துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.5.09

புனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்


முன் குறிப்பு:


'புதிய பார்வை'
இதழில் வெளியான சங்கிலி என்ற என் சிறுகதையை நான் முதலில் சூட்டிய பெயரான 'தடுத்தாட்கொண்ட புராணம் - பாகம் இரண்டு'என்ற பெயரில் 18.03.09 தேதி இட்ட வலைப் பதிவில் வெளியிட்டிருந்தேன்.அச் சிறுகதை குறித்து 'இந்தியப் பல்கலைத் தமிழாசிரியர் மன்றம் 'நடத்திய ஆய்வுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டுப் பின் 2006 ஆய்வுக்கோவையில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் திரு மதியழகனின் திறனாய்வுக் கட்டுரையை இங்கு வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்.பெண்ணிய அணுகு முறையையும் , என் சிறுகதை எந்த நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக உள் வாங்கிக் கொண்டு எழுதிய கட்டுரையாளர் திரு மதியழகனுக்கு என் நன்றி.

தன் படைப்பு சரியான புரிதலுடன் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை அறிய நேர்வது ஒரு படைப்பாளிக்குச் சுகம் தரும் இனிய அனுபவம். அதை எனக்குச் சாத்தியமாக்கி அதைக் கட்டுரையின் ஆய்வுப் பொருளாகவும் தேர்ந்து கொண்ட அவருக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இனி மதியழகனின்கட்டுரை........

புனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்

புனிதம் என்று சமூகம் எதனைக் கருதுகிறதோ அதனைச் சிதைப்பதும் , அதன் மூலமாகப் புதிய விழுமியங்களை உருவாக்குவதும் , இன்றைய நவீனப் படைப்புக்களில் இழையோடுகின்ற பொது அம்சம்.காலங்காலமாக இம் மண்ணில் வேரூன்றிப் போன ஆதிக்க மரபுகளை அழித்தொழிப்பதும் , பயன்பாட்டு நோக்கில் மீட்டுருவாக்கம் செய்வதும் பெண்ணியச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கது. அவ் வகையில் , மூவர் முதலிகளில் ஒருவரான சுந்தரரின் ஆணாதிக்க உறவுகளைச் சிதைத்துவிட்டுப்பெண் தனக்கான அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே எம்.ஏ.சுசீலாவின் ' 'சங்கிலி ' -( தடுத்தாட்கொண்ட புராணம் பாகம் இரண்டு )என்ற சிறுகதையின் மையப் பொருளாக அமைகிறது.

பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாக்கும் கவசமாகப் புராணக் கதைகளும் , அப் புராணக் கதைகளை உற்பத்தி செய்யும் சமயம் என்னும் நிறுவன அமைப்பும் கிழடு தட்டிப் போன சமூக அமைப்பில் வேரூன்றியுள்ளன.இச் சூழலில் , பெண்ணைக்காம நுகர்ச்சிப் பொருளாகப் பார்க்கும் புராணத் தொன்மத்தைக் கட்டுடைக்கும் நோக்கில் இச் சிறுகதை புனையப் பெற்றுள்ளது.

பெண் சார்ந்த தொன்மங்களைக் கட்டுடைத்துப் பெண் தனக்குரிய விடுதலையைத் தனக்குள்ளேயிருந்து தொடங்கிடும் வாழ்வியல் தேடலை இக்கதை அர்த்தமாக்கியுள்ளது. பெண் தனக்கான வாழ்க்கையைத் தனக்குள்ளே தேடிக் கொள்வதோடு ஆணாதிக்கச் சொல்லாடல்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் - ஆதிக்க உணர்வோடு செயல்படுவது ,இறைவன் , கணவன் ,தந்தை என எவராக இருப்பினும் அதனைக்கலகக் குரலோடு எதிர்கொள்வதாகவும் இக் கதை புனையப்பட்டுள்ளது.
சமூக அமைப்பில் திருமணம் என்பது புனிதமாகவும் ,அதனைக் காப்பாற்றும் குடும்பம் என்ற அமைப்பு நிறுவனமயமாக்கப்பட்டதாகவும் அமைந்துள்ளது. குடும்ப
உறவுகளில் ஆண் அதிகாரம் மிக்கவனாகவும் , பெண் சேவகம் செய்யும் அடிமையாகவும் , இழிபிறவியாகவும் கருதப்பட்டு வந்துள்ளனர்.

