துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.8.19

' ஊர்மிளை'- மதிப்புரை [உயிர்மை.காமில்]

மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ்த்துறைப்பேராசிரியரும்,திறனாய்வாளருமான முனைவர் திரு அ.ராமசாமி அவர்கள்,என் ' ஊர்மிளை'சிறுகதை குறித்து உயிர்மை.காமில் எழுதியிருக்கும் கட்டுரை.


கடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை

                                                   அ ராமசாமி[உயிர்மை.காமில் ]

மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை உருவாக்கம் என்பது மனித உயிரியின் பெருக்கமும் விரிவாக்கமும் மட்டுமல்ல. அனைத்துவகை உயிரினங்களும் பெண் -ஆண் என்னும் பாலியல் இரட்டை வழியாகவே நிகழ்கின்றன. உயிரியல் அறிவாக நாம் விளங்கியிருக்கும் இவ்விரட்டையின் ஒவ்வொரு பக்கமும் இன்னும் இன்னுமாய் இரட்டைகளை உருவாக்கிப் பலநிலைகளை உருவாக்குவதன் மூலம் எண்ணிக்கையில் விரிகிறது. 
பெண் – ஆண் என்னும் பொதுச்சொற்களை குறிப்பான வெளிகளே பாத்திரங்களாக ஆக்குகின்றன.  முதன்மையாக வாழிடம் என்னும் குறிப்பான வெளியே தாய், தந்தை, மனைவி, கணவன்,மகள், மகன், சகோதரி, சகோதரன், பேத்தி, பேத்தி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா  என்னும் ரத்த உறவுப் பாத்திரங்களையும் உருவாக்குகிறது. ரத்த உறவுப் பாத்திரங்களோடு கொள்ளும் உறவின் வழியாகக் கிளைவழிப்பாத்திரங்கள் உருவாகின்றன. வாழிடம் வழியாக உருவாகும் இந்த உருவாக்கம் காரணமாகவே குடும்பம் என்னும் அமைப்பு அடிப்படை அமைப்பாகவும் அதிக அதிகாரத்துவம் கொண்ட அமைப்பாகவும் விளங்குகிறது. அதன் நேர்மறைக் கூறுகளும் எதிர்மறைக்கூறுகளும் எல்லாச் சமூகங்களிலும் உணரப்பட்டுள்ளன.  குடும்பத்திற்குள் நுழைபவர்களாகவும் வெளியேறுபவர்களாகவும் மருமகன், மருமகள், அண்ணி, கொழுந்தி, மைத்துனன் போன்ற பாத்திரங்களைக் கொண்டிருக்கிறது. குடும்ப வெளி என்னும் குறிப்பான வெளிகளிலிருந்து வெளியேறிப் பணியிடம், பொழுதுபோக்கிடம், கற்றல் வளாகம், சாதனைக்கூடம் எனப் பொதுவெளிகளில் நுழையும்போது உருவாகும் பாத்திரங்களே இரட்டைநிலைகளை அழித்தும் வேறுவகை இரட்டைநிலை உருவாக்கியும் பெருக்கங்களை உருவாக்குகின்றன. உருவாக்கப்பட்ட இரட்டைகளை அழிப்பதின் வழியாக ஒன்றோடொன்று கலந்து இன்னொன்றாக மாறும் விதிகளே சமூக அறிவியலாகப் புரிந்துகொண்டுள்ளோம்.
நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் இந்த இயங்கியல் விதிகளே புனைவு வாழ்க்கையின் அடிப்படைகளாக இருக்கின்றன என்பதுதான் கலையின் –இலக்கியத்தின் விநோதம். இதனை உள்வாங்கியப் பெண்ணியக் கோட்பாடு தொடர்ச்சியாக முதலில் குடும்பத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. சிறுகுடும்ப அமைப்புகள், பெருங்குடும்ப அமைப்புகளாகவும் கூட்டுக்குடும்ப அமைப்புகளாகவும் மாறிய காலகட்டம் உலகம் முழுவதும் நிலவுடைமையை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைச் சமூகக் காலகட்டமே. வேளாண்மைச் சமூகத்தின் குடும்ப அமைப்பிலிருந்து நிகழ்காலக் குடும்ப அமைப்பு முற்றிலும் வேறானது. அதேபோல் வேளாண்மைச் சமூகத்திற்கு முந்திய நாடோடி வாழ்க்கைக் காலத்திலும் வேட்டைச் சமூகக் காலத்திலும் குடும்ப அமைப்பு வேறாகவே இருந்திருக்கும். குடும்ப அமைப்பு வெவ்வேறு காலகட்டத்தில் தொடர்ச்சியான மாற்றங்களை அடைந்திருந்தபோதிலும் பெண்களுக்கான தனி வெளிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகவே இருந்துவந்துள்ளது என்பது பெண்ணியவாதிகள் வைக்கும் விமரிசனம். அவ்விமரிசனத்திற்கு அரண்செய்யும் விதமாகப் பழைய இலக்கியங்களில் பெண் பாத்திரங்கள் எவ்வாறு எழுதப்பெற்றன என்பதை எடுத்துக்காட்டிப் பேசுகின்றன. பழைய இலக்கியங்கள் எனப் பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் ஒரு மொழியில் அல்லது நாடு என்னும் பெருவெளியில் அதிகம் தாக்கம் செய்த இலக்கியங்களை மறுபார்வைக்கு உட்படுத்தவேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றது.
பெண்ணியத் திறனாய்வு முன்வைக்கும் இக்கோரிக்கையை உள்வாங்கிய பெண்ணெழுத்தாளர்கள் -குறிப்பாகப் பெண்ணியத்தை உள்வாங்கிய கவிகளும் புனைகதையாளர்களும் மரபிலக்கியக் கதாபாத்திரங்களைக் குறியீடுகளாக்கிப் புதிய கேள்விகளை எழுப்புகின்றனர். பெண் சார்பில் நின்று ஆண் எழுத்தாளர்களும்கூட இந்தக் குறியீடுகளைத் தங்கள் எழுத்துக்கான கருவிகளாகக் கொண்டிருக்கின்றனர். நவீனக் கவிதைகளும் நாடகங்களும் சிறுகதைகளும் இத்தகைய எழுத்துகளை அவ்வப்போது வாசிக்கத் தந்துகொண்டே இருக்கின்றன.
நவீனத் தமிழின் இலக்கியப்பரப்பில் அதிகமும் குறியீடுகளாக ஆக்கப்பட்ட பனுவல்களாக இருப்பவை ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களே. அடுத்த நிலையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, நளவெண்பா, அரிச்சந்திர புராணம் போன்றனவும் பெரிய எழுத்துக் கதைப் புத்தகங்களும் இருக்கின்றன. ஏனெனின் இவற்றின் மையப்பாத்திரங்களின் வழி கட்டமைக்கப்பட்ட சமூக வாழ்வியலில் பெண்களின் பாத்திரங்களும் திணறிக்கொண்டிருக்கின்றன. புதுமைப்பித்தனின் சாப விமோசனம், அகல்யா போன்றன அனைவரும் அறிந்த கதைகள். அசோகவனத்துச் சீதை என்னும் பிம்பமும், பேசா மடந்தையாய் இருந்த கண்ணகி, நீதியைத் தட்டிக்கேட்ட கண்ணகி போன்ற பிம்பங்களும் திரும்பவும் நினைவூட்டப்பட்டுள்ளன. மணிமேகலை, நளாயினி, சந்திரமதி, அகல்யா போன்ற பாத்திரங்கள் திரும்பத் திரும்ப எழுதப்பெற்ற பாத்திரங்கள். பழைய இலக்கியங்களான புராணங்களையும் தொன்மங்களையும் காப்பியங்களையும் மறுவிளக்கம் செய்தல் என்பது கோட்பாட்டு இலக்கியத்தின் பணியாக உலகம் முழுவதும் – வளர்ச்சியடைந்த மொழிகள் பலவற்றிலும் இருக்கும் போக்காகும். மையப் பாத்திரங்களாக இல்லாத நிலையிலும் சில பாத்திரங்கள் புனைவு வழியாக மறுவிளக்கங்கள் பெற்றுள்ளன. இங்கே ஊர்மிளை என்னும் துணைப் பாத்திரத்தின் வழியாக உருவாக்கப்பெற்ற கதையொன்று பெறும் மறுவிளக்கத்தைப் பார்க்கலாம். 
தொடர்ச்சியாக உலக இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யும் தமிழ்ப் பேராசிரியர் எம்.எ.சுசிலா மதுரையின் புகழ்பெற்ற பாத்திமா கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கு முன்பே பெண்ணியத்தை உள்வாங்கிய புனைகதை ஆசிரியராகவும் விளங்கியவர். யாதுமாகி என்றொரு நாவலையும் (2014) தேவந்தி(2011), தடை ஓட்டங்கள்(2001), புதிய பிரவேசங்கள் (1994), பருவங்கள் மாறும்(1985)  சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 
2012, ஆம் ஆண்டு தினமணிக்கதிரில் வெளியான கதை ஊர்மிளை. அக்கதையை 
இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன். எனத்தொடங்கி, 
தேர்த்தட்டில் இலட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்த மாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்.
என முடிக்கிறது. இந்தத் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையில் உருவாக்கப்படும் புனைவுகள் அனைத்தும் புதியன அல்ல. வான்மீகி அல்லது கம்பன் உருவாக்கித் தந்த அதே புனைவு வெளியே மாற்றப்படுகின்றன.
சீதையை அழைத்துச் செல்வதற்காகத் தயாராக இருக்கும் இலட்சுமணன் ஏன் வெளியே செல்கிறோம் என்பதைக் கூடச் சொல்லாமல் அவளை அழைத்துச் செல்கிறான். அப்படி அழைத்துச் செல்ல வேண்டும் என்பது இராமனின் உத்தரவு. போகும் வழியில்கூடக் காரணத்தைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. போய்ச் சேரவேண்டிய இடமான வான்மீகியின் ஆஸ்ரமத்தை அடைந்தபின் அரசன் இராமனின் அரசநீதிக்கு இப்படியொரு சிக்கல் வந்துள்ளது; அதனால் திரும்பவும் தன் மனைவியான சீதையைக் காட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதைச் சொன்னால் போதும் என்பதாகப் பழைய ராமாயண நிகழ்வை மாற்றி எழுதும் கதாசிரியர், ராமாயணத்தில் அதிகமும் பேசாதிருந்த பாத்திரமான ஊர்மிளையை – இலட்சுமணனின் மனைவியான ஊர்மிளையைப் பேசவைப்பதின் மூலம் பெண்களின் மன உணர்வினையும் விருப்பங்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைக்கிறார். 
“இந்தக் காரியத்தை நான் என் உள்நெஞ்சின் ஒப்புதலோடு செய்து கொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி” தழுதழுத்துத் தள்ளாடும் இராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல் வெடித்துச் சிதறுகிறான் இலட்சுமணன்.
“மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள் நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லை இலட்சுமணா! ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன் ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ளம் சொல்வதை மட்டுமே நான் கேட்கும் வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்”
அரசநீதியின் பெயரால், தன் மனைவியைத் திரும்பவும் காட்டுக்கு அனுப்பும் உத்தரவைத் தம்பிக்குச் சொல்லிவிட்டுப் பொய்யாக விடைபெற்றுச் சென்றவன் ராமன். அதனை எப்படி நிறைவேற்றுவது எனத் தவிக்கும் இலட்சுமணனின் மனதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்டவளாக இருந்தாள் ஊர்மிளை. ஆனால் இலட்சுமணனுக்குத்தான் அவளைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை. ஆர்வம் இல்லை என்பதைவிட, அண்ணன் மீது கொண்ட பக்தியால் அப்படி இருக்கிறான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் கதாசிரியர்.
உணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின் நெருடலை இனம் கண்டுவிட்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறு கேட்கிறாள், “”இன்று உங்கள் அண்ணா…என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார்?”
இந்தக் கேள்வி இலட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும் அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்க முடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறு மகிழ்ச்சியும்கூட! திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப்பிரிந்து போய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும் தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்கு இலேசான ஆறுதலை அளிக்கிறது.
சிறிய உலாவாக வெளியே கிளம்பிப்போகிறோம் என்று சொல்லிச் சீதையை அழைத்துச் செல்லும் இலட்சுமணனின் மனம் குழம்பி நிற்கிறது. ஏனென்றால் அப்படிச் சொல்லி அழைத்துச் செல்வது பொய்யென்பது அவன் மனதுக்குத் தெரியும். அந்தக் கலக்கத்தோடுதான் அவனது செயல்கள் இருக்கின்றன. அண்ணனின் உத்தரவை ஏற்றுச் செயல்படுத்துவதற்காக அண்ணியை அழைத்து வருகிறான். அவள் வந்து ஏறுகிறாள். அவளோடு ஊர்மிளையும் வருகிறாள் என்ற காட்சியை தொடக்கக் காட்சியாக வைக்கிறார்.
அந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும் நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கிறது. 
அவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித் தடுமாறும் இலட்சுமணன்,
“பார்த்து ஏறுங்கள் அண்ணி” என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.
மீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பான பாவனைகளுடன் ஏதோ ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறிச் சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத இலட்சுமணன், இலேசாகத் துணுக்குற்றுப் போகிறான்ஆனாலும் கூட இலேசான ஓர் ஆறுதலின் நிழல் அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே தனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அவனுக்கில்லை…! ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோ அவள்? நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.
ஊர்மிளையும் சீதையும் பேசிக்கொண்டே வரும்போது இலட்சுமணன் அமைதியாகவே வருகிறான். என்றாலும் அவனது கண்களும் ஊர்மிளையின் கண்களும் அடிக்கடி சந்தித்துக்கொள்கின்றன. அதைக் கண்டுபிடித்துவிட்ட சீதை, அதை மனதில் வரவேற்றுப் பேசுகிறாள்:
“……இராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும் இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்கு வாய்த்திருக்குமா என்ன?”
-வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன் பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள். இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்தேறும் கருத்துப் பரிமாற்றம் அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.
—————–
 “பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும் இரவுகளும்…! எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை…? அசோக வனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன…! ஆனால் அத்தனை நாளும் இவன் தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக் கொள்கிறார்களாம்…! பேசுபவர்களுக்கு என்ன? தங்களுக்கென்று வந்தால்தானே எந்த நோவின் வலியும் தெரியும்”
இப்போது போகும் பயணம் எதற்காக? எப்படி முடியப்போகிறது என்பதை அறிந்தவள் ஊர்மிளை. அதனை ஒட்டி அவளும் ஒரு முடிவோடு வருகிறாள். அதனை இலட்சுமணன் அறிய மாட்டான். அந்நிலையில் அவளது பேச்சுகளும் மனவோட்டங்களும் திட்டமிட்டவனவாக இருக்கின்றன. ராமனின் விருப்பங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் இலட்சுமணனுக்கு ஓர் அதிர்ச்சியைத் தரவேண்டும் என முந்திய இரவே அவள் முடிவு எடுத்துவிட்ட தாகக் கதாசிரியர் சொல்கிறார். 
அந்தப் பேதை உள்ளம் போட்டு வைத்திருக்கும் கணக்கு இலட்சுமணனின் உள்ளச் சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும் தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின் வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒரு புதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சை ஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவே அவனுக்குப்படுகிறது.
நேற்றை  இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.
தொடரும் பயணத்தில் பேச்சு மட்டுமில்லாமல் இயற்கைக்காட்சிகளையும் கண்டுகளித்தபடியே செல்கின்றனர் சீதாவும் ஊர்மிளையும். அதை எழுதும்போது முன்பு நிகழ்ந்த கொடும்நிகழ்வை நினைவூட்டும் பொன்மான் காட்சியைத் திரும்பவும் கொண்டுவருகிறது கதை.
“அந்த மானைப் பார்த்தாயா தம்பி…? முன்பு வந்த பொன்மானைப் போலவே இருக்கிறதல்லவா? பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும் உன்னை அனுப்பிவிட மாட்டேன்”
“அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கே அருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ள மான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்”
“என்ன…வால்மீகி மாமுனியா? ஊர்மிளை! நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன?”
“தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்…இது…அண்ணனின் விருப்பம்…”
எந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத் தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச் சொல்லி முடித்தபோது இலட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.
நச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போல வினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமே நிதானத்துடன் நிமிர்கிறாள்.”இது…இப்படி…நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம் இப்போது புரிகிறது! உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின் அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா இலட்சுமணா?”
இந்தப் பொன்மானும் இன்னொரு கொடும் நிகழ்வின் – மறுகானகப் பிரவேசமாக அமைந்துவிடுகிறது. அவளை அங்கேயே விட்டுவிட்டு ஊர்மிளையுடன் ஊர்திரும்பலாம் என நினைத்த இலட்சுமணனுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறாள் ஊர்மிளை.
“நீங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாக இங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவனது எந்த மறுமொழிக்கும் காத்துக் கொண்டிருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடி வால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.
இங்கேயே கதை முடிந்துவிடுகிறது. ஊர்மிளையில்லாமல் தனியாக த் திரும்புகிறான் என்ற வரிகளை எழுதிக் கதையை முடிக்கிறார் கதாசிரியர். சிலவகை விடுதலையை முன்வைத்துக் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. அக்கோட்பாடுகள் இலக்கியத்திற்குள் நுழைந்து மறுவிளக்க இலக்கியங்களை உருவாக்குகின்றன. அப்படி உருவாக்கப்படும் மறுவிளக்க இலக்கியங்கள், பழைய இலக்கியங்கள் உருவாக்கித் தரும் வெளி, காலம், நிகழ்வுகள் மற்றும் பாத்திரங்கள் என்பனவற்றை மறுதலிப்பதில்லை. அப்படியே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் பாத்திரங்களின் மனவோட்டங்களையும் அதன் வழி எடுக்கும் முடிவுகளையும் மாற்றம் செய்கின்றன. மனவோட்டங்களையும் முடிவுகளையும் தீர்மானிக்கும் இடத்தில் புதிதாக வரும் கோட்பாடுகள் வினையாற்றுகின்றன. அதன் வழியாகப் பெண் எழுத்தாளர்களின் தன்னிலை உருவாகின்றது. எம்.ஏ. எழுதியுள்ள ஊர்மிளை என்னும் கதை, பேசாதவளாக இருந்த ஊர்மிளையைப் பேசுபவளாகவும், எல்லாவற்றையும் புரிந்துகொண்டு சமூகத்தின் போக்கோடு இயைந்து வாழ்ந்தவளாகவும் காட்டுவதோடு, தன்னை விட்டுப்பிரிந்திருந்த இலட்சுமணனைப் பிரிந்துவாழும் முடிவைத் தன்னிச்சையாக எடுக்கும் பாத்திரமாகவும் மாற்றுகின்றார். இந்த ஊர்மிளை வான்மீகியின் – கம்பனின் ஊர்மிளை அல்ல; எம்.எ.சுசிலாவின் ஊர்மிளை.
'ஊர்மிளை' சிறுகதையை என் வலைத்தளத்தில் கீழிருக்கும் இணைப்பில் வாசிக்கலாம்.
http://www.masusila.com/2012/05/13.html#more

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....