துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.1.17

சப்பாத்திக்கட்டையும் சகிப்புத் தன்மையும்-ஒருசெய்தி,சிலகேள்விகள்

[கமலா கல்பனா கனிஷ்கா உரையாடலாக]இனம் விளங்காத சில அதிர்வுகளையும் ஓர் இருப்புக்கொள்ளாமையையையும் என்னுள்கிளர்த்தியிருக்கிறது...

 “உத்தரகாண்டில் ஹால்ட்வனி மருத்துவமனையில் ஒரு பெண் வயிற்றுவலியுடன் சேர்க்கப்பட்டார். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் சப்பாத்தி தேய்க்கும் கட்டையைப் பிறப்புறுப்பில் சொருகிவிட்டார் தன் கணவர் என்று மருத்துவரிடம் அந்தப் பெண் சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, 40 செ.மீ. நீளமுள்ள சப்பாத்திக் கட்டையை எடுத்திருக்காங்க. ‘இப்படியொரு கொடூரத்தை நாங்க கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெண்ணின் உள் உறுப்புகள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. காவல்துறைக்குத் தகவல் சொல்லிட்டோம். இந்தப் பெண்ணின் கணவர் மாயமாகிவிட்டார்’னு தலைமை மருத்துவர் சொல்லிருக்கார்”




செய்தி படிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மீறியதாய்ச் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன




‘90களில் நான் பேராசிரியப்பணியில் இருந்த காலகட்டத்தில் பயிற்சிப்பணி மனை ஒன்றில் கலந்து கொள்வதற்காக பங்களூரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் பேராசிரியைகளும் பங்கேற்ற அந்தப் பயிற்சிக்காலத்தில் இரவு நேரங்களில் உணவு முடிந்து உறங்கச்செல்லும் முன் அவரவர்  சொந்த வாழ்க்கை அனுபவங்களை மனம் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்வது வழக்கம். மும்பை கல்லூரி ஒன்றில் சமூகவியல் பேராசிரியையாக இருந்த...டாக்டர் பட்டம் பெற்ற ஒரு தோழி அப்போது எங்களோடு பகிர்ந்து கொண்ட செய்தி இன்னும் முள் உறுத்தலாக என் நெஞ்சுக்குள். வசதியான குடும்பத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் அந்தக்கால கட்டத்திலேயே ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர் நிர்வாகப்பொறுப்பு ஒன்றில் இருந்தார். இரண்டு மகள்கள். குடும்பத்தோடு கூட வசித்து வந்த மாமியாருக்குப் பேரன் வேண்டுமென்ற தீராத ஆசை.அதை நிறைவேற்றவே மீண்டும் ஒரு முறை கருத்தாங்கிய அந்தத் தோழிக்கு அப்போதும் பெண் குழந்தையே பிறக்க , மாமியார் எரிச்சல் அடையத் தொடங்கியதோடு வீட்டிலிருக்கும் பிஞ்சுப்பெண்குழந்தைகளிடமும் அந்த வெறுப்பு விஷத்தைக் கக்கத் தொடங்கினார். அதோடு விடாமல் வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டும் என்ற வற்புறுத்தலும் பல வழிகளில் விடாமல் தொடர்ந்தது. அதைத் தட்ட முடியாத அந்தத் தோழி பல முறை கருச்சுமக்க ஆயத்தமானார்; ஆனாலும்  மீண்டும் பெண்குழந்தைகளே பிறக்க நேர்ந்தால் வீட்டாரின் துன்புறுத்தலுக்கும் வசைக்கும் அவை ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்ப்பதற்காகத் தன்னையே சுய வதை ஒன்றுக்கு ஆளாக்கிக்கொண்டார் அவர். சட்ட பூர்வமாகத் தவறுதான் என்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் ஸ்கேன் நிலையம் ஒன்றை நாடிச்சென்று , தன்னுள்  வளரும் கருவின் பாலினம் பெண் என்பது தெரிய வந்தால் வீட்டுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்து கொண்டு அதை அழித்துக்கொள்வார் அவர். கருக்கலைப்பும் கருச்சுமப்பும் இவ்வாறு தொடர்ந்து கொண்டே போனதில் அவரது உடல்நிலை மிக மோசமான சீர்குலைவுக்கு ஆளானதே  இறுதியில் எஞ்சியது..

நான் அறிந்த மற்றுமொரு உண்மைச் சம்பவம் மிகச்சிறந்த அறிவாளி என்ற  அங்கீகாரத்தையும் அவரது மாணவர்களிடம் பெருமதிப்பையும் பெற்றிருந்த  ஆண் பேராசிரியர் ஒருவரைப்பற்றியது. அவரது  முதற்குழந்தை, மூளை வளர்ச்சி குன்றியதாகப்  பிறந்து விட ,அதற்கான முழுமையான காரணகர்த்தா தன் மனைவி மட்டுமே என்று முடிவு கட்டிக்கொண்ட அந்தப்பெரிய மனிதர், வாழ்நாள் முழுவதும் தன் மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்து அந்தக்குழந்தையை ஏறெடுத்து நோக்குவதையும்  தவிர்த்தார். குழந்தைக்காகவே உயிரைப்பிடித்துக்கொண்டு அதுவரை வாழ்ந்து வந்த அவரது மனைவி அந்தக்குழந்தை  இறந்த பத்தே நாட்களில் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களும் இந்துவில் வெளியான செய்தியும் எடுத்துரைக்கும் குடும்ப வன்முறை ஒரு புறம் இருக்க என்னுள் மூண்டெழும் வினா வேறு வகையாகச் செல்கிறது...

சப்பாத்திக்கட்டையைத் தன் உடலுக்குள்  செருகும் வரை அந்தப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தது ஏன்...?  உடல் சார்ந்த கொடூரமான அந்த நிகழ்வுக்குத் தன்னிச்சையான சிறுஎதிர்ப்பையும் கூட அந்தப்பெண்ணால் காட்ட முடியாமல் அவளைத் தடுத்ததுதான் எது  ? அது பற்றிய விவரங்கள் செய்தியில் விரிவாக இல்லையென்றபோதும் வயிற்றுவலி வந்த பிறகே மருத்துவமனையில் அவர் சேர்ந்திருப்பது குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட அவர் காட்டியிருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதன் பிறகும் கூட அந்த வாழ்விலிருந்து வெளியேற முடியாமல் அவளைத் தடை செய்தது எது?
 பொருளாதாரத் தற்சார்பின்மையைக் காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் கூலி வேலை செய்தோ நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவியோ கூடத் தன்மானத்தோடு தன்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் ஏற்படாதது ஏன்? அதை அவளிடம் ஏற்படுத்தத் தவறியது யார்?

நளாயினி காலத்து சகிப்புத் தன்மை காலங்காலமாக  அந்தப்பெண்ணுக்குள் மூளைச்சலவையாகிக் கடத்தப்பட்டது இதற்கான காரணமா...?’கல்லானாலும் கணவன்’ ..அவனிடம் அடி வாங்குவதே பேரானந்தம்..அப்படி அடி வாங்கியே செத்தாலும் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் நம் குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே  ஆளாக்கிய அவளது பிறந்த வீடு இதற்கான பின்புலமா...? வாழ்க்கை பற்றிய விரிவான கண்ணோட்டமும் புரிதலும் அவளுக்குள் ஏற்படாதபடி குறுக்கிட்ட வேறு தடைகள்தான் என்னவாக இருக்க முடியும்?

பொருளாதார அடிப்படையில் ஆணைச் சார்ந்தாக வேண்டியிருப்பதை மட்டுமே  இதற்கான முழு முதல் காரணமாகக் காட்ட முனைந்தால் நான் குறிப்பிட்டிருக்கும் முதல் உண்மைச்சம்பவத்தில் உயர்கல்வியும் பொருளாதாரத் தற்சார்பும் பெற்றிருந்தவரும் சமூகவியல் பாடத்தில் ஆண் பெண் சமத்துவத்தைக் காலம் காலமாக வகுப்பறையில் கற்பித்தவருமான  அந்தப்பேராசிரியத் தோழியின் கோழைத்தனமான நடவடிக்கைக்குக்காரணமாக  எதை முன் வைப்பது?

சப்பாத்திக்கட்டை செருகப்பட்ட கிராமத்துப்பெண்ணைவிடவும் கொடூரமான முறையில் தன் கணவனால்  வலுக்கட்டாயமாக வாயில் அமிலம் ஊற்றப்பட்டுத் தொண்டையெல்லாம் புண்ணாகி இறக்கும் தருவாயிலும் கூடக் கணவனைக்காட்டிக்கொடுக்காமல் தானே அப்படிச்செய்ததாகத் தன் மீதே பழி சுமத்திக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபடி மரித்துப்போனவரும்,... பெண் சுதந்திரம் நாடிக்காலமெல்லாம் கவிதை தீட்டியவருமான என் இன்னொரு தோழியின் செயலை என்னால் எதைக்கொண்டு  நியாயப்படுத்துவது சாத்தியம்?

