ஒரு வாசகனுடன் வாழ்வின் எல்லை வரை பயணிக்கும் நூல்/கதாபாத்திரம்
என ஒரு சிலவற்றைத்தான் குறிப்பிட இயலும். என் வரையில் இந்த நூல் இவ்விரு தளத்திலும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பரவசம் கொள்கிறேன். பெண்களின் கதை என்பதை இதுவரை ஆணெழுத்தாளர்களின்
கண்களின் வழியாத்தான் தரிசித்திருக்கிறேன்- வெகு சிலவற்றைத் தவிர,அதுவும் நீண்ட நாட்களுக்கு
முன்பு. ஒரு வேளை இதனாலேயே கூட இத் தலைப்பு ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக்கொடுத்து
பிரமிக்க வைத்திருக்கலாம்.
என்னை முதலில் ஈர்த்தது இதன் அட்டைப்படம். பழமையைப் பறைசாற்றும்
மடிசார்க்கட்டு, திண்ணையில் அடைக்கப்பட்ட பெண். இதனை மெருகேற்றும் விதமாக அமைந்த காவி
பாவிய வண்ணம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய கதை என்று புரிந்தது. வம்சி பதிப்பகத்தின்
குறியீடு என்றுமே தரமான உள்ளீடுகளைக்கொண்டிருக்கும் என நம்பும் வாசகர்களில் நானும்
அனுபவசாலி.
சுசீலா அம்மாவை ஒரு மொழிபெயர்ப்பாளராக அறிந்த எனக்கு அவரின் வாழ்வோ எழுத்தோ
இதுவரை பரிச்சயம் இல்லாதது.
பொதுவாகவே ஓர் ஆண் வாசகனுக்கு- பெண்படைப்பாளியின் எழுத்து
ஓர் ஆண் படைப்பாளியின் எழுத்தைப்போல் ஒன்றிப்போவதில்லை என்று ஒரு கருத்து உண்டு.அது
ஒரு சிலரின் அபிப்பிராயமாக இருக்கலாம். பலதரப்பட்ட கதையம்சங்களைக் கலந்து வாசிக்கும்
எனக்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு பெண்ணியக்கதைக்களம் தேடுதலில் இருக்கவே கிஞ்சித்தும்
யோசிக்காமல் விரும்பி வாங்கிய நாவல் இது.
சரி,வாங்கிய அனைத்தையும் படிக்கிறோமா,அல்லது எவ்வளவு வருடங்கள்
கழித்து அந்த வாய்ப்பு அமையுமோ,யாரறிவார். இலக்கிய விழா ஒன்றில் சுசீலா அம்மா யாரென்றே
தெரியாத எனக்கு யதேச்சையாக ஒரு நண்பர் மூலம் அடையாளம் காட்டப்பட்டார். திடீரென சந்தித்ததில்
ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரின் எழுத்துக்களை இதுவரை படித்ததில்லை,என்ன பேசுவது.
‘’உங்களின் ’யாதுமாகி’ வாங்கி விட்டேன், இன்னும் வாசிக்கவில்லை’’ என்றே அறிமுகமானேன். ‘’நிச்சயம்
படித்து விட்டு உங்கள் கருத்தை என் மின் அஞ்சலில் தெரிவியுங்கள்’’என்றார். ஒவ்வொரு
புத்தகத்தை எழுதவும் ஒரு படைப்பாளிக்குத் தக்க தருணம் கனிய வேண்டும்.அது போல வாசகனின்
கைக்கு அந்த நூல் வந்து சேர ஒரு கீதாமுகூர்த்தம் வாய்க்க வேண்டும். இச்சந்திப்பு அத்தகையதொரு
சந்திப்பு.
கதையின் நுழைவாயிலில் இருந்து இறுதிவரை என்னை ஈர்த்ததில்
முக்கியமாக நான் கருதுவது, புதிய சொல்லாடல் மூலம் கட்டமைக்கப்பட்ட எளிய அழகான வாக்கியங்கள். இக்கதையின்
தன்மைக்கு ஏற்ற நடை. துவக்கத்திலிருந்தே வாசகன் ஒன்றிப்போகக்கூடிய வடிவம். எனக்கு இந்த
எழுத்து புதிய அனுபவத்தை வழங்கியது.
அடுத்த அம்சம் இதன் வடிவமைப்பு. முதல் பகுதி நிகழ்காலத்தில்
[1968] நடக்கும். அடுத்த பகுதி கடந்த கால நினைவுகளின் [1930] பின்னோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்
காரண காரியத்தை உணர நான்கு அத்தியாயங்கள் செல்ல வேண்டியுள்ளது. ஏன் இப்படி அமைக்கப்பட்டுள்ளது? ஒருவேளை
புதுமைக்காகவோ, இன்றைய எழுத்துநடை நாகரிகத்துக்காகவோ என குழப்பம் தோன்றும். ஆனால் முதல்
நான்கு அத்தியாயங்களைக் கடக்கும்போது நம்மையும் அறியாமல் கடந்த அத்தியாயங்களைப் புரட்டிப்பார்த்தே
முன் நகர முடியும்; மொத்த நாவலைப்படித்த பின்னும் கூட மீண்டும் மீண்டும் கடந்த அத்தியாயங்களைப்
புரட்டிப்பார்த்தே முன் நகர முடியும். காரணம் பின்னாலுள்ள அத்தியாயங்களின் கேள்விகளுக்கான
பதில்கள் அதன் முந்தைய அத்தியாயங்களில் ஆணித்தரமாக நிறுவப்பட்டுள்ளது. இக்கதையின் தன்மைக்கு
இந்த வடிவம் தனித்துவமான ஒன்றாக அமைந்திருக்கிறது.என் நினைவிற்கு இத்தகைய கதைக்களமும்
[பாலிய விவாகம்] இந்த வெட்டு-சேர்ப்பு வடிவமுறையும் ஒத்திசைந்த வாசிப்பு அனுபவத்தை
வழங்கிய தமிழ்நாவல் இது என்று நிச்சயமாகக்கூற முடியும்.
பாலிய விவாகத்தால் பாதிக்கப்பட்டாலும் தொடர் இழப்புக்களால்
துவண்டு விடாமல் அதற்கான அடுத்த கட்ட விமோசனம் என்ன என்ற விடை தேடலே தேவியின் குணாம்சம்.
தாய்-மகள் உறவை அத்தனை உயிர்ப்புடன் படைத்திருக்கிறார் ஆசிரியர். காரணம்
அவர்கள் வாழ்ந்த வாழ்வில் அத்தனை ஒரு அந்நியோன்னியம்.! படிக்கும் நமக்கே அவர்களின்
பிணைப்பு பொறாமையையும் கூடத் தோன்றச்செய்கிறது.
தேவி சாருவின் வாழ்க்கை என்னவோ துயரம் நிரம்பியதாகவே இருந்து
வந்திருந்தாலும் கதை நெடுக சாம்பசிவம்,அன்னம்மாள்,விடுதிக்காப்பாளர், மதர் சுபீரியர்,
ராமானந்த் போன்ற நல்ல மனிதர்களின் துணையுடனே பயணித்ததால் தங்கள் அளவில் ‘குறை ஒன்றும்
இல்லை’என்ற மனநிறைவையே வாசகர்களான நமக்கு செய்தியாக அளிக்கிறது.
நாவலில் இன்னோர் உயர்ந்த உள்ளம் தோழி சில்வியா.சுமார் அரைநூற்றாண்டுக்கால
நட்பு. தேவியின் சுகதுக்கங்களில் பங்கு தோள் சாய்ந்து எண்ணங்கள் பகிர்ந்து கொண்டு,நிழல்
போல் தொடர்ந்து வந்த பந்தம், தேவியின் வரங்களில் ஒன்று.
தான் மெய்மறந்து ரசிக்கும் நைட்க்வீன் மலரின் மலர்தல் போலவே
தேவியின் மரணமும் சுற்றத்தாருக்கு நல்ல நினைவுகளை மணம் பரப்பி விடைபெறுகிறது
தனி மனித வரலாறுகளில் வெகுசிலவே அதன் கதை நாயகர்களின் புகழை
உயர்த்தி மேன்மைப்படுத்தும். அவ்வகையில் தேவியின் பிம்பத்தை வானளாவ எழச்செய்து விஸ்வரூப
தரிசனத்தை ஏற்படுத்தியதன் மூலம் மகள் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய அரும்பணியைக் கச்சிதமாய்ச்
செய்திருக்கிறார் ஆசிரியர்.
இந்த நாவலின் தனித்துவமான சிறப்புக்களில் ஒன்று.., எவர் ஒருவராலும்
கடந்து சென்ற அத்தியாயங்களை மீண்டும் புரட்டித் தொடர்புடைய சம்பவங்கள்,புகைப்படங்கள்
போன்றவற்றை ஒப்பிடாமல் முன்னகர்ந்து அடுத்த அத்தியாயங்களைப் படிக்க முடியாது என்பதே. இந்தப்போக்கு
புதுமைக்காக அமைக்கப்படவில்லை, எதேச்சையாக அமைந்து விட்டது என ஆசிரியர்கூறினாலும் இவ்வடிவமே
இக்கதையின் உணர்ச்சியை வாசகனுக்குக் கடத்தும் கருவி. கதையின் உயிர்நாடி. ஆசிரியரின் முத்திரைப்படைப்பு [masterpiece] இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்ற வாசகனின் விருப்பம்.
சின்னச்சின்ன அத்தியாயங்கள்,சொற்சிக்கனமுள்ள வாக்கிய அமைப்புக்கள்
இருந்தும் உணர்ச்சியைக்கடத்தும் லாவகம் பாராட்டுக்குரியது. நாவலின் பிரதான அம்சம் புகைப்படங்கள்.
காலகட்டம்,உடைத் தேர்வுகள்,வாழ்வின் நீரோட்டக் காட்சிப்படிமங்கள் என அனைத்தையும் பறைசாற்றும்
விதமாகப் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருப்பது அருமை.
திரைப்படமாக வந்திருப்பின் தேவி என்ற ஆளுமை ரசிகர் மனதில்
நீங்கா இடம்பிடிக்கக்கூடிய உச்சபட்சக்கதாபாத்திரமாக வீற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நூலாக வடித்திருந்த வகையில் வாசகர்களாகிய நாங்கள் பாக்கியசாலிகள்.மிகச்சிறந்த வாசிப்பு
அனுபவத்தை வழங்கிய சுசீலா அம்மாவுக்குக் கோடானு கோடி நன்றிகள்.வாழ்த்துக்கள் அம்மா.
ஆனந்த்
கோவை
ஜன 2020
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக