15.2.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-6

சுஜாதாவின் நிபந்தனை

நவீன தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் சுஜாதா. தமிழ் உரைநடையில் ஒரு புதிய -வேகமான பாணி எழுத்து நடை உருப்பெறுவதற்கான வாயிலைத் திறந்து வைத்தவர். சிறுகதைகள்,சமூக/மற்றும் துப்பறியும் நாவல்கள்,வரலாற்று,விஞ்ஞானப்புனைவுகள் எனப் பல வகையான படைப்புக்களையும் உருவாக்கியிருக்கும்  சுஜாதா ,நாடகங்கள்,மற்றும் திரைக்கதை உருவாக்கலிலும் விற்பன்னர். தனக்கு வசப்பட்ட எழுத்துக் கலையைப் பிறருக்கு எளிதாக ஆக்கித் தருவதிலும் ஆர்வம் காட்டியவர் .கணையாழி போன்ற சிற்றிதழ்களிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தாலும்  எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதிப்பார்க்க வேண்டும் என்று எண்ணிய அளவுக்குத் தீவிர இலக்கியம் மட்டுமே படைக்க வேண்டும் என்பதில் சுஜாதா ஏனோ முனைப்புக் காட்டவில்லை; அவ்வாறான முனைப்பு மட்டும் அவருக்கு நேர்ந்திருந்தால்....வணிக இதழ்களாலும்,வணிகப்படங்களாலும் அவர் கபளீகரம் செய்யப்படாமல் இருந்திருந்தால் சாகித்திய விருது போன்ற பல இலக்கிய விருதுகளைப்பெறுவது அவருக்குக் கடினமாக இருந்திருக்காது. இருந்தாலும் இன்றும் கூட சுஜாதாவின் எழுத்துக்கள் புதுமையாகவும்,இளமையாகவும் இருப்பதும்- தேர்ந்த பல இலக்கிய விமரிசகர்களும் கூட சுஜாதாவின் பல சிறுகதைகளைத் தரமானவையாக இனம் காட்டுவதும் [நகரம்,நிபந்தனை,ஒரு லட்சம் புத்தகங்கள்] தமிழ் எழுத்தில் சுஜாதாவுக்கென்று ஓரிடம் என்றும் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவை.


சுஜாதாவின் நினைவு நாள் 27 ஃபெப்ரவரி
இனி நிபந்தனை பற்றி...

திருவனந்தபுரத்துக்குச் சென்றிருக்கும் சோமசுந்தரம்-ஈஸ்வரி தம்பதியர் கோயிலருகே பிச்சையெடுக்கும் நடுத்தர வயது அந்தணப்பெண் ஒருத்தியைப் பார்க்கிறார்கள்.அவளது நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளும் ஈஸ்வரி அவளைத் தங்களுடன் அழைத்துச் சென்று வீட்டு வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்புகிறாள்.தடுத்துப்பேசும் கணவனிடம் நியாயம் பேசித் தர்க்கம் செய்கிறாள்.பிற்பகலில் தன் மகளையும் அழைத்துவந்து அவர்களுடன் சேர்ந்து கொள்வதாகச்சொல்லி விட்டு விடை பெற்றுச் செல்கிறாள் அந்தப்பெண்.

இடையே அவர்களைத் தவறான வழியில் செலுத்தியபடி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் தாடி வைத்த கடைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து அந்தப்பெண்ணின் நடத்தை மோசமானதென்று சொல்ல,அதைக்கேட்ட ஈஸ்வரியின் உள்ளம் மாறி விடுகிறது.

’’என்னை உங்காத்திலே சேத்துக்க வேண்டாம்.பட்டணத்திலேஅழைச்சுண்டு போய் ஏதாவது ஒரு ஆச்ரமத்திலே ரெண்டு பேரையும் சேத்துடுங்கோ புண்ணியம் உண்டு’’என்று அந்தப்பெண் அவர்களிடம் கெஞ்சிக்கதறி மன்றாடியபோதும் அவள் மனம் நெகிழவில்லை.ஆனால் முதலில் ஈஸ்வரியின் கருணக்கு மறுப்புத் தெரிவித்த அவள் கணவன் சோமசுந்தரம் இப்போது சற்று நிதானித்து உண்மை எது பொய் எது என்று அறிய நாட்டம் கொள்கிறான்.ஈஸ்வரியின் பலமான எதிர்ப்பில் அது அடிபட்டுப்போக அவர்களின் கார் சென்னையை நோக்கிப் பறக்கிறது.
கார் கண்ணாடி வழி ஈஸ்வரி பார்க்க
‘’புடவைத் தலைப்பில் அழுது கொண்டு அலமேலு,சங்கிலியைக்கடித்துக் கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி,சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி’’என்று முடியும் கதை கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்பதை முன்வைக்கிறது.

