துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.12.14

ஆழத்தை அறியும் பயணம்- விஷ்ணுபுரம் விருது விழா-2014

’’ஓர் ஆளுமைக்குப் பண முடிப்போ விருதோ வழங்குவது மட்டுமே விருது விழாக்களின் உண்மையான நோக்கம் அல்ல; விருதை விடவும் அவரைப்பெருமைப்படுத்தக்கூடியது அவரது படைப்புக்களின் ஆழம் நோக்கிச்செல்வதே என்பதைத் தங்கள் ஞானக்கூத்தன் கவிதை வாசிப்பாலும் அவர் குறித்த ஆவணப்படத்தாலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….’’

இந்த ஆண்டு  கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விருது வழங்கும் விஷ்ணுபுரம் விருது விழா[2014]...மிகுந்த துல்லியத்தோடும் கச்சிதமான செறிவான உரைகளோடும் நிறைவாக அமைந்திருந்தது. 

திரு புவியரசு,பாவண்ணன்,சா கந்தசாமி, டி.பி.ராஜீவன்,ஜெயமோகன்,கவிஞர் இசை ஆகியோரின் உரைகள்,திரு ஞானக்கூத்தனின் ஏற்புரை என அனைத்துமே - திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட தீவிரத் தன்மையோடு ஓர் இலக்கியக்கூட்டம் என்பதன் தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கின. திரை இயக்குநர் வசந்தபாலனும் கூடியிருந்த இலக்கிய ஆளுமைகளுக்கிடையே எளிமையோடும் தன்னடக்கத்தோடும் தன் கருத்துக்களை முன் வைத்தார். விஷ்ணுபுர நண்பர் வினோதின் தயாரிப்பில் ஞானக்கூத்தனைப்பற்றி உருவான ‘இலை மேல் எழுத்து’ ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டது. அது,விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் தொப்பியில் மற்றுமோர் இறகு.

விருது விழாவுக்கு முந்தைய நாளே நண்பர்களின் வருகையாலும் எழுத்தாளர்களோடான உரையாடல்களாலும் அனைவரும் தங்கியிருந்த ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் களை கட்டத் தொடங்கியிருந்தது.அன்றுமாலை 27/12/14 அங்கிருந்த அரங்கிலேயே என் ‘யாதுமாகி’நாவல்வெளியீட்டு விழாவும் இருந்ததால் அது தொடர்பான வேலைகளுக்கு இடையே அவ்வப்போது அந்த உரையாடல்களைக்கேட்டுக்கொண்டிருந்தேன் நான். அன்று காலை சற்றுத் தாமதமாகச் சென்றதால் பாவண்ணனோடு நிகழ்ந்த பகிர்வுகளைத் தவற விட நேர்ந்தது.தேநீர் இடைவேளைக்குப்பின் கவிஞர் புவியரசு அவர்களோடான சந்திப்பு மிகவும் சுவாரசியமூட்டுவதாய் அமைந்திருந்தது. வானம்பாடிக்கவிஞரான புவியரசு,தனக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவராய் வேறொரு இலக்கியப்பள்ளியைச் சேர்ந்தவராய் ஞானக்கூத்தன் இருந்தாலும் அவரோடு தான் கொண்டிருந்த நட்பின் ஆழம் பற்றி எடுத்துரைத்தார். புவியரசு அவர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் அது சார்ந்த பல வினாக்கள் அவரிடம் வைக்கப்பட்டன. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டிய அவர் ஆங்கில வழி மொழி பெயர்க்கையில் ஆங்கில மொழியின் நீண்ட வாக்கியங்களையும் தொடர்களையும்  துண்டு துண்டாகச் சிறு சிறு தொடர்களாக்கிப்படிக்க ஏற்ற வகையில் தருவதே நல்ல பெயர்ப்பாக இருக்க முடியும் என்றார்.


கவிஞர் புவியரசு அவர்களோடு... 

மதிய உணவுக்குப்பின் மாலை 4 மணி வரை நாவலாசிரியர் சு வேணுகோபாலுடன் உற்சாகமான விவாதங்களில் நண்பர்கள் ஈடுபட்டனர்; பொய்யான மிகையான பாவனைகளையும்  பாசாங்குகளையும் தவிர்த்த வெளிப்படையும் எளிமையும் வாய்ந்த பேச்சு சு வேணுகோபாலுடையது.அதை ரசித்து மகிழாதவர் எவருமில்லை. எழுத்தில் தீ என்ற சொல் இருந்தால் அது எரியும் –புகையும் மணம் நாசிக்கு எட்ட வேண்டும் என்பது தனக்கு உணர்வான பிறகு ’வேணுகோபால் எழுதினால் அதில் அவனது மண் வாசம் வீசியே ஆக வேண்டும்’ என்று தான் முடிவு கட்டிக்கொண்டதாக மிக இயல்பான மிதமான குரலில் தன் படைப்பனுபவங்களை விவரித்துச்சென்றார் அவர்.
சு வேணுகோபாலுடன் 
மாலை நடந்த எனது நூல்வெளியீட்டுக்குப்பின் மலையாளக்கவிஞர் திரு ராஜீவனோடு உரையாடல் தொடங்கியது.கவிதையில் படிமங்கள் குறித்த சில தெளிவுகளைப்பெற அந்த உரையாடல் உதவியது.


28 காலை தொடங்கி திரு ஜெயமோகனுடன் அவரது வெண்முரசு பற்றியே நண்பர்கள் தொடர்ந்து உரையாடிய வண்ணம் இருந்தனர். சென்னை விமானத்தில் ஏற்பட்ட தாமதத்தால் எழுத்தாளர் சா கந்தசாமியும் ஞானக்கூத்தனும் நேரே விழா அரங்கிற்கே வர வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்களோடான கருத்துப்பகிர்வு கைகூட வாய்ப்பின்றிப்போயிற்று. எனினும் ஞானக்கூத்தனின் பல கவிதைகள் உரக்க வாசிக்கப்பட்டு அவை பற்றிய பல வகை விளக்கங்கள் பலரிடமிருந்தும் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன.


 விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….
ஓர் ஆளுமைக்குப் பண முடிப்போ விருதோ வழங்குவது மட்டுமே விருது விழாக்களின் உண்மையான நோக்கம் அல்ல; விருதை விடவும் அவரைப்பெருமைப்படுத்தக்கூடியது அவரது படைப்புக்களின் ஆழம் நோக்கிச்செல்வதே என்பதைத் தங்கள் ஞானக்கூத்தன் கவிதை வாசிப்பாலும் அவர் குறித்த ஆவணப்படத்தாலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....