துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.7.21

ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்,மொழிபெயர்ப்புச் சிறுகதை

 

சொல்வனம் இணைய இதழில் ஜூலை 25/2021- இதழ் 251 வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை,

ஒரு கடிதம், 

ஆங்கில மூலம்: டெம்சுலா ஆவ்

கிராமத்தில் தர்மசங்கடமான ஓர் அமைதி நிலவிக்கொண்டிருந்தது.  தலைமறைவாக இருந்தபடி கிராமவாசிகளிடம் மிரட்டிப் பணம் பறித்துக்கொண்டிருக்கும் போராளிகள் அங்கே வந்து சென்றிருந்தார்கள்.  அந்த கிராமத்தின் அருகே நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கான சாலை அமைக்கும் முதல் கட்ட சீரமைப்பு வேலையில் ஈடுபட்டு கிராமத்தவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணம் அது.  எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிறுவனத்தால் (பி.ஆர்.ஓ) அவர்களுக்கு அந்த வேலை ஒதுக்கப்பட்டிருந்தது.  நிறைய ஆதரவு திரட்டியும், கடுமையான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பல வகையான முயற்சிகள் செய்த பிறகு அவர்களுக்கு அது கிடைத்திருந்தது.  அந்த வேலையைக் கிராமத்திலிருப்பவர்களுக்குக் கொடுக்க முதலில் சாலை போடும் நிறுவனம் ஒப்புதலளிக்கவில்லை.  சீரமைப்புக்காகத் தோண்டும் வேலைகளைச் செய்யப் போதுமான ஆட்கள் தங்கள் வசமே இருப்பதாகத்தான் அது தெரிவித்தது.  ஆனால் கிராமவாசிகள் அதை ஒத்துக்கொள்ளவில்லை.  தங்கள் நிலத்தின் வழியாகச் சாலை போடப்படுவதால், வழித்தடத்தை சரியாக வரையறை செய்ய வேண்டுமென்றால் நிலச் சொந்தக்காரர்களுக்கும் அதில் பங்கு இருந்தாக வேண்டுமென்று அவர்கள் வாதிட்டனர்; அவ்வாறு செய்யாவிட்டால் பக்கத்து கிராமத்தையும் ஒரு வேளை சாலை ஆக்கிரமித்துவிடும், அது தேவையில்லாத வேறு சிக்கல்களுக்கே வழி செய்து தந்துவிடும் என்றனர்.  எனவே ஒரு வழியாக அவர்களுக்கே காண்ட்ராக்ட் தரப்பட்டது; அவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வேலையை முடித்துவிட்டிருந்தார்கள்.  அந்த வேலையைச் செய்தவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று வெவ்வேறு வகையாகத் திட்டம் போட்டு வைத்திருந்தார்கள்.  ஒரு சிலர் தங்கள் வீடுகளுக்கு உலோகக் கூரை போட விரும்பினர்; வேறு சிலர் தங்கள் நிலங்களை உழுவதற்கு ஜோடிக் காளைகளை வாங்க ஆயத்தம் செய்யத் தொடங்கியிருந்தனர்.  தன் வீட்டுத் தரையை மராமத்து செய்வதற்காக அடுத்த வீட்டிலிருந்து மரப்பலகைகளை முன்கூட்டியே ஒருவன் கடன் வாங்கியிருந்தான்  பி.ஆர்.ஓ தனக்குக் கூலி தந்த பிறகு அந்தக் கடனை அடைப்பதாகச் சொல்லியிருந்தான்.

தலைமறைவாக இருப்பவர்களின் துப்பறியும் திறமைக்கு முன்பு கிராமவாசிகள் போட்ட கணக்கெல்லாம் ஜெயிக்க முடியாமல் போயிற்று.

சம்பள நாளன்று மாலையிலேயே முகம் தெரியாத சில தலைமறைவு மனிதர்கள் கிராமத்திற்குள் நுழைந்தார்கள்.  தங்களை கிராமத்தலைவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மக்களை மிரட்டினார்கள்.  அங்கே வைத்துத் தங்கள் கோரிக்கையையும் சொன்னார்கள்.  சாலைப் பணியில் யாரெல்லாம் ஈடுபட்டிருந்தார்களோ அவர்களது பெயர்களையெல்லாம் வாசித்து சரிபார்த்தபோது, ஒரு மனிதன் மட்டும் விடுபட்டுப் போயிருப்பதைப் பார்த்தார்கள்.  உளுத்துப்போயிருந்த தன் வீட்டுத் தரையை சரிசெய்வதற்காக மரம் வாங்கி அதை அளவாக அறுத்துக் கொண்டிருந்த அதே மனிதன்தான் அவன்.  தங்களுக்கு முன்னால் அவனை இழுத்துவரச் செய்து, தங்கள் அழைப்பை மதிக்காமல் இருந்ததற்காகத் தகாத சொற்களால் அவனை அவர்கள் கண்டபடி திட்டினார்கள்.  தாங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்துக்குப் போட்டு வைத்திருந்த திட்டமெல்லாம் வீணாகத்தான் போகப்போகிறது என்பதைக் கிராம மக்கள் உடனே புரிந்துகொண்டனர்.  ’காட்டிலிருந்து வந்திருக்கும் முரட்டுத் தோற்றம் கொண்ட அந்த மனிதர்கள், இரவு நேரத்தில் கிராமத்திற்கு வந்திருப்பது ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்.  தலைமறைவு அரசாங்கத்தின் பெயரால் தங்களிடமிருந்து திருடுவதுதான் அது.  அவர்களை எதிர்த்துப் போராடுவதில் பயன் ஏதுமில்லை.  அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தார்கள்.  அவர்களோடு மோதுவது மோசமான விளைவுகளையே உண்டாக்கும்’.

‘தேசியவாதிகள்’ என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து வரும் அப்படிப்பட்ட அப்பட்டமான பணப்பறிப்புகள் எளிமையான அந்த கிராமவாசிகளுக்குப் புதிதானவை அல்ல.  ஆனாலும் இம்முறை அவர்கள் வந்த நேரமும், அவர்களுக்குக் கிடைத்திருந்த துல்லியமான தகவலும்தான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.  வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் பி.ஆர்.ஓ விடமிருந்து பெற்ற கூலி எவ்வளவு என்பதைக் கூட அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.  இப்போது கிராமத்தலைவரின் முன்னிலையில் ஒவ்வொருவரும் வரியாகக் கொடுத்தாக வேண்டிய தொகையை வரிசையாக வாசிக்க ஆரம்பித்தனர்.  நெஞ்சம் முழுவதும் மண்டிக்கிடக்கும் வெறுப்போடும் கொலைவெறி கொண்ட கண்களோடும், ஒவ்வொருவரும் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை எண்ணிப் பார்த்துத் தலைவர் முன்பு வைத்தனர்.  ஆனால் ஒரு மனிதன் மட்டும் பணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.  அவ்வாறு பலமுறை செய்தபிறகு  தலைமறைவுத் தலைவனிடம் அவன் தன் வேண்டுகோளைச் சொல்ல ஆரம்பித்தான்.  மரவியாபாரிக்கு அவன் செலுத்த வேண்டிய கடன்பாக்கி இருக்கிறது; மீதமுள்ளதை இவர்களுக்குத் தந்துவிட்டால் இறுதித் தேர்வு எழுதப்போகும் மகனுக்கு அவனால் எதுவும் அனுப்பமுடியாது.  தேர்வுக்கான கட்டணத்தை ஒரு வாரத்துக்குள் கட்டியாக வேண்டும்.  இப்போதைக்குப் பணம் தருவதிலிருந்து தன்னை விட்டு விடுமாறும் சீக்கிரமே அவர்களுக்குத் தந்து விடுவேனென்றும் அவன் அவர்களிடம் சத்தியம் செய்தான்; இல்லையென்றால் அவனது மகனால் தேர்வு எழுத முடியாமல் போய்விடும்.  மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போய்விட்டதால் அவன் மற்றவர்களை விடக் குறைந்த நாட்களே வேலைபார்த்திருக்கிறான்; அதனால் பிறரை விடக் குறைவான தொகைதான் அவனுக்குக் கிடைத்திருக்கிறது.  இந்த விஷயங்களையெல்லாம் கூடத் தலைவனிடம் சொல்ல அவன் முயற்சித்தான்.  ஆனால் அவன் தன் கோரிக்கையை முழுவதுமாய் முடிப்பதற்குள்ளேயே அங்கு வந்திருந்த புரட்சிக்காரர்களில் ஒருவன் தான் உட்கார்ந்திருந்த ஸ்டூலிலிருந்து துள்ளி எழுந்தபடி தன் துப்பாக்கி முனையால் பாவப்பட்ட அந்த மனிதனைத் தாக்கினான்.

‘‘என்ன இது? பரீட்சை…, பரீட்சைக்குக்குக் கட்ட வேண்டிய பணம் அது இதுன்னு என்னல்லாமோ சொல்லிக்கிட்டு? அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்திலே நாங்க எப்படிப்பட்ட தியாகமெல்லாம் செஞ்சிக்கிட்டிருக்கோம்னு உனக்குத் தெரியாதா? காட்டிலே இருந்தபடி நாங்க எவ்வளவு கஷ்டப்படறோம்? நீ என்னடான்னா நாங்க வரிவசூல் செய்யக்கூடாதுன்னும், அந்தப் பணத்தை வச்சு உன் மகன் பரீட்சை எழுதி இந்திய அரசாங்கத்திலே பெரிய ஆளாகி எங்களையெல்லாம் ஆட்சி செய்யணும்னும் சொல்றே’’

‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிக்கும்போதே வெளிப்படையான வெறித்தனமான கோபத்தால் அவன் முகபாவம் ஒரு எதிரியை நேரில் பார்த்த மூர்க்கமான மிருகத்தைப் போல் மாறியது.  பகைமையான சூழல்களில் வாழ்ந்து பழகிப்போனதால் விளைந்த சமயோசிதமான வேகத்தோடு விழுந்த மனிதனைச் சற்று வேறுபக்கம் தள்ளிவிட்டார் கிராமத் தலைவர்.  இல்லாவிட்டால் அடுத்த கணத்திலேயே அங்கே கொலை விழுந்திருக்கக் கூடும்.  காயப்பட்ட கிராமத்தானிடமிருந்து பணத்தை எடுத்து இன்னும் கோபத்தால் கொதித்துக் கொண்டிருந்த அந்தப் புரட்சிக்கார இளைஞனிடம் தந்தார் கிராமத் தலைவர்.  உடனடியாக அங்கிருந்து செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.  தலைவர் பேசிய சற்றுக் கடுமையான தொனி, போராளித் தலைவனைப் பாதித்ததாகத் தெரிந்தாலும் அவன் அவரது வேண்டுகோளுக்குப் பணிந்தான்; காரணம் இராணுவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்களது நடமாட்டம் குறித்தும் பல முறை முன்கூட்டியே தகவல் தந்து அவர் அவனைக் காப்பாற்றியிருக்கிறார்.  

வேண்டாத விருந்தாளிகளெல்லாம் அங்கிருந்து போன பிறகு காயப்பட்ட மனிதனுக்கு முதலுதவி செய்வதில் ஈடுபட்டார் கிராமத் தலைவர்.  அவனது முகம்  ஏற்கனவே வீங்கிப்போயிருந்தது.  வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.  தங்களால் முடிந்த வரை அவனைச் சுத்தம் செய்தபின், கிராமத்துக் கம்பவுண்டரிடம் அவனைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.  இரத்தத்தை நிறுத்துவதற்காக அவனுக்கு சில மாத்திரைகள் கொடுத்து ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு கூறினார் கம்பவுண்டர்.  துரதிருஷ்டசாலியான அந்த மனிதனின் நிலையை உணர்ந்து கொண்ட கிராமத் தலைவர் அவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகத் தந்தார்.  பக்கத்து டவுனில் படித்துக் கொண்டிருந்த மகனின் தேர்வுச் செலவுக்கு உதவும் வகையில் அது அவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அப்போதைக்கு – உடனடியாக ஏற்பட இருந்த அபாயம் தவிர்க்கப்பட்டுவிட்டாலும், தங்கள் கிராமப்பகுதிக்குள் தலைமறைவு சக்திகளின் நடமாட்டம் இருப்பதில் எல்லோருமே கவலையோடுதான் இருந்தனர்.  தலைமறைவு இயக்கத்தில் அதற்குத் தொடர்பில்லாத மோசமான பலரும் ஊடுருவியிருப்பதாகப் பிறகு ஒரு செய்தி கசிந்தது.  எளிமையான கிராம மக்களையும், நகரத்தில் இருப்பவர்களையும் அவர்கள் ஒரே மாதிரிதான் சித்திரவதை செய்கிறார்கள் என்றும் ‘தலைமறைவு அரசாங்கம்’ என்ற பெயரில் வரிவசூல் செய்து கொண்டு அந்தப் பணத்தைக் குடிப்பதற்கும், வேறு பல போதைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன.  அப்படிப்பட்ட ஆட்கள் ‘மேலிட’த்தால் எப்படித் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற கதைகளும் கூடத்தான்.  அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் நேருக்கு நேராகவே அவர்கள் சுடப்பட்டு வந்தார்கள்.  ஆனால் அந்த துரோகிகளின் கதி என்ன ஆயிற்று என்பதெல்லாம் கிராமத்திலிருப்பவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.  விதவிதமான இத்தகைய தலைமறைவு சக்திகளை மட்டுமல்லாமல் அரசாங்க ஏஜண்டுகளையும் இந்திய இராணுவத்தையும் கூடத் தாங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