ஆண்முதன்மை பெற்ற சமூக அமைப்பே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது என்பதும், அதன் ஒரு பகுதியே  குடும்ப வன்முறை என்பதும் வரலாற்று உண்மைகள்தான்...

1903ஆம் ஆண்டு நாவலாசிரியர் அ மாதவையா எழுதிய ‘முத்துமீனாட்சி’ நாவலில் மிக மிக இளம் வயது கொண்டவளான தன் மருமகள் விரைவில் கருவுற வேண்டுமென்பதற்காக உயிருள்ள பிள்ளைப்பூச்சி ஒன்றை விழுங்குமாறு அவளது மாமியார் வற்புறுத்திய சம்பவம் ஒன்றை அவர் விவரித்திருக்கிறார்...

அவையெல்லாம் கடந்த காலத்தின் கசப்பான நிஜங்கள்...

அவற்றின் கொடுமைகளிலிருந்தெல்லாம்  விடுபடத் தொடங்கியவர்களாய்ப் புதிய சிந்தனை மாற்றங்களோடு  வெகுதொலைவுகளை நோக்கிப் பெண்கள் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. தனக்கு நேரும் கொடுமைகளுக்காகக் கழிவிரக்கம் கொண்டு புலம்புவதோ...சமூக அமைப்பின் கோளாறை மட்டுமே பெரிதுபடுத்திச் சுட்டிக்காட்டி அதன் மீது  பழியைப் போட்டு விட்டுத் தான் தப்பித்துக்கொள்ளப்பார்ப்பதும் 21 ஆம் நூற்றாண்டுப்பெண்ணின்   நிலைப்பாடுகளாக இனிமேலும் தொடர வேண்டியது அவசியம்தானா?

தன் கல்வியை, தான் விரும்பும் பணியை.., தன் வாழ்வைத் தானே முடிவு செய்யும் திடம்.., தன் துணையை எப்படித் தேர்வது../ஒதுக்குவது/ அல்லது தேராமலும் கூட இருப்பது என்பதைத் தானே தீர்மானிக்கும் நெஞ்சுரம்..., தன் கருப்பை இருப்பது தன் வசத்தில் மட்டுமே என்பதை உணர்ந்திருக்கும் உளத் திட்பம் இவையே இந்த நாளின் தேவைகள் என்பதை இன்றைய பெண் எப்போதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறாள் ?

சமூக மறுஉற்பத்தி தடையின்றித்  தொடர்வதற்கான  கருவியாக மட்டுமே ஒரு காலத்தில்  பெண் எண்ணப்பட்டு வந்திருக்கிறாள் என்பது பழங்கதை.

இன்று அவள்  உற்பத்தி செய்தாக வேண்டியவை வருங்கால வாரிசுகளை மட்டும் இல்லை..எவரது  துணையோ  சார்போ  தேவைப்படாமல் தன்னிடம் உறைந்திருக்கும்  அளப்பரிய சக்தியை தன்னுள்ளே பொங்கிப் பெருகும் ஆற்றலின் ஊற்றை ..அவள் தானாகவே  மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்..தன்னை தன் சுயத்தை இனம் கண்டு மீட்டெடுத்தபடி  தேவையற்ற அச்சங்களிலிருந்து தன்னை அவள் விடுவித்துக் கொண்டாக வேண்டும்.. அதுவே  இன்றைய காலத்தின் தேவை என்பதை அவள் எப்போதுதான் விளங்கிக்கொள்ளப் போகிறாள் ?

இவை முடிந்த முடிவுகள் இல்லை...
சிந்தனைக்கான சில தேடல்கள் மட்டுமே...

’நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி’என்று புதுமைப்பெண்ணுக்கு பாரதி முன்வைக்கும் நெறியும் கூட  இதுவாக இருக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது...
   

29.6.16

தற்கொலை -ஒரு பகிர்வு



இன்று ஒரு துக்க நாள்...

அழுகிய சமூகத்தின் கொடூரமான வக்கிரப்பிடியில் கருகிய, இரு மலர்களாய் ஸ்வாதியும் வினுப்பிரியாவும் முன் நிற்க .... காலை முதல் ஏதும் செய்யத் தோன்றாமல் மரத்துக்கிடக்கிறது மனம்;உறைந்து நிற்கின்றன உணர்வுகள். 

கொலை,தற்கொலை இவற்றைவிடவும்கொடூரம்; ஸ்வாதியை நெட்டைமரங்களெனப் பல மணிகள் , கண்ணெடுக்காமல்  விட்டுச்சென்றதும்  எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கும் குரூர வக்கிரமாய் வினுபிரியாவின்   தந்தையிடம் செல்லிடப்பேசியை பேரம் பேசிய காவலரின் அற்பத்தனமுமே.

ஒரு கொலை; ஒரு தற்கொலை![தினமணி தலையங்கம்]

.’’’ஊமை சனங்களடி!’’என்ற பாரதிவாக்கில்தான் எத்தனை உள்ளொளி !

நான் கல்லூரிப் பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி இறுதி [ இளங்கலை இறுதி வகுப்பு முதல் முனைவர்பட்டம் வரை ] முடிக்கும் மாணவியரைத் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியைக் கல்லூரியின் கடைசி நாளன்று பெற்ற பின்பே  அவர்களை  வழியனுப்பி வைப்பது என் வழக்கம்.’’வாழ்வின் ஏதோ  ஒரு கட்டத்தில் தோன்றக்கூடும் அந்தவகை எதிர்மறைச்சிந்தனையின்போது ஒரே ஒரு நொடி  கண் மூடி  வகுப்பறையில் நான் கேட்ட வரத்தை நினைவில் கொள்ளுங்கள்’’போதும்’’ என்பேன். வகுப்பேநெகிழ்ந்து கண்ணில்நீர் சொரிந்து நிற்கும் புனிதக் கணம் அது. அவர்கள் அந்தத் தூய கணத்தை நினைவுகூரும் அந்த ஒரு நொடிக்குள் மரணத்தின் பாதையிலிருந்து, அவர்களின் மனம் விலகி விடக்கூடும் என்ற எண்ணமும்  குறைந்த பட்சம்  என் மீது வைத்திருக்கும் அன்பினால் அவர்கள் அதை ஏற்கக்கூடும்  என்னும் நம்பிக்கையுமே என்னை அதை நோக்கி இயக்கியவை.   சமூக ஊடகங்கள் அதிகம் மலிந்து போகாத அந்தக்காலகட்டத்திலேயே ,ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாணவியின் தற்கொலை ஏதேனும் ஒரு காரணத்துக்காகநிகழ்ந்து, ஒவ்வொரு மலராய் உதிரும் சோகத்தை மௌனசாட்சியாகக் கண்டு மனம் நொந்த நான் அந்தப்பணியை ஒரு மாறாக்கடமையாகவே செய்து வந்தேன்... இப்போதும் அது குறித்து மாணவியர் கடிதங்கள் எனக்கு வருவதுண்டு,
அதனாலேயே மனம் மிக வலிக்கிறது...

இது தொடர்பாக நான் பேசுவதை விடவும்  ,இது தொடர்பாக இன்று விடியலில் என் வாசகி  ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலைப்பகிர்வது மேலும் பொருத்தமாக இருக்கக்கூடும்.என்று எனக்குப்படுகிறது. 

அடுத்த தலைமுறையின் சிந்தனை  வேகம் இன்னும் கூட வீரியம் மிக்கது என்ற எண்ணத்தோடு அந்தப்பகிர்வு...

பள்ளி மாணவியின் சுய மரணம் குறித்து....
வாசகியின் வார்த்தைகளில்....

சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு ஆபாச புகைப்படம் காரணம் பள்ளி மாணவி செய்து கொண்ட தற்கொலை குறித்துத் தாங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கல்லுரிப் பருவத்தில், ஒரு தினம் என் அம்மாவிடம் ஒரு பெண்மணி வந்து,
"உங்க பொண்ணு காலேஜ் போகாம மலைல திரியறதா ஒரு பேச்சு இருக்கே?" என்று வம்பு விசாரித்தார்.
என் அம்மா பொதுவாக சற்று பயந்த சுபாவம் கொண்ட அமைதியான பெண்மணி. வம்பு பேசிய பெண்ணிடம் 
"அப்பிடித்தான் ஊர் சுத்துவா, உங்களுக்கு என்ன வந்துது?" என்று கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நான் அம்மாவிடம், நீ என்னை அல்லவா கோபிக்க வேண்டும் என்று கேட்டேன். குறைந்தபட்சம், முண்டன்துறைப் பகுதிக்குப் போனேனா என்றாவது விசாரிக்க வேண்டும் என்றேன்.
"சோலி இல்லை?" என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க நகர்ந்தார். அம்மாவிடம் என்னைக் குறித்து என்று இல்லை, எந்த ஒரு பெண்ணைக் குறித்தும் இத்தகைய வம்பு பேசி யாராலும் ஜெயிக்க இயலாது.
(இப்பொழுது அம்மாவுக்கு வயது எம்பது ஆகிறது. கொஞ்சம் பலஹீனமாகி இருந்தாலும், இந்த சுபாவம் மாத்திரம் மாறவில்லை.)
பிறகு ஒரு தினம் வம்பு விசாரித்த பெண்மணியின் மகள் ஏதோ வம்பில் மாட்டிக் கையும் களவுமாக பிடிபட நேர்ந்தது. அக்கம் பக்கம் எல்லாம் அவமானம் செய்யும்பொழுது அம்மாதான், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தியது. நடந்ததை மறந்து விட்டு படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்தும்படி, என்னோடு படிக்கும் அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண்ணின் அம்மாவிடமும், சொந்தக் குழந்தையைப்புரிந்து கொண்டால் பிறத்தியார் குழந்தை மீதும் நம்பிக்கை வரும் என்று கேட்டுக் கொண்டார். என் தந்தையும் அம்மாவின் அதே மனநிலை கொண்டவராகத்தான் இருந்தார். ஆகையால் என்னால் படிப்பிலும், வாசிப்பிலும் கவனம் செலுத்த முடிந்தது. மதுரை காமராசர் பல்கலையில் முதல் ஆறு ராங்குக்குள் இளங்கலை அறிவியலில் மதிப்பெண் வாங்கி ஜெயித்து மேலே மேலே என்று படிக்க முடிந்தது. பாடத்துக்கு வெளியேயும் நிறைய வாசிக்க முடிந்தது.
மேடம், நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். என் அம்மா போன்ற ஒரு கிராமத்துப் பெண்மணிக்கு இந்த மனநிலை இருக்கிறது. தேவையற்ற வம்புகள், சுவர் கிறுக்கல் இதெல்லாம் ஒதுக்கித்த தள்ள வேண்டிய விஷயம் என்று. ஒரு வசதியும் இல்லாத பின்தங்கிய மலையோர தமிழக கிராமத்தில்  இது சாத்தியம் என்றால் தகவல் தொடர்பு உலகத்தில் இது மேலும் அல்லவா சாத்தியமாகி இருக்க வேண்டும்? ஒரு மாணவனை சிறுநீர் கழிக்கும்பொழுது படம் பிடித்துப் போட்டால் அவன் கவலைப் படுவதில்லை. மாணவி மாத்திரம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?

நான் என் சொந்தக்காரக் குழந்தைகளுக்கு இந்த வேண்டுகோளை விடுத்து இருக்கிறேன்.

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு வேண்டுகோள்:
இணையத்தில் வெளியாகும் திருட்டு போட்டோவைக் கண்டெல்லாம்  பயப்படாதீர்கள். உங்கள் உடல் ஊராருக்கு காட்டப்படுவது அவமானம் அல்ல என்று உணருங்கள். உடலே ஒரு ரசாயனம்தான். ஆகவே புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் படம் பிடித்துப் போடும்பொழுது யாராவது அவமானப் படுவார்களா? இருப்பினும், உடலை உடல் என்றே உணரும்பட்சத்தில், நீங்கள் இந்த அத்து மீறலை அனுமதிக்காதீர்கள். உங்கள் முகமோ அல்லது முகத்தோடு சேர்ந்து உடலோ, தரக்குறைவான புகைப்படங்களாக வெளியிடப்பட்டால், அது குறித்து முதலில் காவல் துறைக்கு புகார் அளியுங்கள். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,மேல் முறையீடு, ஊடகம் என்று செல்லுங்கள். திருடனுக்குப் பாடம் கற்பித்து உங்களைப் போன்ற மற்ற பெண்களைக் காப்பதில் உங்களுக்கே ஒரு மனநிறைவு வருகிறதா இல்லையா என்று பாருங்கள்.

உங்கள் உடல் உறுப்பு சம்பந்தப் பட்ட தரக்குறைவான புகைப்படமோ, காணொளியோ இணையத்தில் வெளியிடப்பட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வது குறித்து பயந்து நடவடிக்கை எடுப்பதெல்லாம் சினிமா கதை. நிலவரம் அப்படி அல்ல. நிலவரம் அப்படியே ஆனாலும் சமூக வலைத்தள யுகத்தில்  நிலவரம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நீங்கள், அசிங்க புகைப்படம், கக்கூஸ் சுவர் கிறுக்கல் இவற்றிற்கெல்லாம் பயந்து தற்கொலை செய்வதோ, அல்லது சக்கைப்போடு போட்டு தமிழ் தொடங்கி இந்திய மொழிகளில் பலவற்றிலும் வெளியான த்ரிஷ்யம் என்ற மலையாள சினிமாவின்  தந்தை போல் கொலையை மறைத்து, காவல் துறையை மாட்டவைப்பதோதான் அவமானம், அசிங்கம். குழந்தைகளே விழித்தெழுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....