கருணை காட்டவும் இரக்கம் கொள்ளவும் தயாராக இருந்தாலும் அவற்றுக்கும் கூட சில வரையறுக்கப்பட்ட எல்லைகளை நிபந்தனைகளை வைத்துக் கொள்ளும்  மனிதப்பொது இயல்பைக் கலையழகு குன்றாமல் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதாவின் கதை இது.

‘’எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம்,என்ன பிரயோசனம்,நடைமுறையிலே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்?....வேற யாராவது பாத்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா யாரு அந்த வேற யாராவது....கோயிலுக்குக்கூடப்போக வேண்டாம்.இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்’’என்று முதலில் ஒரு குட்டிச் சொற்பொழிவே ஆற்றுகிறாள் ஈஸ்வரி.அவள் கணவன் அப்போது தயங்குகிறான்.முன் பின் தெரியாத பெண்களை உடனழைத்துச்செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.ஆனால் தாடிக்காரன் வந்து அவர்கள் மீது புகார் சொன்னதுமே ‘ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரி’ய ஆரம்பிக்கிறது.

அந்தப்பெண்களைப்பற்றிய தகவல் தாடிக்காரன் வழி வெளியாகும் முன்னரும் பின்னரும் தம்பதியருக்குள் வெளியாகும் முரணைக்காட்சிப்படுத்தும் வகையில் கதையை சுவாரசியப்படுத்துகிறார் சுஜாதா.

முதலில் தன் மனைவி அவர்களை உடனழைத்துச்செல்ல எடுத்த முடிவை சோமசுந்தரம் எதிர்த்தாலும் தாடிக்காரன் சொன்னதைக்கேட்டபின் கொஞ்சம் யோசிக்கிறான்.அவன் சொல்வது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்க விரும்புகிறான்.
‘’இரு ஈஸ்வரி...இதைச் சரியா விசாரிச்சுறலாம்.யார் பொய் சொல்றான்னு பாத்துடலாம்’’
என்கிறான்.
ஆனால் கணவனின் அந்தப்பார்வைக்கு ஈஸ்வரியின் மனம் இப்போது சபல முலாம் பூசிப்பார்க்கத் தொடங்குகிறது.தன் கருணை, இரக்கத்தின் அடிப்படையில் பிறந்ததென்றும் அவனது கருணைக்கு வேறு உள்நோக்கம் இருக்கலாமென்றும் தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறாள்.அதனாலேயே அவர்களை உடனடியாகத் தவிர்ப்பதில் முனைப்புக்காட்டுகிறாள்.

இதுநாள்வரை தன் விருப்பத்தின்படி ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ‘பட்சிகள்’கையை விட்டுப்பறந்து விடுமே என்பதற்காகத்தான் தாடிக்காரனும் அவர்களைத் தேடி வருகிறானே தவிர அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் அவனிடம் இல்லை.கணவன்-மனைவி இருவருமே கதை முடிவில் அதை உணர்ந்து விட்டாலும் துணிச்சலாக ஒரு முடிவெடுத்து அவர்களுக்கு அவனிடமிருந்து மீட்சியளிக்க விரும்பாமல் சராசரித்தனமாகப்பிரச்சினையிலிருந்து நழுவிப்போகிறார்கள்.அவர்களின் கார் வேகமெடுத்துப் பறப்பது யதார்த்தத்திலிருந்து விரைவாக நழுவித் தப்பித்துக்கொள்ள விரும்பும் மனித இயல்பையே வெளிக்காட்டுகிறது.

தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவரை பிறர் மீது கருணையை வர்ஷிப்பவர்களைப் போல பாவனை செய்து கொள்ள ஆசைப்படும் மனித மன விகாரங்களை இந்தக்கதையில் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதா
‘’பத்மனாப சுவாமி கோவில் முன்னால் ஒரு சம்பவம் நடந்தது.அதுதான் கொஞ்சம் கற்பனை சேர்ந்த ‘நிபந்தனை’’’என்று இந்தக்கதையின் பின்னணி பற்றியும் எழுதியிருக்கிறார்.

