துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.5.09

ஒரு நடிகையின் நாவல்

சென்ற நூற்றாண்டின் '30 களில் நாடக திரைப்படத் துறைகளில் புகழ்
பெற்ற நடிகையாக விளங்கிய டி.பி.ராஜலக்ஷ்மியின் - பரவலான கவனத்துக்கு வராத - மற்றுமொரு பரிமாணம் , அவர் ஒரு தேர்ந்த நாவலாசிரியை என்பது.



1931 இல் வெளிவந்த அவரது 'கமலவல்லி'அல்லது 'டாக்டர் சந்திரசேகரன்'என்ற புதினம் ,( தொடக்க காலத் தமிழ் நாவல்கள் பலவற்றில் இவ்வாறு இரட்டைத் தலைப்பு வைக்கும் போக்கினைக் காண முடியும் ) குறிப்பிட்ட அந்தக் காலச் சூழலில் மிகவும் புரட்சிகரமானதாக அமைந்திருந்தது.

மரபுகளையோ ,வாசகர்களையோ முன்னிறுத்தி வரையறைகளை விதித்துக் கொள்ளாமல் - மனத்தடை எதுவும் இன்றித் துணிவோடு சில கருத்துக்களை இந்நாவலில் முன் வைத்தார் டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாள்.

விற்பனைப்பொருளாகச் சந்தையில் விலை பேசப்பட்ட பெண் ஒருத்தி , மறுமணம் செய்து கொள்ள முற்படுவதை இப் படைப்பு துணிச்சலோடு நியாயப்படுத்துகிறது.

தாய் தந்தையற்ற அனாதைப் பெண்ணான கமலவல்லியை - 5000 ரூபாய் விலையாகப் பெற்றுக் கொண்டு , அவளது விருப்பத்திற்கு மாறாக மணம் செய்து வைக்கின்றனர் அவளது உறவினர்கள். திருமண நாளன்று அவள் தன் காதலைக் கணவனிடம் கூற ,அவள்
மனம் விரும்பிய காதலனோடு அவளை இணைத்து வைக்க அவன் முன் வருகிறான். அவளும் சிறிதும் தயக்கமின்றி அதை ஏற்றுக்கொள்வதோடு , அவன் துணையுடனேயே தன் காதலனைப் பல எதிர்ப்புக்களுக்கு இடையே மணக்கிறாள்.

தாலி கட்டியதால் மட்டுமே ஒருவன் கணவனாகி விடுவதில்லை என்றும் , மனதிற்கு உண்மையாக இருப்பதே 'கற்பு நிலை' என்றும் கூறும் தெளிவையும் , மன உரத்தையும் பெற்றவளாக அவள் விளங்குகிறாள். இத்தகைய பாத்திரம் ஒன்றனை உருவாக்குவதற்குரிய மனத் திட்பத்தை - மரபுகள் வேரூன்றிப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு பெண் படைப்பாளி பெற்றிருந்திருக்கிறார் என்பதைக் காணுகையில் ,'சித்திரப் பாவை'களை ஞானபீடம் ஏற்றித் தொழுகிற நாம் சற்றுக்கூசத்தான் வேண்டும்.

டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாள் , இன்னும் ஐந்து நாவல்களையும் கூட எழுதியிருப்பதைத் 'தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் , வளர்ச்சியும் '(சிட்டி,சிவபாதசுந்தரம்) வழி அறிய முடிகிறது.

'80 களில் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக - அப்போது ,காரைக்குடி அருகிலுள்ள
கோட்டையூரில் இயங்கிக் கொண்டிருந்த 'ரோஜா முத்தையா நூலக'த்தில் நான் தேடிப் படித்த இந் நாவல் தற்பொழுது புதிய பதிப்பாக வெளி வந்திருக்கிறது என்பது மகிழ்வளிக்கும் ஒரு செய்தியாகும்.

இத்தகைய நாவல்கள் வெறும் பொழுது போக்குக் குப்பைகள் அல்ல;இவை காலத்தின் குரலாய் ஒலிக்கும் சமுதாய ஆவணங்கள்.

இந் நாவலை மறு பதிப்பாக வெளியிடுவோர்க்கு வாழ்த்துக்கள்.

புதிய பதிப்பு விவரம்;

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திர சேகரன்,
டி.பி.ராஜலக்ஷ்மி,
வெளியீடு; புலம், 72, மதுரை நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுர வாயல்,சென்னை - 600095
பக்; 128,
விலை; ரூ.70.

2 கருத்துகள் :

ushadeepan சொன்னது…

Oru puthiya novelie arimugam seithatharkkku nandri. viraivil vaangi padikka aavaloi ullen. Ushadeepan

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/இத்தகைய நாவல்கள் வெறும் பொழுது போக்குக் குப்பைகள் அல்ல;இவை காலத்தின் குரலாய் ஒலிக்கும் சமுதாய ஆவணங்கள்./

நூற்றுக்கு நூறு விழுக்காடு இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன் அம்மா! தகவலுக்கும், சுட்டியை அளித்ததற்கும் நன்றி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....