பொதுவாகவே அந்த கிராம மக்கள் சாதுவான குணம் உள்ளவர்கள்தான்.  மேலிருக்கும் அரசாங்கம், தலைமறைவு அரசாங்கம் ஆகிய இரண்டோடும் எந்த சிக்கலும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கே அவர்கள் பெரிதும் முயன்றார்கள்.  கறிகாய், அரிசி முதலிய சாமான்களை வாங்க எப்போதாவது கிராமத்துக்கு வரும் இராணுவ நபர்களோடும் அவர்கள் இணக்கமான உறவையே பேணி வந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி, அவர்கள் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபத்தை மீண்டும் தூண்டுவிட்டது போலிருந்தது.  இரண்டு மூன்று பேர்களாகக் கூடிக்கூடிப் பல நாட்கள் தங்கள் மனக்குறைகளைப் பேசிக்கொண்டார்கள்.  வீட்டில் இருந்தாலும், வயல்வெளியிலோ, தோட்டத்திலோ எங்கே இருந்தாலும் –பல ஆண்டுகளாகத் தங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் குறித்த மனக்கசப்பாலும், கோபத்தாலுமே அவர்களது மனங்கள் நிரம்பியிருந்தன.  நாகாலாந்தின் திரைமறைவு அரசியலில் காய் நகர்த்தி விளையாடும் பல வகையான நபர்கள் நாகர் சமூகத்தையே பெரும் அராஜாகத்தில் மூழ்கடிந்திருந்தனர்.  ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியால் இயக்கப்பட்டதைப் போல ஒரு நாள் மாலை அவர்கள்  அனைவரும் கிராமத்தலைவரின் வீட்டில் குவிந்தனர்.  காரசாரமான விவாதங்கள் தொடங்கின.  வயதில் மூத்தவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு இருந்ததால் கட்டுப்பாட்டோடு இருக்குமாறு எல்லோரிடமும் வேண்டினர்.  ஆனால் இளைஞர்களோ தங்களுக்கு எதிரான சக்திகளுக்குத் தக்க பதிலடி தர வேண்டும் என்றனர்.  தங்களை அவமரியாதையாக நடத்துபவர்களுக்கும், தங்களிடமிருந்து சுரண்டுபவர்களுக்கும் எதிராகச் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தினர்.  விவாதம் காலை வரை நீண்டு கொண்டே சென்றது.  கோபத்தோடு இருந்த இளைஞர்களின் வேகத்திற்கும், அவர்கள் கொண்டிருந்த கசப்புணர்ச்சிக்கும் முன்னால் பெரியவர்களின் குரல்கள் எடுபடவில்லை.

தலைமறைவு நபர்களுக்கு வரி கொடுப்பதில்லை என்றும், சம்பளம் பெறாமல்  அரசாங்கத்துக்கு வேலை செய்வதில்லை என்றும், இராணுவச் சிப்பாய்களுக்குத் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய மறுப்புக் காட்டுவதென்றும் இறுதியில் கிராம சபை முடிவு செய்தது.  அந்தத் தீர்மானம், இளைஞர்களின் கோபத்தை ஓரளவு தணிக்க உதவியதென்று சொல்ல வேண்டும்.  விடியற்காலையில் முதல் சேவல் கூவிய பிறகு, கூட்டம் கலைந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.  மறைந்திருக்கும் எந்தப் பகைமை உணர்வையும் எந்த வகையிலும் தூண்டிவிட வேண்டாம் என்று பெரியவர்கள் இளைஞர்களை இறுதிவரை எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

வெளித்தோற்றத்தில் பார்க்கும்போது கிராமத்தில் அமைதி திரும்பி விட்டதைப் போலத் தோன்றினாலும், துரதிருஷ்டம் பிடித்த அந்த மனிதனின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெண்களாலும் கூடக் கடுமையாகவே விமர்சிக்கப்பட்டுவந்தது.  தனியாக இருக்கும் நேரங்களில் தங்கள் குடும்பத்து ஆண்களை அவர்கள் ‘பெண்கள்’ என்றே பழித்தனர்; மறைமுகமான வார்த்தைகளால் கேவலப்படுத்தினர்; அருவருப்பும் ஆபாசமுமான பாடல்களாலும் அவர்களது ஆண்மையற்ற நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர்.  வீட்டிலிருந்த ஆண்களாலும் இந்தப் போக்கைத் தடுக்க முடியவில்லை; தாங்கள் கோழையாகி விட்டோமென்பதை வெகுகாலம் முன்பே- மனதளவில் அவர்களும் உணர்ந்துதான் இருந்தனர்.  ஆனால் இப்படிபட்ட உணர்ச்சிபூர்வமான எழுச்சிகளெல்லாம் அன்றாட வாழ்க்கை யதார்த்தத்துக்கு முன்னால் நிறம் மழுங்கிப் போக, கிராமம் தன் பழைய சாந்தமான சராசரி நிலைக்கு மீண்டும் திரும்பிவிட்டது.

அந்த அமைதி அதிக நாள் நீடிக்கவில்லை; அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தவிர்க்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

கிராமத் தலைவரின் வீட்டுக்கு வழி கேட்டபடி அங்கே வந்த ஆயுதம் தாங்கிய ஒரு மனிதனின் வருகையோடு அது தொடங்கியது.  எந்த மூதாட்டியிடம் அவன் வழி கேட்டானோ அவள், தான் இருந்த இடத்திலேயே நிலைகுத்திப் போய் நின்றுவிட்டாள்.  அப்போதுதான் அவள் தன் மகன் வீட்டிலிருந்து வெளியே வந்திருந்தாள்.  உடம்பு முடியாமல் இருக்கும் தன் பேரக் குழந்தைக்குப் பிரத்தியேகமான ஏதோ ஒரு சாப்பாட்டைத் தருவதற்காக அங்கே வந்திருந்தாள் அவள்.  தோற்றத்தில் வயதானவளாகவும், கிராமத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப்பற்றி அறியாதவளைப் போலவும் காணப்பட்டாலும் கிளர்ச்சி இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்தபோது கூட்டம் கூட்டமாக ஒதுக்கப்பட்டிருந்தவர்களின் குழுவில் அவளும் இருந்திருக்கிறாள்; இராணுவத்தினரால் அடி உதையும் வாங்கியிருக்கிறாள்.  தலைமறைவு சக்திகளின் ஆதரவாளர்களாகக் கருதப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகும் மனிதர்களையும் நேரே பார்த்திருக்கிறாள்.  இந்திய இராணுவத்துக்கு உளவாளியாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டானென்று குற்றம் காட்டி அவள் கணவனைக் கடத்திச் சென்ற தலை மறைவுசக்திகள் தொடர்ந்து அவனைக் கொன்று போட்ட கொடும் நிகழ்வையும் அவள் கடந்து வந்திருக்கிறாள். 

ஆனால் குறிப்பிட்ட இந்தக் கணம் தெய்வாதீனமாக வாய்த்தது போலிருந்தது; காரணம் அவன் அணிந்திருந்த வித்தியாசமான சீருடையையும் அடர்த்தியில்லாத தாடியையும் மீறிக் கொண்டு, அவன்  தன் கணவனைக் கடத்தியவர்களில் ஒருவன்தான் என்பதை அவள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள்.  கிட்டப்பார்வை உள்ளவளைப் போலக் கண்களைச் சுருக்கிக் கொண்டு, முடிந்தவரை குரலைத் தாழ்த்திக்கொண்டு.. தலைவர் வீட்டுக்குப் போகும் வழியைக் காட்டாமல் கிராமத்து இளைஞர் கூட்டத்திலிருக்கும் ஒருவன் வீட்டுக்குச் செல்லும் வழியை அவனுக்குக் காட்டிவிட்டாள் அவள்.

அவன் கிளம்பிப்போன பிறகு, மீண்டும் மகன் வீட்டுக்குள் திரும்பிச் சென்று, தான் செய்ததை அவனிடம் தெரிவித்தாள் அவள்.  அவன் உடனே தன் சால்வையையும் ‘தாவோ’வையும் (‘தாவோ’ – நாகரின மக்கள் பயன்படுத்தும் மரப்பிடியுள்ள கத்தி) எடுத்துக் கொண்டு தங்கள் குழுவினரை ஒன்று சேர்ப்பதற்காக நண்பனின் வீட்டை நோக்கி வேகமாக ஓடினான்.  பிறகு தலைமறைவுப் படையினரால் விதிக்கப்பட்டிருந்த ‘அவசர கால வரி’யை வசூல் செய்து தராவிட்டால் எந்த வீட்டுக்காரரை யும், அவரது குடும்பத்தாரையும், அதை எதிர்க்கும் அனைவரையும் கொன்று விடுவதாக அந்த முகம் தெரியாத மனிதன் துப்பாக்கியால் மிரட்டிக் கொண்டிருந்தானோ அந்த வீட்டை நோக்கி ஏழு இளைஞர்கள் அடங்கிய குழு அணிவகுத்துச் சென்றது.  பேசிக் கொண்டிருந்ததை முடிப்பதற்குள் கிராமத்தார் அடங்கிய கூட்டம் தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதை அந்தப் போராளி உணர்ந்து கொண்டான்.  கையில் துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் அவனுக்குப் பெரும் பயம் பிடித்துக் கொண்டது.  தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றபடி ‘‘யார் நீங்க? இங்கே எதுக்கு இப்படி கூட்டமாக வந்திருக்கீங்க?’’

தன் உயரத்தின் காரணமாக ‘நீளக் காலன்’’ என்று அழைக்கப்பட்ட ஒருவன், அந்தக் கூட்டத்திலிருந்து அவனுக்கு பதிலளித்தான்.

‘‘அது, நாங்க உன்கிட்டே கேக்க வேண்டிய கேள்வி’’

  • இவ்வாறு சொல்லிக் கொண்டே அந்த அறிமுகமில்லாத மனிதனை நெருங்கினான் அவன். தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பற்ற சூழலால் பெரிதும் பயந்து போன அந்த மனிதன், தன் துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.  அதிருஷ்டவசமாக அதிலிருந்த குண்டு, அங்கிருந்த ஒரு கிராமத்தானைத் தாண்டிச் சென்றுவிட்டது; எவருக்கும் காயம் ஏற்படவில்லை.  துப்பாக்கி வெடிச் சத்தம் மேலும் பல கிராமவாசிகளையும் வீட்டிலிருந்து  வெளியே வரவைத்தது.  

ஆரம்பத்தில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருந்தார்கள்.  ஆனால் ஒரே ஒரு தலைமறைவுப் போராளி மட்டும்தான் அங்கே இருக்கிறான் என்ற செய்தி பரவியதும் பூசல் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு எல்லோருமே வரத் தொடங்கிவிட்டனர்.  வாட்டசாட்டமான பல மனிதர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் தப்பி ஓட முயற்சித்தான்; ஆனால் அங்கிருந்த மனிதச் சுவர் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டது.  அவனை அடிக்க ஆரம்பித்தது யாரென்பது எவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.  ஆனால் அவன் தன் சுயநினைவை இழந்து இரத்தக் குவியலாகத் தரையில் சரியும் வரை, பல நிமிடங்கள் அவனை அடிப்பது தொடர்ந்துகொண்டே இருந்தது.  சூழலின் கடுமையை உணர்ந்து கொண்ட மற்ற கிராமத்தவர்கள், இரத்தப் பெருக்குடன் அசையாமல் கிடந்த அந்த மனிதனையும், கோபக்கார கிராமத்து இளைஞர்களையும் விட்டு விலகிச் சென்றனர்.

சம்பவம் நடந்த வீட்டின் சொந்தக்காரருக்கு நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் விளைவுகள் பற்றிய குழப்பம் கலந்த பயம் இப்போது பற்றிக் கொண்டது.  தன் வீட்டிலிருந்து எத்தனை தூரம் தள்ளி அந்த உடலைக் கொண்டு போக முடியுமோ அந்த அளவு அதைக் கொண்டு செல்லுமாறும் உடனே அதை அகற்றி விடுமாறும் அவர் அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.’

இப்போது இளைஞர் கூட்டத்தின் தலைவனாகிவிட்டிருந்த ’நீளக்காலன்’, கீழே விழுந்து கிடந்த மனிதனைத் தூக்கி வருமாறு மற்றவர்களிடம் சொன்னான். தன்னைப் பின்தொடர்ந்து வரச் சொல்லியபடி கிராமத்திலிருந்து ஒரு காட்டுப்பாதையை நோக்கி அவர்களை நடத்திக் கொண்டு போனான்.  சிறிய பள்ளத்தாக்கு போன்ற இடத்துக்கு இட்டுச் சென்றது அந்தப்பாதை.  மரத்திலிருந்து தவறி விழுந்து கற்பாறைகளில் மோதி இறந்துபோன யாரோ ஒரு மனிதனின் ஆவி அங்கே சுற்றிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டு வந்தது.  பொழுது இருட்டிக்கொண்டு வந்த அப்படி ஒரு நேரத்தில் இப்படிப்பட்ட தீமை நிறைந்த இடத்தில் இருப்பது அபாயகரமானது என்று மற்றவர்கள் எதிர்ப்புக் காட்டியபோதும் ‘நீளக்காலன்’ தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தான்.  பாதையில் மண்டிக்கிடந்த புதர்களைத் தன் கையிலிருந்த ‘தாவோ’வால் அகற்றிவிட்டபடி அவன் சென்று கொண்டிருந்தன்.  மிகுந்த வெறுப்போடும், எரிச்சலோடும் பெரும்பாடுபட்டபிறகு தங்கள் சுமையைத் தூக்கி வந்த அவர்கள், குன்றின் உச்சியை அடைந்தார்கள்.

இன்னும் கூட லேசாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்த அந்த மனிதனை அப்படியே போட்டுவிட்டு சற்று ஓய்வெடுப்பதற்காக அவர்கள் வெட்டவெளியில் உட்கார்ந்தார்ந்தார்கள்.  முதலில் தங்களுக்கு நடுவே காய்ந்த விறகுகளையும், சுள்ளிகளையும் போட்டுக் குளிர்காய்வதற்காக தீ மூட்டிக் கொண்டார்கள்.  அசையாமல் கிடக்கும் அந்த உடலுக்கு அடுத்து என்ன நேர இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்துதான் இருந்தது; ஆனால் ஒவ்வொருவர் மனதிலும் மேலோங்கி இருந்த கேள்வி இதுதான்.

      ‘அது எப்படி நடக்கப்போகிறது, அதற்குப் பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும்’ என்பதுதான்.  ‘நீளக் கால’னின் மனதிலுமே கூட அந்தக் கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது.

தரையில் கண்பதித்தபடி அந்த உடலைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தான் அவன்.  இனிமேலும் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அவர்களுக்கு அதிகமான சிக்கல்களையே உண்டாக்கக் கூடும் என்று உணர்ந்து கொண்ட அவன், எல்லோரிடத்திலும் ஒரு கேள்வியை வைத்தான்.

‘அந்த மனிதனை அப்படியே சாக விட்டுவிடுவதா அல்லது மலை உச்சியிலிருந்து அவனை உருட்டிவிடுவதா’ என்பதுதான் அது.  பதில் எல்லோரிடமிருந்தும் ஒரே மாதிரி வந்தது.  ‘மலை முகட்டிலிருந்து அவனை வீசி எறிந்து விட வேண்டும்’.

பிறகு அவனது துப்பாக்கியை என்ன செய்வது? அதற்கும் அவர்கள் பதில் வைத்திருந்தார்கள்.  தங்கள் முடிவை அவர்கள் செயல்படுத்த முனைந்தபோது ‘நீளக்காலன்’ இவ்வாறு குரல் கொடுத்தான்.