''எனக்குப் பெயரில்லை ....முகவரியும் இல்லை....பிறந்தபோது ஏதோ எனக்கு ஒரு பெயர் இடப்பட்டிருக்கலாம் . ஆனால் ,காலம் அதையெல்லாம் அழித்துத் துடைத்து என்றோ தூக்கி எறிந்து விட்டது''
என்ற சடங்கவி மகளின் கூற்று , முகங்களற்றுப்போன பெண்ணின் அடையாளமாக முன் வைக்கப்படுகிறது. ஆணின் பார்வையில் பெண்ணுக்கான முகவரி என்பது தேவையில்லாத ஒன்றாகவும் , தன் சுயத்தை / அடையாளத்தை அழித்துக் கொண்டு வாழ முற்படுவதே அவளது இயல்பாகவும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

பெண் , தனக்கான தேடலைத் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவதும் ,ஆதிக்க மரபுக்கு எதிரான செயலாக்கங்களை விதைப்பதும் இச்சிறுகதையில் மின்னல் கீற்றாக வெளிப்படுகின்றன. சைவத்தின் நாயகரான சுந்தரரின் திருவிளையாடல்கள் , இறைவனின் அனுமதியோடு பெண்ணை அடக்கியாள்வதற்குரிய ஒரு நுகர்வுப்பொருளாகப் பார்க்கின்றன.காலங்காலமாகப் பெண் குறித்த மதிப்பீடுகள் அவளை 'ஒர் உயிரி 'என்ற அளவில் கூடக் கருதவில்லை. இச் சூழலில் இக் கதை பெண்ணியக் குரலாகவும் , மீட்டுருவாக்கக் களனாகவும் அமைகிறது.

சடங்கவி மகள் மீண்டும் உயிரோடு வந்து சங்கிலியைச் சந்திப்பதும் , சுந்தரரின் தடுத்தாட்கொண்ட சூழ்ச்சியை வெளிப்ப்டுத்துவதும் கதையில்முக்கிய திருப்பு முனைகளாக இடம் பெற்றுள்ளன.
''ஏமாந்தவர்களாகவும் , சிந்தனை மழுங்கிப்போனவர்களாகவும் நம்மைப் போன்றவர்கள் இருக்கிற வரைக்கும் இப்ப்டிப்பட்ட நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்''
என்ற சடங்கவி மகளின் கூற்று , பெண் தனக்கான வாழ்வைத் தானே தேர்ந்து கொள்வதை வெளிப்படுத்துகிறது.

பெண்ணுக்குப்பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சியை வென்றெடுக்கும் பெண்ணியக் குரலைச் சங்கிலியார் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.சடங்கவி மகளும் , சங்கிலியும் பரவையைத் தடுத்தாட்கொள்ளப் பயணப்படுகின்றனர். இறைவன் சுந்தரனைத் தடுத்தாட்கொள்ளும் பெரிய புராண நிகழ்வு ,இங்கே மீட்டுருவாக்கமாக - பரவையைத் தடுத்தாட்கொள்ளும் பெண்ணியப் பதிவாக அமைகிறது.

இருவரும் பரவையைத் தடுத்தாட்கொள்வது என்பது , சுந்தரன் என்னும் ஆணின் செயல்பாட்டிற்குத் தடையாக - பெண்ணைக் காம நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கப் போக்கிற்குப் பெண் கொடுக்கும் எதிர்வினையாக - கலகக் குரலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திரு மு. மதியழகன்,
நாராயண குரு கல்லூரி,
கோயம்புத்தூர்.

இணைப்பு:

'தடுத்தாட்கொண்ட புராணம் - பாகம் இரண்டு'

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....