''பெண்ணின் எழுத்து , அவளது அந்தரங்க டயரிக்குறிப்பாக மட்டுமே எப்போதும் இருந்து விடுவதில்லை . . சில வேளைகளில் சமூக மாற்றத்திற்கான நெம்புகோலாகவும் கூட அது செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான கண் திறப்பை இத்தகைய செய்திகளின் வாயிலாகத்தான் நாம் பெறுகிறோம்.''-எம்.ஏ.சுசீலா
உஷா தீபன்,
மதுரை.
ஒரு புதிய நாவலை அறிமுகம் செய்ததற்கு நன்றி. விரைவில் வாங்கிப் படிக்க ஆவலாய் உள்ளேன்.
பாவண்ணன்
அன்புடையீர்,வணக்கம்.
பழைய காலத்து நடிகையான டி.பி. ராஜலட்சுமி அவர்களுடைய கமலவல்லி நாவலைப்பற்றி சமீபத்தில்தான் ஒரு பத்திரிகையில் குறிப்பொன்றைப் படித்தேன். உடனே படிக்கும் ஆவலு\ட்டும்வகையில் அக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. உங்களுடைய குறிப்பையும் இந்த நாவலையொட்டி நீங்கள் இதற்கு முன்பேயே ஆய்வு செய்திருக்கிறீர்கள் என்பதும் என் ஆவலைப் பலமடங்காக ஆக்குகிறது. சென்னை செல்லும்போது தேடி வாங்கிப் படிப்பேன்.
மேற்குறித்த இரண்டு கடிதங்களும் இரண்டு எழுத்தாளர்களிடமிருந்து 'ஒரு நடிகையின் நாவல்' குறித்த பதிவுக்காக எனக்கு வந்தவை.அரிதாகக் கிடைக்கும் ஒரு பழைய நாவலைப் படிக்க வேண்டும் என்ற மன எழுச்சியை இயல்பாகப் புலப்படுத்துபவை.
இவை ஒரு புறமிருக்க.... அந்தப் பதிவை நான் வெளியிட்ட நாள் முதல் என் வலைக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை திடீரென்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் கணிசமாக அதிகரித்திருப்பது , மிகவும் ஆச்சரியமூட்டுவதோடு , திரைப்படம் என்ற ஊடகத்தின் கவர்ச்சியும் அது கட்டி எழுப்பும் மாயையும் எத்தனை வலிமையானது என்ற பிரமிப்பையும் என்னுள் கிளர்த்துகிறது.
உண்மையில் இந்தப் பதிவு, நான் முன் கூட்டித் திட்டமிட்டு எழுதாமல் , போகிற போக்கில் விரைவாக எழுதப்பட்ட பதிவு. எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல் , இந்நாவல் மீள் பிரசுரமாகியிருக்கும் தகவலை ஒரு வார இதழில் தற்செயலாகப் பார்த்தவுடன் , அப் படைப்பு எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியுள்ளதாலும் , அதைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை அளிக்க என்னால் முடியும் என்பதாலும் அவற்றை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.ஆனால் அதற்குக்கிடைத்துள்ள வாசக எதிர்வினை நான் சற்றும் எதிர்பார்த்திராதது.
நவம்பர்2.'08 இல் இந்த வலைப்பூவைத் தொடங்கியது முதல் இலக்கியம், சமூகம், பயணம் என்று பல பிரிவுகளில் பல பதிவுகளை நான் இட்டிருந்தபோதும்....இரவு மூன்று மணி வரை கூடக் கண் விழித்துத் தீவிரமான பல செய்திகளை எழுதியுள்ளபோதும் அதற்கெல்லாம் எனக்குக் கிடைக்காத வாசகர் வரவு ( சென்ற வாரம் கூட என் வலைக்கு ஒரு நாள் வருகை சராசரியாக 5 முதல் 10 வரைதான் ) தற்செயலாக..அதிகம் சிரமப்படாமல் எழுதிய இந்தப் பதிவுக்குக் கிடைத்திருக்கிறது.கடந்த மூன்று நாட்களாக என் வலைக்கு வருவோரின் எண்ணிக்கை 4 மடங்கு கூடியிருக்கிறது என்றால் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் சமூகவியல் செய்தி ,நடிகையின் நாவல் பற்றிய பதிவாக அது அமைந்தது மட்டுமே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒரு வேளை நமீதாவையோ ..இன்னும் அதைவிடப் புதிய ஒரு நடிகையின் கதையையோ என் வலையில் எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போயிருந்தாலும் கூட இன்னொரு வகையில் அது அவர்களுக்குப் பயனுள்ள புதிய செய்தியை அளிப்பதாகவே இருந்திருக்கும்.
தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் தான் வாழும் சமூகத்தை அதில் பெண்கள் எதிர்ப்படும் அவலத்தை முன்வைக்கும் சமூக ஜீவிகளாக , நடிகைகளைப் பற்றிய புதிய பரிமாணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். .
நடிப்பு என்பது நடிகைக்கு ஒரு தொழில் மட்டுமே. அதற்கு அப்பால் அவளும் கூடச் சக மனித அக்கறை கொண்ட ஒரு உயிரியாகவே இருக்கிறாள் என்பதன் நிதரிசனமான ஒரு நிரூபணமே டி.பி.ராஜலக்ஷ்மியின் 'கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்'என்னும் நாவல்.
'தேவ தாசி'என்று கேவலமாகவும் எள்ளலோடும் அழைக்கப்பட்டுவந்த பின் புலத்திலிருந்து வந்த மூவலூர் இராமிருதத்தம்மையார் உருவாக்கிய 'தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்' ( 1936 )என்ற நாவல்தான், பொட்டுக் கட்டும் வழக்கத்தைப் புரட்டிப் போட்டுப் பெரியதொரு புரட்சியே உருவாக அடித்தளம் அமைத்திருக்கிறது. சட்டப் பேரவையில் - டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியால் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவரப்படவும் , பின்பு சட்டமாக்கப்படவும் அதுவே தூண்டுதலாக இருந்திருக்கிறது.
பெண்ணின் எழுத்து , அவளது அந்தரங்க டயரிக்குறிப்பாக மட்டுமே எப்போதும் இருந்து விடுவதில்லை ; சில வேளைகளில் சமூக மாற்றத்திற்கான நெம்புகோலாகவும் கூட அது செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான கண் திறப்பை இத்தகைய செய்திகளின் வாயிலாகத்தான் நாம் பெறுகிறோம்.
இணைப்பு:
ஒரு நடிகையின் நாவல்
2 கருத்துகள் :
இது வரை நடிகர்கள் என்றில்லை, அனேகமாக எல்லாப் பிரபலங்களுக்கும் யாரோ ஒரு நிழல் எழுத்தாளர் எழுதிக் கொடுப்பதையே அவர்கள் எழுதியதாக வெளிவந்ததை அறிந்திருக்கிற எனக்கு, டி.பி.ராஜலக்ஷ்மியின் 'கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்'என்னும் நாவல்.பற்றிய செய்தி உண்மையிலேயே புதிது. டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியின் கதையை, அவர் சொல்லச் சொல்ல, ஒரு பெண் எழுத்தாளர் "சேவைக்கு ஒரு சகோதரி" என்ற தலைப்பில் கல்கியில் தொடராக எழுத, படித்திருப்பதாக நினைவு, அதிலும். ராஜலக்ஷ்மியின் கதையைப் பற்றிய குறிப்பைப் படித்ததாக நினைவுக்கு வரவில்லை.
இன்னும் அதிக விவரங்களோடு, அந்தப் புத்தகத்தைப் பற்றிய உங்களுடைய மதிப்பீட்டுடன் எழுதினீர்களானால், உதவியாயிருக்கும்.
//'தேவ தாசி'என்று கேவலமாகவும் எள்ளலோடும் அழைக்கப்பட்டுவந்த பின் புலத்திலிருந்து வந்த மூவலூர் இராமிருதத்தம்மையார் உருவாக்கிய 'தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்' ( 1936 )என்ற நாவல்தான், பொட்டுக் கட்டும் வழக்கத்தைப் புரட்டிப் போட்டுப் பெரியதொரு புரட்சியே உருவாக அடித்தளம் அமைத்திருக்கிறது. சட்டப் பேரவையில் - டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியால் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவரப்படவும் , பின்பு சட்டமாக்கப்படவும் அதுவே தூண்டுதலாக இருந்திருக்கிறது//
அழகா அற்புதமா இருக்கே.
கருத்துரையிடுக