துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.11.11

’அறம்’வரிசைச் சிறுகதைகள்-ஓர் அறிமுகம்-3
தனது தனித் திறமைகள் ஒடுக்கப்பட நேர்கிற அவலத்தை எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கும் நிலையில் -அந்த ஏக்கத்தின் ஆழ்மன வெளிப்பாடு வயது முதிர்ந்த ஒரு பெண்ணிடம் கொள்ளும் வடிகாலைச் சித்தரிக்கும் அற்புதமான ஆக்கம் இது.
சங்கீதப் பரம்பரையில் வந்து தானும் பாடக் கற்றவள் அந்தக் கதையில் வரும் பாட்டி.
//' ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா? சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’//
என்று சொல்லிப் புகுந்த வீட்டுக்குக் கூட்டி வரப்பட்டவள்.
ஆனால் புகுந்த வீடும் கணவனும் அதற்குச் சாதகமற்ற மனநிலையில் இல்லாததை
(//பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர்//) 
உணர்ந்து கொண்ட பிறகு ,
அந்தக் கால மதிப்பீட்டின்படி அதற்குள் அடங்கிப் போய்த் தன் எதிர்ப்பை,கலகத்தை வெளிடாதவளாக அவள் தன் வாழ்வைத் தொடர்ந்து நடத்துகிறாள்.
இடையறாத வீட்டு வேலைகளைப் பேய்த்தனமாகத் இழுத்துப் போட்டுக்கொண்டபடி அதில் மட்டுமே அவள் தன்னை ஆழ்த்திக் கொள்வதும் கூட அந்த ஆழ்மன ஏக்கத்திற்கு ஒரு வடிகால் தரும் நோக்கத்தின்பாற் பட்டதாக இருக்க வாய்ப்ப்பிருக்கிறது.
மருமகள் வந்த பிறகும் கூட வேலையைப்பங்கு போட்டுக்கொண்டு தான் ஓய்வெடுப்போம் என்ற எண்ணம் சற்றும் எழாதவளாக அவள் இருப்பதற்கு அவளது இத்தகைய மன அமைப்பே காரணமாக இருக்கக் கூடும்.
 //வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம்
வேலைதவிர ஒண்ணுமே தெரியாது
//’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம்//
என்றும்,
(மாமனார் நோய் வாய்ப்பட்ட நிலையில்) 
//பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா//
என்றும் பாட்டியின் பேரன் ராமன் சொல்லுவதைப் போலத் தன்னுடைய பணியில் எந்தக்குறையும் சொல்ல இடமளிக்காதபடி அதில்முனைகிறாள் அவள்.
ஆனால் அதிலும் குறை கண்டு கணவர்தன் மீது பெட்பேனை வீசி எறியும்போது அது அவள் முதுகை முறிக்கும் கடைசித் துரும்பாகி விடுகிறது.
The last straw !
தன் குரல்வளை எழும்பவே முடியாமல் போய்விட்ட ஆழ்மனச் சோகத்தோடு,குற்றம் காணவே முடியாதபடி தான் செய்து வந்த செக்கு மாட்டு வேலைகளின் மீதும் குற்றம்கண்டுபிடிக்கப்பட்டு அதன் கொடூரமான வெளிப்பாடு -கணவரால் மலஅபிஷேகமாக- பெட் பேனைத் தன் மீது வீசி எறிவதாக உக்கிரமாகத் தன்மீது நிகழ்ந்ததும் அவளது பொறுமையின் எல்லை தகர்ந்து போய் 
அவளது பாதம் படிப்படியாக மேலெழ ஆரம்பிக்கிறது.
வேலையில் மட்டுமே ஆழ்ந்தபடி...தன் எதிர்ப்புக் குரலை உள்ளடங்கியபடி பதிவு செய்து வந்த அவள்,இப்போது அதன் அடுத்த கட்டத்திற்குத் தன்னையறியாமல்  நகரத்தொடங்குகிறாள்..
அதன் வெளிப்பாடே அவளது கீழ்க்காணும் நடத்தைகள்.
//வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்//.
இறுதியில் மன நோயின் ஆக்கிரமிப்புக்கு அவள் முழுமையாகவே ஆட்பட்ட பிறகு , தாத்தா,வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்வின் பிடிக்கு ஆளாவதோடு.. அவளைப் பார்த்துப் பயப்படவும் ஆரம்பிக்கிறார்.
சித்தப் பிரமை பிடித்த நிலைக்கு அவள் ஆளானதும்
// ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. //
என்று முதலில் பிரகடனம் செய்பவரே அவர்தான்.
அவள் பாதம் தூக்கி விட்ட அந்த பயம் -வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் கூட-  அவரைச் சற்று ஆட்டி வைக்கத்தான் செய்கிறது..
//தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர்... பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை.//
ஆகிய பகுதிகள் அவரது அச்சத்தையும் குற்ற உணர்வையுமே வெளிக்காட்டுகின்றன.
அவள் மரணமடைந்த தருணத்திலும் கூட இவ்வாறான எதிர்வினையே அவரிடமிருந்து கிடைக்கிறது.
//தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க//
அவரது இந்தச்செயலுக்குக் குற்ற உணர்வின் சிறு குமைச்சலைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்ல முடியவில்லை...
 தன் குரல்வளையை எந்த வகையிலும் எழுப்பவே முடியாமல் போய்விட்ட ஆழ்மனச் சோகத்தை 
இறுதி வரைக்கும் எதைக் கொண்டும் அவளால் போக்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதன் குறியீடாகவே அழுக்கு நீக்கும் அவளது மனநோயைக் கொள்ள முடிகிறது..தாத்தாவின் இலேசான மன நெருடலும் அது பற்றியே..