‘‘கொஞ்சம் பொறுங்கள்.  குறைந்தபட்சம் அவன் யார் என்றாவது தெரிந்து கொள்வோம்’’

அந்த உடலை மீண்டும் அவர்கள் இறக்கிவைத்தார்கள்.  அந்த அந்நியனின் சட்டைப்பைகளுக்குள்ளும், கால்சராய்ப் பைக்குள்ளும் கைவிட்டுக் குடைந்த ‘நீளக்காலன்’, நனைந்து கிடந்த குறைந்த அளவு மதிப்புக் கொண்ட சில ரூபாய் நோட்டுகளை அவற்றிலிருந்து உருவியெடுத்தான்.  எழுத்துக்கள் சிதைந்துபோய் உருத்தெரியாமல் இருந்த ஒரு அடையாள அட்டையும், பக்கத்து டவுனிலுள்ள தபால் பெட்டி எண்ணுக்கு எழுதப்பட்டிருந்த ஒரு கடிதமும் கூட அதில் இருந்தன.  அவனது பாக்கெட்டுகளையெல்லாம் காலி செய்த பிறகு – ஒரு காலத்தில் மனிதனாக இருந்து இப்போது இரத்தச் சகதியாக இருக்கும் அந்த உடலை மீண்டும் தூக்கி எடுத்த அவர்கள் மூன்று வரை எண்ணிவிட்டுப் பிறகு  அதற்கான இறுதி ஓய்விடத்தில் அதைத் தூக்கி வீசி எறிந்தார்கள். அவனைத் தொடர்ந்து அவன் வைத்திருந்த  துப்பாக்கியும் தூக்கி எறியப்பட்டது.  அந்த வேலை முடிந்து எல்லோரும் மறபடியும் கீழே உட்கார்ந்துகொண்ட பிறகு ‘நீளக்காலன்’, பாக்கெட்டிலிருந்து எடுத்த ஒவ்வொரு துண்டுத் தாளையும் கவனமாகப் பரிசீலித்தான்.  ரூபாய் நோட்டுக்களை எண்ணியபோது சரியாக நாற்பத்தொன்பது ரூபாய் இருந்தது.  அடையாள அட்டையைப் படிக்கவே முடியவில்லை.  கடிதம் போல இருந்த இன்னொரு துண்டுச் சீட்டும் அப்படித்தான் இருந்தது.  பிறகு தபால்பெட்டி எண்ணோடு இருந்த மற்றொரு கடிதத்தை அவன் படிக்கத் தொடங்கினான்.  தொடர்ந்து அதைப்படித்துக் கொண்டே சென்றபோது அவன் முகம் மாறியது.  ஏதோ கனமான ஒரு பொருளால் தாக்கப்பட்டது போல நிலத்தில் சரிந்தான் அவன்.  அவனோடு கூட வந்தவர்கள் உடலளவில் களைத்துப்போய், உணர்ச்சிகள் வடிந்து வற்றிப் போன நிலையில் இருந்த்தால் ‘நீளக்கால’னின் நடவடிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் காணத் தவறிவிட்டார்கள். வானில் படர்ந்து கொண்டுவந்த இருட்டும் அதற்கு உதவிசெய்தது.  அந்தக் குழுவினர் அனைவருமே ஏதோ ஸ்தம்பித்துப் போனதைப் போலக் காணப்பட்டனர்.

முதலில் தன்னை சுதாரித்துக் கொண்டவன் ‘நீலக் காலன்’தான்.  இறந்த மனிதனின் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட எல்லாவற்றையும் பொறுக்கியெடுத்து அணைந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்த குளிர்காயும் தீக்குள் போட்டான் அவன்.  அந்தப் பேப்பர் சுருள் நெருப்பில் விழுந்து கருகிப் புகையாவதைக் குழுவினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் தோள்களிலிருந்து பெருஞ்சுமை ஒன்று இறக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.  முகம் தெரியாத அந்த மனிதனுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்றபின் அவர்கள் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.  மூங்கில் மற்றும் நாணலால் செய்யப்பட்ட கொள்ளிக்கட்டைகளின் வெளிச்சத்தைக் கொண்டு அவர்கள் இருட்டைக் கடந்து கொண்டிருந்தனர்.

அந்தக் கடிதம் மட்டும் வாழும் வரை சுமக்க வேண்டிய ஓர் அந்தரங்கச் சிலுவையாக ‘நீளக் கால’னுக்கு மாறிப்போயிருந்தது.  ஒரு நல்ல மாணவனாக அவன் ஒருபோதும் இருந்ததில்லையென்றாலும் அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு ஞாபகமிருந்தது.  இறந்துபோன அந்தப் போராளியின் மகன், தன் தேர்வுக் கட்டணத்துக்கான பணத்தை அனுப்புமாறு தந்தையிடம் கெஞ்சிக் கேட்டபடி எழுதியிருந்த கடிதம் அது. 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....