Faceboo
Shared with Publi2008 இல் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கத்தின் முதல் பதிப்பு வெளி வந்த புதிதில் எனக்கு வந்த பல வாசக எதிர்வினைகள், மானுட வாழ்க்கைக்குப் பொருள் சேர்க்கும் ஒரு செயலைச் செய்து முடித்ததான நிறைவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. இப்போது பதினேழு ஆண்டுகள் கழித்து திரு நாகப்பன் ராமஸ்வாமி என்ற முகம் தெரியாத வாசகர் ஒருவரிடமிருந்து ‘குற்றமும் தண்டனையும்’ குறித்து அண்மையில் வந்திருக்கும் ஒரு கடிதம், அதற்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது. நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பை..,
2008 இல் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கத்தின் முதல் பதிப்பு வெளி வந்த புதிதில் எனக்கு வந்த பல வாசக எதிர்வினைகள், மானுட வாழ்க்கைக்குப் பொருள் சேர்க்கும் ஒரு செயலைச் செய்து முடித்ததான நிறைவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. இப்போது பதினேழு ஆண்டுகள் கழித்து திரு நாகப்பன் ராமஸ்வாமி என்ற முகம் தெரியாத வாசகர் ஒருவரிடமிருந்து ‘குற்றமும் தண்டனையும்’ குறித்து அண்மையில் வந்திருக்கும் ஒரு கடிதம், அதற்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது. நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பை..,அல்லது ஒரு மூலப் படைப்பைப் படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், அது குறித்த நீண்ட ,செறிவான, ஆத்மார்த்தமான கடிதத்தைப் படைப்பாளிக்கோ மொழிபெயர்ப்பாளருக்கோ விரிவாக எழுதி அனுப்புவது என்பதுதான் எத்தனை உன்னதமான செயல்? மொழிபெயர்ப்பாளரின் உழைப்புக்குக் கிடைக்கும் உண்மையான ஊதியமும் விருதும் அதுவன்றி வேறெதுவாக இருக்க முடியும்…? மொழிபெயர்ப்பில்/ அல்லது படைப்பில் முனைபவரைத் தொடர்ந்து இயங்க வைக்கும் சஞ்சீவினி மருந்தல்லவா அது?
இந்தக்கடிதத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அது பற்றி என்னுடன் அவர் அஞ்சல் வழி உரையாடி வருவது ஒரு பின் இணைப்பு.
இணைய ஊடகங்களின் பெருக்கம், புத்தக வாசிப்பை இன்னும் கூட முழுமையாகக் கபளீகரம் செய்து விடவில்லை என்ற சிறிய ஆறுதலை அளிக்கும் அவரது கடிதம் இங்கே பகிர்வுக்கு.
3/6/2025
(திரு நாகப்பன் ராமஸ்வாமி)
திருமதி M A சுசீலா அம்மையார் அவர்களுக்கு,
கடந்த மூன்று வாரங்களாக "குற்றமும் தண்டனையும்" நாவலுடன் வைக்க மனமில்லாமலும் வைத்தால் எடுப்பதற்கு அஞ்சியும் மல்லுக்கட்டினேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று அந்த மாஸ்டர் பீஸ் நாவல் முடிந்தபோது எனக்கு ஏதோ எவெரெஸ்ட் சிகரம் ஏறியது போன்ற ஒரு பெருமித உணர்வு.
ஒரு இடத்தில கூட மொழியாக்கம் செய்யப்பட்ட உணர்வு தென்படாமல் தமிழ் நாவல் படித்த உணர்வை 1500 பக்கங்கள் முழுவதும் கொடுத்த அந்த சிற்பி யார் என்று வலையில் தேடினால் 75 வயது நிரம்பிய உங்கள் வலைப் பக்கத்தை பார்த்து ஒரு கனம் திகைத்து பின் என்னை மீட்டு உங்களை சாஸ்டாங்கமாக வணங்கினேன்.
நான் ஆங்கிலத்தில் சராசரிக்கும் ஒரு படி மேல் என்று என்னைக் கருதிக்கொண்டாலும், என்னுடைய வாசித்தலில் 80 சதவீதம் ஆங்கிலப் புத்தகங்கள் தான் என்றாலும் இந்த "Crime and Punishment" புத்தகத்தை நான் ஆங்கிலத்தில் படிக்கத் துவங்கி இருந்தால் சத்தியமாக என்னால் 50 பக்கங்களை தாண்டி இருக்க முடியாது. அதோடு நாவலை படிப்பதையே கை வீட்டிருப்பேன்.
அழகான தமிழில் கொஞ்சம் கூட அந்நிய வாசனை இல்லாமல் "குற்றமும் தண்டனையும்" படித்து உள்வாங்கி கொள்ளுவதற்கு எனக்கு இவ்வளவு சிரமமாக இருக்கும் போது நீங்கள் எப்படி, எத்தனை ஆண்டுகளில் மொழிபெயர்த்து இருப்பீர்கள் என்று எண்ணும் போது "நகைச்சுவை நடிகர் வடிவேலு" குறிப்பிடுவதைப்போல் "இப்போவே கண்ண கட்டுதே" என்ற உணர்வுதான் மேலோங்கியது.
படித்த எனக்கே எவரெஸ்ட் சிகரம் ஏறிய பிரமிப்பு என்றால் மொழிபெயர்த்த உங்கள் மகிழ்ச்சியை எண்ணி திகைத்துப் போனேன்.
கிட்டத்திட்ட உங்கள் 60 வயதில் இதை மொழிபெயர்த்து இருப்பதை எண்ணும்போது "வயது என்பது வெறும் எண்கள்தானோ" என்று என்னையும் எழுச்சி கொள்ளச் செய்தீர்கள்.
நீங்கள் மொழிபெயர்த்த 2008 களில் இப்போது இருக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் கூட இல்லை. வாட்ஸப்போ, யூடுயுபோ, chatGpt யோ, செயற்கை நுண்ணறிவு மற்றும் கூகிள் கூட மிகவும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டிருந்த காலத்தில் இவ்வளவு பெரிய 1500 பக்கங்கள் கொண்ட, ஆழ்ந்த தத்துவம் மற்றும் தனிமனித மனோதத்துவ பின்புலம் கொண்ட நாவலை நம்மால் மொழிபெயர்க்க முடியும் என்று தொடங்கியதற்கே ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும் அது தகுந்த சன்மானமாகாது.
உங்கள் வயதையும், புலமையையும், படைப்புகள் மீதான அளப்பரிய காதல் மற்றும் ஈடுபாடு எண்ணி உங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வணங்கலாம்.
இந்த படைப்பின் மூலம் தங்கள் மரணமில்லா பெருவாழ்வு நோக்கி நடை போட்டு இருக்கிறீர்கள். இந்த படைப்பு நீங்கள் தமிழ் மொழிக்கும், எங்களுக்கும் அளித்த கொடை.
இந்த நாவல் பற்றி உங்களுடன் நிறைய பேசி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை இந்த கடிதத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
நன்றி அம்மா!!!
தங்களைப் பெரிதும் மதிக்கும்,
ராமு