சிறுகதையை இணையத்தில் படிப்பதற்கான இணைப்பு
நிபந்தனை









5.2.13

ஒரு பாலைப்பயணம்-4 [இறுதி]

[தவிர்க்க இயலாத சில தாமதங்களால் பாலைப்பயணத்தின் நிறைவுப்பகுதி-சற்று இடைவெளிக்குப்பின்]

கை விடப்பட்ட ஒரு கிராமம்-குல்தரா



சாம் மணல்மேடுகளுக்கான வாகன நிறுத்தத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் தாண்டிக்கொண்டு எங்கள் காரை வெளியே எடுப்பது பெரும் சிக்கலாக இருந்ததால் முதன்மைச் சாலைக்கு எங்கள் வண்டி வந்து சேர்வதற்குள் இருளின் ஆதிக்கம் இலேசாகத் தொடங்கியிருந்தது.அது அதிகமாவதற்குள் எப்படியாவது அந்தக் கைவிடப்பட்ட கிராமத்தைக் கண்டே ஆக வேண்டுமென அதை நோக்கி விரைந்தோம்.

குறிப்பிட்ட ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழும் மக்களில் ஒருவர் கூட மீதமில்லாமல் முழுமையாக அந்த இடத்தைக்காலி செய்து கொண்டு செல்லும் அவலம் வரலாற்றின் சில சூழல்களில்-சில நேரங்களில் நேர்ந்து விடுகிறது.அதற்குப்பிறகும் அங்கு வேறு எவரும் குடியேற முன்வராதபோது அந்த இடம் வெறிச்சோடிப்போய்க் காலப்போக்கில் அநாதரவான-கைவிடப்பட்ட பிரதேசமாக மாறி விடுகிறது.பஞ்சம்,பிணி,பகைவர் படையெடுப்பு,கொள்ளையர் தாக்குதல் எனப்பலப்பல காரணங்களால் உலகின் பல இடங்களிலும் இவ்வாறான கைவிடப்பட்ட இடங்களைக்காண முடியும்.[An abandoned village is a village that has, for some reason, been deserted. In many countries, and throughout history, thousands of villages were deserted for a variety of causes. Abandonment of villages is often related to plague, famine, war, climate change, environmental destruction, or deliberate clearances]

அவ்வாறான ஓரிடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக்கி நுழைவுச்சீட்டும் வாங்க வைத்து அதை ஒரு சந்தைப்பொருள் போல மலினப்படுத்துவது சகிக்கக்கூடியதாக இல்லை; அங்கே ஆண்டுக்கணக்காக உறைந்து போயிருந்த கண்ணீரும்,பெருமூச்சும் காசாக்கப்படுவது போன்ற பாரம் நெஞ்ச அழுத்தியது.

சாம் மணல் மேட்டிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் கிட்டத்தட்டப்பாதி தூரம் வந்த பிறகு தென்பட்ட  ஒரு அடையாளக் கல் வலப்புறமாகத் திரும்புமாறு அறிவுறுத்த குல்தரா செல்லும் சாலையில் பயணத்தைத் தொடர்ந்தோம்.நேராக இரண்டு,மூன்று கிலோமீட்டர் சென்றபின் சிறியதொரு அரண்மனை முகப்பின் தோரண வாயில் போன்ற கட்டிட அமைப்பு ஒன்று தென்பட்டது.

அதன் அருகே கூண்டுவடிவ அறை ஒன்றில் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த ஒரு நபர்,’’அடைக்கும் நேரம் நெருங்கி விட்டதால் கால்நடையாகக் கிராமத்துக்குள் சென்று திரும்ப இனி நேரமில்லை;காரிலேயே  ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு வாருங்கள்’’என்றார்.

’’இந்த இடம் ஏன் இப்படி வெறிச்சோடிப்போனது?’’என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்க, ‘’அது மிகப்பெரிய ஒரு சோகக்கதை...அதைச்சொல்ல ஆரம்பித்தால் இருட்டி விடும்,பிறகு  நீங்கள் அங்கே எதையும் பார்க்க முடியாது, முதலில் பார்த்து முடித்து விட்டு வாருங்கள்’’என்றார் அவர்.
ஒரு கேளிக்கை சார்ந்த சுற்றுலா இடமாக அதனை எண்ண முடியாவிட்டாலும் அங்கே நிலவிய வெறுமையும்,இனம் புரியாமல் கப்பியிருந்த அடர்த்தியான சோகமும் அதற்குள் சென்றுவரும் ஆவலைக் கிளர்த்த,உள்ளே காரிலேயே ஒரு வட்டமடித்து விட்டு வரலாமென்று சென்றோம்.

