துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.5.09

உஷாதீபனின் 'திரை விலகல்'

சமகால சிறுகதைப்போக்கில் மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கத்தால் , பல புதிய மாற்றங்களும் , பல புதிய 'இஸ'ங்களின் பாதிப்பும் நேர்ந்திருந்தபோதும் - நவீனத்துவம் ,பின் நவீனத்துவம் ,மாய யதார்த்தவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் - யதார்த்தவாதச் சிறுகதைகளுக்கான இடம் எப்போதும் போலவே மதிப்பிழக்காமல் இருந்துகொண்டுதான் இருக்கிறது . இதை மெய்ப்பிக்கும் வகையில் வெற்றிகரமான சிறுகதைகளின் தொகுப்பாக அண்மையில் வெளி வந்திருக்கிறது, எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்களின் 'திரை விலகல்' என்னும் சிறுகதைத் தொகுப்பு.

திரு உஷாதீபன் , பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் நின்று நிலை பெற்றிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பு மேலாளராக மதுரையில் பணியாற்றும் இவர் , 'தீபம்' நா.பார்த்தசாரதியால் இலக்கியத் துறைக்கு ஈர்க்கப்பட்டவர்.கி.வெங்கடரமணி என்ற தன் இயற்பெயரை , மனைவியின் பெயரை முன் ஒட்டாக்கி , அத்துடன் தீபத்தையும் இணைத்து உஷா தீபன் எனப் புனைபெயராக்கிக் கொண்டவர்.உள்ளே வெளியே, பார்வைகள், நேசம் , வாழ்க்கை ஒரு ஜீவ நதி , நினைவுத்தடங்கள்,,சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை ஆகிய ஏழு சிறுகதைத் தொகுப்புக்களும் புயலுக்குப் பின்னே அமைதி , மழைக்கால மேகங்கள் முதலிய குறு நாவல் தொகுதிகளும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள். இலக்கியச் சிந்தனை , திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய பல அமைப்புக்களிடமிருந்து தமது படைப்புக்களுக்கான அங்கீகாரத்தையும் ,பரிசுகளையும் பெற்றிருப்பவர்.

18 சிறுகதைகளைஉள்ளடக்கியுள்ள இவரது புதிய தொகுப்பு 'திரை விலகல்' .பொதுவாக இவ்வாறான தொகுப்புக்களின் வழக்கமான தலைப்பிடும் போக்குக்கு முற்றிலும் மாறாகத் திரை விலகல் என்று ஒரு சிறுகதை இத் தொகுப்பில் எங்குமே இல்லை.நூல் முழுவதையும் வாசித்து முடித்தபிறகுதான் இப் பொதுத் தலைப்பு நூலின் எல்லாக் கதைகளுக்குமே பொருத்தமாக இருப்பதையும்,வாழ்வின் அற்பக் கணங்கள் தொடங்கி.......அபூர்வமான கணங்கள் வரை எல்லாத் தருணங்களிலுமே - ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத் திரை விலகி வாழ்வியல் தரிசனங்களைப் பெறுவதை இத் தலைப்பு பூடகமாகச் சுட்டுகிறது என்பதையும் நம்மால் உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.பாத்திரங்களைச் சிறப்பாக வார்க்கும் கலையில் இப் படைப்பாளி , கைதேர்ந்தவராக இருப்பதைப் பெரும்பான்மையான கதைகள் மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன. மிகப்பெரிய கிழியில் ஓவியம் தீட்டாமல் , நுணுக்கமான ஒரு சிறிய தந்தத் துணுக்கினுள் சிற்பம் வடிப்பதைப் போன்ற சிறுகதை ஊடகத்தில் சாதிப்பதற்கு அரியதான இவ்வியல்பு இவருக்கு எளிதாக வசப்பட்டிருப்பதை....
'திருட்டுமணி'யின் படிநிலை வளர்ச்சி கூறும் 'கல்லாமல் பாகம் படும்',
சுதந்திர ஜீவியாக வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் வெங்கடாசலத்தின் மனநிலைப் படப் பிடிப்பான 'வெளி தேடும் பறவை',
தவணைக்கு அடிமையாகும் பலவீன மனிதரின் சித்திரமான 'திருவாளர் சாம்பமூர்த்தி',
வளையல்காரர் ஒருவரை அப்பட்டமாக மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் 'நிலை திரும்பும் தேர்' ,
மனித உணர்ச்சிகளை மரக்கடித்துக் கொண்டு இயந்திரமாகிவிட்ட மனிதனைச் சித்திரிக்கும் 'பூக்காமல் ஒரு மரம்'
ஆகிய படைப்புக்கள் அற்புதமாக முன் வைக்கின்றன.

மனிதம் - மனித நேயம் இவரது கதைகள் பலவற்றின் அடிநாதமாக உறைந்திருக்கிறது.
''உழைத்து , உருகி , செத்துச் சுண்ணாம்பாகி வீடு திரும்பிப் பிறகு உலை வைத்து அதற்குப்பின் உயிரை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டியிரு''க்கும் அடி மட்டத் தொழிலாளிகளுக்காக இவரது பல படைப்புக்கள் உருகி ஓலமிடுகின்றன.
தெருவில் உப்பு விற்றுக் கொண்டு போகிறவனை வீட்டின் தேவை தெரியாமல் அழைத்து விடுகிறான் ஒரு கணவன். மனைவி அதை மறுதலித்து விடுவாளோ...,கடும் வெயிலில் உப்பு மூட்டைகளை சைக்கிளில் கட்டி எடுத்து வந்த அந்தத் தொழிலாளியின் பாடு வீணாய்ப் போய் விடுமோ என அவன் உள்ளம் படும் பாடு 'கடல் மல்லிகை' என்ற நல்ல சிறுகதையாக உருவெடுத்திருக்கிறது. அந்தக் கணவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் - அப்போதைக்கு உடனடித் தேவை இல்லாவிட்டாலும் கூட அவனிடம் உப்பு வாங்குவதன் வழி , ஆர்ப்பாட்டமின்றி ,மிக யதார்த்தமாகத் தன் இரக்க உணர்வை வெளிப்படுத்தி விடுகிறாள் அவன் மனைவி.
'நா' என்ற தலைப்பிலமையும் சிறுகதையிலும் கூடச் சலவைத் தொழிலாளியிடம் சீறிப் பாயும் மனிதமற்ற கணவனுக்கு மாற்றாகத் துணி கொண்டு வரும் சிறுவனை அன்போடு அரவணைப்பவளாக இருப்பது அவனது மனைவியே.செயற்கையான போலித்தனங்கள் அற்ற - இயல்பான அன்பும் ,நேயமும் பெண்களிடம் பொதிந்திருப்பதைப் போகிற போக்கில் இவரது கதைகள் படம் பிடித்துக் கொண்டு போவதைக் காண முடிகிறது.

முதுமை என்பது , நிராகரிப்புக்கும் ,நிர்த்தாட்சண்யமான விலக்கத்திற்கும் உரியதல்ல என்னும் அழுத்தமான இவரது சிந்தனை 'வெளி தேடும் பறவை', 'அப்பாவின் நினைவு தினம்' என இரு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது. பாவண்ணன் எழுதிய 'முதுமையின் கோரிக்கை' என்ற கட்டுரையையும், நீல பத்மநாபனின் 'இலை உதிர் கால'த்தையும் இப் படைப்புக்கள் ஒரு கணம் மனக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றன.

சிறுகதைக்கே சிறப்பான உத்தியாகச் சொல்லப்படும் 'இறுதிக் கட்டத் திருப்பம்' இவரது சில கதைகளில் - துருத்திக் கொண்டு நிற்காமல் , கதையின் போக்கிற்கேற்றபடி, அதன் அழகியல் குலையாமல் வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 'சரஸ்வதியின் குழந்தைகள்' அதற்குச் சரியான ஒரு உதாரணம்.
நூலகத்திலும் , புத்தகக்கடையிலும் மதிக்கப்படுபவனாக இருக்கும் ஒருவன் புத்தகத் திருடனாக இருக்கக் கூடும் என்ற முடிச்சு சற்றும் எதிர் பாராதது. ஆனாலும் அவன் படிக்கும் புத்தகமே அவனுள் மன மாற்றத்தைச் சாதித்துத் திருடிய புத்தகத்தத் திருப்பி வைக்குமாறு அவனைத் தூண்டி விடுவது கதைப் போக்கோடு ஒத்த திருப்பமாகவே அமைந்திருக்கிறது.
'ஆகி வந்த வீடு' கதையிலும் இதே வகையான உத்தியைக் காண முடிகிறது.

நவீன உலகம் , கணத்துக்குக் கணம் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருப்பது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவன் தேங்கிப் போய் விடுகிறான். ஊடகங்களின் பெருக்கம் அரசியல் மேடைப் பேச்சாளனை, அவன் தொழிலை..புகழைப் பாதிக்கிறது( 'தொண்டன்').
உலகமயமாதலால் பெருகும் பன்னாட்டு வணிகம் - அது சார்ந்த குளிரூட்டப்பட்ட கவர்ச்சியான அங்காடிகள், நடைபாதைத் தள்ளு வண்டியில் பழம் விற்கும் சராசரிச் சில்லறை வியாபாரியின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகின்றன.('மாற்றம்').இவை குறித்த சமூக விமரிசனங்களாகவும் இவரது கதைகள் உருப் பெற்றிருக்கின்றன.

உள்ளடக்கச் சிறப்பும், வடிவச் செம்மையும் வாய்க்கப் பெற்றுள்ள இந்தச் சிறுகதைகளுக்குப் படைப்பாளியின் மொழி ஆளுமை மேலும் வலுவும்,பொலிவும் சேர்க்கிறது. பெரும்பாலான கதைகள் பாத்திர நினைவோட்டமாக - எண்ணங்களின் அடுத்தடுத்த அடுக்குகளாக அமைந்திருப்பதை இவரது தனித்தன்மையாகக் குறிப்பிட முடிகிறது.

'யுகமாயினி', செம்மலர்', 'வார்த்தை'. 'உயிரெழுத்து','வடக்கு வாசல்',உயிரோசை,திண்ணை(இணைய இதழ்கள்)ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ள இத் தொகுப்பை முழுமையாகப் படிப்பது நிறைவு தரும் ஒரு அனுபவம்.

''வீட்டுக்கு வீடு...அறைக்கு அறை எவ்வளவு திரைகள்?கணவன் ,மனைவி ,பிள்ளை என்று ஒவ்வொருவருக்கிடையிலும் எத்தனை திரைகள்?வாழ்க்கையே திரை மூடிய பூடகமாக அல்லவா இருக்கிறது?விலக்க முடியாத திரைகள் ! அவிழ்க்க முடியாத திரைகள் !''என்று தனது சிறுகதை ஒன்றில் உஷாதீபனே குறிப்பிட்டிருப்பதைப்போல,
அந்தத் திரைகளைச் சற்றே விலக்கி உண்மைகளைக் காணவும் காட்டவும் முயல்வதே அவரது நோக்கம் ; அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.'திரை விலகல்'- சிறுகதைத் தொகுப்பு,
உஷா தீபன்,
வெளியீடு; உதயகண்ணன்,10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,சென்னை600011,
டிச.'08 - முதல் பதிப்பு,
பக்;168,
விலை; ரூ.60
bookudaya@rediffmail.com

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....