இத் தொகுப்பிலுள்ள பல கதைகள் என்னைப் பாதித்தபோதும் என்னில் கூர்மையான தாக்கத்தை ஏற்படுத்தியது பேராசிரிய மாணவ உறவை(குரு-சிஷ்ய பாவனையை)முன் வைக்கும் மத்துறுதயிரே.
வகுப்பறையில் இருப்பவர்கள் மட்டும்தான் மாணவர்கள் என்பதில்லை.
குருவின் வார்த்தைகளைப் பொக்கிஷம் போல அடை காத்து அவரது அலைவரிசைக்குள் வந்து ,அவரின் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்துக்குத் தன்னை முன்னெடுத்துச் செல்லும் சீடனே உண்மையான மாணவன்.
அவ்வாறான குரு-சீடப் பரம்பரை ஒன்றைக் கண்முன் விரிக்கிறது மத்துறுதயிர்.
ஏசுவைக் கடவுளாகப் போற்றினாலும் இலக்கியத்தில் சாதி,மத வேறுபாடு காணாமல்..கம்பனின் கவிநயத்தில் இதயம் பறிகொடுத்து அவனது கவிநயத்தை ரசனையோடு விளக்கும் (உண்மையாக வாழ்ந்து மறைந்த )பேராசிரியர்,அவரது அன்புக்குப் பாத்திரமாக ஒரு காலகட்டத்தில் இருந்து,சொந்த வாழ்க்கைச் சூழலால் குடிக்கு அடிமையாகி அவர் கண்முன் வரவே கூச்சப்பட்டுக் கொண்டு. அவர் கிளம்பிச் சென்ற பிறகு   அந்தத்திக்கு நோக்கித் தொழும் சீடன், முதுமையால் தளர்ந்து முடிவு சமீபிப்பதை உணர்ந்தபடி ஒரு முறையாவது தன் சீடனைப் பார்த்து விட மாட்டோமா எனப்பரிதவிக்கும் பேராசிரியர்..எனச் சிறுகதை ஓவியமாக்கும் காட்சிச் சித்திரங்கள் நெஞ்சில் கல்வெட்டாகப் பதிபவை!.. .
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி’ என்ற அபிராமி அந்தாதி வரிகளின் முன்னோடியாகக் கம்பன் கவியில் உருவான ‘மத்துறுதயிர்என்னும் சுந்தரகாண்ட,சூடாமணிப் படலப் பாடலுக்குப்(அனுமன் சீதை சந்திப்பின்போது இராமனின் பிரிவுத் துயரை அவளிடம் எடுத்துரைக்கும் கட்டம்).. பேராசிரியர் தரும் விளக்கம்...துன்பத்தால் உயிரும் உடலும் அலைக்கழிவு படும் உக்கிரமானதொரு காட்சியைக் கண் முன் கொணர்கிறது
நல்ல பேராசிரியருக்குத் தன் மாணவரைப் பிரிந்த - உயிரோடு பறி கொடுத்த சோகம் கொடியது!தங்கள் சொந்தப் பிள்ளைகளை விடவும் சீடர்களை நேசித்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு உயர்வானவர்கள்?.
‘’குருவுக்கு என்ன குடுக்கோம்வேறெ என்னஇந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாருஇந்த ஏழை சங்கு உருகி அவரை நெனைக்குதேன்னு அய்யனுக்கு தெரியாமலா போயிரும்’’என்று ஒருபுறம் தன் குருநாதரை நினைந்து உருகியும் கண்ணீர் சொரிகிறார் பேராசிரியர்.
தன் குருவின் நினைவாலும் சீடனின் பிரிவாலும் ஒரே நேரத்தில் மத்துறுதயிராக அவர் படும் அலைக்கழிப்புக்களும்
//பேராசிரியர் மிதித்துச் சென்ற மண்ணை குனிந்து நடுநடுங்கும் கரங்களால் மெல்லத்தொடும் அவரது சீடரான அண்ணாச்சி ராஜமும்
குரு சிஷ்யப் பரம்பரையைத் தன் தலைமுறையில் தக்க வைத்துக் கொண்டு விட்ட பேராசிரியரால் ,தனது சீடன் மூலம் அந்தக் கண்ணியின் தொடர்ச்சி அறுபட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விடும் பெரும் சோகமும்,
கல்வி என்பதே வணிக மயமாகிப் போய்,ஆசிரிய-மாணவ உறவுகள் மேலோட்டமாய்ப் போயிருக்கும் இன்றைய தலைமுறைக்கு விளங்காமலும் கூடப் போய்விடலாம்!
ஆனால் ......ஆசிரியப் பணியைக் காசுக்காக மட்டும் பார்க்காமல் அதை ஒருசுவாசமாகவே கொண்டு இயங்கிப் பழகி விட்ட எனக்கு...
ஆனால்...இன்றைய அன்றைய பேராசிரியர்களை ஒப்பிட்டு மத்துறு தயிராய் அலைக்கழிகிறது மனம்...


.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....