வழி நெடுகிலும் கற்குவியல்களாய் இடிந்து,சிதைந்து நொறுங்கிக்கிடக்கும் வீடுகள்,தூர்ந்து போன கிணறுகள்,பாழடைந்த கோயில்கள்,தரிசான வெளிகள்,ஒரு காலத்தில் புழக்கத்திலிருந்ததற்கு அடையாளமாய் உடைந்து போன அம்மிகள்,அரவைக்கற்கள்,வெறுமையான வெட்ட வெளிகள் எனக் காணுகின்ற காட்சியெல்லாம் மனதுக்குள் கலவரத்தோடு கூடிய சோகத்தைக்கிளர்த்தின; 


ஒவ்வொன்றையும் நிதானமாகப்பார்த்துக்கொண்டு செல்ல முடியாதபடி இருள் அடர்ந்து வர கனத்த மனதோடும்,கதை கேட்கும் ஆவலோடும் முகப்புக்குத் திரும்பினால் எங்களுக்கு அது பற்றிய தகவல் சொல்வதாகக்கூறியிருந்த மனிதர் நேரம் மிகுதியாக ஆனதால் வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.சற்று ஏமாற்றமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்-ஜெரய்சால்மர் விடுதியை அடையும் வரை- நானாக ஒரு கதை புனைந்து குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தேன்.[வாழ்க்கையில் எத்தனை தமிழ்ப்படம் பார்த்திருப்போம்...?]ஒரு பணக்காரப்பண்ணையார்,ஏழைப்பெண் காதல்,அதன் மீதான எதிர்ப்பு,தொடர் விளைவு என்று கதையை ‘ஓட்டிக்கொண்டு போனேன்’.அதில் திருப்தி அடையாத என் பேத்தி விடுதிக்குள் நுழைந்ததுமே கூகிளைச்சரணடைந்து ‘குல்தரா’பற்றித் தேடத் தொடங்கி விட்டாள்.
திடீரென அவளிடமிருந்து ஒரு சின்னக்கூவல்..’’அம்மா..கிட்டத்தட்ட நீ சொன்ன மாதிரிதான்...’’என்று அந்தப்பக்கத்தை இணையத்தில் காட்ட கதைகள் விரிந்து கொண்டு சென்றன. பலிவால் என்னும் குறிப்பிட்ட அந்தண இனத்தைச் சேர்ந்த மக்கள் வேறு இடத்திலிருந்து புலம்பெயர்ந்து தார் பாலைவனத்துக்கு வந்து குல்தரா மற்றும் சுற்றியுள்ள 80க்கு மேற்பட்ட கிராமங்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு கடும் உழைப்பால் முன்னேறி வந்திருக்கிறார்கள்.ஜெசால்மரைச் சேர்ந்த பிரபுத்துவ இளைஞன் ஒருவனின் பார்வை அந்தக்கிராமத்து இளம்பெண் ஒருத்தியின் மீது பட,அவர்கள் மறுக்க,அவன் கெடு வைக்க, தங்கள் குல ஆசாரங்களில் மிகத் தீவிரமான பிடிப்புக்கொண்டவர்களான அவர்கள் அவனது கோரிக்கைக்கு அஞ்சி இரவோடு இரவாகக் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்கள் ஊரையே காலி செய்து கொண்டு எங்கோ சென்று விட்டார்கள்; குல்தராவைச் சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்த அவர்களது இனத்தவரும் அதே போல வேற்றிடத்துக்குப்பெயர்ந்து விட,அந்தச்சூழல் வெறிச்சிட்டு விட்டது.


மற்றுமொரு கதையும் அந்தக்கிராமத்தைப் பற்றிச்சொல்லப்படுவதுண்டு.பலிவால் என்னும் அந்தக்குறிப்பிட்ட இனத்தவரின் செல்வச்செழுமை மொகலாய அரசர்களின் கண்களை உறுத்த அவர்கள் பலமுறை இந்தக்கிராம மக்களைத் தாக்கிப்போரிட்டிருக்கிறார்கள்;ஒவ்வொரு முறையும் தங்கள் வீரத்தால் வென்றுவந்த அந்த இனத்தைத் தந்திரத்தால் வீழ்த்தத் திட்டமிட்ட மொகலாயர்கள்,இறந்த அல்லது கொல்லப்பட்ட விலங்குகளின் கழிவுகளை அந்தகிராமத்தின் எல்லாக் குடிநீர்க்கிணறுகளிலும் வீசி வைக்க சுத்த சைவ உணவுக்காரர்களான அந்தக்குறிப்பிட்ட இனத்தவர்கள் தங்கள் செல்வங்களையெல்லாம் கூட விட்டு விட்டு இரவோடு இரவாக அங்கிருந்து காலி செய்து கொண்டு புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள் [அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி சமீபத்தில் கூட சில வெளிநாட்டவரால் கைப்பற்றப்படவிருந்ததான செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது].அவ்வாறு புலம் பெயர்ந்து சென்றபோது அந்த இடத்தின் மீது அவர்கள் ஏதோ சாபமிட்டுச் சென்றதாகவும் இன்று வரை பிறர் யாரும் குடியேறத் தயங்குவதற்கான காரணம் அதுவே என்றும் பலவாறான கதைகள் குல்தரா குறித்து அங்கே வழங்கி வருகின்றன.

தொடர்ந்த எங்கள் பயணத்தில் அந்தக்கிராமம் அப்படி வெறிச்சோடி இருப்பதற்கான காரணத்தை நாங்கள் ஒவ்வொருவரும் -குழந்தைகள் உட்பட- ஒவ்வொரு கதையாக்கிப் புனைந்து கொண்டே சென்றோம்...என்றாலும் அங்கே நிலவிய வெறுமையின்-துயரப்பெருமூச்சின் காரணத்தை அங்கே எஞ்சியிருக்கும் ஜடப்பொருள்களே மெய்யாக அறிந்திருக்கக்கூடும்.

பாலைப்பயணம் ஒரு புதுமையான அனுபவம்தான் என்றாலும் ஒருசில நெருடல்கள் எங்களை அதிகமாகவே பாதித்தன.

-சுற்றுச்சூழல் காப்பு என்பதற்குப் பாலையும் உட்பட்டதுதான். அதிலும் அது மிக அரிதான நிலப்பரப்பென்பதால் கூடுதல் பாதுகாப்பும் கூடத் தேவையாகிறது. என்னதான் அதை ஒரு சுற்றுலாத் தலமாகக் கொண்டாலும்,அதை வைத்துப்பிழைப்பு நடத்தினாலும் அந்த நிலப்பரப்பை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்ற தார்மீக உணர்வும்,பொறுப்பும் அரசுக்கும் வேண்டும்;அங்கேயே வாழ்பவர்கள் மற்றும் அங்கே சுற்றுலா வருபவர்கள் ஆகியோருக்கும் வேண்டும். அவை எதுவுமே சுத்தமாக அங்கில்லை என்பதை அந்தப் பாலைப்பரப்பில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பிகளும்,தின்பண்ட உறைகளும் நிதரிசனமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.பாலைப்பெரு வெளியில் இன்னும் சற்று நேரம் கழிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவை அந்தக் குப்பை குவியல்களே. மெரினா மணல் வெளியைப் பாழாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே ஜெய்சால்மரின் பாலை நிலத்தையும் நாம் பாழ் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான நிஜம்.
மணல் வெளிக்குள் குப்பிகள்,காகிதங்கள்,பிளாஸ்டிக் உறைகள்...
[படத்தை சற்றுப்பெரிதாக்கிப் பார்த்தால் மனம் அதிகமாகவே கொதிக்கும்]
அடுத்து...சுற்றுலா என்ற பெயரில் உல்லாசக் கூத்தடிப்போரின் எண்ணிக்கையே அங்கே மிகுந்திருந்ததேயன்றிப் பரந்து கிடக்கும் அந்த மணல்வெளியில் மோனத் தரிசனத்தை உணரவும்,துய்க்கவும் எவருக்குமே ஆசையில்லை என்பதை அங்கிருந்த பெரும்பாலான கும்பல்கள் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால் அந்தக்கூட்டத்துக்கு நடுவே அப்படி ஒரு தரிசனம் எங்களுக்கு வாய்க்கவும் வழியில்லை; சீசன் இல்லாத ஒரு காலச்சூழலில் தனியே வந்து அமைதியான சில கணங்களை அந்த மணற்பரப்பில் கழிக்கும் பேறு அடுத்த முறையாவது எங்களுக்கு வாய்க்க வேண்டும் என்னும் விருப்பத்தைச் சுமந்தபடி தில்லி நோக்கி விரைந்தோம்.


ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2
ஒரு பாலைப்பயணம்-3

1.2.13

கடல்-சாத்தானும் தேவதையும்

கடல்-நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவந்திருக்கும் மணிரத்னத்தின் படம். இடைவெளி கூடிப்போனதாலும் ஜெயமோகனின் கதை வசனப்பங்களிப்பாலும் எதிர்பார்ப்பைக்கூட்டிய படம்.

வணிகப்படத்துக்கே உரிய வழக்கமான தன் பாணி மசாலாக்களை -பிரம்மாண்டமான காட்சி அமைப்பு,சம்பந்தமே இல்லாத உடை அலங்காரத்துடன் கடல்வெளி மக்கள் ஆடும் குழு நடனம்- 

என்று மணிரத்னம் ஆங்காங்கே தூவியிருந்தாலும் கூட கதையின் அடிநாதச்செய்தியின் அற்புதத்தாலும்,பின் களத்துக்கு ஏற்றபடி அமையும் ஜெயமோகனின் மிகப்பொருத்தமான உரையாடல்களாலும்,அர்விந்த்சாமி,அர்ஜுனின் பண்பட்ட நடிப்பாலும் கடல் தன் கம்பீரம் குன்றாமல் முழக்கம் செய்யத் தவறவில்லை என்றே சொல்லலாம்.

அர்விந்த்சாமியின் மிகையற்ற நடிப்பும் சற்றும் அலட்டிக்கொள்ளாத அர்ஜுனின் லாவகமும் படத்தின் பலம்.நாயக நாயகியரை விடவும் படத்தை நிமிர்த்துவதும்,கட்டிப்போடுவதும் இவ்விருவரின் நடிப்பும் பாத்திர முரண்களை மிகச்சரியாக உள் வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் அனுபவத் தெளிவுமே.

உண்மையான கிறித்தவ இறையியல் இந்தப்படத்தைப்போல வேறெதிலும் சரியாக வெளிப்பட்டதில்லை. சாத்தானாக இருந்து மனித நிலைக்குத் திரும்பியவன் ஒருபோதும் -அவன் நினைத்தாலும் கூட மீண்டும் சாத்தான் நிலைக்குத் திரும்ப முடியாது என்ற செய்தி படத்தில் தாமஸின் பாத்திரத்தில் [கௌதம்] மட்டுமல்லாமல் அர்ஜுனின் பாத்திர அமைப்பின் வழியாகவும் மிகத் தெளிவாக அதன் அழகியலோடு-கதைப்போக்கோடு இணைந்தபடி கிடைக்கிறது.ஜெயமோகனின் பங்களிப்பை அதன் வழி உணர முடிகிறது.

பியாட்ரிஸின் பாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இடம் பெற்றிந்தால்- அவர் பங்கு பெறும் காட்சிகள் இன்னும் சற்று அதிகம் இடம் பெற்றிருந்தால் கௌதமின் மன மாற்றத்துக்குப் போதிய அழுத்தம் கிடைத்திருக்கலாம்.குழந்தைத்தனமான பாத்திரத்தைக்குழந்தையாகவே மாறிச் செய்திருக்கும் துளசி பாராட்டப்பட வேண்டியவர்.

கௌதமும் முதல் படம் என்ற உணர்வு தோன்றாதபடி தன் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ராஜீவ் மேனனின் காமரா கடலின் பல்வேறு முகங்களை,பரிமாணங்களை,அழகுகளை,ஆவேசத்தைக் காட்சிகளுக்குத் தகுந்தபடி கொண்டு வந்து கொட்டியிருக்கிறது.

ரஹ்மானின் இசையில் ’’நெஞ்சுக்குள்ளே’’ இனிமேல் பெரும் கவனம் பெறக்கூடும்.படத்தின் இறுதிக்காட்சியில் ஒலிக்கும் பாடல்வரிகள் ரசிக்கக்கூடியதாக இருந்தபோதும் படம் முடிந்த பிறகு நீண்டு கொண்டு போகும் காட்சிகள் அலுப்பூட்டுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

கன்னத்தில் முத்தமிட்டாலுடன் தொலைந்து போயிருந்த மணிரத்னத்தைக் கடல் சற்றே வெளிக்கொணர்ந்திருந்தாலும் இந்தப்படத்தைப் பொறுத்த வரையில் ஒட்டுமொத்தமாக மனதில் இடம் பிடிப்பது நேர்மையான கிறித்தவ போதகராக வரும் அர்விந்த்சாமியே ...