மிகுந்த ஈடுபாட்டோடும் இளைய தலைமுறை மீது கொண்ட மெய்யான கரிசனத்தோடும் இதை முன்னெடுத்துச்செய்து வரும் பேராசிரியர் ராமராஜ் போன்றவர்கள் இப்போதும் இருப்பதாலேயே - என்னால் இன்னமும் கூட பேராசிரியர் , முன்னாள் பேராசிரியர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடிகிறது...
பேராசிரியர் ராமராஜ்,மாணவப்பொறுப்பாளர் மற்றும் நான் |
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக