4.5.09
துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே...
(மதுரையில் சித்திரைத் திருவிழா)
தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே
நறை பழுத்த துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே
அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும்
தொழும்பர் உள்ளக் கோயிற்கேற்றும் விளக்கே
வளர் சிமய இமயப் பொருப்பில் விளையாடும்
இள மென் கொடியே
எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில்
அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியமே
மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும்
இள வஞ்சிக் கொடியே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே
-குமர குருபரர்
தமிழ் மொழியின் சமயப் பாடல்கள் பலவும் இறைச் சக்தியையும், சமய உணர்வுகளையும் வெளிப்படுத்துவதை விட மொழியின் அழகையும், மேன்மையினையும் போற்றுவனவாகவே அமைந்திருக்கின்றன. மொழியால் கடவுளை ஏத்துவதை விட.... அந்த மொழியின் லயமாக அவனைத் தரிசிப்பதையே அவை அதிகமாகச் செய்திருக்கின்றன.
தேவார மூவர்களில் ஒருவரான ஞான சம்பந்தர் 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்' சம்பந்தராகவே அறியப்பட்டிருக்கிறார்.
குமர குருபரர் பாடிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறும் இப் பாடலும் , சிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல இருந்தாலும் உண்மையில் தமிழையே நம் கண் முன் அவ்வாறு வரச் செய்து விடுகிறது.
கற்பனையால் புனையப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாக....அவற்றின் பயனாக - 'தொடுக்கும்கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே' என முதலில் அன்னையை விளிக்கிறார் குமர குருபரர்.
தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழின் சுவையாக - 'நறை பழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ் சுவை'யாக அடுத்து அவளைக் காண்கிறார் அவர்.
'தான்' என்ற அகந்தைக் கிழங்கைக் கெல்லி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் விளக்காக...,அப்படிப்பட்ட அடியவர்களின் 'உளக் கோயிற்கேற்றும் விளக்காக'த் திகழ்கிறாள் அவள்.
பனி மலைச் சிகரத்தில் இமயப் பொருப்பில் விளையாடும் இள மென் பெண் யானைபோன்ற அவள்...,வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழற் காடு ஏந்தும் அவள்...மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வு ;
புவனமெல்லாம் கடந்து நிற்கும் பரம்பொருள், தன் உள்ளத்தில் 'அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்'.அவள்... .
ஆண்டாளின் 'ஆழி மழைக் கண்ணா'வைப் போலத் தமிழின் சிறப்பெழுத்தாகிய ழகரத்தைப் பொருட் செறிவோடும், அழகியல் குன்றாத கலை நுட்பத்தோடும் இப் பாடலில் கையாண்டிருக்கிறார் கவிஞர்.
அரசவையில் இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது , குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு ; அன்னையின் சன்னதிக்குள் நுழையும்போது இக் கதையைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்றும் உண்டு.
கதையின் நம்பகத் தன்மை எவ்வாறாயினும்.....இப் பாடலை வாசிக்கையில் - கேட்கையில் ,தமிழே ஒரு குழந்தையாகி நம் கண் முன்னர் தளர் நடையிட்டு வருவதைப் போன்ற பிரமை ஏற்பட்டு விடுவதும் ,குருபரரின் கவி ஆளுமை அதை மெய்யாக்கியிருப்பதும் மறுக்க முடியாத நிஜங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக